மக்களவைத் தேர்தல் முடிவுகள் – மிகைப்படுத்தல்களுக்கு அப்பால் – 2 – தோழர் செந்தில்
அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரும் முழக்கம்
மக்களவையில் மூன்றாம் முறையாக பதவியேற்ற மோடி, அரசமைப்பு சட்டத்தைத் தொட்டு வணங்கி, அதில் தாம் பற்று வைத்திருப்பதாக ஒரு தோற்றம் காட்டினார். ஆர்.எஸ்.எஸ் ஐ சேர்ந்த மோடியைக் கூட அரசமைப்புச் சட்டத்தை வழிபட வைத்துவிட்டோம் என எதிர்க்கட்சிகள் சொல்லிக் கொண்டன.
நடந்து முடிந்த தேர்தலில், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், சனநாயகம் காப்போம்” என்ற முழக்கம் எதிர்க்கட்சிகளால முன்வைக்கப்பட்டதன் பின்னணியில்தான் மேற்சொன்ன நிகழ்வு நடந்தது எனலாம். இந்தியா கூட்டணி கட்சிகளும் சனநாயக ஆற்றல்களும் இம்முழக்கத்தை திரும்பதிருமபக் கூறினர். இனியும்கூட இம்முழக்கம் ஒலிக்கத்தான் போகிறது.
ராகுல் காந்தி ஊடக சந்திப்புகளில் அரசமைப்புச் சட்டத்தைக் காட்டியபடி ஆர்.எஸ்.எஸ் – பாசகவுக்கு எதிராக கருத்துச் சொல்கிறார். இந்திய பாசிசத்தின் குறித்த தன்மை சனாதனம் என்றும் அதற்கு எதிரான அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதே ஆர்.எஸ்.எஸ். இன் நோக்கமென்றும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றுவதுண்டு. உத்தரபிரதேசத்திலும் பீகாரிலும் மராட்டியத்திலும் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கர்நாடகாவிலும் அரசமைப்புச சட்டத்தைக் காப்பதற்கு பாசகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று தேர்தல் கூட்டங்களில் பேசப்பட்டன.
தேர்தல் வாய்ச் சவடால்களின் பகுதியாக, 400 இடங்களில் வெற்றி பெறுவோம், அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவோம் என்று சில பாசக தலைவர்கள் பேசினர். ”அரசமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள், அதனால் பாசகவுக்கு வாக்களிக்காதீர்கள்” என்று எதிர்க்கட்சிகள் இதை பற்றிப் பிடித்துக்கொண்டன.
தாராளியர்கள் அடிக்கடி சொல்வதென்ன வென்றால் பாசக 3 இல் 2 பெரும்பான்மையோடு வந்தால் அரசமைப்புச் சட்டத்தில் ’ இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு’ என்பதை மாற்றிவிடுவார்கள் என்பதாகும். பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டால் போதும், இப்போதிருக்கும் அரசமைப்புச் சட்டத்தையே இந்துராஷ்டிரத்திற்கானதாக விளக்கப்படுத்த முடியும், சமற்கிருதத்திற்கு முன்னுரிமை தரும், (கட்டாய) மதமாற்றத்தை தடை செய்யும், மாட்டிறைச்சிக்கும் தடை விதிக்கும் சட்டப்பிரிவு போன்றவை ஏற்கெனவே உண்டு” என்று பாசகவை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி சொல்கிறார். இப்போதே இதுவொரு இந்துராஷ்டிரத்திற்கான அரசமைப்பு என்பதுதான் இதன் பொருளாகும்.
அரசமைப்புச் சட்டத்தை மாற்றினால் என்ன? இதுவரை 106 முறை மாற்றப்பட்டுள்ளதே என பாசகக்காரர்கள் கேள்வி எழுப்பி தொலைக்காட்சி விவாதங்களில் காங்கிரசுகாரர்களைத் திணறடித்து வருகின்றனர். அரசமைப்புச் சட்டத்தை மாற்றவே கூடாது என்று நாம் சொல்லவில்லை. அதன் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள நோக்கத்திற்கும் இலக்குகளுக்கும் புறம்பாக மாற்றக் கூடாது என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் என்ற முழக்கத்தின் சாறமாகும்.
இப்படி வாதப் பிரதிவாதங்கள் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் , அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதென்றால் என்ன பொருள்? இந்தியாவின் குடிமக்கள் அதை என்னவாக புரிந்து கொள்கிறார்கள்?
கடந்த 2023 ஆம் ஆண்டு இசுரேலில் நீதித்துறையின் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் சட்டத்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதற்கெதிராக, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக நாட்கணக்கில் , மாதக்கணக்கில் பல்லாயிரம் பேர் கூடி தெருக்களில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்தார்கள். நீதித்துறையின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் சட்டத்தை அந்நாட்டு மக்கள் அனுமதிக்கவில்லை. எட்டு மாதங்கள் நடைபெற்ற போராட்டம் உலகத்தின் கவனத்தைப் பெற்றது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து போராட்டம் பின்னுக்குச் சென்றது. 2024 சனவரியில் நீதிமன்றம் அந்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு ஆணையிட்டது. நாடாளுமன்ற சனநாயகத்தில் நீதித்துறையின் சுதந்திரத்திற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்திய நாட்டிலோ நாடாளுமன்ற சனநாயகத்தையும் அரசமைப்பு சட்டத்தையும் கேலிக்குள்ளாக்கும் சட்டத் திருத்தங்களும் கொள்கைகளும் வரும்பொழுது அதற்கெதிராகப் பெரும் போராட்டங்கள் எழுவதில்லை.
முன்னேறியப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்திருத்தம், பிரிவு 370 ஐ செயலிழக்கச் செய்து, காசுமீரைத் துண்டாடி, அதை ஒன்றிய ஆட்சிப் புலமாக மாற்றிய சட்டத்திருத்தங்கள், ஊபா – என்.ஐ..ஏ சட்டத்திருத்தங்கள் முதலியவை அரசமைபுச் சட்டத்திற்கு எதிரானவை என திறனாய்வு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டதே ஒழிய மக்கள் திரள் போராட்டமாக முன்னெடுக்கப்படவில்லை.
இச்சட்டங்கள் நாடாளுமன்ற சனநாயக விழுமியங்கள் மீதான தாக்குதலாகப் பார்க்கப்பட்டு இதற்கு எதிரான கிளர்ச்சிகள் ஏற்படவில்லை.
மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்கள் முன்வந்து நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறு அறைகூவல் கொடுத்தார்கள். பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகர்கள், செயற்பாட்டாளர்கள் குறிவைக்கப்படுவது அம்பலமானது. 146 உறுப்பினர்களை வெளியேற்றிவிட்டு மூன்று குற்றவியல் சட்டங்கள் மக்களவையில் இயற்றப்பட்டன. நாடாளுமன்ற சனநாயகத்தின் அடிப்படைகள் மீது இத்தகைய தாக்குதல் நடக்கும் பொழுது பெரும் போராட்டங்கள் வெடிப்பதில்லை.
”சனநாயகத்தின் தாய்” என்று பீற்றிக் கொள்ளும் நாட்டில் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்தும் சட்டம் ’பணச் சட்டமாக’ அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களிடம் இருந்து எதிர்ப்பு எழவில்லை . உச்சநீதிமன்றம் அச்சட்டத்தை ரத்து செய்து அது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றது. அச்சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை பாசக திரட்டிக் கொண்டது அதனால் யாரெல்லாம் பலனடைந்தார்கள் என்பதும்கூட அம்பலமானது.
இன்னொருபுறம், தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது பாசக அரசு. தேர்தல் ஆணையரை மோடி தன் விருப்பம் போல் தெரிவு செய்யும் சட்டத்திருத்தம்! நேர்மையான தேர்தல் நடக்குமா? என்ற ஐயத்தை இது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆயினும் சட்டத்திருத்தம் வந்த போதும் சரி, மோடியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையர்கள் செயல்பட்ட போதும் சரி வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக செய்திகள் வந்த போதும் சரி குறிப்பிடத்தக்கப் போராட்டங்கள் நடக்கவில்லை.
குறிப்பாக, இத்தகைய புதுமக்கால நாடாளுமன்ற சனநாயக விழுமியங்களுக்கு எதிராகப் போராடக் கூடிய நகர்ப்புற நடுத்தர வர்க்கப் பரிவினரில் ஒரு பகுதியினர் பாசக பற்றாளர்களாக இருக்கக் காண்கிறோம். தேர்தல் முடிவுக்குப் பின்னான ஆய்வுகளில், இப்பிரிவினர் அதிகம் அதிகம் பாசகவுக்கு வாக்களித்திருப்பதாக தெரிகிறது. எனவே, அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு கிளர்ந்தெழ வேண்டிய இப்பிரிவினரில் பெரும்பான்மையானோர் இந்து தேசியவாதத்தின் பெயரால் பாசகவின் பின்னால் நிற்கின்றனர்.
கிராமப்புறத்தைச் சேர்ந்தோர் பெருமளவில் பாசகவுக்கு எதிராக வாக்களித்திருப்பதாக தெரிய வருகிரது. அவர்கள் தமது அன்றாடப் பிரச்சனைகளோடு சேர்த்து சாதி, சமய, இனச் சார்ப்போடு வாக்களித்திருப்பது தெரிய வருகிறது.
’அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள்’ என்ற அச்சத்தில்தான் உத்தரபிரதேசம், மராட்டியத்தை சேர்ந்த பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தபப்ட்ட மக்கள், மோடி ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணிக்கு வாக்களித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ’அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள்’ என்பது இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள் என்பதாக மொழிப்யெயர்க்கப்பப்ட்டது என்பதுதான் உண்மையாகும்.
மொத்தத்தில் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடுக என்று இந்தியாவின் குடிமக்களை நோக்கி விடுக்கப்பட்ட அறைகூவல், அதன் பருண்மையான பொருளில் புரிந்து கொள்ளப்பட இல்லை, இந்த தேர்தல் முடிவுகளை விளக்கப்படுத்தும் பொழுது இந்நாட்டு மக்கள் அரசமைப்பு சட்ட விழுமியங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பாசகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்று விளக்கப்படுத்துவது ஒரு மிகைப்படுத்தலே.
நாடாளூமன்ற சனநாயக விழுமியங்கள் கேள்விக்குள்ளாகும் பொழுது தமது உரிமைகளும் நலன்களும் பலியிடப்படும் என்பதாக நம் நாட்டு மக்கள் உணர்ந்து கொள்வதில்லை. அரசியல் முன்னணிகளும் அவற்றை விளக்கப்படுத்தி மக்களுக்கு உணர்வூட்டுவதில் அதிகம் அக்கறை செலுத்துவதில்லை.
அதேநேரத்தில், அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பறிக்கப்படும் பொழுது தமது ( சாதி,சமய, இன) குழுவின் நலன்கள் பாதிக்கப்படுகிறதென்று உணரும் போது அதற்கெதிராக போராடும் மக்கள், பொதுவில் நாடாளுமன்ற சனநாயக முறைகளும் அரசமைப்புச் சட்ட விழுமியங்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அதற்கு எதிராக கிளர்ந்து எழுவதில்லை.
இது நமது முகத்தில் அறைந்து கொண்டிருக்கும் உண்மையாகும். இந்நாட்டின் சனநாயக மட்டத்தை வெளிக்காட்டுவதும் ஆகும்.
கடந்த ஜுலை மாத கடைசியில் சென்னைக்கு வந்திருந்த அரசியல் ஆய்வாளர் திரு யோகேந்திர யாதவ் உடனான ஒரு சந்திப்பின் போது, இது குறித்து கேட்டேன். அவர், ”அரசமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டியதுதான் ஆனால், நமது முழக்கம் அது அல்ல, அதன் உள்ளடக்கமாக சொல்லப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதே ஆகும். எனவே, மக்களைத் தட்டி எழுப்ப வேண்டுமாயின் சுதந்திரத்திற்காக, நீதிக்காக, சமத்துவத்திற்காக கிளர்ந்தெழுமாறு மக்களிடம் அறைகூவல் விடுக்க வேண்டும் என்று பதிலளித்தார். இந்தக் கூற்று சமூக அரசியல் மெய்நடப்பைப் பிரதிபலிக்கும் ஒன்றாகும்.
பாசிசத்தைப் நான்கு முக்கிய முனைகளில் எதிர்த்தாக வேண்டும் – ஒற்றையாட்சி சர்வாதிகார எதிர்ப்பு, நிதிமூலதனக் குவிப்பைத் தடுத்தல், இந்துராஷ்டிரக் கொள்கை எதிர்ப்பு, பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவிப்பை எதிர்த்தல் என நான்கு முனைகளில் பாசிச எதிர்ப்பை முன்கொண்டு செல்ல வேண்டும்.
நான்காவது முனையிலான எதிர்ப்பு இன்றளவில் மிகவும் பலவீனமாக உள்ளது. நாடாளுமன்ற சனநாயகம் தடம் புரளாமல் கடிவாளம் இடக்கூடிய ஏற்பாடுகள், தன்னாட்சி நிறுவனங்கள் என அனைத்தும் ( check and balance) அகற்றப்படுகின்றன. மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை, நாடாளுமன்ற நிலைக்குழு உள்ளிட்டவற்றை செல்லாக்காசு ஆக்கி பிரதமர் அலுவலகத்தில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. இதற்கு எதிரான உரையாடலை நிகழ்த்தி, போராட்டக் களத்தை விரிவுபடுத்த வேண்டும்.
இந்தப் போராட்டத்தை வளர்த்தெடுப்பதன் வழியாகத்தான் இந்த துணைக் கண்டத்தில் வாழும் மக்கள் சனநாயக உலைக்களத்தில் புடம்போடப்பட்டு புதுமக் கால சனநாயக விழுமியங்களில் ஊறித்திளைத்த அரசியல் பண்பாட்டுக்குரியவர்களாக பரிணமிப்பர். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பாசிச கட்சிகள் இருந்தாலும் அவற்றை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கக் கூடிய சமுதாய வளர்ச்சி நிலைமை இருப்பதைக் காண்கிறோம். அத்தகைய சமுதாய வளர்ச்சி நிலைமை இந்நாட்டிலும் உருவாகும்.
இதுவொரு கடினமான பயணம்தான். ஆனால், நீண்ட நெடுங்காலத்தில் பாசிச அபாயத்தில் இருந்து இந்நாடு விடுபடுவதற்கு இது இன்றியமையாத ஒன்றாகும்.