கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம் – செய்தி அறிக்கை 4

23 Jun 2020

நான்கு கட்ட ஊரடங்குக்கு பின்னான தளர்வுக்கு பிறகு தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக தலை நகரம் சென்னை மற்றும் அதை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அதிக வைரஸ் தொற்று பாதிப்பை சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் ஜுன் 19-30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தமிழக அரசு சென்னை உள்ளிட்ட இந்த நான்கு மாவட்டங்களில் அடுத்த இரண்டு வாரத்தில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது, மருத்துவ பணியாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என சில ஏற்பாடுகளை செய்துள்ளது. எனினும் இனி வரும் மாதங்களில் தான் கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் உச்ச நிலையை தொடும் என எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இந்நிலையில், தமிழக அரசின் கொரோனா தொற்று தடுப்பு, சிகிச்சை, உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த சில பரிந்துரைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மக்கள் அச்சம் கொள்ளாமல் அரசின் உதவி எண்களை தொடர்பு கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும்.  வைரஸ் தொற்று உறுதியானவர்கள் அரசின் அறிவுறுத்தல் படி உடனடி சிகிச்சைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வதன் மூலம் தங்கள் உயிரையும் பாதுகாத்து, வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்த முடியும். தமிழக மக்கள் அரசின் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் பரிசோதனை

தற்போதைய சூழலில் வைரஸ் தொற்று அறிகுறி உள்ள ஒருவர் அவராகவே அரசு பரிசோதனை மையம் சென்று சளி மாதிரி கொடுத்து பின் பரிசோதனை முடிவு பெற குறைந்தது 2 நாட்கள் ஆகிறது. அப்படி சளி மாதிரி பரிசோதனை செய்ய வருபவரை முடிவு வரும் வரை தனிமைப்படுத்த வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே, வைரஸ் தொற்றாளருக்கு பரிசோதனை முடிவு தெரியாத நிலையில் அவர் வழியாக வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பரிசோதனை முடிவுகளை கொண்டு வைரஸ் தொற்றுக்கு ஆளானவரை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது, பரிசோதனை மையங்களை அதிகரிப்பது என்பது மேலும் வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த உதவும். எனவே,

சளி மாதிரி RT PCR பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்குள் வைரஸ் தொற்றுக்கு ஆளானவருக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி படுத்த வேண்டும். அதற்கு தடையாக உள்ள நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

நடமாடும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வீட்டிற்கே சென்று சளி மாதிரிகளை சேகரிக்கும் முறையை அதிக அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் துறையில் RT PCR பரிசோதனை செய்யும் வாய்ப்பு உள்ள உயிரி மருத்துவம் (Biomedical) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரி/நிறுவன பரிசோதனை மையங்களையும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

தனியார் RT PCR பரிசோதனை கட்டணத்தை ரூ. 1500 என்ற அளவில் குறைக்க வேண்டும். இது வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் அதிக அளவில் தாமாக முன் வந்து பரிசோதனை செய்வதை ஊக்குவிக்க உதவும். மகாராஸ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்கள் ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் தனியார் பரிசோதனை கட்டணத்தை முறையே ரூ. 2,200, ரூ. 2,200, ரூ. 2,400 என்ற அளவில் நிர்ணயம் செய்துள்ளன.

வைரஸ் தொற்றுக்கு ஆளாகி RT PCR பரிசோதனை செய்ய வேண்டியவர்கள் அரசு உதவி எண்களை அழைத்த உடன் அவர்களை வீட்டில் இருந்து வாகனத்தில் அழைத்து வந்து பரிசோதனை செய்வது, மருத்துவமனையில் அனுமதிப்பது வரை அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

தொற்று அறிகுறி உள்ளவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று சளி மாதிரிகளை எடுத்து கொரோனா வைரஸ் தொற்றை குறைந்த கால அளவில் உறுதி செய்யக்கூடிய என்ற TrueNat பரிசோதனை கருவியை கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் பயன்படுத்துகின்றன. தமிழ் நாடு அரசும் TrueNat பரிசோதனை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைவாக உள்ளது. சென்னை மாநகரத்தில் இருந்து சொந்த மாவட்டங்களை நோக்கி செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில், மற்ற மாவட்டங்களில் பரிசோதனையை அதிகரிப்பது ஒன்றே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவும்.  மாவட்ட அளவில் தினமும் செய்யப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

கொரோனா தொற்றுக்கான சிகிச்சை

  • வைரஸ் தொற்று உறுதியாகி லேசான அறிகுறிகளோடு உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ள அனுமதிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது. ஆனால், அந்த நெறிமுறைகள் முழுமையாக நடைமுறையில் பின்பற்றப்படவில்லை. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். குறைந்த பட்சம் தொலைபேசி வழியாக அழைத்து பேசி தொற்றாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கி கண்காணிக்க வேண்டும். இந்த பணியில் மருத்துவ சார்ந்த பல்வேறு துறைகளில் படிக்கின்ற அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
  • கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவ கல்லூரி, பல்கலைக்கழக மருத்துவமனை படுக்கைகளை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனை படுக்கைகள் தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது போல தனியார் மருத்துவமனை படுக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • கொரோனா தொற்று பரவலின் உச்ச நிலையை சமாளிக்கும் விதமாக போதிய அளவில் அரசு மற்றும் தனியார் சளி மாதிரி பரிசோதனை மையங்கள், மருத்துவமனை படுக்கைகள், பராமரிப்பு இல்லங்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை தொடர்ச்சியாக உயர்த்தப்பட வேண்டும். நாள்தோறும் இந்த விவரங்கள் அனைத்தும் அறிக்கையாக வெளியிடப்பட வேண்டும். இது இறப்பு வீதத்தை குறைத்து, வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, விரைவாக பரிசோதனை, தகுந்த சிகிச்சையை அனைத்து மக்களுக்கும் கட்டணமின்றியோ/குறைந்த கட்டணத்திலோ அளிக்கும் வகையில் மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும். இது பொது சுகாதார தயார் நிலை குறித்து வெளிப்படைதன்மையையும், மக்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
  • முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் கட்டணமின்றி கொரோனா தொற்றுக்கான சிகிச்சை அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்படுவதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
  • தனியார் துறை மருத்துவ சேவையில் கொரோனா தொற்று கண்டறிதல் முதல் சிகிச்சை வரை அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கப்படுவதை அரசு கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா சிகிச்சை பணியில் உள்ள மக்கள் நல வாழ்வு பணியாளர்களுக்கான கோரிக்கைகள்:

  • தரமான தனி நபர் பாதுகாப்பு கவச உடைகள் (Personal Protective Equipment) மருத்துவ, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டு கொரோனா தொற்று தடுப்பு / சிகிச்சை / உடல் அடக்கம் பணியில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கவச ஆடைகளை கிருமி நீக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதி படுத்த வேண்டும்.  கருவிகள் போதிய அளவில் இருப்பு உள்ளதை உறுதி படுத்த வேண்டும்.
  • கொரோனா தொற்று தடுப்பு/சிகிச்சை பணி சார்ந்து மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.
  • கொரோனா சிகிச்சை பணியில் உள்ள மருத்துவ, தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உளவியல் நலம் சார்ந்த ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
  • கொரோனா சிகிச்சை பணியில் உள்ள மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் தரமான உணவு உள்ளிட்ட வசதிகளோடு தனிமைபடுத்திக்கொள்ள தங்கும் இடங்களை வழங்கப்படுவதை அரசு உறுதி படுத்திட வேண்டும்.
  • கொரோனா தடுப்பு/சிகிச்சை பணியில் உள்ள மருத்துவ, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாத சம்பளம் தவறாமல் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும். மக்கள் நல பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ஒரு மாத சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
  • கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழக்கும் மக்கள் நல வாழ்வு பணியாளர்கள் அனைவருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று வந்தாலும், அவர்களுக்கும் அரசு அறிவித்த நிவாரணங்களை வழங்க வேண்டும்.

 

தோழமையுடன்

மனநல மருத்துவர் சி. அரவிந்தன்

பேரா.அ.மார்க்ஸ், NCHRO

பேரா.ப.சிவகுமார்

வழக்கறிஞர் அஜிதா, சென்னை உயர்நீதிமன்றம்

சுஜாதா மோடி, New Trade Union Initiative

பரிமளா,  Forum for IT Employees

செந்தில், இளந்தமிழகம்

தொடர்புக்கு : 9551122884, 9840713315

முகநூல் : fb/ Awareness Center For Corona Preventive Action

மின்னஞ்சல் : awarecen.coronaprevact@gmail.com

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW