உள் ஒதுக்கீடு – போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில்
தேவையானதே.

07 Sep 2024

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மாவோ சிந்தனை) பொதுச்செயலாளர்
பாலன் அறிக்கை

கடந்த ஆகஸ்ட் 1 அன்று பஞ்சாப் அரசு எதிர் தேவிந்தர் சிங் வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற ஆயம்,  பட்டியல் சாதிகளுக்குள் உள் ஒதுக்கீடு கொடுப்பதும் மாநில அரசு இதை செய்வதும் சட்டப்படியானதே என்று தீர்ப்பளித்தது. கூடவே, இதில் நான்கு நீதிபதிகள் பட்டியல் சாதிகளுக்கும் பட்டியல் பழங்குடிகளுக்கும் கிரிமீலேயர் முறையை அமல்படுத்துவது பற்றி மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும் என்று கருத்து சொல்லியுள்ளனர். 

இதை தொடர்ந்து உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாநில அளவில் உள் ஒதுக்கீடு கொடுப்பதை முடிவு செய்வதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கிரிமீலேயருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடு தழுவிய அளவில் விவாதங்கள் நடந்துவருகின்றன.

ஒரு வகையினத்திற்குள் உள் ஒதுக்கீடு என்பது போதிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் பொருட்டு பகிர்ந்தளிக்கக் கூடிய நீதி என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்படுகிறது. எந்த சமூகக் குழு/குழுக்கள் தமக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதுகின்றனவோ அவைதான் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றன.

2007 இல்   SCA என்ற அருந்ததியர் உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கு முன்பு தமிழ்நாடு அரசால் ஜனார்த்தனம் ஆணையம் அமைக்கப்பட்டு அதில் இருந்து பெறப்பட்ட விவரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. அப்போது தமிழ்நாடு அரசு கிறித்தவர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்குள் உள் ஒதுக்கீடு தர முன் வந்தது. இசுலாமியர்களுக்கு 3.5% கொடுக்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை அம்மக்கள் ஏற்றுக்கொண்டனர். அத்தகைய ஏற்பாடு போதிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு உதவும் என்று அவர்கள் கருதினர். இசுலாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை சச்சார் ஆணையம், ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் ஆகியவை எடுத்துக் காட்டியிருந்தன. அதேநேரத்தில், 3.5% உள் ஒதுக்கீடு பெறுவது தமது பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதில் போய் முடியக்கூடும் என்று கருதியதால் அந்த உள் ஒதுக்கீடு ஏற்பாடு தமக்கு வேண்டாமென கிறித்தவர்கள் சொல்லிவிட்டனர். எனவே, கல்வி, வேலைவாய்ப்பில்  போதிய பிரதிந்தித்துவம் இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் இங்கு முகன்மையானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் அதே நேரத்தில் வேறு சில கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஏற்கெனவே, பட்டியல் சாதிகளில் தேவேந்திர குல வேளாளர் என்றும் அருந்ததியர் என்றும் சில தொகுப்புகள் உருவாகி இருக்கும் நிலையில் இவ்விரண்டிலும் இல்லாத சாதிகள் அனைத்தும் ஆதிதிராவிடர் என்ற வகையினத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒருசாரார் கோருகின்றனர். இன்னொரு சாரார், அருந்ததிய சமூகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள 3% இட ஒதுக்கீட்டுக்கு வெளியே ஏனைய 15% போட்டிப்போட இப்போது இருக்கும் வாய்ப்பை நீக்க வேண்டும் என்று சொல்கின்றனர். தேவேந்திர குல வேளாளர் சாதியை பட்டியல் வெளியேற்றம் செய்து தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையும் முன்னுக்கு வந்துள்ளது. ஆதி திராவிடரும் தேவேந்திர குல வேளாளர்களும் உள் ஒதுக்கீடு கேட்கவில்லை. மாறாக, வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதக் கூடிய அருந்ததியர் சமூகத்தை தவிர பட்டியல் சாதிகளில் உள்ள ஏனையப் பிரிவினர் உள் ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பவில்லை.

பட்டியல் சாதியினரைப் பொறுத்தவரை அப்பிரிவினில் உள்ள சாதிகள் தனியான கோரிக்கைகளை எழுப்பி போராட வேண்டிய தேவை இருக்கும் அதேநேரத்தில் பொதுவான கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இவையாவும் எந்தவொரு குழுவினதும் அல்லது தலைவர்களினதும் விருப்புவெறுப்பு சார்ந்து நீடிக்கப் போவதில்லை. இங்கு சாதிக் குழுக்களின் நலன்களும் கோரிக்கைகளும்தான் போராட்டத்தையும் ஐக்கியத்தையும் தீர்மானிக்கப் போகின்றன. பாசக இக்கோரிக்கைகளை இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நோக்கத்திற்குப் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சத்தின் பெயரால் உரிமைசார் கோரிக்கைகளை மறுப்பது சனநாயகம் ஆகாது.

இன்னொருபுறம் ஒன்றிய பாசக அரசோ தந்திரமாக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நகர்வுகளை செய்து வருகின்றது. மோடி 1.0 காலத்தில் பொருளியலில் நலிந்த பிரிவினருக்கு(EWS) 10% இட ஒதுக்கீடு என்ற பெயரில் இட ஒதுக்கீட்டு கட்டமைப்பின் மீதான தாக்குதலை நடத்தியது பாசக அரசு. பாசக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை திருத்திவிடும்; இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டிவிடும் என்ற தேர்தல் முழக்கம், உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே பாசகவுக்கு எதிரான வாக்குகளாக மாறிப்போய் தேர்தலில் பாசகவின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. இப்போது பின்வாசல் வழியாக அரசின் உயர் பொறுப்புகளில் நேரடி பணிஅமர்த்தலுக்கு முயன்றபோது கூட்டணிக் கட்சித் தலைவர்களான சிராஜ் பாஸ்வான், நிதிஷ் குமார் ஆகியோரிடம் இருந்து எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. இதனால், இதை பின்வாங்க வேண்டிய கட்டாயம் பாசக அரசுக்கு ஏற்பட்டது. இட ஒதுக்கீட்டால் மக்கள் பலனடைந்திருக்கும் காரணத்தால்தான் அதை ஒழித்துக்கட்டுவதற்கான முயற்சிகளை மக்கள் முறியடிக்க முனைகின்றனர். பிற்படுத்தப்பட்டோர்,தலித மக்கள் இவ்விடத்தில் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்கும் நோக்கில் 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு பொது உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். முரண்பாடுகள் இருக்கும் அதேநேரத்தில் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் ஐக்கியப்பட்டிருப்பதை வெளிப்படையாக காண முடிகிறது.

இட ஒதுக்கீடு எந்த அளவுக்கு சனநாயகத்திற்குப் பங்களித்துள்ளதோ அதேஅளவுக்கு உள் ஒதுக்கீடும் சனநாயகத்தை விரிவுபடுத்துவதற்கான கருவியாகப் பயன்பட்டு வருகின்றது. உள் ஒதுக்கீடு கொடுப்பதில் வாக்கு திரட்சி, தேர்தல் கணக்குகள் முன்னுக்கு வந்தால் போதிய பிரதிநிதித்துவம் என்ற கொள்கை அடிபட்டு, இட ஒதுக்கீட்டின் நியாயம் முழுமையற்றதாக மாறிவிடும்.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் மாதிகா சமூகத்தினர் கனிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்ற காரணத்தால் உள் ஒதுக்கீடு கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கை கடந்த 1980 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து எழுப்பப்பட்டு வந்தது. வெவ்வேறு அரசுகள் இக்கோரிக்கைக்கு முகம் கொடுத்து உள் ஒதுக்கீட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை நீதிமன்றத்தில் முறியடிக்கப்பட்டன. இத்தனை ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு வெளிவந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மாதிகா சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீட்டை உறுதிசெய்துள்ளது. தமிழ்நாட்டின் நிலைமைக்கு மாறாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாகா மாநிலங்களில் மாதிகா சமூகத்தினர் இன்றளவும் உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக போராடும் நிலைதான் இருந்து வருகிறது. அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டிற்கும் மேற்சொன்ன தருக்க நியாயங்கள் இருக்கின்றன.

 இதற்கு மாறுபட்ட ஓர் எடுத்துக்காட்டாக பஞ்சாப்பைச் சேர்ந்த சாமர் ( மாதிகா சமூகத்தினரை ஒத்தவர்கள்) சமூகத்தினரின் கோரிக்கை அமைந்துள்ளது. பஞ்சாப்பைப் பொறுத்தவரை பட்டியல் சாதியினரிடையே துணைவகைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. அங்கு எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் சீக்கிய தலித் மக்கள் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெறும் வகையிலும் எண்ணிக்கையில் கணிசமாக இருக்கும் சாமர் பிரிவினர் ஒப்பீட்டளவில் குறைந்த பிரதிநிதித்துவம் பெறக்கூடிய வகையிலுமான ஏற்பாடாக அந்த துணைவகைப்படுத்தல் அமைந்துள்ளது. இதன் காரணமாக சாமர் பிரிவு மக்கள் இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றனர். உள் ஒதுக்கீட்டுக்கான போதிய நியாயங்கள் இல்லாத நிலையில், அது பாரபட்சமான ஏற்பாடாக அமைவதால் அதை சாமர் பிரிவினர் எதிர்க்கின்றனர்.

போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதற்கான சரியான தரவுகள் இருக்குமாயின் அந்த சமூகக் குழுவுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க மறுப்பது ஓர் அரசியல் அநீதியாக அமைந்துவிடும்.

உள் ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் நடைமுறை சார்ந்த சில சிக்கல்கள் உள்ளன. காலிப் பணி இடங்களை ஒட்டுமொத்தமாக நிரப்புவதற்குப் பதிலாக பகுதிபகுதியாக நிரப்பும்போது உள்ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அவ்வாய்ப்புகள் திரும்பப்திரும்ப கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதிலும் சிக்கல் இருக்கிறது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் அதிகார வர்க்கத்தினரின் சாதியக் கண்ணோட்டம் காரணமாக அநீதி இழைக்கப்படுகிறது. ஆனால், அது இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக செயல்படுத்துவதில் உள்ள சிக்கலே தவிர உள் ஒதுக்கீட்டின் சிக்கல் கிடையாது. எனவே, அமலாக்குவதில் உள்ள் இடைவெளிகளின் பெயரால் உள்ஒதுக்கீட்டை எதிர்ப்பது இட ஒதுக்கீட்டு நியாயங்களுக்கு எதிராக செயல்படுவதில் போய் முடிந்துவிடும்.

பட்டியல் சாதிக்குள் துணைவகைப்படுத்தல் கூடாதா?

தீண்டாமைக் கொடுமைக்குள்ளானவர்கள் என்ற வகையில் பட்டியல் சாதிகள் என்ற வகையினம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் செய்யும் துணைவகைப்படுத்தல் பட்டியல் சாதிகளின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு என்பது தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளான  சாதிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் என்பது மட்டுமின்றி அதற்குள் இருக்கும் ஒவ்வொரு சமூகக் குழுவின் சமூக, கல்வி நிலையில் உள்ள வளர்ச்சி நிலை என்பதாக விரிவடைந்து வருகிறது. பட்டியல் சாதிகள் என்ற ஒரு தொகுப்புக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வான நிலைமைகளை, சிக்கலை தீர்த்தாக வேண்டும். கல்வி, சமூக நிலையில் ஒரே தன்மையில் இல்லாத சாதிகளுக்கு இடையில் துணைவகைப்படுத்தல் தேவைப்படுகிறது.

கனிசமான எண்ணிக்கையில் இருக்கும் சாதிகளுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத விடத்தும் அதே நேரத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்தும் அதிகமான பிரதிநிதித்துவத்தை சில சாதிகள் பெற்று வரும் நிலையில் துணைவகைப்படுத்தல் தேவைப்படுகிறது. இன்னொருபுறம், கனிசமான எண்ணிக்கையில் இல்லாத சிறுகுறு சமூகங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதிகள் என்ற எல்லா வகைப்பாட்டுக்குள்ளும் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு , ஒரு தொகுப்புகள் துணைவகைப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

தலித் மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்துவிடும் என்ற பொத்தாம் பொதுவான வாதம் காலந்தோறும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதமாகும். இந்து ஒற்றுமை, பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை, இந்தியர் ஒற்றுமை என்று இவை முன்வைக்கப்பட்டன. இப்போதும்கூட, அசாம் முதல்வர் பிஸ்வாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொல்வதன் மூலம் இந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கப் பார்க்கிறார் ராகுல் காந்தி என்ற கருத்தை முன்வைக்கிறார். ஆர்.எஸ்.எஸ். சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதன் மூலம் மறைமுகமாக அதை எதிர்க்கிறது.

பட்டியல் சாதிகள் என்ற தொகுப்புக்குள் இருக்கும் சாதிகளிடையிலான சமூகப் பொருளாதார வேறுபாடுகளைக் களையாமல் பட்டியல் சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமை சாத்தியமில்லை. பின் தங்கியுள்ள சாதிக் குழுக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் பெறும்போது அவை அதிகாரப்படுத்தப்படும். அதுதான், பட்டியல் சாதிகளுக்கு இடையிலான ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

கிரிமீலேயர் முன்வைப்பு:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமல்படுத்தப்பட்டுள்ள கிரிமீலேயர் முறையைப் போல் பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தை நான்கு நீதிபதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இத்தனை ஆண்டுகாலம் இட ஒதுக்கீட்டை செயல்படுத்திய பின்பும் கல்வி, அரசு வேலைவாய்ப்பில் உயர் பொறுப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் சரி பட்டியல் சாதிகளுக்கும் சரி போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலையே நீடிக்கிறது. நாட்டின் உயர் கல்வி நிலையங்களுக்குள் மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் அடியெடுத்து வைக்க முடியாத நிலையும் அப்படி போனாலும் படிப்பைத் தொடர முடியாத சூழலும் நிலவுகிறது. நிறுவனப் படுகொலைக்கு உள்ளான ரோஹித் வெமுலாக்களும் இன்றளவும் மாணவர்கள் அதற்கான நீதிக்குப் போராடிக் கொண்டிருப்பதுமே நாட்டின் அவல நிலைக்குச் சான்றாகும். அரசுத் துறை செயலர் பொறுப்புகள், நீதித்துறை, உயர் கல்வி உயர் பொறுப்புகள் என அனைத்திலும் பார்ப்பன மற்றும் உயர்சாதிகளின் ஏகபோகமே இருக்கிறது என்பது நாடறிந்த உண்மையாகும். இந்நிலையில் கிரிமீலேயரை செயல்படுத்துங்கள் என்று சொல்வது எப்படி பொருத்தமுடையதாகும்?

ஒவ்வொரு வகைப்பாட்டுக்குள்ளும் கிராமம் – நகரம், ஆண் – பெண், அரசுப் பள்ளி – தனியார் பள்ளி, பொருளியல் நிலை ஆகிய காரணங்களைக் கணக்கில் எடுத்து அதில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை நோக்கிய சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நீட் தேர்வு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட நிலையில், வேறு வழியின்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ, மருத்துவ உயர் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கத் தொடங்கியது தமிழக அரசு. இப்படி அவ்வப்போது எழும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் பொருட்டு இதுபோன்ற துண்டு துண்டான சீர்திருத்தங்களைச் செய்யாமல், இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் முழுமையான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்த பரந்த, திறந்த மனதுடனான விவாதம் தேவைப்படுகிறது.

அதேநேரத்தில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கிரிமீலேயர் முறையை ஆதரிப்பது, பட்டியல் சாதியினருக்கான கிரிமீலேயர் முறையை எதிர்ப்பது, பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள் ஒதுக்கீட்டை ஆதரிப்பது,  தீர்ப்பை எதிர்த்து முன்னெடுக்கப்படும் அகில இந்திய அளவிலான முழு அடைப்பை ஆதரிப்பது என முரண்பட்ட நிலைப்பாடுகளை காங்கிரசு, சிபிஐ(எம்) போன்ற கட்சிகள் கொண்டிருக்கின்றன.

கிரிமீலேயர் முறையை அமல்படுத்தி இட ஒதுக்கீட்டில் தனித்த பொருளியல் காரணிகளைப் புகுத்துவதன் மூலம் இட ஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்டும் திட்டத்தில் பாசக இருக்கும்போது எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாதமாக நிலையெடுப்பது எதிரிக்கே சேவைப்புரியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

மாநிலத்திற்கு அதிகாரம் கூடாதா?

ஒரு மாநில அரசு பட்டியல் சாதிகளுக்குள் உள்வகைப்பாடு செய்வதற்கும் உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கும் அரசமைப்புச் சட்டம் தடையேதும் செய்யவில்லை என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளது.

பட்டியலில் எந்தெந்த சாதிகள் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றமே தீர்மானிக்கிறது ( உறுப்பு 341). அதுபோலவே பட்டியல் சாதிகளுக்குள் உள் ஒதுக்கீடு தரும் உரிமையும் நாடாளுமன்றத்திடம் அல்லது ஒன்றிய அரசிடம் இருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு இத்தீர்ப்பு எதிர்க்கப்படுகிறது.

எந்தெந்த சாதிகள் பட்டியலுக்குள் வர வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு தேவையான விவரங்களை மாநில அரசிடம் பெற்றுதான் ஒன்றிய அரசு முடிவுசெய்ய வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது.

உறுப்பு 341 இன் படி ஒன்றிய அரசுதான் பட்டியலுக்குள் வர வேண்டிய சாதிகள் இன்னென்ன என்று முடிவு செய்கிறது. மாநில அரசுகள் இதை செய்ய முடியாது. ஆனால், ஒன்றிய அரசால் தீர்மானிக்கப்பட்ட பட்டியல் சாதிகளுக்கு இடையே ஒருசில பிரிவினரை துணைவகைப்படுத்தும் போது பட்டியலில் இருந்து எந்த சாதியும் விடுபடப் போவதில்லை, கூடுதலாக எந்த சாதியும் இணைக்கப்படப் போவதமில்லை. எனவே, உறுப்பு 341 மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்குவதற்குள்ள அதிகாரத்தை மறுக்கவில்லை.

அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு தலித் சிக்கலை ஒரு சிறுபான்மையினர் சிக்கலாக பரிசீலித்து அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்துள்ளார் அண்ணல் அம்பேதகர். அன்றைய நிலையில் நிறைய மாகாணங்கள், சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையாமல் இருந்த நிலை இருந்தது. எனவே ஒன்றிய அரசுக்காக இயற்றப்படும் அரசமைப்புச் சட்டத்தை மையமாக வைத்துதான் இணைப்புப் பற்றி திட்டமிடப்பட்டது.

ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் தெற்கு மாகாணங்கள் கறுப்பின மக்களுக்கு எதிரான  அடிமைமுறையைப் பேணிக் கொண்டிருந்த போது, கறுப்பின மக்களின் சின்ன சின்ன உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் மத்திய அரசின்(federal) காவல்துறை களம் இறங்க வேண்டியிருந்தது. கறுப்பின மக்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கும், வாக்களிப்பதற்கும்கூட மத்திய அரசின் இராணுவம் தலையிட வேண்டியிருந்தது. அங்கு மாகாண அரசுகளைவிட மத்திய அரசு நிற வேற்றுமைக்கு எதிராக இருந்தது; நிற வேற்றுமைக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், இந்தியாவின் மத்திய அரசோ ஒருசில மாநில அரசுகளைவிட ஒப்பீட்டளவில் பிற்போக்கானதாகவும் பார்ப்பனியத்தை இறுகப் பற்றிக் கொண்டிருப்பதாகவும் இருந்து வருகிறது. ஒன்றிய அரசின் சமூகத் தன்மை பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் துணையுடன் பார்ப்பன அதிகாரம் நிறுவப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மண்டல் கமிசன், சச்சார் ஆணையம் ஆகியவற்றை செயல்படுத்துவதில் ஒன்றிய அரசு தடையாக இருந்து வந்துள்ளது. மேலும் பொருளியலில் நலிந்த பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு என இட ஒதுக்கீடு ஏற்பாட்டின் மீதே நடத்தப்பட்ட தாக்குதல் நாடாளுமன்றத்தின் வழியாகத் தான் நடந்துள்ளது. இந்த தாக்குதல் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதிகளுக்கு வெளியில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடிகளுக்கு எதிரான நடவடிக்கை என்பதை மறுக்க முடியுமா?

சாதி இந்துக்கள் எதிர் தலித் என்ற முரண்பாட்டில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஒன்றிய அரசில் ஒருவித நெகிழ்ச்சி உண்டு. அதுவும்கூட, ஒன்றிய அரசில் அனைத்திந்திய கட்சிகள் ஆட்சி செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வாழும் சாதி இந்துக்களின் பெரும்பான்மைவாத அழுத்தத்திற்கு  அடிபணிய வேண்டிய கட்டாயம் இல்லாத இடங்களில் பட்டியல் சாதிகளுக்கு ஆதரவான சிலவற்றை நாடாளுமன்றத்தின் வழியாக செய்ய முடியும். ஆனால், மாநில அரசுகள் அவற்றை செய்யத் தயங்கும் மெய்நிலை இருக்கிறது. அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சாதி ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டத்தை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இயற்றத் தயங்குவதாகும். ஆனால், இதை ஒரு காரணமாக சொல்லி, மாநில அரசுக்கு அதிகாரம் கூடாதென்பது சனநாயக மறுப்பாகும்.

மாநில அரசுகள் தொடர்பில் எத்தகைய அச்சங்கள், சந்தேகங்கள் முன் வைக்கப்படுகிறதோ அவையாவும் ஒன்றிய அரசுக்கும் பொருந்தும். மாநில அரசைப் போல் ஒன்றிய அரசிலும் சாதி இந்துக்கள் பெரும்பான்மையாகவும் தலித் மக்கள் சாதிய சிறுபான்மையினராகவும் இருந்து வருகின்றனர். எனவே, எத்தகைய சட்டப் பாதுகாப்புகள் ( Constitutional safeguards) ஒன்றிய அரசில் தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும் என்று அம்பேத்கர் கருதினாரோ அத்தகைய சட்டப் பாதுகாப்புகளின் வழியாகவே மாநில அரசிலும் அவற்றைப் பாதுகாத்திட முடியும்.

மாநில அரசுக்கு அதிகாரம் என்பது மக்களுக்கே இறைமை, மக்களுக்கு சனநாயகம் என்பதன் வடிவமாகும். மாநில அரசுக்கு அதிகாரம் கூடாதென்பது மறைமுகமாக எந்த பட்டியல் சாதிக்கு தமது வாழ்வுக்கும் மீட்சிக்கும் கோரிக்கை இருக்கிறதோ அந்த சாதியை ஒன்றிய அரசின் தயவை நாடி நிற்க செய்வதாகும். அதாவது அருந்ததியர் மக்கள் கோரிக்கை மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி தமது கோரிக்கையை வெளிப்படுத்தி மாநில அரசை இணங்கச் செய்வதற்கு இருக்கும் அதேவாய்ப்பு ஒன்றிய அரசை இணங்கச் செய்வதில் இருக்காது. ஒரு மாநிலத்தில் பட்டியல் சாதிகளுக்குள்ளேயே சிறுபான்மையாக இருக்கும் ஒரு சாதி நாடு தழுவிய அளவில் பார்த்தால் மீச்சிறுபான்மையாக  ஆகிப் போக்கும். அந்த சாதியின் கோரிக்கையை செவிமடுக்க வேண்டிய சனநாயக அழுத்தம் ஒன்றிய அரசுக்கு இருக்கவே இருக்காது. அதேநேரத்தில் மாநில அரசில் அவர்கள் பேரம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.   

தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்காக ( உறுப்பு 341) ஒன்றிய அரசின் தயவை நாடி இருப்பது போல் உள் ஒதுக்கீடு கேட்கும் சாதிகள் ஒன்றிய அரசை நாடி இருக்க வேண்டும் என்பதே மாநில அரசுக்கு அதிகாரம் கூடாது என்ற கருத்தின் நோக்கமாகும். தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகவோ எதிராகவோ அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவோ எதிராகவோ தமிழ்நாட்டுக்கு வெளியே எந்த சாதியும் செயலூக்கமிக்க தலையீட்டை செய்யாத போது அந்த அதிகாரம் ஒன்றிய அரசிடம் இருக்க வேண்டும் என்று சொல்வது உள் ஒதுக்கீட்டு கோரிக்கையை முன் வைக்கும் சாதிகளின் சனநாயக வெளியை இழுத்து மூடுவதே ஆகும்.

இவையன்றி உலகமய, தாராளமய, தனியார்மய பொருளியல் கொள்கையின் விளைவாக வேளாண் நெருக்கடியின் பின்புலத்தில் நகரத்தை நோக்கி கல்வி, வேலைவாய்ப்புக்காக வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த பொருளியல் கொள்கையைக் கேள்விக்குட்படுத்தாமல் மராத்தா, படேல், குஜ்ஜார் போன்ற சாதிகள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வருகின்றன. இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வேலையின்மைப் பிரச்சனைக்கான தீர்வாகப் பார்க்கும் கண்ணோட்டத்தின் வெளிப்பாடாகும். இவை இட ஒதுக்கீட்டுக்கான வரையறைக்கே தீங்குவிளைவிப்பதில் போய் முடியும்.

 இட ஒதுக்கீட்டின் வழியாக சாதிப் படிநிலை ஏற்றத் தாழ்வுகளை எந்த அளவுக்கு தீர்க்க முடியுமோ அந்த அளவுக்கே தீர்க்க முடியும். மற்றபடி, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து சமத்துவத்தை உருவாக்கிட, பரந்த சமூக பொருளாதார மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இவை குறித்தும் விரிவான விவாதத்திற்கு நாம் அணியமாக வேண்டும். 

தோழமையுடன்,

   பாலன்,

பொதுச் செயலாளர்,

 தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா -லெ -மா ).

        7/9/2024

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW