கருத்துரிமைக்கு ஆதரவாக நின்ற நிர்வாக ஆசிரியர் ஜென்ராமை சட்டவிரோத பணி நீக்கம் செய்த காவேரி செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்தை சோசலிச தொழிலாளர் மையம்  வன்மையாக கண்டிக்கிறது!

25 Jul 2019
பேரா. சுப.வீர பாண்டியன் அவர்களை காவேரி நியூஸ் தொலைக்காட்சியின் யூடூப் (youtube) பிரிவு சமீபத்தில் ஓர் நீண்ட நேர்க்காணல் எடுத்திருந்தது. அதில் பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கம், தி.மு.க சார்ந்த கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு இருந்தன. இது தொடர்பாக அலுவலகத்தில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரோடு நடந்த விவாதத்தில் பெண் ஊடகவியலாளர்கள் சிலர் தங்களின் மாற்றுக் கருத்தை பதிவு செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தங்கள் எதிர்ப்பினை கருப்பு உடை அணிந்து வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
நிர்வாக இயக்குனர் கருத்துக்கு எதிராக மாற்று கருத்து தெரிவித்தது, கருத்துரிமை பறிப்புக்கு எதிராக கருப்பு உடை அணிந்து வந்தது, பணியிடத்தில் ஒன்றுபட்டு தங்கள் உரிமைக்காக குரல் கொடுத்தது போன்ற காரணங்களால் நிர்வாக இயக்குனர் பெண் ஊடகவியலாளர்களை சட்டவிரோதமான முறையில் பணி நீக்கம் செய்யச் சொல்லி நிர்வாக ஆசிரியர் ஜென்ராம் அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளார். கருப்பு உடை அணிந்து வந்தது ஊழியர்களின் கருத்துரிமை என்பதால் நிர்வாகம் அதில் தலையிட முடியாது என்று ஜென்ராம் நிர்வாகத்தின் கட்டளைக்கு அடிபணிய மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட நிர்வாகம் ஜென்ராம் அவர்களை எந்த விதமான முன் அறிப்பும் இன்றி சட்டவிரோதமான முறையில் செவ்வாய்கிழமை(23.07.2019) அன்று பணி நீக்கம் செய்துள்ளது.
ஊடகத்துறை என்பது பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அனைத்து கருத்துரிமைகளுக்கும் அதிகாரவர்க்கத்தின் அழுத்தத்திற்கு அடிபணியாது எப்போதும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற நான்காவது தூண் என அறியப்படுவதாகும். அத்தகைய ஊடகத்துறையிலேயே சக ஊழியர்களின் கருத்துரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தாலேயே மூத்த ஊடகவியலாளர் ஒருவர் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது இந்த நாட்டின் தொழிலாளர் சட்டங்களை துளியளவும் மதிக்காது சட்டவிரோத பணி நீக்கங்களையே வாடிக்கையாக கொண்டுள்ள பிற  பெரு-நிறுவனங்களின் போக்கையே எமக்கு நினைவு படுத்துகிறது.
”மாற்றத்தை நோக்கி’ என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட காவேரி செய்தி தொலைக்காட்சியின் ஊடக அறத்தை மீறிய பெரு நிறுவன எதேச்சதிகார போக்கை  வன்மையாக கண்டிப்போம்!
காவேரி தொலைக்காட்சி நிர்வாகமே, ஜென்ராம் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்து!
பெண் ஊடகவியலாளர்கள் மீது எந்த விதமான பழிவாங்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளாதே!
பரிமளா, சோசலிச தொழிலாளர் மையம் 
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW