அருட்தந்தை ஸ்டேன் சுவாமி மரணம், பாசக அரசும் நீதித்துறையும் செய்த நிறுவனப் படுகொலை – கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

08 Jul 2021

நாள்: 8-7-2021, வியாழன், காலை 11 மணி,  வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை

அருட்தந்தை ஸ்டேன் சுவாமியை பாசிச பாசக அரசும் நீதித்துறையும் நிறுவனப் படுகொலை செய்ததைக் கண்டித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) செந்தாரகை, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் இன்று 8-7-2021 வியாழன் காலை 11 மணி அளவில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில்,  பீமா கோரேகான் ஊபா(UAPA) பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும், அவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 14 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், ஊபா (UAPA) உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமை (NIA) யைக் கலைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் செந்தில தலைமையேற்றார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன், மக்கள் அதிகாரத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் அமிர்தா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) செந்தாரகையைச் சேர்ந்த தோழர் திவ்ய பாரதி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மகிழன், பாப்புலர் ஃப்ரண்ட ஆப் இந்தியாவின் மாவட்டத் தலைவர் தோழர் அபுபக்கர் சாதிக், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஆவடி நாகராசன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின்  தலைமைக் குழு தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கணடன உரையாற்றினர். சுமார் 60 பேர் வரை இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

அருட்தந்தை ஸ்டேன் சுவாமி தன்னுடைய 84 ஆவது அகவையில் ஊபா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் நாள் மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக சிறையில் இருக்கும்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு அவர் ஆளாகியிருந்தார். நாடறிந்த பீமா கோரேகான் பொய் வழக்கில் ஸ்டேன் சுவாமியின் பெயரும் சேர்க்கப்பட்டு மாவோயிஸ்ட் கட்சிக்கு நிதியுதவி செய்தார், இந்த அரசாங்கத்தை தூக்கி எறிய திட்டமிட்டார் போன்ற பற்பல குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. தன் வாழ்நாளின் கடைசி எட்டு மாதங்களை அவர் மும்பை சிறையில் கழிக்க வைக்கப்பட்டார்.

திருச்சியில் பிறந்து பிலிப்பைன்சிலும் பெல்ஜியத்திலும் பட்டப்படிப்பு முடித்து பெங்களூரில் உள்ள சமூகவியல் நிறுவனத்தில் இயக்குநராக 20 ஆண்டுகள் பணியாற்றி, 1990 இல் இருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்காக அரும்பாடுபட்டவர்தான் ஸ்டேன். இந்தியாவில் உள்ள கனிமவளங்களில் 40% ஜார்கண்டில் உள்ளது. கனிம வளச் சுரங்கங்கள், அணைகள், சிறுநகரங்கள் எனப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் பழங்குடிகள் இடம்பெயர்க்கப்பட்டனர்.  அவர்களுக்கு உரித்தான காடுகளும் காட்டில் உள்ள கனிம வளங்களும் கார்ப்பரேட்களால் கொள்ளையடிக்கப்பட்டன. இது போன்ற திட்டங்களை அமலாக்குவதற்கு முன், பழங்குடி கிராம சபைகளின் கருத்தறிய வேண்டும் என்று சொல்லும் PESA சட்டத்தை நடைமுறைப்படுத்த ஸ்டேன் சுவாமி பாடுபட்டார். அரசமைப்பு சட்டத்தின் 5 வது பட்டியலில் சொல்லப்பட்டுள்ளபடி பழங்குடிகளே உறுப்பினர்களாக இருந்து நிர்வகிக்கும் ’பழங்குடி ஆலோசனைப் பேரவைகள்’ ஏன் அமைக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினார். பழங்குடிகளின் ஒப்புதல் இன்றி அவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்ட நிலங்களுக்காக இழப்பீடு கேட்டுப் போராடச் செய்தார்.  வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் இடம்பெயர்க்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக ஓர் அமைப்பை உருவாக்கினார்.  பழங்குடிகளின் அரசியல் சட்ட உரிமை, நிலவுரிமை, மனித உரிமை ஆகியவற்றுக்காக அரும்பாடுபட்டார். தங்களுக்காக உழைத்ததால் அந்தப் பழங்குடி மக்களால் ‘அப்பா’ என்று அவர் அன்போடு அழைக்கப்பட்டார்.

பழங்குடி மக்களில் ஏராளமானோர் ’மாவோயிஸ்ட்கள்’ என்று பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்படி சிறையில் அடைக்கப்பட்ட 3000 பேர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கினார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் அம்பானி, வேதாந்த குழுமத்தின் அனில் அகர்வால் உள்ளிட்ட பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகளின் கனிம வளக்கொள்ளைக்கு தடையாக இருந்ததுதான் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி இத்தனை வன்மமாக கொலை செய்யப்படுவதற்கு காரணமாகும்.

பீமா கோரேகான் வழக்கில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் கடைசியாக கைது செய்யப்பட்டவர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி. மனித உரிமைக் காப்பாளர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ், அறிஞர் ஆனந்த் டெல்டும்டே, செயற்பாட்டாளர் ரோனா வில்சன், வழக்கறிஞர் அருண் ஃபெரைரா, பேராசிரியர் சோமா சென், மனித உரிமைக் காப்பாளர் கெளதம் நவ்லாகா, வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தொழிற்சங்க செயற்பாட்டாளர் வெர்னான் கன்சல்வேஸ், பேராசிரியர் ஹனி பாபு, நிலவுரிமைச் செயற்பாட்டாளர் மகேஷ் ராவத், கவிஞர் சுதிர் தவாலே, கலைஞர்கள் ரமேஷ் கைச்சார், ஜோதி ஜாக்டாப், சாகர் கோர்கே ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மும்பையில் உள்ள தலோஜா சிறையில் வாடி வருகின்றனர்.

இவர்கள் மீதான மிக முக்கிய குற்றச்சாட்டு ‘இவர்கள் பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டமிட்டனர்’ என்பதாகும். அதற்கான சான்றுகளை, மின்னஞ்சல் பரிமாற்றங்களை இவர்களது கணிணியில் இருந்து எடுத்ததாக என்.ஐ.ஏ. சொல்கிறது. ஆனால், இதில் கைது செய்யப்பட்டுள்ள தோழர் ரோனா வில்சனின் கணிணியில் அவருக்கே தெரியாமல் உளவு நிறுவனங்கள் செயலியின் மூலம் அவரது கணிணியில் திணித்தவைதான் அந்த சான்றுகள் என்பதை ஆர்செனல் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்து அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால், இதை கருத்தில் எடுத்து பிணைக் கொடுக்க மறுக்கிறது நீதிமன்றம்.

முன்னதாக நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞர் வரவர ராவ்வுக்குப் பிணை பெறுவதற்கு பெரும்பாடு பட வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட குற்றுயிரும் குலையுயிருமாக்கப்பட்ட  நடைபிணம் போல் தோழர் வரவரராவ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

அருட்தந்தை இரு செவிகளும் கேட்கும் திறன் இழந்தவர்,  நடுக்குவாத நோய்க்கு ஆளானவர். அவரால் ஒரு குவளையைக்கூட கையில் பிடித்து நீர் அருந்த முடியாது. இதற்காக அவர் சிறை நிர்வாகத்திடம் உறிஞ்சுக் குழல் கொண்ட குவளை கேட்டார். ஆனால், சிறை கண்காணிப்பாளர் கெளஷ்துப் குர்லேகர் அதைக்கூட கொடுக்க மறுத்தார். உறிஞ்சுக் குழலுக்கு நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைக்கு ஸ்டேன் தள்ளப்பட்டார். என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ’உறிஞ்சுக் குழல் இல்லை’ என்று பதிலளித்தனர்.  பின்னர் பிப்ரவரியில் கொரோனா இரண்டாம் அலை வந்தபோது என்.ஐ.ஏ. நீதிமன்றத்தை அணுகி பிணை கேட்டார் ஸ்டேன். தலோஜா சிறை அதிகமான கைதிகளைக் கொண்ட கூட்ட நெரிசல் மிக்க சிறை. தொற்றுப் பரவலுக்கு அதிக வாய்ப்புகளைக் கொண்ட சிறை. கொரோனா தொற்று அபாயமும அது தீவிரப்படுவதும் 60 அகவைக்கு மேல் இருப்போருக்கு  உண்டு என்பதால் முதியவர்களை வீட்டை விட்டே வெளியே வரவேண்டாம் என்று  அரசு ஒருபக்கம் அறிவுறுத்திக் கொண்டிருக்கும்போது  ஸ்டேனுக்குப் பிணை மறுத்தது என்.ஐ.ஏ. நீதிமன்றம். பின்னர் உயர்நீதிமன்றத்தை அணுகி மருத்துவ தேவைக்காக பிணை கேட்டார் ஸ்டேன். தான் வெகுகாலம் வாழப் போவதில்லை, தன்னுடைய கடைசி காலத்தை தான் மக்களுடன் கழிக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். சிகிச்சைக்காக அவருக்கு உயர்நீதிமன்றம் பிணை கொடுத்தது.

பிணை கிடைத்து வெளியே வந்த பிறகு அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மருத்துவமனையில் உயிருக்குப் போராடியபடி இருந்தவர் ஜூலை 5 ஆம் நாள் மாரடைப்பால் மாண்டார். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி அருட்தந்தை ஸ்டேன் சுவாமியை சித்திரவதை செய்த சிறைக் கண்காணிப்பாளர் கெளஷ்துப் குர்லேகர் மீதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கோரி பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்போர் நேற்று முழுநாள் பட்டினிப் போராட்டம் நடத்தினர்.

அருட்தந்தை ஸ்டேன் சுவாமி மறைவை ஓட்டி அவரைப் பொய் வழக்கில் கைது செய்து , பிணை மறுத்து, மனிதத்தன்மை அற்ற வகையில் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்போரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் காங்கிரசு, திமுக, சிபிஐ, சிபிஐ(எம்), திரினாமூல் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் 10 பேர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஐநாவின் மாந்த உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம், மனித உரிமைக் காப்பாளர்களுக்கான ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி மேரி லாவ்லர், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதி  ஈமான் கில்மோர் , ஜெர்மனியின் மனித உரிமை கொள்கைகளுக்கான ஆணையர் பார்பல் கொஃப்லர் ஆகியோர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமியின் சாவு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவர் விசயத்தில் தாம் சட்டப்படி நடந்துகொண்டதாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் அரிண்டம் பாகெயி நேற்றிரவு உலகை ஏமாற்ற முயன்றுள்ளார்.

காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் நிறுவனங்களான தேசிய புலனாய்வு முகமை(NIA), சிறை நிர்வாகம், நீதிமன்றம் என எல்லாம் சேர்ந்து நிகழ்த்திய பச்சைப் படுகொலை இது.

காந்தியாரை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைக் கொண்ட கோட்சே சுட்டுக்கொன்றார். தமது சித்தாந்த எதிரிகளைக் கொல்வது ஆர்.எஸ்.எஸ். இன் வழமையான உத்தி. கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கெளரி லங்கேஷ் போன்றவர்கள் ஆர்.எஸ்.எஸ். இன் துணை அமைப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்போது துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்தாமல் நீதிமன்றத்தையும் என்.ஐ.ஏ. வையும் தன்னுடைய துணை அமைப்பாகப் பயன்படுத்தி மக்களுக்கு அரணாக உழைத்த அறிஞர் பெருமக்களை சிறையில் அடைத்து மெல்ல மெல்ல சாகடித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

இதை இனியும் அனுமதிக்க முடியாது. பீமா கோரேகான் பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும், சிறையில் வாடும் 14 தோழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், ஊபா உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், என்.ஐ.ஏ. வைக் கலைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாக முன்வைக்கிறோம்.

ஸ்டேன் சுவாமிகளை சாகடிப்பதால் மானுடம் பொங்கி நுரைப்பதை பாசிஸ்டுகளால் தடுத்துவிட முடியாது. பாசிசத்திற்கும் சனநாயகத்திற்கும் இடையிலான இந்த போராட்டம் ஸ்டேன் சுவாமிகளை சிறையில் அடைப்பதாலோ அல்லது கொல்வதாலோ முடிந்துவிடப் போவதில்லை. அவரது வாழ்வும் சாவும் இலட்சக்கணக்கானோரை நீதியின் பக்கமும் சனநாயகத்தின் பக்கமும் இழுத்து வரும். பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் இனியும் பார்வையாளரகாக இல்லாமல் நாமெல்லோரும் பங்கேற்பாளர்களாக களத்தில் இறங்க வேண்டும் என்று இவ்வார்ப்பாட்டத்தின் வாயிலாக வெகுமக்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்.

 

                                                     இப்படிக்கு,

                                                                                                            செந்தில்     9941931499

                                                                                                           அமிர்தா 9176801656

                                                                                                           உமாபதி 72992 30363

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW