பாசிச எதிர்ப்பில் கர்நாடகாவில் ஒரு மக்கள் ஊடகம் – ஈதினா  (https://eedina.com/) – செந்தில்

27 Jun 2023

கர்நாடக மாநிலத் தேர்தலில் பாசக தோல்வி கண்டதில் சிவில் சமுக இயக்கங்கள் ஆற்றிய பங்கு நாடுதழுவிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் மக்கள் ஊடகமாக கட்டியெழுப்பப்பட்டு வரும் ஈதினாவின் பங்கும் அறிந்துகொள்ளத் தக்கது.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வெளிவந்த முன்கணிப்புகளில் மிக நெருக்கமாக இருந்தது ‘eedina.com’ செய்த கருத்துக் கணிப்புதான். இதுவொரு கார்ப்பரேட் ஊடகம் அல்ல. இது மாற்று அரசியல் களத்தில் நிற்கும் அமைப்புகள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இணைந்து முன்னெடுத்த ஊடக இயக்கம் ஆகும்.

ஊடகம் என்பது வெகுமக்களைக் கட்டுப்படுத்தும் சாதனமாக இன்று மாறியுள்ளது. மைய நீரோட்ட ஊடகங்களை கார்ப்பரேட்கள் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. குடியாட்சியத்தின்(சனநாயகத்தின்) ஐந்தாவது தூண் என்று வண்ணனை செய்யப்பட்ட ஊடகத் துறையோ இன்று ஆளும்வகுப்பின் கருவி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுடைய பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டு வருவது, உழைக்கும் மக்களினதும் ஒடுக்கப்படும் மக்களினதும் உரிமைக் குரலை உலகறியச் செய்வது உழைக்கும் மக்கள் சார்பான கதையாடலை உருவாக்குவது என சுதந்திர ஊடகம் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன.

அத்தகைய உடனடி தேவையை நிறைவு செய்யும் பொருட்டு சில அமைப்புகள், குடியாட்சிய ஆற்றல்கள் இணைந்து eedina என்ற மக்கள் ஊடகத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டியெழுப்பினர். அது தேர்தல் களத்தில் உரிய வகையில் பங்காற்றி குடியாட்சியத்திற்கு துணை நின்றது. இதில் இருந்து தமிழ்நாடு பெற்றுக் கொள்ளக்கூடிய படிப்பினைகளை அடையாளம் காணும் நோக்கில் eedina பற்றிய விவரங்களைக் காண்போம்.

எது செய்தி என்பது தான் இன்றைக்கு உள்ள முதற்பெரும் கேள்வி. எது செய்தியாக வேண்டும்? எது விவாதிக்கப்பட வேண்டும் என்பதை ஆளும் வகுப்பே தீர்மானிக்க நினைக்கிறது. அவ்விடத்தில்தான் மெய்யான மக்கள்  பிரச்சனைகளை செய்தியாக்க வேண்டிய தேவை எழுகிறது.

மெய்யான மக்கள் பிரச்சனைகளை அடையாளம் காண்பதற்கு அதற்குரிய கண்ணோட்டம் தேவைப்படுகிறது. அந்தக் கண்னோட்டம் வழங்கப்பட்ட ஊடகர்களை உருவாக்க வேண்டும்.

எனவே, இங்கு நிகழ்ச்சியை அடையாளம் கண்டு, அதை செய்தியாக்கி, பரப்பும் வேலையை மக்களில் இருந்து உருவாக்கப்பட்ட ’; குடிமக்கள் ஊடகர்’ Citizen journalist செய்கின்றார். ’குடிமக்கள் ஊடகர்’ ஆவதற்கு அவர் ஈதினா பயிற்சி பட்டறைகளில் பாடம் கற்று தேர்ச்சிப் பெற வேண்டும். அப்படி தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு ‘குடிமக்கள் ஊடகர்’ என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. அப்படி முன்வரக்கூடியவர்கள் ஏற்கெனவே குடியாட்சிய இயக்கங்களில் செயல்பட்டு வரக்கூடிய துடிப்பும் ஊக்கமும் உடைய இளைஞர்கள் ஆவர்.

எடுத்துகாட்டாக, தலித் அமைப்புகளைச் சேர்ந்தோர், கூலி விவசாயிகளுக்கான அமைப்புகளைச் சேர்ந்தோர், இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தோர், உழவர் அமைப்புகளைச் சேர்ந்தோர் ‘குடிமக்கள் ஊடகர்’ ஆக செயல்படுவதற்கு முன்வந்து, பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கின்றனர்.

இதுவரை சுமார் 13,500 பேர் இதில் பங்குபெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். அதில் 6500 பேர் செயல்பாட்டில் உள்ளனர். சுமார் 2500 பேர் வரை ஊக்கமுடன் செயல்படுபவர்களாக இருக்கின்றனர்.  இவர்கள் எவ்வித பணமும் பெற்றுக்கொள்ளாமல் களத்தில் இருந்து செய்தியை சேகரித்து அனுப்புகின்றனர்.

ஒரு குடிமக்கள் ஊடகர் செய்தியை  எழுதி ஈதினாவினுடைய உள்ளடக்க மேலாண்மை குழுவுக்கு ( Content Managemnt System) அனுப்ப வேண்டும். அச்செய்தியின் உண்மைத் தன்மை அங்கு சரி பார்க்கப்பட்டு இணையத்தில் ஏற்றப்படும். ஈதினா செய்திக்கு எனத் தனித்துவமான செயலியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பெயர்  ’சுத்தி சங்காதி’ –  ’செய்தி தோழர்’ செயலி. இந்த செயலியின் வழியாக செய்திகளைப் படிக்கவும் பரப்பவும் முடியும். இந்த செயலியின் வழியாக மேற்சொன்ன மாபெரும் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் ஊடகர்கள் அனுப்பும் செய்தியை உறுதிப்படுத்தி, அந்தஅந்த மாவட்டங்களில் உள்ள செய்தி சேகரிப்பு பணியை ஒருங்கிணைப்பதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் பணியமர்த்தப்படுகிறார். இத்தகைய மாவட்ட ஒருங்கிணைபாளர்கள் மொத்தம் 22 பேர் உள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட முழுநேரப் பணியாக செய்வதால் குறைந்தபட்ச பராமரிப்பு தொகையைப் பெற்றுக்கொண்டு  இவ்வேலையைச் செய்கின்றனர்.

ஈதினா தலைமை அலுவலகத்தில் செய்தி எழுதுவதற்கும் காணொளிகளை உருவாக்குவதற்கும் இன்ன பிற தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகளுக்காகவும் சற்றொப்ப 40 பேர் பணியாற்றுகின்றனர்.

கர்நாடகாவில் உள்ள பல்வேறு துறை சார்ந்த எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து கட்டுரைப் பெறுகிறது ஈதினா. இப்படியாக 1500 பேர் ஈதினாவுக்கு கட்டுரை எழுதுகின்றனர். கர்நாடகாவில் உள்ள 52 செய்தி தொலைக்காட்சிகளுக்கு ஈதினா செய்தி கொடுக்கிறது.

இந்த ஊடகப் பணியை வழிகாட்டுவதற்கும் அதன் வரவு செலவுகளைப் பராமரிப்பதற்கும் நீண்ட கால திட்டமிடலை செய்வதற்கும் சுமார் 22 பேர் அடங்கிய நிர்வாகக் குழு இருக்கிறது.

இதில் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், சமயப் பெரியவர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஓய்வுப் பெற்ற ஊடகவியலாளர்கள் எனப் பொறுப்புள்ள சமூகப் பிரிவினர் பங்குபெறுகின்றனர்.

ஈதினாவின் மிக முக்கியமான பங்களிப்புகள்:

  1.  கதையாடல்களை உருவாக்கிப் பரப்பியது:

’40% அரசாங்கம்’ என்ற சுட்டலைத் தொடங்கியது ஈதினா தான். ஒவ்வொரு அரசாங்க ஒப்பந்தத்திற்கும் 40%

கமிசன் வாங்கும் ஊழல் அரசாங்கம் என்பதைதான் 40% அரசாங்கம் என்று வெகுசனப் படுத்தியது ஈதினா. அதுபோலவே, பாசக உருவாக்கிய கதையாடல்களை முறியடிப்பதிலும் ஈதினா முன்னணிப் பங்கு வகித்தது. எடுத்துக்காட்டாக, திப்பு சுல்தானைக் கொன்றது உரி கவுடா , நஞ்ச கவுடா என்றொரு கட்டுக்கதையை சொல்லி கவுடா சமூக மக்களிடையே இஸ்லாமிய எதிர்ப்போரு கூடிய பெருமிதத்தை தூண்டிவிட முனைந்த பாசகவின் முயற்சியைத் தவிடுபொடியாக்கியது ஈதினா.

  • மக்கள் பிரச்சனைகளை முன்னுக்கு கொண்டு வருதல்:

வெறுப்பு அரசியலை வளர்ப்பதன் மூலம் இந்து, இஸ்லாமியர்கள் எனப் பாகுபடுத்தி பலன் பெறுவது பாசகவின் வாடிக்கை. விலை வாசி உயர்வு, வேலையின்மை, உழவர்தம் விளைபொருட்களுக்கு விலை நிர்ணய கோரிக்கை, நூறுநாள் வேலைத் திட்டத்திற்கு நிதிக்கு குறைப்பு போன்றவற்றை முன்னுக்கு கொண்டு வருவதில் ஈதினா முக்கியப் பங்கு வகித்தது.

  • நாடித் துடிப்பைக் கண்டறிந்த கருத்துக்கணிப்பு:

பாசக வென்றுவிடும் என்ற தோற்றத்தை உருவாக்குவதில் மைய நீரோட்ட ஊடகங்கள் முனைப்புக் காட்டிக் கொண்டிருந்தன. மக்களின் உண்மையான நாடித் துடிப்பென்ன என்று கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருந்தது. Cicero என்ற புகழ்ப்பெற்ற நிறுவனத்தின் உதவியுடன் பெரும்வீச்சிலான கருத்துக்கணிப்பை ஈதினா நடத்திக் காட்டியது. 224 தொகுதிகளில் இருந்து 50,000 பேரிடம் கருத்துக் கணிப்பை நடத்துவதுதான் இலக்கு. வழக்கமான கருத்துகணிப்புகளில் அதிகபட்சமாக 10000 பேர் வரை எடுப்பார்கள்.

41,000 குடும்பங்களிடம் இருந்து கருத்துக்கணிப்பை நடத்தி முடித்தது ஈதினா.  இது வெவ்வேறு சமூகப் பிரிவினரின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள உதவியது.

இந்த கருத்துக்கணிப்பு பாசக தோல்வியடைவதற்கான வாய்ப்புகளை மட்டும் கண்டறிந்து சொல்லவில்லை, அது எத்தனை வாக்கு வேறுபாட்டில் தோல்வி காணும் என்பதைக்கூட மிக துல்லியமாக கணித்தது.

ஈதினாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், குடிமக்கள் ஊடகர்கள், ஈதினா தன்னார்வலர்கள் மிகக் கடினமான உழைப்பை நல்கி இக்கருத்துக் கணிப்பை நடத்தினர். ஒரு தொகுதியில் கருத்துக் கணிப்பு நடத்திவிட்டால் அடுத்த தொகுதிக்கு சென்று அங்குள்ள குழுவுக்கு உதவி,  வேலையை முடிக்கவேண்டும் என்ற ஊக்கத்தை வெளிப்படுத்தினர்.

ஈதினாவின் இந்த கருத்துக்கணிப்புக்கு புகழ்ப்பெற்ற ஆய்வாளர் யோகேந்திர யாதவ் பெரிதும் உதவினார்..

கர்நாடகாவில் உள்ள சிவில் சமூக ஆற்றல்களை ஒருங்கிணைத்து ஒரு மக்கள் ஊடகத்தை கட்டியெழுப்பியுள்ளனர். அந்த ஊடகத்தால் பாசிசத்திற்கு எதிராக காத்திரமாகவும் கவனம் ஈர்க்கும் வகையிலும் பங்காற்ற முடிந்துள்ளது.

பாசிச எதிர்ப்பு சனநாயக ஆற்றல்கள் கர்நாடகாவைவிடவும் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். அந்த ஆற்றல்கள் சரியான வகையில் ஒருங்கிணைக்கப்பட்டால் மிகப் பெரிய ஆக்கங்களை ஏற்படுத்தி சமூக மாற்றத்திற்குப் பெரிதும் பங்களிக்க முடியும்.

அத்தகைய முன்னெடுப்புகளுக்கு ‘ஈதினா’ ஒரு நல்ல எடுத்துக்காட்டாகவும் ஊக்கமாகவும் அமையக்கூடும்.  

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW