சாலையோர உணவுக்கடைகள் என்ன கள்ளச்சாராயம் விற்பவர்களா ? எங்களுக்கு ஏன் அனுமதி இல்லை ?

17 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 1)

எந்த ஊர் என்று கேட்கத் தூண்டும் அளவிற்கு அழகு தமிழில் பேச தொடங்கினார் வத்தலகுண்டை சேர்ந்த  சாந்தி  அம்மா. இருபது ஆண்டுகளுக்கு மேல் தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் தள்ளுவண்டியில் உணவுக்கடை நடத்தி வருகிறார். பொதுமுடக்கம் தடையால் வருமானமின்றி வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார். எல்லா உணவு கடைகளும் இயங்குகின்றன. எங்களுக்கு மட்டும் ஏன் தடை? எல்லா கடைகளும் போல நாங்களும் பார்சல் தருகிறோம். எங்களுக்கு  மட்டும் உயிர் மேல் அச்சமில்லையா? என்று பேச தொடங்கினார்.

புதியதாக பணிக்கு வரும் காவலர் தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள்  அன்றாடம் எங்களிடம் இலவசமாக உணவு வாங்குகின்றனர், இதைத் தவிர மாநகராட்சி அதிகாரிகள், அரசியல்வாதிகள் என ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் கணிசமாக  கப்பம் கட்டுகின்றோம்.

பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட போது எங்களைப் போன்ற தள்ளுவண்டி கடைகளில் வந்துதான் அபராதம் போடுவது மேலும் இத்தனை  பேரை பிடித்ததாகக் கணக்குக் காட்டுவது மாநகராட்சி ஊழியர்களின் வாடிக்கை.

20ரூபாய்க்கு 4 இட்லி வாங்கும் வாடிக்கையாளர்கள் பை கொண்டுவரவில்லை எனில் அவர்கள் பாதுகாப்பாக உணவை எடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காக 4 ரூபாய் மதிப்புள்ள மக்கும் பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுப்போம். மேலும் தினமும் முதியவர்கள், ஊனமுற்றோர் என பலருக்கும் இலவசமாக உணவு வழங்கிவருவதாக கூறினார்.

ஓர் உடைந்த நிலையிலிருந்த தள்ளுவண்டியைக் காட்டி ஆண்டுக்கு இரண்டுமுறை வண்ணம் தீட்டி புதிய வண்டியைப் போல் வைத்திருந்தோம். ஒரு முறை மாநகராட்சி ஊழியர்கள் வந்து கண்முன்னால் ஆக்கிரமிப்பு என்று வண்டியை அடித்து நொறுக்கிவிட்டனர் எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

நாங்கள் வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வைத்துள்ளோம், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வியாபாரம் செய்கின்றோம் என்று அனைத்து மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களுக்கு பெட்டி கேஸ் போட்டு கணக்குக் காட்ட  வேண்டும் என்றால், எங்களைப் போன்ற வியாபாரிகளைத் தான் எப்போதுமே முதலில் இரையாவோம்.

எங்கள் கடைக்கு ஒவ்வொரு நாளும் நேரடியாக 5 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொருட்களை விநியோகம் செய்து வாழ்ந்து வருகின்றனர். உதாரணமாக, முட்டை, இலை, காய்கள், தண்ணீர் கேன் போன்றவற்றை வழங்கி வருகின்றனர். மேலும், ஒரு சமையல் மாஸ்டர் வேலை செய்து வருகிறார். இதை நம்பியுள்ள மொத்தம் 7 குடும்பங்கள் இந்த தளர்வுகளற்ற ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றோம். டாஸ்மாக்கை திறக்க சொன்ன முதல்வர் எங்க வயித்துப்பொழப்புக்கு வழிசொல்லவில்லை. நாங்க என்ன கள்ளச்சாராயமா விக்கிறோம்? மற்றவங்க வயித்துப்பசிய ஆத்துற தொழில்தானே செய்யுறோம்? என்று தெரிவித்தார்.

சாந்தி  அம்மா தற்போது வாடகை கொடுக்கவும், தண்டல் கட்டவும் முடியாமல், கையிருப்பு முழுவதும் செலவாகிவிட்டது. புதிய கடன்கள் கிடைக்காமலும் தவித்து வருகிறார். இப்போது  வீட்டு வாசலில் பகல் பொழுதில் கடை நடத்தி வருகிறார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோர கடை நடத்தி வரும் சாந்தி  அம்மா இதுவரை எந்த வங்கிக் கடனும் பெற முடியவில்லை. நலவாரியத்திலும் பதிவு செய்யவில்லை. தண்டலுக்குப் பணம் வாங்கிதான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை நடத்துகிறார்.

மேலும் இவர்கள் மட்டுமின்றி  நுகர்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக  தள்ளுவண்டி கடைகளில் உணவு ஒப்பீட்டளவில் குறைந்த விலை இருக்கும்.  இதை நம்பியிருக்கும் நலிந்த  மக்கள் பிரிவினரும் நம் நாட்டில் உள்ளனர்.  பொது முடக்கம் ஏற்படுத்தியிருக்கும் பொருளியல் நெருக்கடி காரணமாக மேலும் பலர் மேற்சொன்ன நலிந்த மக்கள் பிரிவினரின் வாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஏழை, எளிய நுகர்வோரின் பார்வையிலும் சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் இயங்குவது அவசியமாகிறது.

தேநீர் கடைக்கு அனுமதியில்லை. அதேசமயம், டாஸ்மாக்கிற்கு  அனுமதி வழங்கி அறிக்கை வெளிவந்த சில மணி நேரங்களில் நாடு முழுவதும்  ஒரே மாதிரியான மீம்ஸ், அறிக்கைகள், கார்டூன்கள் வழியாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக மறுநாள் தமிழக முதல்வர் தேநீர் கடைக்கு அனுமதி வழங்கினார். அதேபோல தமிழக முதல்வர்  சாலையோர தள்ளுவண்டி உணவுக் கடைகளையும் செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.

சாலையோர வியாபாரிகளில் குறிப்பாக உணவுக் கடை நடத்துபவர்களிடம்  எப்போதும்  பரிவு, உபசரிப்பு காணப்படும். அது விருந்தோம்பலின் விளைபொருள். இத்தனைத் துயரங்களுக்கு மத்தியிலும்  நாங்கள் அவரிடமிருந்து விடைபெறும் போது  காப்பி சாப்பிட்டு போங்க என்று சோகத்தை மறைத்துக் கொண்டு புன்னகைக்கிறார்  சாந்தி அம்மா.

கொரானா பொது முடக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடியை கணக்கில் கொண்டு சாலையோர உணவுக்கடைகளை உடனடியாக தமிழக அரசு திறந்திட உத்தரவிட வேண்டும். ‘ அம்மா’ உணவகங்கள் போல  ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில், குறைந்தவிலையில் தரமான உணவை வழங்கும் சாலையோர உணவுக்கடைகளை தமிழக அரசு ஊக்குவித்து நலத்திட்டங்களை அறிவிக்கவேண்டும்

சோசலிச தொழிலாளர் மையம் SWC – தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சென்னை மாவட்டம்

9500056554, 9787430065

 

தமிழக அரசே ! சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகளையும் பார்சல் முறையில் செயல்பட அனுமதித்திடுக!

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW