பேரழிவு முதலாளித்துவமும் கொரோனா தொற்று பேரிடரும்

01 May 2021

பேரழிவு முதலாளித்துவம் என்பது இயற்கை பேரிடோரோ அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட போர் பேரிடரோ அல்லது சார்ஸ், கரோனா  போன்ற பெருந்தோற்று  பேரிடரோ, பேரிடர் காலத்தை தனக்கான வணிக லாபத்திற்கான  வாய்ப்பாக மாற்றிக் கொள்கிற முதலாளித்துவ பண்பை “பேரழிவு முதலாளித்துவம்” (Disaster Capitalism) எனலாம்.

பேரிடர் காலத்தில் நிலவுகிற குழப்பத்தையும் நிச்சயமற்ற நிலைமையும் பயன்படுத்திக் கொள்கிற முதலாளித்துவ சக்திகள், இக்காலத்திலே அரசிடம் நிதிச் சலுகைகளையும் வரிச்சலுகைகளையும் எந்த எதிர்ப்புமின்றி பெற்றுக் கொள்கிறார்கள். தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகளில் கூட அரசின் சிறப்பு சலுகைகளை பெற முடிகிறது. மக்கள் எதிர்க்கிற முக்கிய கொள்கை முடிவுகளை அமல்படுத்த முடிகிறது. பேரிடர் குழப்ப காலத்தில் சாமானிய மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடுகிற நிலையிலே இவ்வாறான கார்பரேட் நல முடிவுகளை எடுக்கிற அரசை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் முதலாளித்துவ வர்க்கம் இந்த வாய்ப்பை தன்வயப்படுத்திக் கொள்கிறது.

கடந்த ஓராண்டுக்கு மேலாக உலக மக்களை கரோனோ வைரஸ் தொற்று உலுக்கி வருகிறது. இந்த நொடி வரை கரோனா  பெருந்தொற்று பேரிடருக்கு சுமார் 31.7 லட்சம்  மக்கள் பலியாகியுள்ளனர். கரோனோ ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளால் பல கோடி மக்கள் வருமானமிழந்து வேலையிழந்து சோற்றுக்கு வழியற்று அல்லாடுகின்றனர்.இந்தியாவில் தற்போது இரண்டாம் அலை தாக்குதல் உலகின் மனசாட்சியை உலுக்கி வருகிறது.சுடுகாடுகள் இரவுபகலாக எரிகிறது. படுக்கைக்கும் தடுப்பூசிக்கும் ஆக்சிஜனுக்கும் மக்கள் பல மணிநேரமாக காத்து நிற்கிறார்கள். முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் கூட பெரும்பாலும் ஐரோப்பிய கண்டங்களை புரட்டிப் போட்டது..ஆனால் தற்போதைய கரோனா பெருந்தொற்றானது  ஒட்டுமொத்த நாடுகளையும் உலுக்கி வருகிறது. எங்கு பார்த்தாலும் மரணச் செய்திகள்.எப்போது இந்த பேரிடர் முடிவுறும்.எப்போது இயல்பு வாழ்வு திரும்பும் என ஏக்கத்திலே மக்கள் நாட்களை கடத்துகிறார்கள்.

மானுட குல வரலாற்றின் இக்கட்டான இப்பேரழிவு சூழலை முதலாளித்துவ சக்திகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தத் தவறவில்லை. இக்காலத்திலே கார்பரேட்களை எந்த பாசாங்கும் அற்று வெளிப்படையாக ஆதரிப்பதில் அரசுக்கு ஒரு தயக்குமும் இருப்பதில்லை. பேரிடர் மீட்பு,தேசத்தை காப்பது என்ற கோஷத்தின் மூலமாக கார்ப்பரேட் ஆதரவு  முடிவுகள் எடுக்கப்படுறது.இந்தியாவில் கரோனா பேரிடர் காலத்தில் முதலாளித்துவ சக்திகளும் அதன் ஊதுகுழலான மோடி அரசும் மேற்கொண்ட மக்கள் விரோத கொள்கை முடிவுகள் வருமாறு.

 • கரோனா பேரிடர்காலத்தில் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டு உற்பத்தி விநியோக சங்கிலி தேக்கம் பெற்றதாக கார்பரேட் நிறுவனங்கள் அரசிடம் கரோனா தொடக்கம் தொட்டே கூப்பாடு போடத் தொடங்கின.இதனது தொடர்ச்சியாக பேரிடர் காலத்தில் தொழிற்துறை ஊக்குவிப்பு என்ற பெயரில் அரசு கார்பரேட்களுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கத் தொடங்கியது.அமெரிக்காவில் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை மற்றும் ஊக்க நிதி என சுமார் 700 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கியது டொனால்ட் ட்ரம்ப் அரசு.கார்பரேட் விசுவாசத்தில் அமெரிக்க அரசிற்கு சற்றும் சலைத்திடாத இந்தியாவின் மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை மீட்கிறோம் என கூறி கரோனா பேரிடர் கால பொருளாதார மீட்பாக  ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது. “இந்த(கரோனோ) நெருக்கடியை நாம் ஒரு வாய்ப்பாக கருத வேண்டும்,” என்ற மோடி  இந்த சீர்திருத்தங்கள் வணிகத்தை ஊக்குவிக்கும், முதலீட்டை ஈர்க்கும், மேலும் மேக் இன் இந்தியாவை மேலும் பலப்படுத்தும், என்றார். மோடி அரசின் பேரிடர் கால  நிதி ஒதுக்கீட்டுப் பலனை கார்பரேட் நிறுவனங்களே பெற்றன என்பதை கூறத் தேவையில்லை.
 • வங்கிகளில் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள ஐம்பது கார்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன் 68,607 ரூபாயை ஊரடங்கு காலத்திலே மோடி அரசு ரைட் ஆப் செய்தது.தேசமே கரோனாவோடு போராடும்போதும் இது தேவையா என காங்கரஸ் கட்சி இம்முடிவை விமர்சித்தது.
 • கரோனா பேரிடர் காலத்திலே மத்திய அரசு 2021-22 நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தது.இந்த அறிக்கையை காகிதமில்லா நிதி நிலை அறிக்கை,நூற்றாண்டு நிதி அறிக்கை,உட்கட்டுமான ஊக்குவிப்பு பட்ஜெட்  என ஆளும் கட்சியும் கார்பரேட்களும் விதந்தோதியது.ஆனால் பேரிடர் காலத்தில் இந்திய முதலாளித்துவ பெருங்குழமங்களின் லாப நலன் சார்ந்த பொருளாதார கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குகிற நிதி நிலை அறிக்கையாக அமைந்தது.அறிக்கையில் “பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா, துறைமுகக் கழகம், ஐ.டி.பி.ஐ. வங்கி, பவன் ஹன்ஸ் (ஹெலிகாப்டர் நிறுவனம்), கண்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்கும் திட்டம் அமலாக்கப்படும். பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும். இந்தப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் – அரசு கூட்டுப்பங்களிப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். பல துறைகளில் தனியாரின் பங்களிப்பின் மூலம் நாடு பயன்பெறமுடியும். அந்த வகையில் நாட்டில் உள்ள துறைமுகங்களில் தனியார்பங்களிப்பு அவசியம்” என கூறியது..”இந்தியாவின் சொத்துக்களை பிரதமரின் செல்வந்த நண்பர்களுக்கு விற்கும் பட்ஜெட்” என 2021-22  நிதி நிலையை அறிக்கை காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி சரியாகவே விமர்சித்தார்.
 • கரோனா முதல் அலை தணிந்த நிலையிலே நவம்பர் 2020 இல் தொழிலாளர் வேலை நேரத்தை எட்டு மணியிலிருந்து பனிரெண்டு மணி நேரமாக மாற்றுகிற பரிந்துரையை தொழிலாளர் துறை அறிவித்தது.மோடி அரசு, புதிய பொருளாதார அடிமைகளை உருவாக்குவதாகவும் கார்பரேட்களின் நண்பனாகிவிட்டதாகவும்  காங்கரஸ் கட்சி இந்த பரிந்துறையை கடுமையாக சாடியது.
 • நவம்பர் 2020 இல் லக்ஷ்மி விலாஸ் வங்கியை  -டிபிஎஸ் வங்கியுடன் இணைத்துவிட்டதாக  மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.இதன்  மூலமாக,இந்திய வங்கித்துறை வரலாற்றில் முதல் முறையாக  இந்தியாவின் தனியார் வங்கி ஒன்றை வெளிநாட்டு வங்கியுடன் இணைத்த வரலாற்று பெருமையை மோடி அரசு பெற்றது. நாட்டின் வங்கித் துறையையும் இந்திய ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தையும் சீரழித்த மோடி அமித் ஷா கும்பலாட்சியாளர்கள் பேரிடர் காலத்திலும் இந்திய வங்கித் துறைக்கு சவக் குழி வெட்டுவதை நிறுத்தவில்லை..
 • கரோனா ஊரடங்கு காலத்திலே லாபம் தருகிற அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை ஏலம் விடுவதில் மத்திய அரசு மும்முரமாக செயல்பட்டது.நாட்டிலே முதல் முறையாக பயணிகள் ரயில் போக்குவரத்து தனியாருக்கு வழங்க முனைந்தது.
 • இக்காலத்திலே ‘மின்சார சட்ட திருத்த மசோதா – 2020’ வை மோடி அரசு அறிமுகம் செய்துது. 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல முக்கிய  திருத்தங்களைச்(குறிப்பாக மின்சார மானியங்களை ஒழிப்பது,மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானத்தை தனியார் மயப்படுத்துவது) செய்து புதிய திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கான வரைவு சட்ட அறிக்கையை ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, வெறும் 21 நாட்களுக்குள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் கூறலாம் என்றது.
 • சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020 என புதிய வரைவு சட்டத்தை மத்தியசுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. இந்த சட்டம்,ஏற்கனவே நடைமுறையில் உள்ள சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம்- 2006 ஐ நீர்த்துப்போகச் செய்வதோடு,சூழலியல் பாதுகாப்பு சட்டம் 1986 ஐ கேள்விக்குள்ளாக்கியது.முன்னதாக மத்திய பாஜக அரசானது,கரோனா பேரிடர் கால சூழலை பயன்படுத்தி வரைவு மீதான கருத்துக் கேட்பு கால  வரம்பை குறைத்து அறிவித்தது.இதை எதிர்த்து சூழலியல் செயல்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மேலும் அறுபது நாளைக்கு காலக் கெடுவை நீட்டித்து  (ஆகஸ்ட் 11 ) நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நாட்டிலே சூழலியல் சீர்கேடுகள்  அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில்,சூழலியல் பாதுகாப்பை உறுதி செய்கிற வகையிலே சட்டங்களை கடுமையாக்குவதற்கு பதிலாக மாசை அதிகரிக்கிற வகையிலே,இயற்கை வளத்தை கார்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு இச்சட்டம்,சட்டப்பூர்வ ஒப்புதல் வழங்கியது.
 • தொழிற்துறை பெரு நிறுவனங்களிடம் நாட்டின் வங்கித் துறையை முழுவதும் கையளிக்கிற நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு தொழில் குழுமங்களுக்கு வங்கி  தொடங்க உரிமை வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது.வரும் நாட்களில் நாட்டின் வங்கிகளை கார்பரேட்களிடம் அடமானம் வைக்கிற முக்கிய முடிவுகளுக்கான தொடக்கம் இது.
 • அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020,விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே  மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்படவேண்டும்,பேரிடர் காலத்தில் இவ்வளவு அவசரமாக மசோதாவை நிறைவேற்றக் கூடாது என மாநிலங்களவையிலே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதையும் பொருட்படுத்தாமல்,அவர்களை சஸ்பன்ட் செய்யப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு செல்லாமல் புறக்கணித்த நிலையிலே இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாமல் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.இதன் பின் எழுச்சி பெற்ற போராட்டங்களை இன்னும் தில்லி எல்லையில் தொடர்ந்துகொண்டுள்ளன.
 • பேரிடர் காலத்திலே மத்திய அரசு தனது செலவீனத்தை குறைக்க செலவீன சீர்திருத்தத்தை(EXPENDITURE REFORM) மேற்கொண்டது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்வது,சர்வேதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில்,பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியது போன்ற நடவடிக்கைகளை முடிக்கிவிட்டது.
 • .தடுப்பூசி உற்பத்தியிலும் தடுப்பூசி திட்டங்களிலும் நீண்ட அனுபவமும் திறனும் உடைய இந்திய அரசு கரோனா தடுப்பூசி தயாரிப்பையும் உயிர் காக்கும் மருந்து தயாரிப்பையும் பேரழிவு முதாளித்துவ சக்திகளிடம் தாரை வார்த்தது. அரசின் பொதுத்துறை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை ஓரம் கட்டி, தனியார் கார்பரேட் நிறுவனங்களான  சீரம் நிறுவனத்திற்கும்  பாரத் பயொடேக் நிறுவனத்திற்கு தடுப்பூசி தயாரிப்பிற்கு அனுமதி வழங்கியது.தற்போது இந்தியாவில் நிலவுகிற தடுப்பூசி தட்டுப்பாடு குறித்தும் செங்கல்பட்டிலுள்ள  பொதுத்துறை தடுப்பூசி மையத்தில் மத்திய அரசு தடுப்பூசி மற்றும் மருந்து உற்பத்தியை  தொடங்காமை குறித்தும் வந்த பத்திரிக்கை செய்திகளை முன்வைத்து சென்னை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டது. மத்திய அரசு சார்பில் பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனெரல் “தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ ‘என்றார்.இதற்கு “கடந்த 14 மாதங்களாக மத்தியஅரசு என்ன செய்து கொண்டிருந்தது? கரோனா 2-வது அலை தீவிரமாகியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருப்பதாக தற்போது கூறுகிறீர்களே என காட்டமாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அரசின் பொதுத்துறை நிறுவனத்திற்கு பதினான்கு மாதங்கள் கழித்து டெண்டர் வழங்குகிற மத்திய அரசுதான் கார்பரேட் தடுப்பூசி உற்பத்தி பெருக்கத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு 4567 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.இது நம் மக்கள் வரிப்பணம் என இங்கு கூறத் தேவையில்லை.தற்போது உலகின் மக்கள் தொகையில்  இரண்டாம் இடத்தில் உள்ள தேசத்திற்கு இரு கார்பரேட் நிறுவனங்கள் தடுப்பூசி விற்பனையை வணிக நோக்கில் கொள்ளை லாபத்தில் விற்கின்றன.பேரழிவு நிலையை பயன்படுத்தி தடுப்பூசி விலையை இஷ்டம் போல் ஏற்றி கொண்டன.தடுப்பூசி விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையீடு செய்யவேண்டும் என்ற நீதிமன்ற கோரிக்கைகளையும் மோடி அரசு புறந்தள்ளியுள்ளது.மத்திய மோடி அரசு தடுப்பூசி நிறுவனங்களின் ஊது குழலாக  செயல்பட்டுக்கொண்டு கார்பரேட்களின் விலை ஏற்றத்திற்கு கள்ள மௌனத்தால் அனுமதி வழங்குகிறது.(உலக பணக்காரர்களின் ஒருவரான மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சின் அறக்கட்டளையான பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சர்வதேச அளவில் தடுப்பூசி உற்பத்தியையும் விநியோகத்தையும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கட்டுப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது)தற்போது இவ்விரு கார்பரேட் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை நேரடியாக வாங்கிக் கொள்ளவேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துவதன் வழியே கார்பரேட் நிறுவனங்களின் விற்பனை பிரிவு போல இந்திய சுகாதாரத்துறையும் மோடி அரசும் செயல்படுகிறது.பேரழிவு முதலாளித்துவத்தின் உச்சகட்டத்தை இந்தியாவில் மோடி அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
 • தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் மூடப்பட்ட வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை தற்போதைய பேரிடர் சூழலில் ஆக்சிஜன் தேவைக்காக திறக்கலாம் என்ற ஆளுவர்க்க கருத்துருவாக்க நாடகத்திற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இரையாகின.நிலவுகிற ஆக்சிஜன் தட்டுப்பாட்டு சூழலை ஆலை திறப்பதற்கான வாய்ப்பாக மாற்றிய வேதாந்த தலைவர் அனில் அகர்வால் தனது ஆக்சிஜன அரசியலால் தமிழக கட்சிகளையும் மக்களையும் எளிதாக ஏமாற்றி ஆலையை மீண்டும் திறக்கிற தனது கார்பரேட் உள்நோக்கத்தை செயல்படுத்தமுடிகிறது.

நாம் மேல குறிப்பிட்டுள்ள பட்டியலில்,வேளாண் துறை,மின்சாரத் துறை,ரயில்வே துறை,தொழிலாளர் நலன்,சூழலியல் பாதுகாப்பு,வங்கித் துறை,சுகாதாரத் துறை என நாட்டின் முதுகெலும்பாக உள்ள முக்கிய துறைகளில் சூறையாடும் முதலாளிகளுக்கு சார்பான முக்கிய கொள்கை முடிவுகளை பேரிடர் காலத்தை பயன்படுத்தி மத்திய அரசு மேற்கொண்டதை கவனப்படுத்தியுள்ளோம்.அதேபோல பேரிடர் சூழலில்,கடந்த காலத்திலே பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக இழுத்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடிவதையும் பார்க்கிறோம்.

கரோனா பேரிடர் காலத்தில் மக்கள் உயிரைக் காக்க போராடிவருகிற நிலையிலே நம்மை சுற்றி அதிகார வர்க்க பேய்களும் முதலாளித்துவக வர்க்க  பேய்களும் நமது ரத்தத்தை உறிஞ்சிச் குடிக்க ஓயாமல் அலைகின்றன என்பதை இத்தருணத்திலாவாது  நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

 

-அருண் நெடுஞ்செழியன்

ஆதாரம்;

https://www.vice.com/en/article/5dmqyk/naomi-klein-interview-on-coronavirus-and-disaster-capitalism-shock-doctrine

https://scroll.in/latest/979267/modi-promoting-new-forms-of-slavery-congress-on-proposal-to-increase-daily-working-hours-to-12

கொரோனா தடுப்பூசி நிறுவனங்களின் வணிகக் கொள்ளையும் மோடியால் நட்டாற்றில் விடப்பட்ட நாட்டு மக்களும்

ஸ்டெர்லைட் மரண ஆலையை மீண்டும் திறப்பதா? தமிழக அரசியல் கட்சிகளுக்கு அரசியல் அறிவில் பஞ்சமா ? அறிவியல் அறிவில் பஞ்சமா?

கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 1

கொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா? – பகுதி 2

தொழில் நிறுவனங்களிடம் வங்கிகளை ஒப்படைக்க மோடி திட்டம் – புதிய இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம்!

தனியார்மயமாகும் ரயில்வே – மோடியின் “தற்சார்பு பொருளாதாரம்“

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020  ஐ மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்! – இடதுசாரி சனநாயக இயக்கங்கள் அமைப்புகளின் கூட்டறிக்கை – 02-08-2020

21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

பணக்காரர்களுக்கு 40 % வருமான வரி விதிக்க வேண்டும் – வரித்துறை அதிகாரிகள் சங்கம் பரிந்துரை!

மின்சாரத் துறை – ஒரு தரம்! இரண்டு தரம்! மூன்று தரம்!

மோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

யெஸ் வங்கி திவால்: வங்கித்துறை ஊழலும் சூறையாடும் முதலாளித்துவமும்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW