கொரோனா ஊரடங்கு – திரைக்குப் பின்னால் பறிக்கப்படும் அரசியல் சுதந்திரம்

11 May 2020

இதுவரை உலகெங்கும் இரண்டு இலட்சத்திற்கும் மேலான மக்கள் கொரோனா நோய்த் தொற்றுடன் உயிரிழந்தனர்.  இந்த சாவுகளை தடுக்கமுடியாமல் முதலாளித்துவ அரசுகள் அம்பலப்பட்டு இருக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்நிலையில் காவி-கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கும் இந்தியாவின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஓட்டுமொத்த நாட்டையே முடக்கிப் போடுவதில் தொடங்கி கொரோனா நோய்த் தொற்று உச்சத்தை தொடுவதற்குள்ளாகவே இந்திய அரசு கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பைக் கைவிட்டுவிட்டது. இந்திய அரசின் திட்டமிடல் இல்லாத ஊரடங்கு கொரோனா கொன்றதைவிடவும் பல உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கிறது.

மார்ச் 24 ஆம் நாள் அன்று வெறும் 4 மணி நேர அவகாசத்துடன் மோடி அரசால் அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து சொந்த மாநிலம் நோக்கி நடந்தே செல்லத் தொடங்கிய இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களில் 11வயது சிறுமி மடகமும் ஒருவர். இவர் தங்கள் வீட்டை அடைவதற்கு இன்னும் 11 கிமீ தூரம் இருக்கையில் மரணமடைந்தார். இதுப்போல் எத்தனையோ ‘மடகங்கள்’ வீடுபோய் சேரவில்லை

ஏழை தொழிலாளி வர்க்கம்  அடுத்த வேளை உணவுக்காக என்ன செய்யலாம்? அரசு எதுவும் உதவுமா? என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறது, நடுத்தர வர்க்கம்… வேலை இருக்குமா, கடனை எப்படி அடைப்பது அடுத்த மாதம் ஊதியம் வருமா, பள்ளிக்கட்டணம் செலுத்தமுடியுமா? என்று கலங்கி நிற்கிறார்கள். சிறுகுறு வியாபாரிகள், சிறு குறுதொழில்நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் விழிபிதுங்கி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அரசோ 50 ஆயிரம் கோடி மியூட்சுவல் ஃபண்டு சரிவைக் சரிக்கட்ட பணம் ஒதுக்குகிறது, 68 ஆயிரம் கோடி வாராக்கடனைத் தள்ளுபடி செய்கிறது. கொரானாவை விரட்ட போராடுபவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு கைத்தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்றார்கள், பின்னர் விமானத்தைக் கொண்டு வானத்தில் இருந்து பூவை தூவினார்கள். ஆனால், அதே மருத்துவர்கள், தூய்மைப் பணியாளார்கள், மாநாகராட்சி ,ஊழியர்கள் பாதுகாப்புக் கருவிகள் கேட்டால் அவர்களை இடமாற்றம் செய்கிறது, அவர்களை மிரட்டுகிறது. இதில் மத்திய ,மாநில அரசுகளுக்கு இடையில் வேறுபாடு இல்லை. நாம் கொரோனாவிலிருந்து மீண்டுவிடுவிடக் கூடும். ஆனால் இந்த தருணத்தில், நாம்  இழந்து கொண்டிருக்கும் அரசியல் ,பொருளாதார, ஜனநாயக உரிமைகளை மீட்க அதிக விலைக்கொடுக்க வேண்டியிருக்கும்.

மக்களின் வாழ்வாதரத்தை காக்க மனமில்லாத காவி – கார்ப்பரேட் அரசு தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலில் குறியாய் இருக்கிறது எரிகிற வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் என்பது போல் மோடி அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில்  போராடிய இசுலாமிய மாணவர்கள் மீது தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் துண்டியதாக குற்றஞ்சாட்டி கருப்பு சட்டத்தில் (ஊபா சட்டம்) கைது செய்கிறது. எழுச்சியுடன் நடந்த சாகின் பாக் போராட்டத்தை முறியடிக்க பல உத்திகளை மோடி அரசு கையாண்டது ஆனால் மீண்டும் மீண்டும் அது தோல்வியை சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக தில்லி சட்டமன்றத் தேர்தலிலும் பாசகவின் இஸ்லாமிய வெறுப்பு அடிப்படையிலான சிஏஏ ஆதரவுப் பரப்புரை தோல்வி அடைந்தது. பிப்ரவரி 23 முதல் 4 நாட்கள் அரசின் துணையுடன் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்தால்  பாதிப்புக்குள்ளான இசுலாமிய சமுகத்தின் மீதே பழியை சுமத்தினார்கள். அந்த வன்முறையை சிஏஏ ஆதரிப்பவர்கள் – சிஏஏ எதிர்ப்பாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையிலான மோதலாக ஊடகங்கள் சித்திரித்தன. ஒரு பக்கம் ’நமஸ்த்தே டிரம்ப் என்று கும்மாளம் போட்டுக்கொண்டிருந்த மோடி அரசு, இனனொருபுறம் நாட்டின் தலைநகரில் நடந்த இசுலாமிய மக்கள் மீதான வன்முறையைத் தடுக்காமல் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததுபோல வெறியாட்டத்திற்கு துணை போனது. இதன் முலம் இந்துத்துவ சக்திகள்  இசுலாமிய மக்களுக்குப் பயத்தை விதைக்க முனைந்தனர். உள்துறை அமைச்சர் அமித்சாவின் கட்டுபாட்டிலிருக்கும் காவல்துறை காவி வன்முறையாளர்க்கு வெப்பன் சப்ளையராக சேவை செய்தது.

கலவரத்தைத் தூண்டிய மத்திய அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ,துப்பாக்கியுடன் சென்று சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தை தடுக்கச் சென்ற ஆர்.எஸ். எஸ் காரனுக்கு மனநிலை சரியில்லை என்று சொன்னது அரசு. கபில் மிஷ்ரா மீது நடவடிக்கை எடுக்க இது உகந்த நேரமில்லை என்றார்கள்.

இன்றோ கொரோனா பேரிடர் என்று அறிவித்துவிட்டு போராட்டக்காரர்களையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. பீமா கோரேகான் வழக்கில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, கெளதம் நவ்லாகாவையும் கைது  செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம் கொண்ட முதியவர்கள் என்றும் பாராமல் இவர்களுக்குப் பிணை கொடுக்க மறுத்துள்ளது நீதிமன்றம். இப்படியாக, மோடி அரசு காலால் இட்டவேலையை தலையால் முடித்து தனது விசுவாசத்தை காட்டுகிறது நீதித்துறை.

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டதில் முன்னின்று போராடியவர்கள் மீது அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வழக்குப் போட்டு சிறைப்படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் உமர்காலித் மீது ஊபா சட்டத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது, ஒருபடி மேலே சென்று  ஜாமியா பல்கலைக் கழகத்தின் மாணவர் மீரான் ஹைதர், மூன்று மாத கர்ப்பினியான சப்ருர் தர்கார்,  (ஜாமியா ஒருங்கிணைந்த கமிட்டியின் தலைவரையும் ஊபா சட்டத்தில் கைது செய்து இருக்கிறது இந்த பாசிச அரசு.

குத்துப்பட்டவனையே குற்றவாளியாக்குறது இந்த அரசு. சிஏஏ, என்.ஆர்.சி.,  என்.பி.ஆர். என்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக அமைதிவழியில் உறுதியாய் நின்று போராடியாதைத் தவிர எந்த தவறும் செய்யாத மாணவர்கள் மீது கருப்புச் சட்டத்தின் வழக்குப் பதிந்து தில்லி வன்முறையோடு கோத்துவிடுகின்றது.

இதைப் போலவே பீமா கோரேகான் வன்முறையை நடத்திய சங் பரிவாரங்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தது, வன்முறையைத் தூண்டியவர்கள் என்றும் மோடியை கொல்ல முயன்றவர் என்று பொய் வழக்கில் சமூக செயல்ப்பாட்டாளர்கள், இடதுசாரிகள், மனித உரிமைப் போராளிகளை ஊபா சட்டத்தில் கைது செய்தது.

அமெரிக்கா முதல் இந்தியா வரை பல்வேறு முதலாளித்துவ அரசுகளும் கொரோனா பேரிடர் காலத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தங்கள் அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போரை ஒடுக்கவும் பயன்படுத்திக் கொள்ளும்போக்கு தெளிவாக தெரிகிறது. கொரோனாவின் பெயரால் அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்கும், அதை எதிர்த்து மக்களிடம் பரப்புரை செய்வதற்கும் போராடுவதற்கும் இருக்கும் அரசியல் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் மோடி அரசை அம்பலப்படுத்துவோம்.

 

-ராஜா

 

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW