தொட்டதற்கெல்லாம் தடியடி! எடுத்ததற்கெல்லாம் ஊபா! காவிகளின் காட்டாட்சி! எதுவரினும் எதிர்த்து நிற்கத் துணிவோம்!
ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வுக் கொலை நாட்டின் மனசாட்சியை உலுக்குகிறது. தாகூர் மற்றும் தலித் சமூக சாதிய முரண்பாட்டின் உள்ளடக்கம் கொண்ட பாலியல் வன்முறையாக இது நடந்துள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கு சாதிய சமூக அடித்தளமும் உத்தரபிரதேச அரசப் பாதுகாப்பும் இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி, டெரிக் ஓ பிரைன் அங்கு செல்ல முயன்ற போது கீழே தள்ளி, தடியடி நடத்தி உத்தரபிரதேச காவல்துறை அட்டூழியம் செய்தது. இப்போது இன்னொருபடி மேலே சென்று, ஹத்ராஸுக்குப் போகும் வழியில் தடுக்கப்பட்டு ஊடகவியலாளர் மீதும் மாணவர் இயக்கத்தவர் மீது தேச துரோகப் பிரிவிலும் ஊபாவிலும் வழக்குப் போட்டுள்ளது உபி காவல்துறை.
கேரள ஊடகவியலாளர் சித்திக் கப்பன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்கள் அத்திகுர் ரகுமான், மசூத் அகமது மற்றும் வாகன ஓட்டுநர் ஆலம் ஆகிய நால்வரும் ஹத்ராஸ் நோக்கிச் செல்லும் போது மதுராவில் தடுத்து நிறுத்தப்பட்டு கடந்த 5 ஆம் தேதி கைது செய்யப்படுகிறார்கள். சித்திக் கப்பனைப் பொருத்தவரை அவர் செய்தி சேகரிக்கப் போகிறார். மாணவர் இயக்கத்தினரைப் பொருத்தவரை அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப் போகின்றனர்.
அவர்களிடம் ’மனிஷாவுக்கு நீதி வேண்டும்’ என்று எழுதப்பட்ட துண்டறிக்கை இருந்ததாகவும் அவர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கப் போவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று அவர்கள் மீது ஊபாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்படுகிறது. அதாவது பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க செல்வதும் இதற்கு நீதி கோருவதும் ‘பயங்கரவாத செயலாக’ தொடர்பு படுத்தப்படுகிறது. இது தாகூர் சமூகப் பின்னணிக் கொண்ட காவி உடை அணிந்த துறவி யோகி ஆதித்யநாத் தலைமையிலான உபி அரசின் சர்வாதிகாரப் போக்கு.
காவி-கார்ப்பரேட் பாசிசம் எப்படி இருக்கும் என்பதற்கு இன்றைக்கு உபி ஒரு பரிசோதனைக் கூடமாக இருக்கிறது. அரசின் கண்மூடித்தனமான சட்டப்பூர்வ ஒடுக்குமுறை, பாசிச குண்டர்களின் நேரடித் தாக்குதல் என கற்பனை செய்து பார்க்க முடியாத பேயாட்சியாக அது இருக்கிறது.
கொரோனா பேரிடரின் போதே தில்லி வன்முறையைப் பயன்படுத்தி இஸ்லாமிய செயல்பாட்டாளர்களுக்கு எதிரான வேட்டையை காவிக் கயவர்கள் தொடங்கிவிட்டனர். அது ஒரு தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. சிஏஏவுக்கு எதிரான மக்கள்திரள் எழுச்சியை நடத்திக் காட்டிய இஸ்லாமிய சமூகத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்வதன் மூலம் இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்குரலை அடக்கிவிட எண்ணுகிறது மோடி அரசு. இது தொடரும் பட்சத்தில் பாசிச நிழல் உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாடு வரை படர்வது கட்டாயம் நடக்கும்.
ஒவ்வொரு நாளும் யார் மீது ஊபா பாயுமோ என்று எண்ணும் அளவுக்கு தில்லி, உத்தரபிரதேசத்தை மையப்படுத்திய காட்டாட்சி நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைக்கு 83 அகவை கொண்ட அருட்தந்தை ஸ்டான் சுவாமி பீமா கோரேகான வழக்கில் தொடர்புப் படுத்தப் பட்டு ஊபாவில் கைது செய்யப்படுகிறார்.
இஸ்லாமியர்கள் மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான ஊபா, தேச துரோக, என்.ஐ.ஏ. வழக்குகளை பிரதான எதிர்க்கட்சிகள் கண்டும் காணாமல் கடந்து போகின்றன. இதுதான் இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.
தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மோடி – அமித் ஷா – ஆதித்யநாத் கும்பலின் ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு கட்ட வேண்டும் என்றால் அது காவல்நிலையங்களாலோ நீதிமன்றங்களாலோ சட்டமன்றங்களாலோ நாடாளுமன்றத்தாலோ நடக்கப் போவதில்லை. ஏனெனில், இவையாவும் காவி – கார்ப்பரேட் சிறுகும்பலின் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டன. ஊடகங்களைப் பொருத்தவரை அவை எப்போதும் இந்துத்துவ சார்பில் கூடக்குறைய என்றுதான் நின்றுள்ளனவே ஒழிய சனநாயகம், மனித உரிமைகள், சமத்துவம் ஆகிய விழுமியங்களின் பக்கம் நின்றதே இல்லை.
தெருக்களில் மக்கள் திரள் போராட்டங்கள் மட்டுமே ஒரே வழி. மனித வேட்டை ஆடும் இந்த மிருகங்களின் ஆட்சியில் எந்த நேரத்திலும் நாமும் இரையாகிவிடுவோம் என்ற தன்னலத்தின் பொருட்டாவது நாம் செயல்பட்டாக வேண்டிய தருணம். நாம் நீதியின் பக்கம் நிற்க வேண்டிய தருணம். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்.
ஆட்சியில் இருப்பவர்கள் எத்தகைய பேரழிவுக்கும் கொலைகளுக்கும் பொய்களுக்கும் பித்தலாட்டங்களும் பழிகளுக்கும் அஞ்சாத கொடியவர்கள் என்பதை ஒருபொழுதும் மறந்துவிட வேண்டாம். நம்முடைய அச்சமும் அலட்சியமுமே பாசிஸ்ட்களின் மூலதனம்.
ஆகவே, பாசிஸ்ட்களின் செவிப்பறை கிழியும்படி உரக்கச் சொல்வோம், தோழர்கள் சித்திக் கப்பான், அத்திகுர் ரகுமான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரின் பக்கமே நாம் என்று.
– செந்தில்