தொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துக்கள் – தனியார்மயமாக்கும் நோக்கத்தில் பராமரிப்பை கைவிட்டுள்ளதா மத்திய அரசு ?

02 Jul 2020

கடந்த ஜூலை -1 ஆம் தேதி, நெய்வேலி என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தின்   5-வது அலகில் உள்ள கொதிகலன் பிரிவில் நடந்த விபத்தில்  ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் (அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள்). படுகாயமடைந்த 17 தொழிலாளர்கள்  திருச்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் 2-ம் அனல்மின் நிலையத்தின் 6-வது அலகில் ஏற்பட்ட விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். ஒரு தொழிலாளி படுகாயமடைந்தார். மேலும் கடந்த மே 7-ம் தேதி 2-ம் அனல்மின் நிலையத்தின் 4-வது அலகில் ஏற்பட்ட விபத்தினால் ஐந்து தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு மாத இடைவெளிகளில் மூன்றாவது முறையாக என்எல்சி  2-ம் அனல்மின் நிலையத்தின் மற்றொரு அலகில் மீண்டுமொரு பெரு விபத்து நடந்துள்ளது எனபது என்எல்சி 2-ம் நிலையத்தின் தரத்தையும் பாதுகாப்பு விதிமுறைகளையும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

என்எல்சி 2-ம் அனல்மின் நிலையமானது 2003 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெல் நிறுவனம் இந்நிலையத்தின் கொதிகலனை கட்டமைத்தது. அனல் மின் நிலையத்தில் ஆண்டுக்கொருமுறை முழுவதுமாக  பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற பாதுகாப்பு நடைமுறையை கடந்த சில ஆண்டுககளாக  என்எல்சி மேற்கொள்ளவில்லை என தொழிற்சங்கங்களும்  முன்னாள் என்எல்சி அதிகாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய அரசைப் பொறுத்தவரை வரைக்கும் புதிதாக மேலும் நிலக்கரி சுரங்கத்தை தொண்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியிலேயே தீவிர முனைப்பு காட்டி வருகிறது. மாறாக மின் உற்பத்தி அலகின் பாதுகாப்பில் சுத்தமாக அக்கறை காட்டுவதில்லை. மேலும் உற்பத்தி அலகை தனியார்மயப்படுத்துகிற கொள்கை முடிவை நோக்கி மத்திய அரசு நகர்ந்து வருவதால், பாதுகாப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை வீண் செலவீனமாக அரசு கருதுகிறதோ என்ற ஐயம் இயல்பாகவே எழுகிறது.

ஏனெனில் இந்தியாவிலேயே அதிகம் லாபம் ஈட்டித் தருகிற அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உள்ள என்எல்சி நிறுவனதத்திற்கு, தொழிலாளர்களின்  பணியிடப் பாதுகாப்பு, உபகரணங்கள் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்குவது என்பது இயலாத காரியமல்ல. அப்படியுள்ள நிலையிலே நுணுக்க குறைவுள்ள தொழிலாளர்கள், பயிற்சியில்லாத வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள், ,காலாவதியான கட்டுமானங்கள் ஆகிய காரணங்களால் என்எல்சியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதற்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். .விபத்துக்கள் போது என்எல்சி நிறுவனமானது, சடங்காக சம்பத்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்வதும், விபத்தை ஆய்வு செய்வதற்கு குழு அமைப்பதோடு நழுவிக் கொள்கிறது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகிற என்எல்சி அனல்மின் நிலையமானது இரும்புத் திரைகளுக்கு பின்னால் தனது செயல்பாடுகளை மறைத்துக் கொள்கிறது. என்எல்சியின் வேலை செய்கிற சுமார் 13,000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டுமென பல ஆண்டுகளுக்கு தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. ஆனால் பணி நிரந்தரம் கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் செயல்படுத்தவில்லை. மாறாக, பேருக்கு சிலரை மட்டும் பணிநிரந்தரம் செய்து, தொடர்ச்சியாக தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகின்றது.

பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், பஞ்சப்படி, வீட்டு வசதி, மருத்துவ சேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திய என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத் போராட்டத்திற்கு ஊருக்கு முன்பாக தடைவிதிக்கின்ற நீதிமன்றம் தற்போது விபத்து குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிய முன்வரவில்லை! மத்திய மாநில அரசுகளோ, ஒவ்வொரு விபத்தின் போதும் சம்பிரதாயமாக இரங்கல் தெரிவிப்பதும் இழப்பீடு வழங்குவதையும் தாண்டி எதிர்கால விபத்துகளைத் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதில்லை. மத்திய மாநில அரசுகள், என்எல்சி நிர்வாகம் மற்றும்  நீதிமன்றம் ஆகியவை  தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க தவறியதன் விளைவாக தொடர்ச்சியாக தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர்.

  • பாயிலர் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ஆறு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.
  • விபத்து குறித்து ஆய்வு சுதந்திர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  • விபத்துக்கு காரணமான அதிகாரிகள்  உடனடியாக நீதி விசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  • கொதிகலன்கள் உள்ளிட்ட காலாவதியான கட்டமைப்பை உடனே மறுகட்டமைப்பு செய்திட வேண்டும்.
  • அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறு!

 

 சோசலிச தொழிலாளர் மையம்

9940963131 / 9994094700

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW