மீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன? – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை

02 Sep 2020

காசிமேடு மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடந்த 23-07-2020 ஆம் நாள் அன்று மீன்பிடிக்கச் சென்றவர்களில் 10 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை. அவர்கள் சென்ற விசைப் படகின் எண் IND-TN-02-MM 2029. காணாமல் போன மீனவ தொழிலாளர்களின் குடும்பத்தினரை செப்டம்பர் 1 அன்று  நேரில் சென்று சந்தித்து நிலவரம் கேட்டறிந்தோம்.

காணாமல் போனவர்களில்  எட்டு பேர் திருவொற்றியூரில் உள்ள ஆல் இந்தியா ரேடியோ நகரில் வசித்து வந்தவர்கள். இதற்கு முன்னதாக இவர்கள் திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து இங்கு குடியேற்றப்பட்டவர்கள். படகின் ஓட்டுநர் இராயபுரத்தைச் சேர்ந்தவர்.

படகு கரையில் இருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் ஜி.பி.எஸ். செயலிழந்துவிட்டது. அதே நேரத்தில், கடந்த 28-07-2020 அன்று அந்த விசைப்படகில் இருந்தவரோடு வாக்கி-டாக்கி சிக்னல் கிடைத்ததாக வேறொரு படகைச் சேர்ந்தவர்கள் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. பத்து நாட்களில் கரை திரும்பி இருக்க வேண்டிய மீனவர்கள் 48 நாட்களாகியும் இன்றுவரை கரை திரும்பவில்லை.

காணாமற் போன மீனவர்களின் குடும்பத்தார் ஒவ்வொரு நாளும் காசிமேட்டில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். அப்படி காத்துக் கிடப்பவர்களுக்கு எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கிறார்கள் உதவி இயக்குநரக அலுவலர்கள்.

ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம்  ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்து விட்டோம் என்றும் தமிழகக் கடலோரக் காவல் படை 20 கப்பலில் தேடிக் கொண்டிருக்கிறது என்றும் வங்கதேசக் கடற்கரையில் தவறுதலாக கரையொதுங்கியுள்ளனரா? என்று தெரிந்துகொள்ள தூதரகத்திற்கு  மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தேடுதல் முயற்சிகளில் கண்டறியப்பட்டது என்ன?, வங்கதேசத்தில் இருந்து பதில் தரப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு விடை தர மறுக்கின்றனர். இத்தனை நாட்களாகியும் முன்னேற்றம் இல்லாத நிலையில் இந்தியக் கடற்படையைத் தேடுதல் பணியில் ஈடுபடுத்துவது குறித்து நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் தகவல் தர மறுக்கிறார்கள்.

இது மீனவ மக்களிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இது விசயத்தில் மெத்தனமாக இருப்பது வேதனையளிக்கிறது. கூடவே, பழுதடைந்த டாட் ஜி.பி.எஸ். கொண்ட விசைப் படகில் கடலுக்குப் போனதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? இது விசயத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மை இன்றி நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. கம்பியில்லாத் தொலைத் தொடர்பு வசதி வழங்கும் திட்டம் என்றும் செயற்கைகோள் அடிப்படையிலான ‘டிரான்ஸ்பாண்டர்கள்’ என்றும் மீன்பிடிப்பிற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி கலன்களைக் கண்காணிப்பதன் மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கைப்பேசி செயலி “தூண்டில்” என்றும் மீன்வளத் துறை அமைச்சர் 2019-20 ஆண்டிற்கான மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பேசினார். ஆனால், நடைமுறையைப் பொறுத்தவரை மீனவர்களின் பாதுகாப்புக்கான தமிழக அரசின் அக்கறை அதலபாதாளத்தில் இருக்கிறது. கடலுக்கு செல்லும் மீனவர்களின் அடையாள அட்டையைச் சரிபார்த்து டோக்கன் வழங்கும் விதியினைக்கூட சென்னை துறைமுகத்தில் கடைபிடிப்பதில்லை. தூண்டில் செயலியைப் பற்றி சென்னையில் உள்ள மீனவர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை. ஜி.பி.எஸ்., ட்ரான்ஸ்பாண்டர்கள், செயலி என எல்லாம் வாய்ப்பந்தலாகவே இருக்கின்றது. விளிம்பு நிலை மீனவ மக்களின் பிரச்சனைகள் கண்டுங் காணாமல் போவதன் பகுதியாகவே மீனவர்களின் உயிர்ப் பிரச்சனையும் அணுகப்பட்டு வருகின்றது.

வங்கதேசம் மற்றும் மியான்மர் தூதரகங்களைத் தொடர்புகொண்டு அந்நாட்டுக் கடற்கரைகளில் நமது மீனவர்கள் தவறுதலாக  கரையொதுங்கியுள்ளனரா? என்பதைக் கண்டறியுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கடலோரக் காவல்படை தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடற்படையைப் பயன்படுத்தித் தேடுவதற்கு நடுவண் அரசின் உதவியை நாட வேண்டும். மீனவர்களைத் தேடுவதன் பொருட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள், முயற்சிகள் மற்றும் அவற்றில் இருந்து பெற்ற விவரங்கள் ஆகியவற்றைக் காணாமல் போனவர்தம் குடும்பங்களுக்கு வெளிப்படையாகவும் எழுத்துப்பூர்வமாகவும் அன்றாடம்  தெரிவிக்க வேண்டும். கூடுதல் விவரங்களைக் கேட்பவர்களுக்கு பதிலளிப்பதற்கு மாறாக அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

48 நாட்களுக்கு மேல் ஆகியும் காணாமல் போயுள்ள பத்து மீனவர்களின் நிலை தெரியாமல் இருப்பதால் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்துமாறு சனநாயக அமைப்புகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

தோழமையுடன்

ஆ.சதிஸ்குமார்

கெளரவத் தலைவர்,

தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கம்

9940963131

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW