தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பாசிச பயங்கரம் – நீங்கள் காந்தியவாதியா அரவிந்த் கெஜ்ரிவால்?
பிப்ரவரி 23 இல் இருந்து பிப்ரவரி 26 வரை தில்லியின் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பயங்கரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. பிப்ரவரி 24 ஆம் நாள் அன்று ”எல்லோரும் அமைதி காக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிசெய்ய வேண்டும்” என்று டிவிட்டர் பதிவுப் போட்டுக் கொண்டிருந்தார் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனாலும், வடகிழக்கு தில்லியில் இந்துத்துவ வெறியாட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அன்று இரவு அவரது வீட்டை ஜே.என்.யூ., ஜாமியா மில்லியா மாணவர்கள் முற்றுகையிட்டனர். அப்படி முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைத்தது தில்லி காவல்துறை. பிப்ரவரி 25 அன்று ஆம் ஆத்மி கட்சியினர் வெளிப்படையாகவே ’கலவரங்களுக்கு காரணம் பாசக’ என்று குற்றஞ்சாட்டினர். ’இராணுவத்தை அழைக்க வேண்டும்’ என்று மீண்டும் டிவிட்டர் போட்டார் தில்லி முதல்வர். இதில் வேடிக்கை என்னவென்றால், தில்லியின் 70 சட்டமன்ற தொகுதிகளில் 62 இல் வெற்றிப் பெற்று இரண்டாவது முறையாக அவர் ஆட்சி அமைத்து ஒரு மாத காலம் கூட ஆகவில்லை. ஆனால், தில்லி அரவிந்த் கேஜ்ரிவாலின் கைகளில் இல்லை. அவர் கையறு நிலையில் கடவுள் பிரார்த்தனையில் மூழ்கிப் போய் இராணுவத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்.
வரலாற்றின் நினைவடுக்குகளில் இருந்து சில பக்கங்களை அவருக்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்திய – பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரத்தில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடிய நேரம் அது. அப்போது மேற்கு வங்கத்தில் நவகாளியில் நடந்துவந்த கலவரத்தை காந்தி தனது காலவரையற்றப் பட்டினிப் போராட்டத்தின் மூலம் முடிவுக்கு கொண்டுவந்தார். காந்திப் பட்டினிப் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பு அவரிடம் இராஜாஜி ஓர் உரையாடலை நடத்தியிருந்தார். “குண்டர்களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.
“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.
“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.
காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.” தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.
ஆனால், காந்தி நவகாளியில் வெற்றிப் பெற்றார். கலவரம் கட்டுக்குள் வந்தது. இது குறித்து அப்போதைய கவர்னர் ஜென்ரல் மெளண்ட பேட்டன் சொல்லிய கருத்துப் பின்வருமாறு – “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”
ஏனென்றால், அதே நேரத்தில் கிழக்குப் பஞ்சாப்பில் இருந்த இராணுவத்தால் அங்கு நடந்து கொண்டிருந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தனது 79 ஆவது வயதில் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக உயிரைவிடவும் முன்வந்தார் காந்தி. கல்கத்தாவில் நிகழ்த்திய அற்புதத்தை தில்லியிலும் நிகழ்த்திக் காட்டினார். அந்த தில்லிதான் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையில் தில்லியில் இருந்து புறப்பட்டு பாகிஸ்தானுக்கு சென்று அங்கும் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராகப் போராடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் அவர். அதற்குள் அவரது கதையை இந்துத்துவ வெறியர்கள் முடித்தார்கள்.
இன்றைக்கு தில்லியில் இஸ்லாமியர்கள் வேட்டையாடப்படும்பொழுது அவர்களது வாழ்வுரிமையையும், பாதுகாப்பையும், போராடுவதற்கு இருக்கும் உரிமையையும் உயர்த்திப் பிடித்திருக்க வேண்டிய பொறுப்பு தில்லியின் முதல்வருக்கு உண்டு. ஆனால், அவரோ இதை இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை என்று சாடக்கூட துணியவில்லை. மக்களை தன் வசம் ஆக்கி நீதியின் பால் வழிநடத்துவதற்குதான் தலைமை வேண்டும்.
இப்போது சர்ச்சையின் மையமே ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு போராடும் உரிமை உண்டா? இல்லையா? என்பதுதான். போராடுவதையே ஒரு குற்றமாக, தேசத் துரோகமா பாசக சித்திரிக்கிறது. ஷாகீன் பாக்குக்கு சென்று போராட்டக்காரர்களை இந்நேரத்தில் ஆதரித்து நிற்பதைக்கூட மறுக்கிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் உத்தி. அதுமட்டுமின்றி, தேர்தல் பரப்புரையின் போது ”இந்தப் போராட்டத்தைக் கலைக்காமல் நீடிக்கச் செய்துகொண்டிருப்பதே அமித் ஷா தான். இதனால் பலனடைவது பாசக தான். பாசகவுக்கு பலன் தருமொரு போராட்டத்தை நான் ஏன் ஆதரிக்க வேண்டும்?” என்றெல்லாம் பேசினார்.
’ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற போராட்ட அலையில் எழுந்து வந்தவர் தான் அரவிந்த் என்பதை அவர் மறந்துவிட்டார் போலும். அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக அரவிந்த் கெஜ்ரிவால்கள் போராடினால் அது போராட்டம், அதே நேரத்தில் அரசமைப்பு சட்ட விழுமியங்களுக்கும் சர்வதேச விதிகளுக்கும் எதிரானதொரு சட்டத்தை எதிர்த்து பாத்திமாக்கள் போராடினால் அது ‘போக்குவரத்துக்கு இடைஞ்சலா?’. ஷாகீன் பாக் போராட்டம் பாசகவுக்குதான் துணை செய்கிறது, அதனால் அதை ஆதரிக்க மாட்டேன் என்று அவர் சொல்வாரே ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி பட்டாளத்தினரும் நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டமும் பாசகவின் வளர்ச்சிக்குதான் வழிவகுத்தது. அந்த காரணத்திற்காக அந்தப் போராட்டங்களின் நியாயத்தை அரவிந்த் மறுத்துவிடுவாரா? காந்தியவாதிகள் என்று தலையில் குல்லா அணிந்து கொண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த எவரும் பாசிச பயங்கரத்திற்கு எதிராக காந்திய வழியில் உண்ணாவிரதம் இருக்க முன்வரவில்லையே ஏன்? அவர்களின் தாராளவாத சனநாயகத்தில் பாசிச எதிர்ப்புக்கு இடமில்லையா?. அது அதிகம் அதிகம வலதுசாரி சாய்வுக் கொண்டதாக இருக்கிறதென்பது இப்போது அவர்களது மெளனத்திலும் செயலின்மையிலும் தெரிகிறது. காந்தி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மட்டும் பட்டினிக் கிடக்கவில்லை. இந்துத்துவப் பெரும்பான்மை வெறியில் நடந்த பேயாட்டங்களுக்கு எதிராகப் போராடத் துணிந்தார், அரவிந்த் கெஜ்ரிவால்களின் வலதுசாரி தாராளவாத சனநாயகம் என்பது பெரும்பான்மைவாதத்திற்கு துணைபோகும் ’மதில்மேல் பூனை’ தர்க்கத்தையும் ’மனிதர்களை வெறும் வாக்குகளாக சுருக்கிப் பார்க்கும்’ தர்மத்தையும் கொண்டிருக்கிறது.
இந்த வன்முறைக்கான முன்னோட்டங்கள் தில்லியில் புலப்படாமல் இல்லை. ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் காவிக் குண்டர்கள் புகுந்து வெறியாட்டம் போட்டனர். அரவிந்த கெஜ்ரிவால் மெளனம் காத்தார். ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தின் முன்பொரு இந்துத்துவ வெறியன் துப்பாக்கியோடு சென்று ஒரு காசுமீர் மாணவனைச் சுட்டுப் பழகினான். அரவிந்த் கெஜ்ரிவால் வாய்திறக்கவில்லை. ஷாகீன் பாக்கில் சென்றொரு வெறியன் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுக் காட்டினான். அரவிந்த கெஜ்ரிவால் வேறு திசையில் முகத்தைத் திருப்பிக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆர்.எஸ்.எஸ். ஐ சேர்ந்த ஒரு படையே இறங்கி ’கோலி மாரோ’ ‘சுட்டுக் கொல்’ ’சுட்டுக் கொல்’ என்று முழக்கமிட்டன. துப்பாக்கிகளும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற கூச்சலும் தில்லியில் சகஜமாகிக் கொண்டிருந்தது. காந்தியவாதி அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்தெல்லாம் எந்த கவலையும் கொள்ளவில்லை.
இப்போதும் ஒன்று வாய்ப்பற்றுப் போய்விட வில்லை. முதலில் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பாசிச பயங்கரம் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். இஸ்லாமியர்கள் ஏனைய எல்லோரையும் போல் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரிமையுண்டு என்பதை தில்லியில் உள்ள ஏனைய மக்களிடம் கொண்டு செல்லுங்கள். இதற்கு வரலாற்றில் எடுத்துக்காட்டு உண்டு. நாட்டுப் பிரிவினையின் போது தில்லிக் கலவரங்களைக் கட்டுப்படுத்த காந்தி பட்டினிப் போராட்டத்தில் இறங்கினார். அப்போது தில்லி வாழ் மக்கள் 2 இலட்சம் பேர் பின் வரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு ஒப்பமிட்டனர். காந்திப் பட்டினிப்போராட்டத்தை முடித்துக் கொள்ள அந்த உறுதியேற்பு ஓப்படைக்கப்பட்டது.
“தில்லியைச் சேர்ந்த இந்து, சீக்கிய, கிறித்துவ, ஏனைய குடிமக்களாகிய நாங்கள், ”அமைதிசூழவும் பாதுகாப்பாகவும் தன்மானத்துடனும் தில்லியில் வாழவும் இந்திய ஒன்றியத்தின் நன்மை, நல்வாழ்வுக்காக உழைக்கவும் இந்திய ஒன்றியத்தின் இஸ்லாமிய குடிமக்களுக்கு நம்மில் மற்றவர்களுக்குள்ள அதே சுதந்திரம் இருக்க வேண்டும்” என்ற உறுதிப்பாட்டை உளமார அறிவித்துக் கொள்கிறோம்.
“We the Hindu, Sikh, Christian and other citizens of Delhi declare solemnly our conviction that Muslim citizens of the Indian Union should be as free as the rest of us to live in Delhi in peace and security and with self-respect and to work for the good and well-being of the Indian Union’.
எனவே, இஸ்லாமியர் அல்லாத ஏனைய மக்கள் தில்லியில் இப்படியொரு உறுதி ஏற்க வேண்டிய தேவை இன்றும் உள்ளது. மொத்தம் உள்ள 70 இல் 62 தொகுதிகளில் வெற்றிப் பெற்று ஆட்சியமைத்திருக்கும் ஒரு முதல்வரால் மக்களிடம் இருந்து இந்த உறுதிமொழியைப் பெற முடியும். இலட்சக்கணக்கானோரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதை பாசகவின் முகத்தில் அறைய முடியும். அதைவிட முக்கியம் அம்மக்களை நீதியின் பக்கமும் இஸ்லாமியர்களின் பக்கமும் நிறுத்த முடியும்.
இந்த ஐந்து நாட்களில் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தாலுகா தோறும் மாபெரும் புகைப்படக் கண்காட்சியாக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியால் நடத்த முடியும். அது தில்லி வாழ் மக்களின் மனசாட்சியைக் கிளறிவிடும். இந்த அநீதிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக அவர்களை உணரச் செய்யும். துயரங்களை மீண்டும் மீண்டும் பேசி நினைவுப்படுத்துவதன் மூலமாகத்தான் மக்களின் அறச்சிந்தனையை வளர்க்க முடியும்.
இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிர், உடைமை இழப்புகளுக்கு ஈடுசெய்யும் பொறுப்பையும் இஸ்லாமிரல்லாத ஏனைய மக்களே ஏற்க வேண்டும். இதற்கான நிதிதிரட்டும் மாபெரும் இயக்கத்தை தில்லி அரசே தொடங்கினால் நாடெங்கும் உள்ள நல்லெண்ணம் கொண்டோர் அதில் பங்கேற்பர். அதன் மூலம் சக மனிதனிடம் நம்பிக்கையிழந்துப் போயிருக்கும் இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும். இப்படியான இயக்கமே தீவிர இந்துத்துவ வெறிக்கு உட்பட்டுள்ளவர்களை வெகுமக்களிடம் இருந்து தனிமைப்படுத்த முடியும்.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தம்மை ஒரு காந்தியவாதியாக காட்டிக் கொண்ட அரவிந்த கெஜ்ரிவால், இந்துத்துவ பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் இனியாவது காந்திய வழியில் நடப்பாரா?
– செந்தில், இளந்தமிழகம்