கஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே! விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.

22 Nov 2018

அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்; அதற்குப் பின் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். ஏதோ தில்லிக்கு விரைவாக சென்று இடர்மீட்புத் தொகை என்று  15,000 கோடியை ரூபாயைக் கேட்டால், திரும்பி வரும் போது மத்திய அரசு கோடிகளை மூட்டைக் கட்டித் தந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறாரா முதல்வர்?

”மத்திய அரசின் பேரிடர் மேலாண்மையைப் பொறுத்தவரை மாநில அரசுக்கு உதவிக்கு கை கொடுப்பதில் எப்போதும் குறைவாகவே பங்களித்துள்ளது. எடுத்துக்காட்டாக, நவம்பர் 2015 இல் தமிழ்நாட்டில் கடும்வெள்ளம் ஏற்பட்டது. சிறப்பு உதவிக்கென்று பேரிடர் துயர்துடைப்பு நீதியாக 25,914 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை சில நூறு கோடிகள் தாம்.

2016 திசம்பரில், ’வர்தா’ என்றொரு கடும்புயல் வட தமிழகத்தைத் தாக்கியதில் உள்கட்டமைப்பிற்கும் சொத்துக்களுக்கும் அதுவரை இல்லாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டன; பேரிடரை எதிர்கொள்ள 22,573 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால், சில நூறு கோடி ரூபாய்கள் மட்டும்தான் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. 2016 இல் நிலவிய கடும்வறட்சியின் பொருட்டு, தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து 39,565 கோடி ரூபாய் கேட்கப்பட்டது; ஆனால், சில நூறு கோடிகள் மட்டும் தான் மத்திய அரசால் கொடுக்கப்பட்டது.

2017 இல் ஓக்கி எனும் கடும்புயல் தாக்கி அது கன்னியாகுமரியையும் அதை ஓட்டியுள்ள மாவட்டங்களிலும் பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியது; 9302 கோடி ரூபாய் பேரிடர் மீட்புக்காக மாநில அரசால் கேட்கப்பட்டது. ஆனால், மீண்டும் சில நூறு கோடிகள் மட்டுமே மத்திய அரசால் கொடுக்கப்பட்டது.

ஐயா, துயரமான தருணத்தில் மாநில அரசுகளுக்கு  மத்திய அரசு கைகொடுப்பதும் பதிலளிப்பதும் எந்த நிலையில் இருக்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.“

இவை அதிமுகவைச் சேர்ந்த தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயவர்த்தன் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்த பொழுது 20.7.2018 அன்று பேசிய உரையின் ஒரு பகுதி. அவர் பேசி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. மற்றுமொரு இயற்கை சீற்றத்தால் சிதைந்து கிடக்கிறது தமிழகம்!

’தானே’, ’வர்தா’ புயலைவிட கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் சேதமோ மிக அதிகம். ’தானே’ புயலைவிட பத்து மடங்கு பாதிப்பென்று சொல்லப்படுகின்றது. மத்திய அரசை மாநில அரசு கெஞ்சிக் கேட்பதால் சிறிதளவு கூடுதல் தொகையைப் பெற்றுவிட முடியும் என்று முதல்வர் கருதுகிறாரா? ’மயிலே, மயிலே’ என்று சொன்னால் மயில் இறகுபோடுமா? மயில்கூட போடாதெனில் முகாலயப் பேரரசென்று தம்மைக் கருதிக் கொள்ளும் மத்திய அரசு கேட்கும் பணத்தைத் கொடுத்துவிடப் போகிறதா?

தேர்தல் பரப்புரைகளில் பிரதமர் மோடி பிஸியாக இருக்கிறார். அவர்களுக்கு தென்மூலையில் இருக்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க இப்போது நேரம் இல்லை. திரும்பிப் பார்க்க வைத்து சிறிதளவு கூடுதல் நிதியைக் கூடப் பெறவில்லை என்றால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும். எல்லாவற்றையும் இழந்துகிடக்கும் மக்களுக்கு நம்பிக்கைப் போய்விட்டால் மனநெருக்கடி சாவை நோக்கி அவர்களைத் தள்ளிவிடும்.

முதல்வர் எதிர்க்கட்சிகளைப் பார்த்து மனசாட்சி இல்லையா? என்று கேட்பதையும் எதிர்க்கட்சிகள் மாநில அரசின் செயல்திறனை விமர்சித்துக் கொண்டு இருப்பதையும்விட தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து நின்று நிலைமையை எப்படி சமாளிப்பது, மத்திய அரசிடம் இருந்து உரிய நிதியை எப்படிப் பெறுவது என்று சிந்திக்க வேண்டும்.

முதல்வர் பழனிச்சாமி அவர்களே,  உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள். மக்களோடு இணைந்து நின்று இந்த பேரிடரையும் பெருந்துயரத்தையும் கடந்து செல்லப் பணியாற்றுங்கள். பன்னாட்டுப் பெருமுதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகள் கடன்களை ரத்து செய்யும் அரசு, மூவாயிரம் கோடியில் சிலை வைக்கும் அரசு 12 மாவட்டங்களின் மீட்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறது? என்ற கேள்வி நம்முன் இருக்கிறது.

கேரளத்தின் ஊழிப் பெருவெள்ளத்தின் போது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து சென்றே பிரதமரை சந்தித்தன. அதை ஒரு நல்ல எடுத்டுக்காட்டாக ஆளுங்கட்சி பின்பற்றியிருக்க வேண்டும்.

எதிர்க்கட்சியோடு தெருக்குழாய் சண்டைப் போடுவதற்கு இது உங்கள் சொந்தப் பிரச்சனை இல்லை. எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சியை மடக்குகிறோம் என்ற நோக்கில் மட்டும் அணுகுவதற்கு இது ஆளுங் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமானப் பிரச்சனை இல்லை. மாநில மக்களின் வாழ்க்கையை மீள்கட்டமைக்கும் பிரச்சனை. ”ஏதோ ஒரு தொகையைக் கேட்டோம், அவர்கள் ஏதோ ஒரு தொகையைக் கொடுத்தார்கள், அதில் கொஞ்சம் மக்களுக்கு கொடுத்துவிட்டு எவ்வளவு கமிசன் அடிக்க முடியும் என்று பார்ப்போம்” என்ற வழக்கமான பாணியைப் பின்பற்ற வேண்டாம். மாநில அரசுகள் மடிப்பிச்சைக் கேட்டால் அள்ளிக் கொடுக்கும் கொடை வள்ளல் அல்ல மத்திய அரசு. போராடினால் மட்டுமே மத்திய அரசு மக்களின் அழுகுரலுக்கு செவி சாய்க்கும்.

தமிழக அரசு எதிர்க்கட்சிகளையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிவில் சமூக ஆற்றல்களையும் இவ்விசயத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் சிவில் சமூக ஆற்றல்களும் இணைந்து நின்று மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து உரிய இடர் மீட்பு நிதியைப் பெற வேண்டும். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், நீண்ட காலத் திட்டமிடல் பற்றி ஆலோசனை நடத்த வேண்டும். அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கூட்டாக ஊடகத்தை சந்திக்க வேண்டும். கூட்டறிக்கையின் வாயிலாக மக்களின் வாழ்வைக் கட்டமைப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

 

பாலன். பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW