காஷ்மீர் 370 நீக்கம் – அம்பேத்கர் இருந்திருந்தால் வரவேற்றிருப்பாரா ?

04 Sep 2019

ஆகஸ்ட் – 5 காஷ்மீர் அதிரடியை அமித் ஷா மாநிலங்களவையில் நிகழ்த்தி முடிக்க ஆகஸ்ட் – 6 அன்று ‘தினமணி’ நாளேடு ‘அம்பேத்கர் வரவேற்பார்’ என்று தலையங்கம் எழுதியது. அதில்,

நீங்கள் உங்கள் எல்லைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்கிறீர்கள். உங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்கிறீர்கள். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு நிகரான அந்தஸ்த்தை காஷ்மீர் பெறவேண்டும் என்கிறீர்கள். அதே நேரத்தில், இந்திய அரசுக்கு உங்கள் பகுதியில் எந்தவித அதிகாரமும் இருக்கக் கூடாது, இந்திய மக்களுக்கு காஷ்மீரில் எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்று வற்புறுத்துகிறீர்கள். இதற்கு நான் ஒத்துக்கொண்டால், இந்தியாவுக்கு துரோகம் இழைத்தவனாக நான் கருதப்படுவேன். இந்தியாவின் சட்ட அமைச்சர் என்கிற முறையில் அதை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்” என்று சேக் அப்துல்லாவின் முகத்துக்கு நேராய் சொன்னவர் பாபா சாகேப் அம்பேத்கர் என்பதை மறந்துவிடக் கூடாது” என்று சொல்கிறார் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன்.

சேக் அப்துல்லாவிடம் தான் இப்படி சொன்னதாக அம்பேத்கர் எழுதியுள்ளாரா? அல்லது அம்பேத்கர் தன்னிடம் இப்படி சொன்னதாக சேக் அப்துல்லா பதிவு செய்துள்ளாரா? அல்லது அம்பேத்கர் தான் இப்படி சொன்னதாக ஏதாவதொரு ஊடகத்திடம் சொல்லி உள்ளாரா? அல்லது அம்பேத்கர் தன்னிடம் இப்படி சொன்னதாக சேக் அப்துல்லா ஏதாவது ஓர் ஊடகத்தில் பதிவிட்டுள்ளாரா? எதைப் பற்றியும் குறிப்பிட வேண்டும் என்று தினமணி கருதவில்லை. அம்பேத்கர் இப்படி சொன்னதை மறந்துவிடக் கூடாது என்று மட்டும் அறிவுறுத்துகிறது!

சிலநாட்கள் கழித்து நாட்டின் துணை குடியரசு தலைவர் ’தி இந்து’ ஆங்கில நாளிதழில் நடுவண் அரசு காஷ்மீர் தொடர்பாக மேற்கொண்ட திருத்தங்களை ஆதரித்து கட்டுரை வரைந்தார். துணைக் குடியரசு தலைவர் நிலையில் இருக்கும் ஒருவர் இத்துணை முரண்பாடுகள் நிறைந்த ஒரு விசயத்தில் கருத்து சொல்வது மரபு கிடையாது. கோர்ட்டாவது மயிராவது என்பது மட்டுமல்ல மரபாவது மயிராவது என்பதும் அவர்கள் நடத்தையாக இருக்கிறது.

வெங்கய்யா எழுதிய கட்டுரையில், ”அம்பேத்கர் சேக் அப்துலாவிடம்  உறுப்பு 370 ஐ மறுத்துப் பேசினார்’ என்று அதே மேற்கோளைச் சுட்டிக்காட்டினார்.  மொத்தத்தில் அம்பேத்கர் காசுமீருக்கு இருக்கும் சிறப்பு தகுதியை விரும்பவில்லை. அவரது கனவையே மோடி-அமித்ஷா அல்லது சங் பரிவாரங்கள் நிறைவேற்றியுள்ளன என்று நிறுவ முயல்கின்றனர். இப்படி அன்றாடம், செய்திதாள்களிலும், இணைய கட்டுரைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காஷ்மீர் மோசடிக்கு அம்பேத்கரைத் துணைக்கு அழைக்கிறார்கள்.

நல்ல வேளையாக வெங்கய்யா அவர் எதில் இருந்து எடுத்து மேற்கோள் காட்டுகிறார் என்பதைக் குறிப்பிட்டுவிட்டார். எஸ்.என்.பூசி என்பவர் 2016 இல் எழுதிய “டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் : இந்திய அரசமைப்பை வரைதல்” என்ற நூலில் இருந்துதான் வெங்கய்யா மேற்கொள் காட்டியுள்ளார். எஸ்.என். பூசி ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் வருவாய் துறை அலுவலர். அவரை ’தி வயர்’ செய்தி இணையதளம் அணுகி அவர் குறிப்பிட்ட செய்தி எங்கிருந்து பெறப்பட்டது என்று கேட்டுள்ளது. தனது நூலின் நான்காவது பகுதியில் பக்கம் 472 இல் குறிப்பிடப்பட்டுள்ள அந்த செய்தி, ”உறுப்பு 370 – அமைதியான ஜம்மு-காசுமீரை உருவாக்குவதில் அம்பேத்கரின் பங்கு” என்ற தலைப்பில் எச்.ஆர். போன்சா என்பவர் எழுதி ’தலித் விசன்’ இதழில் 2013 பிப்ரவரி 20 அன்று வெளிவந்த கட்டுரையில் இருந்து பெறப்பட்டது என்று சொல்லியுள்ளார். இனிதான் அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.

எச்.ஆர். போன்சா குறிப்பிட்டதும் நேரடி மூலம் கிடையாது. அம்பேத்கர் சேக் அப்துல்லாவிடம் சொன்னதாகச் சொல்லப்படும் தகவலை எச். ஆர். போன்சா ஆர்.எஸ்.எஸ். இன் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசரின் 2004 நவம்பர் 14 தேதியிட்ட தீபாவளி பதிப்பில் இருந்து எடுத்துள்ளார். அம்பேத்கர் சேக் அப்துல்லாவிடம் இப்படி சொன்னதாக தன்னிடம் சொன்னார் என்று எழுதியவர் பா.ச.க. முன்னணித் தலைவர்களில் ஒருவரும் ஆர்.எஸ்.எஸ். ஐ சேர்ந்தவருமான பால்ராஜ்  மாதோக்.

’அம்பேத்கர் சொன்னார்’ என்று சொல்லப்படும் இந்த செய்தியின் மூலத்தை சென்று தேடினால் அது ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் போய் முடிகிறது. எழுதியவரோ ஜம்முவை சேர்ந்த பால்ராஜ் மாதோக்! அதுவும் அம்பேத்கர் மறைந்து 48 ஆண்டுகள் கழித்து அவர் சொன்னதாக ஆர்.எஸ்.எஸ். காரர் ஒருவரால் சொல்லப்படும் செய்தி இது. அவருக்கு ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடுமா என்று திரு எஸ்.என். பூசியிடம் ’தி வயர்’ இணையதளம் கேட்டதற்கு அவரும் தயங்கமால் ’அப்படி இருக்கக் கூடும்’ என்று சொல்லியுள்ளார்.

இந்த மேற்கோளைத் தான் துணைக் குடியரசு தலைவர் வெங்கய்யா, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான நடுவண் அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தொடங்கி ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடகங்கள் அனைத்தும் குறிப்பிட்டு 370 ஐ செயலிழக்கச் செய்ததற்கு அம்பேத்கர் படத்தைக் காட்டுகின்றனர்.

மராட்டிய அரசால் வெளியிடப்பட்டுள்ள அம்பேத்கரின் எழுத்துகளைக் கொண்ட 17 தொகுதிகள், கடிதங்கள், பேச்சுப் பதிவுகள், பேட்டிகள என எதிலும் அம்பேத்கர் இவ்வண்ணம் சேக் அப்துல்லாவிடம் சொன்னதாகப்  பதிவு இல்லை என்றே அம்பேத்கரிய ஆற்றல்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஒருவேளை அம்பேத்கர் இவ்வண்ணம் சேக் அப்துல்லாவிடம் சொல்லியிருப்பார் என்று வாதத்திற்காகக் எடுத்துக் கொள்வோமாயின் அது 1949 அக்டோபர் 19 அன்று அரசியல் நிர்ணய சபையில் கோபால்சாமி அய்யங்கார் உறுப்பு 370 ஐ அறிமுகப்படுத்துவதற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். 1949 அக்டோபர் 19 ஆம் தேதிக்கு பிறகு அம்பேத்கர் காஷ்மீர் விவகாரம் பற்றியோ 370 குறித்தோ எதுவும் பேசியதில்லையா? பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார்.. நரித்தனத்திற்கு பேர் போன ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அதை பேசமாட்டார்கள். ஏனென்றால், அது அவர்கள் செய்து கொண்டிருக்கும் மோசடிக்கு நேர் எதிரானது!

காஷ்மீர் பற்றி அம்பேத்கர் கொண்டிருந்த நிலைப்பாடு என்ன?

உறுப்பு 370 ஐ மீறாமை:

1950 இல் நாடாளுமன்றத்தில் ’மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்’ பற்றிய விவாதத்தின் போது காசுமீரைக் குறிப்பிட்டு அம்பேத்கர் சொல்கிறார். ”காசுமீரைப் பொருத்தவரை அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 1 மட்டும் தான் அதற்கு பொருந்தும். அதனாலேயே காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக அமைகிறது. மற்றபடி, இந்தியாவின் வேறெந்த அரசமைப்பு விதிகளும் காஷ்மீருக்குப் பொருந்தாது. தேவைப்படும்விடத்து காஷ்மீர் அரசுடன் கலந்துபேசி குடியரசு தலைவர் ஏனைய உறுப்புகளை மாற்றத்துடனோ அல்லது திருத்தங்களுடனோ காசுமீருக்குப் பொருந்தும்படி செய்யலாம். மற்றபடி, இந்த நாடாளுமன்றத்திற்கு காசுமீர் தொடர்பாக எந்த சட்டத் திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு அரசமைப்பில் இடமில்லை” என்ற பொருள்படப் பேசியுள்ளார். ( நூல் குறிப்பு <2> )

அதாவது உறுப்பு 370 ஐ இந்திய நாடாளுமன்றம் மதித்து நடக்க வேண்டும் என்கிறார்.

1951 அக்டோபர் 10 இல் பதவி விலகும் போது::

நான்கு ஆண்டுகள் ஒரு மாதம் 26 நாட்கள் நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்துவிட்டு பதவி விலகும்போது அம்பேத்கர் நான்கு காரணங்களை முன் வைக்கிறார். அதில் மூன்றாவது காரணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்தது. அதாவது பாகிஸ்தானுடனான வெளியுறவுக் கொள்கையும் அதில் உள்ள இரண்டு சிக்கல்களான கிழக்கு வங்கத்தையும் காசுமீரையும் பற்றி அவர் குறிப்பிடுகிறார். நாட்டின் மொத்த வரவு செலவு திட்டத்தில், 350 கோடி ரூபாய் வருவாயில் 180 கோடி ரூபாய் இராணுவத்திற்கு செலவு செய்து வருவதாகக் குறிப்பிட்டு காசுமீர் பிரச்சனைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார் ( நூல் குறிப்பு <3>)

“நாம் பாகிஸ்தானோடு பெரும்பாலான நேரத்தில் சண்டையிட்டு கொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால் யார் சரி? யார் தவறு? என்று பார்ப்பதே ஆகும். என்னைப் பொருத்தவரை உண்மையான சிக்கல் என்னவென்றால் யார் சரி? என்று பார்ப்பதைவிட எது சரி? என்று பரிசீலிப்பதே ஆகும். அந்தக் கேள்விக்கு விடை காண முற்பட்டால், காசுமீர் பிரச்சனைக்கு தீர்வு என்று நான் எப்போதும் சொல்லி வருவது காசுமீரைப் பிரிப்பதே ஆகும். இந்தியப் பாகிஸ்தான் பிரிவினையின் போது நாம் எப்படி செய்தோமோ அது போல் இந்து-பெளத்தப் பகுதியை இந்தியாவிடம் விட்டுவிடுவதும் இஸ்லாமியப் பகுதியைப் பாகிஸ்தானிடம் விட்டுவிடுவதுமே ஆகும். காசுமீரின் இஸ்லாமியப் பகுதியைப் பொருத்தவரை நாம் கவலைக் கொள்ள வேண்டியதில்லை. அது காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். தாம் விரும்பும் வகையில் அவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். அல்லது நீங்கள் விரும்பினால், மூன்று பகுதிகளாக காசுமீரைப் பிரியுங்கள் – ஒன்று போர் நிறுத்தப் பகுதி, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு-லடாக் பகுதி. பொதுவாக்கெடுப்பை காசுமீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு மட்டும் நடத்துங்கள். என்னுடைய் அச்சமெல்லாம், இப்போது முன்மொழியப்பட்டுள்ள பொதுவாக்கெடுப்பு தீர்வில் அதாவது ஜ்ம்மு-காஷ்மீர் முழுமைக்குமானப் பொதுவாக்கெடுப்பு கிழக்கு வங்கத்தில் நடந்ததைப் போல் ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்துக்களும் பெளத்தர்களும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுக்குள் தள்ளிவிடப்படும் வாய்ப்பு இருக்கிறது என்பதே ஆகும்.”

1951 அக்டோபர் 27:

பஞ்சாப் ஜலந்தரில் நடந்த ஓர் ஊடக சந்திப்பில் காசுமீர் சிக்கலுக்கு தீர்வு பற்றி நிருபர்கள் அம்பேத்கரிடம் கேட்கும் போது பின்வருமாறு பதிலளிக்கிறார்.

“ஜம்மு-காசுமீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தினால் அது இந்தியாவுக்கு எதிராக அமையக் கூடும் என்று நான் அஞ்சுகிறேன். ஜம்மு மற்றும் லடாக்கில் இருக்கும் இந்துக்களும் பெளத்தர்களும் பாகிஸ்தானில் சேர்ந்துவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்றால் ஜம்மு, லடாக் மற்றும் காசுமீரில் தனித்தனியே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்”

1951 தேர்தல் அறிக்கை:

அம்பேத்கர் எழுதிய ’பட்டியல் சாதிகள் கூட்டமைப்பின்’ தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்

”காஷ்மீர் சிக்கலில் காங்கிரசின் கொள்கை ‘பட்டியல் சாதிகள் கூட்டமைப்புக்கு ஏற்புடையதல்ல. இக்கொள்கையை அவர்கள் தொடர்ந்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையிலான நிலைத்த பகைமையை ஏற்படுத்தும், இரு நாடுகளுக்கிடையிலான போர் மூளும் வாய்ப்பு ஏற்படும்.  இரு நாட்டின் நன்மைக்கும் நல்ல நட்புள்ள அண்டை நாடுகளாக இவை இருத்தல் வேண்டும் என்று கூட்டமைப்பு நம்புகிறது. இதன் பொருட்டு பின்வரும் இரண்டு அடிப்படைகளைக் கொண்டு பாகிஸ்தானைப் பொருத்து கொள்கை வகுக்கப்பட வேண்டும். 1. பிரிவினையை ரத்து செய்யும் பேச்சு என்பதே இருக்கக் கூடாது. அதை மீண்டும் விவாதத்திற்கு கொண்டுவருவதில்லை, அது முடிந்த முடிவான உண்மை என ஏற்கப்பட வேண்டும் இவ்விரு நாடுகளும் தனித்தனி இறையாண்மையுள்ள அரசுகள் என்ற நிலை தொடர வேண்டும். 2. காசுமீர் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும், இஸ்லாமியர்கள் வாழும் பகுதி பாகிஸ்தானோடு இணைக்கப்பட வேண்டும் ( பள்ளத்தாக்கில் வாழும் காஷ்மீரிகளின் விருப்பத்தைப் பொருத்து ) , இஸ்லாமியர்கள் அல்லாதோர் வாழும் ஜம்முவும் லடாக்கும் இந்தியாவோடு இணைக்கப்பட வேண்டும்.”

 

1952 மே 27: நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாதுகாப்புக்கு என்று பெரும் நிதி செலவு செய்யப்படுவதைக் கேள்விக்குள்ளாக்கிப் பேசும் போது அம்பேத்கர் சொல்கிறார். ( நூல் குறிப்பு <1> )

“ நம் தரப்பில் எவ்வளவு விரைவாக காசுமீர் சிக்கலை முடிவுக்கு கொண்டுவருகிறோமோ அவ்வளவுக்கு அது நன்மை பயக்கும் என்பதை நாம் உணர்ந்ததாக தெரியவில்லை. ஏனெனில், இவ்வளவு பணத்தைப் பாதுகாப்புக்கு என்று செலவு செய்வதற்கு காசுமீரைக் காரணமாக சொல்கிறோம் என்றால், இந்த சிக்கலை நேர்நிறையான வகையில் தீர்ப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டியது நம்முடைய கடமை இல்லையா?”

“ காஷ்மீர் பிரச்சனை ஐ.நா. வின் மேற்பார்வையில் இருப்பதால் பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுக்க முடியாது”

“இந்திய அரசு காசுமீர் சிக்கலைப் பொருத்தவரை இராணுவத்திற்கு நிதி ஒதுக்குவதைத் தவிர வேறெதையும் செய்வதில்லை. பொதுவாக்கெடுப்பு என்பது எவ்வகையிலும் வரலாற்றில் புதிய விசயம் இல்லை. யாரும் பண்டைக் காலத்திற்கு சென்று இதுபோன்ற பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தும் முன்னுதாரணம் இருக்கிறதா? என்று தேட வேண்டியதில்லை. முதலாம் உலகப் போருக்குப் பின், இரு சிக்கல்கள் பொதுவாக்கெடுப்பின் மூலம் தீர்வு செய்யப்பட்டதை என்னால் நினைவு கூர முடியும். ஒன்று மேல்சிலேசியா, மற்றொன்று அல்சேஸ்-லோரைன். இவ்விரண்டும் பொதுவாக்கெடுப்பின் வழி தீர்வுசெய்யப்பட்டன. மதிநுட்பமும் அறிவாற்றலும் கொண்ட என் மதிப்பிற்குரிய நண்பர் கோபால்சாமி அய்யங்கார் (காசுமீர் விவகாரங்களுக்கான அப்போதைய பொறுப்பு அமைச்சர்) இதை அறிந்திருப்பார் என்று என்னால் உறுதிபட சொல்லமுடியும். உலக நாடுகள் கழகம் மேல்சிலேசியா மற்றும் அலேஸ்-லோரைன் பிரச்சனையில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வுகண்ட செயல்முறையைக் கடன்பெற்று காசுமீர் சிக்கலுக்கு தீர்வு காண முடியும், பிரச்சனையும் விரைவாக முடிவுக்கு வரும், பாதுகாப்பு நிதிக்கு என்று ஒதுக்கப்படும் 50 கோடி ரூபாயை நிறுத்திவிட்டு அப்பணத்தை இந்நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த முடியும். இதை செய்ய முடியாதா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

1953 – வெளியுறவுக் கொள்கைப் பற்றி:

1953 இல் நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கை பற்றிய விவாதத்தில் காசுமீரையும் தில்லியையும் இணைக்கக்கூடிய உள்கட்டமைப்பை உருவாக்க நேரு திட்டமிட்டிருப்பதை எதிர்க்கிறார் அம்பேத்கர். காஷ்மீர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணாமல் இத்தகைய முயற்சிகளைச் செய்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். காஷ்மீரை ஒரு சிக்கலுக்குரிய விவகாரம் என்பதை எல்லோரும் மறந்துவிட்டது போல் தோன்றுகிறது” என்ற பொருள்பட எச்சரிக்கிறார். (சுருக்கம் கருதி முழு மேற்கொள் குறிப்பிடப் படவில்லை.)

370 ஐ செயலிழக்கச் செய்ததை அம்பேத்கர் வரவேற்றிருப்பாரா?

அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள், பேட்டிகளில் இருந்து பெறப்படும் மேற்படி குறிப்புகளை வைத்துக் கொண்டு இன்றைக்கு மோடி-அமித் ஷா-அஜித் தோவல் கும்பல் 370 ஐ செயலிழக்கச் செய்ததை அவர் இருந்திருத்தால் எப்படி பார்த்திருப்பார் என்று மதிப்பிட முடியும்.

  • அரசமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அம்பேத்கர், காசுமீர் அரசியல் நிர்ணய சபையும் இல்லாத நிலையில், காசுமீர் சட்டப்பேரவையும் இல்லாத நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் காசுமீர் பற்றி விவாதித்து தீர்மானம் இயற்றியதையும் சட்டத் திருத்தத்தம் செய்ததையும் ஏற்றிருக்க வாய்ப்பில்லை, 370 இன் படி காஷ்மீர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவதற்கு  அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை என்பதே அவர் நிலைப்பாடு. இதை அரசமைப்புச் சட்டத்தை வளைத்த ’அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு வேலை’(constituitional coup) என்றே சாடியிருப்பார்.
  • காசுமீர் இந்தியாவின் பகுதி என்று அவர் வலியுறுத்தி இருந்தாலும் காஷ்மீர் பொருத்து ஒருதலைப் பட்சமாக செயல்படுவதை அம்பேத்கர் எதிர்த்துள்ளார். ’உள்நாட்டு விவகாரம்’ என்று சொல்லிக் கொண்டு நடுவண் அரசு இப்படி தன் விருப்பதற்கென்று செய்துள்ள இந்த மாற்றங்கள் பேய் எழுந்துவருவது போன்ற எதிர்விளைவுகளைக் கொடுக்கும் என்று எச்சரித்து இருப்பார்.
  • காசுமீர் சிக்கலுக்கு எவ்வளவு விரைவாக தீர்வு காண முடியுமோ அவ்வளவு விரைவாக காணுமாறு 1953 இலேயே வலியுறுத்தினார் அம்பேத்கர். காசுமீர் பள்ளத்தாக்கு மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்கள் தனித்து இருக்க விரும்புகிறார்களா? பாகிஸ்தானோடு இணைய விரும்புகிறார்கள் என்று அறிய வேண்டும் என்பதே அவர் முன் வைத்த தீர்வு. மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பம் அறிதல் என்ற சனநாயக நெறிகளை கொஞ்சமும் விரும்பாதவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். முகாமைச் சேர்ந்தவர்கள். எனவே, அம்பேத்கரின் இந்த தீர்வுப் பொதியை மூடி மறைத்து இராணுவ முற்றுகையில் காஷ்மீரை வைத்திருப்பதை அவர் ஆதரித்திருப்பார் என்று இட்டுக்கட்டி பேசுகின்றனர்.
  • 1950 இல் நிதிநிலை அறிக்கையில் காஷ்மீரின் பெயரால் வெறும் 50 கோடி ரூபாய் இராணுவத்திற்கு ஒதுக்குவதையே கண்டித்துள்ளார் அண்ணல், இன்றோ 7 இலட்சம் இந்தியப் படையினர் காசுமீரில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.. இவ்வாண்டு மொத்த நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு முதல்முறையாக 3 இலட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. அதாவது 3.19 இலட்சம் கோடி ரூபாயாகும். மொத்த வரவு செலவு திட்டத்தில் 18% கடனுக்கு வட்டி கட்டும் இந்தியா 9% பாதுகாப்புக்கு என்று செலவு செய்து வருகிறது.  ஆனால், தலித் மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் உள் ஒதுக்கீடு நிதி 3% க்கு குறைக்கப்பட்டுள்ளது. பெண்களின் மேம்பாட்டுக்கும் சமூக நலன்சார் செலவினங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதி இவ்வாண்டும் குறைக்கப்பட்டுள்ளது. உண்மை இப்படி இருக்க, காஷ்மீருக்கு 370 ஐ நீக்கிவிட்டு இராணுவ அடக்குமுறையின் கீழ் வைத்துக் கொண்டு நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு போக வேண்டிய பணத்தை வெட்டிச் செலவு செய்துக் கொண்டிருக்கும் திருடர்களை அம்பேத்கர் மன்னித்திருக்கவே மாட்டார்.

அன்றைக்கு நேரு அரசாங்கமும் அம்பேத்கர் சுட்டிக்காட்டியப் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு செவிசாய்க்கவில்லை. இன்றைக்கு மோடி அரசோ அம்பேத்கர் பேசியதையே இருட்டடிப்பு செய்துவிட்டுப் புதுக்கதை விடுகின்றது!

ஆகஸ்ட் 5,6 இல் மோடி-அமித் ஷா – அஜித் தோவல் கும்பல் நிகழ்த்திய காஷ்மீர் அதிரடியை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்திருப்பார். இந்தியாவின் அரசமைப்பையும் சனநாயகத்தையும் கேலிக் கூத்தாகும் மோடியின் முகத்தில் காறித் துப்பியிருப்பார்.

  1. https://www.mea.gov.in/Images/attach/amb/Volume_15.pdf, பக்கம் 849
  2. https://www.mea.gov.in/Images/attach/amb/Volume_15.pdf, பக்கம் 129
  3. https://drive.google.com/file/d/0Bzj5De7gaTEYbHRKTE1JR0VUOFU/view Vol 14 பக்கம் 1322
  4. https://thewire.in/politics/venkaiah-naidu-ambedkar-kashmir-article-370
  5. http://velivada.com/2019/08/05/what-ambedkar-had-really-said-about-kashmir-issue/
  6. http://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=9706:kashmir-problem-an-ambedkarite-solution&catid=119&Itemid=132

– செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW