நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை… தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் – எடப்பாடி அரசின் தொடர் பொய்களும், துரோகமும்

17 Feb 2020

குடியுரிமை திருத்த சட்ட மசோதா மீதான மாநிலங்களவை ஓட்டெடுப்பின்போது, திருத்த சட்டத்திற்கு ஆதாரவாக அஇஅதிமுக ஒட்டு போட்டதால் மட்டுமே, இத்திருத்த மசோதா வெற்றிபெற்று சட்டமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில் அச்சத்தை தரும் ஆறு கேள்விகளை நீக்க வேண்டும் என்ற இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துவந்த நிலையில் தற்போது தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்கவே முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஓராண்டுகால முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு எந்த எல்லைவரையிலும் செல்கிற முதல்வரின் பதவி மோகமும் மக்கள் விரோத ஆட்சியும் மீண்டுமொருமுறை மக்கள் முன்னே அம்பலாமாகியுள்ளது.

முன்னதாக இத்திருத்த சட்டத்தை மாநிலங்களவையில்  ஆதரித்தது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இது குறித்து விளக்கி விட்டார்கள் என குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதாரவாக பேசியவர் தற்போது பாஜகவின் முகமாக எதிர்கட்சிகளோடு சட்டமன்றப் பேரவையில் சண்டை நடத்தி வருகிறார். சிவில் சமூகத்தின் அரசியல் கோரிக்கையை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மடை மாற்றுகிறார். சபாநாயகரை வைத்து சர்வாதிகாரமாக எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறார்.

தமிழகமெங்கிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வருகிற போராட்டத்தை தணிப்பதற்கும் நீர்த்து போகச் செய்வதற்கும் அச்சம் தருகிற ஆறு கேள்விகளை நீக்குவது குறித்து முதல்வரிடம் வலியுறுத்துவோம் என்ற அமைச்சரின் நாடகமும் இரு தினங்களுக்கு கூட எடுபடாமல் அம்பலமாகியுள்ளது.

முன்னதாக திருத்த சட்டத்திற்கு எதிரான நிலைப்பாடும், இந்த ஆறு கேள்விகளை நீக்குவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என தெரியாமலேயே அமைச்சர் மக்களை ஏமாற்றி வந்தார். தேசிய மக்கள்தொகை பதிவேட்டில்(NPR) கேட்கப்படுகிற பெற்றோர்களின் பிறப்பிடம், ஆதார், ஓட்டுனர் விவரம் உள்ளிட்ட புதிய கேள்விகளை மத்திய அரசு நீக்குகிற பட்சத்தில், அது குடிமக்கள் பதிவேடாக இருக்காது .மாறாக அது மக்கள் தொகை கணக்கெடுப்பாக(census) அமையும்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு NPR, 1955 குடியுரிமை திருத்த சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்வது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 1948 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்வது. இந்த ஆறு கேள்விகளை நீக்கி விட்டால் பாஜக கொண்டு வந்த  திருத்த சட்டமே பொருளற்றதாகிவிடும். இரு தினங்களுக்கு முன்னர் கூட மக்கள் தொகை பதிவேட்டை திருப்பப் பெறுகிற பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் பேசியுள்ள நிலையில் அச்சம் தருகிற ஆறு  கேள்விகளை நீக்க வலியுறுத்துவோம் என அமைச்சர் கூறுவது நடைமுறை சாத்தியமே இல்லாத வெற்று பொய் உறுதிமொழியே தவிர இதில் வேறொரு பொருளுமே இல்லை!

எவ்வாறு  நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம் என  பொய் கூறி ஏமாற்றினார்களோ, ஏழு தமிழர் விடுதலையில் ஏமாற்றி வருகிறார்களோ அதுபோலே குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மீண்டுமொரு பொய்யை கூறி வருகிறார்கள்.

ஓபிஎஸ் பதவி பறிப்பு,சசிகலா கைதைத்தொடர்ந்து முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது தனது மூன்றாண்டு கால சாதனையை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த தொடங்கிவிட்டார். அனைத்து பத்திரிக்கைகளிலும் முழு பக்க வண்ண விளம்பரங்கள், சாதனை நூல் வெளியீடு, குறுந்தகடு வெளியீடு, கூட்டணித் தலைவர்களை வைத்து வாழ்த்து தெரிவிக்க வைப்பது என தன்னை மையப்படுத்திய தலைமை பிம்ப உருவாக்கத்தை முழு வீச்சில் மேற்கொண்டுவருகிறார். இதற்காக கட்சி மற்றும் அரசின் அத்தனை வளங்களையும் பயன்படுத்திவருகிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் நடைபெற்று வருகிற போராட்டம், ராஜஸ்தான், கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இத்திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகிற சிறப்பு தீர்மானங்கள், தமிழகத்தில் நடைபெறுகிற போராட்டங்களை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை  தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் ஒருபக்கம் தீர்மானம் நிறைவேற்றி தமிழக சிறுபான்மை மக்களை ஏமாற்ற முயற்சித்தது.

இந்நிலையில்தான் தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்  வண்ணாரபேட்டை போலீஸ் தடியடி மீண்டும் தொடங்கி வைத்து விட்டது.

தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் மற்றும் எடப்பாடி அரசின் சாதனை விளக்க பிரச்சாரத்திற்கு தடை ஏற்படுத்துகிற போராட்டத்தை எப்படியேனும் நீர்த்துப் போகச் செய்ய வைப்பது இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது. ஒரு பக்கத்தில் ஆறு கேள்விகளை நீக்க வலியுறுத்துவோம் எனக் கூறிக்கொண்டு போராட்டங்களை கண்காணிக்க சிறப்பு காவல் அதிகாரிகளை இந்த அரசு நியமித்து வருகிறது.

ஒரு பக்கம் சிவில் சமூகத்தின் அரசியல் கோரிக்கை போராட்டங்களை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக காவல்துறையை வைத்து ஒடுக்குவது மற்றொருபுறம் பேச்சுவார்த்தை மூலமாக போராட்டத்தை நீர்த்து போகச் செய்வது என்ற வித்தையில் எடப்பாடி அரசு தேர்ந்துவருகிறது.

 

  • அருண் நெடுஞ்சழியன்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW