தனது கட்சி தலைவர்களின் வன்முறைப் பேச்சுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய விடாமல் காப்பாற்ற முயலும் மோடி அரசும் குரலற்ற மக்களின் குரலாக நின்ற  நீதிபதி முரளிதர் அவர்களும்…

27 Feb 2020

செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர் டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறைக்கு பா.ச.க தலைவர்கள் அனுராக் தாக்குர், பர்வேஸ் வர்மா, அபய் வர்மா, கபில் மிஸ்ரா போன்றோர்களின் தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரமே காரணம் என்பதால் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் 25.02.2020 அன்று பேராணையை (writ petition) தாக்கல் செய்தார்.

மேலும் அந்த மனுவில் டெல்லிக்கு வெளியில் உள்ள அதிகாரிகளை கொண்டு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டெல்லியில் நடந்த கலவரத்தை விசாரணை செய்ய வேண்டும் எனவும்..

ஆயுதம் தாங்கிய ‘ஜெய் ஸ்ரீ ராம் ‘ என மதவாத முழக்கமிட்டபடி இருந்த கும்பலை டெல்லி காவல்துறையை சேர்ந்தவர்கள் தூண்டி விட்டனர், மேலும் காவல்துறையினர் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே சமூக விரோத சக்திகள் கற்களை வீசியது சி.சி.டி.வி காமிராவில் பதிவு ஆகியுள்ளது எனவும்..

ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையின் கீழ் நீதி விசாரணையை நடத்தி நடந்த மத வன்முறைகள் பற்றியும், கலவரத்தில் பங்கு பெற்ற காவல்துறையினரை அடையாளம் கண்டு அவர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும்..

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல வேண்டுகோள்கள் மனுவில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மனு 26.02.2020 அன்று நீதிபதிகள் முரளிதர் மற்றும் தால்வந் சிங் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

டெல்லி காவல்துறை சார்பாக பேசிய மத்திய அரசின் துணை சட்ட ஆலோசகர் துஷார் மேத்தா, ‘அந்த பேச்சுக்கள் வெளிவந்து 20 நாட்கள் கழித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, நாம் சூழ்நிலையை விரும்பத்தக்கதாக  மாற்ற வேண்டாம்’ என ஆரம்பித்தார். அதற்க்கு பதில் அளித்த நீதிபதி முரளிதர்,’ வெளியில் உள்ள சூழல் மிகவும் விரும்பத்தகாததாக உள்ளது’ என்றார்.

பா.ச.க தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை FIR பதிவு குறித்து பேசும் போது ‘முதல் தகவல் அறிக்கை பதிவது என்பது முக்கியமான ஒன்று. முதல் தகவல் அறிக்கை பதிய இது உகந்த நேரம் அல்ல. எனவே பொருத்தமான நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.’ என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் துஷார் மேத்தா.

 

ஹர்ஷ் மந்திர் சார்பாக பேசிய மூத்த வழக்கறிஞர் கொலின் கொன்சால்வேஸ்,’ மத்திய அரசின் வழக்கறிஞர் பேசுவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், அனுராக் தாகூரின் பேச்சுக்கள் பலரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, பலரை எதிர் போராட்டங்களை நடத்த தூண்டி உள்ளது, இது உடனடியாக கைது செய்ய வேண்டிய ஒன்று’ என்று பேசினார். ‘இந்த நபர்கள் அனைவரும் அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ளவர்கள் என்ற உண்மையை பார்க்கும்போது இவர்கள் இப்படி பேசுவது என்பது அரசாங்கத்தின் கொள்கை என்பதாக தெரிகிறது’ என்று கடுமையாக சாடினார்.

பா.ச.க தலைவர்களின் வெறுப்பு பேச்சுக்கள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பும்போது, டெல்லி காவல்துறை அதிகாரிகள் ‘தாங்கள் அந்த காணொளிகளை பார்க்கவே இல்லை’ என்றதை கேட்ட நீதிபதி முரளிதர் அவர்கள் டெல்லி காவல் துறையின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைவதாக கூறினார். இதைத்தொடர்ந்து நீதிபதி முரளிதர் அவர்கள் வெறுப்பு பிரச்சார காணொளிகளை பிற்பகல் அமர்வில் திரையிடுமாறு உத்தரவிட்டார்.

மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, ‘ சில தேர்ந்தெடுக்கப்பட்ட காணொளிகளை மட்டும் வைத்து உச்ச அதிகாரத்தை பயன்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். வெறுப்பு பிரச்சாரங்கள் அனைத்து தரப்பிலும் உள்ளது.’, ‘மூன்று காணொளிகளை மட்டும் தேர்ந்தெடுத்து மனு தாக்கல் செய்தது உள்நோக்கம் கொண்ட பொது சீற்றமாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய இன்று பொருத்தமான நாள் அல்ல. இந்த நேரம் பொருத்தமானது அல்ல.’ என்று பா.ச.க தலைவர்களை காப்பாற்ற எடுத்த முயற்சி பூமராங் போல திரும்பி வந்து தாக்கியது.

நீதிபதி முரளிதர் அவர்கள், ‘எது பொருத்தமான நேரம் திரு.மேத்தா?, இந்த நகரம் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது?’ ‘

‘காவல் துறை இந்த காணொளிகள் மீது மட்டும் அல்லாமல் மற்ற காணொளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தவறி விட்டது என்கிறீர்களா? இந்த காணொளிகள் வெறுப்பை தூண்டுபவை என நீங்களே ஒப்புக்கொள்ளும் போது ஏன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை? ஏன் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இத்தனை தயக்கம் காட்டுகிறீர்கள்? நாங்கள் அமைதி நிலவ விரும்புகிறோம். இந்த நகரம் போதுமான வன்முறையை கண்டுவிட்டது. 1984 வன்முறையை திரும்ப கொண்டு வர வேண்டாம்’ என நீதிமன்றம் கடுமையாகவே தனது நிலைப்பாட்டை தெரிவித்துக்கொண்டது. நீதிபதி முரளிதர் அவர்கள் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் காங்கிரஸ்  தலைவர் சாஜன் குமாருக்கு 2018 ஆண்டு தண்டனை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொது சொத்துக்கு சேதம் என்றவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நீங்கள் ஏன் இது போன்ற பேச்சுக்களுக்கு எதிராக பதிவு செய்வது இல்லை?  இந்த பேச்சுக்களில் உள்ள குற்றத்தை கூட ஒப்புக்கொள்ள மாட்டீர்களா?’ என துஷார் மேத்தாவை துளைத்து எடுத்தார்.

 

மேலும் நீதிபதி அவர்கள் பேசும்போது, ‘ஒரே முழக்கம் (சுட்டுக் கொல்லுங்கள்) இந்த காணொளிகளில் திரும்ப திரும்ப வருகிறது. அது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. நீங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வில்லை என்றால் அது மிகவும் தவறான ஒரு செய்தியை சொல்லும். அது அந்த முழக்கத்தை மக்கள் திரும்ப திரும்ப சொல்வதை தடுக்காது’ என்று நீதிமன்றம் மறைமுகமாக இந்த அரசு வன்முறை செயல்களுக்கு துணை போவதை கவலையோடு சுட்டி காட்டியது.

இதற்கிடையில் மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா ‘தனக்கு போதுமான தகவல்கள் தெரியாது’ எனவும் ‘இந்த வழக்கு மேலும் 16 மணி நேரங்கள் பொறுத்துக்கொள்ள முடியாதா?’ என்றதும் ‘ குற்றவாளிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது அவசரமான ஒன்றாக உங்களுக்கு தெரியவில்லையா?’ என தனது கண்டனத்தை தெரிவித்தார் நீதிபதி முரளிதர் அவர்கள்.

இறுதியில் பா.ச.க தலைவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவை கூட செய்து விடக்கூடாது என்ற பா.ச.க அரசின் நோக்கத்தை நிறைவேற்ற அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தாவின் அனைத்து முயற்சிகளும் குரலற்ற மக்கள் தங்கள் குரலாக நினைத்துக்கொண்டு இருக்கும் நேர்மையான நீதிபதிகளின் விசாரணையின் முன் தோற்றுப்போனது.

இறுதியில் ‘டெல்லி காவல் துறை ஆணையர் நிலைமையை உணர்ந்து அதற்கு தக்கவாறு முடிவை எடுக்க வேண்டும். லலிதா குமாரி வழக்கில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த காணொளிகள் மட்டுமல்ல, அனைத்து வெறுப்பு பிரச்சார காணொளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதியாமல் காலம் தாழ்த்துவது ஒவ்வொரு நாளும் எத்தகைய விளைவுகளை உண்டு பண்ணுகிறது என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டத்திற்கு மேலானவர்கள் இங்கே யாரும் இல்லை.’ என்று கூறி வழக்கை மறுநாள்(27.02.2020) ஒத்தி வைத்தார் நீதிபதி முரளிதர் அவர்கள்.

நீதிபதி முரளிதர் அவர்கள் உத்திரபிரதேசம் அஸ்ஸிம்புரா முஸ்லீம் மக்கள் படுகொலையில் 16 முன்னாள் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியவர். கொள்கை பற்றாளர். குரலற்ற மக்களின் நீதிக்கான குரலாக ஒலித்தவர்.

தனது காவி வன்முறை கும்பலை தண்டனையில் இருந்து காப்பாற்ற மோடி அவசர அவசரமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்ட அன்றே 26.02.2020 நீதிபதி முரளிதர் அவர்களை பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியிடமாற்றம் செய்து விட்டது. இது கொலிஜியத்தின் முடிவு என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஒப்புதலோடு இந்திய குடியரசு தலைவரின் ஆணையின்படியே நடந்தேறியுள்ளது.

 

நீதிமன்றங்கள் நீதி வழங்க தவறினால் ஒன்றுபட்ட போராட்டத்தின் வழியே தங்களுக்கான நீதியை மக்கள் நிலைநாட்டிக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது.

  • பரிமளா

https://theleaflet.in/delhi-hc-expresses-displeasure-at-the-inaction-of-delhi-police-in-lodging-firs-against-inflammatory-speeches-made-by-bjp-leaders/

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW