கேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை! தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…

31 Oct 2019

தோழர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு கம்யூனிஸ்ட் என்கின்ற முறையில் உங்களோடு ஓர் உரையாடலை நடத்த விரும்புகிறேன். அதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நான் ஏதோ ஒரு பொதுவான உரையாடலை உங்களிடம் நடத்த விரும்பவில்லை.  தற்போதைய அரசியல் சூழலில் பாசிச இந்துத்துவ சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றி அரசு வடிவத்தையும் சமூகத்தையும் பாசிசமயமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிற சூழலில்தான் பேசுவதற்கு விரும்புகிறேன்.

 

பொதுவாக எம்-எல் இயக்கத்தைப்  பொருத்தவரை சிபிஐ(எம்) உடன் பேசுவதற்கு எதுவுமில்லை, அக்கட்சி திரிபுவாதத்தில் வீழ்ந்து முதலாளித்துவ ஆளும்வர்க்கக் கட்சியாக மாறிவிட்டது என்ற இயக்க நிலைப்பாட்டோடு விவகாரங்களை நிறுத்திக் கொள்வார்கள். அதனால்தான் கேரளாவில் நடைபெற்ற மாவோயிஸ்ட் படுகொலையில் சிபிஐ(எம்) கட்சியைக் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.  அதனால் அவர்களுக்கு உங்களோடு உரையாடுவதற்கு ஒன்றுமில்லை. அதேபோல, கேரள சிபிஐ(எம்) பினராயி விஜயன் அரசு செய்த படுகொலைக்கு எங்களோடு எதற்கு உரையாடல் நடத்த வேண்டுமென நீங்கள் கேட்கலாம்.  ஆனால், காரணம் இருப்பதாக நான் கருதுகிறேன்.  நான் சார்ந்திருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பினராய் அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதுமானதாக கருதவில்லை. அதைவிடுத்து மாவோயிஸ்டுகள் படுகொலையை ஒட்டி ஏதாவது ஒரு குறிப்பான செயலை, விளைவை இதோடு சம்பந்தப்பட்ட யாரிடமாவது உருவாக்க முடியுமா? என்பதுதான் என் அக்கறையாக இருக்கிறது. அதனால்தான் தமிழக சிபிஐ(எம்) தோழர்களாகிய உங்களிடம் உரையாடுவதற்கு முயற்சிக்கிறேன்.

 

நெடுங்காலமும் நீண்ட தூரமும் நாம் பேச வேண்டியிருக்கிறது. சிபிஐ(எம்) இல் இருந்து பிரிந்து நக்சல்பாரி எம்-எல் இயக்கம் உருவாகி சற்றொப்ப 50 ஆண்டுகள் ஆகிறது.  இந்த மிகப்பெரிய காலத்தில் தொடக்கத்திலும் இடையில் சில காலங்களிலும் தவிர இரண்டு போக்குகளுக்கிடையே பெரிய வாதங்கள் எதுவும் நடந்து விடவில்லை.  அதனால் பேசுவதற்கு ஒரு மொழியோ அதை புரிந்து கொள்வதற்கான ஓர் இடமோ உருவாவதற்கு வெகுகாலம் பிடிக்கலாம் ஆனாலும் இந்த கணத்தில் நாம் பேசியாக வேண்டியிருக்கிறது. நான் இதை உங்கள் அகில இந்திய கட்சியை நோக்கிப் பேசவில்லை.  அது பெரிய அலுவலாகவும் இந்நேரத்தில் பொருத்தமற்றதும் என நினைக்கிறேன்.  அதேபோல இடதுசாரி ஒற்றுமை அல்லது ஒரு பெரும் கூட்டமைப்பு என்ற கண்ணோட்டத்திலும் இப்பொழுது நான் பேசவில்லை. அதைவிட ஒரு குறைந்தபட்ச நோக்கத்தை, இலக்கை கொண்டுதான் உங்களோடு உரையாட விரும்புகிறேன்.  ஏனென்றால் நம் நாட்டில் மாறுபட்ட கம்யூனிஸ்ட் நீரோட்டங்களின் அரசியல் வழியும் அவற்றின் தலைமைமுறையும் அவை உருவாக்கி இருக்கின்ற தப்பெண்ணங்களும் வாதத்திற்கு உள்ளாக்கப்படாமல் இப்பொழுது வேறெதுவும் சாத்தியமில்லை.

 

பாராளுமன்ற தோல்விகள் உங்களிடையே பல கேள்விகளை எழுப்பி இருக்கலாம். ஆனால் இன்னொரு கம்யூனிஸ்ட் அமைப்பான மாவோயிஸ்டு ஊழியர்களின் படுகொலை அப்படி உங்களிடையே கேள்விகள் எதைவும் எழுப்பி இருக்காது என்றே நம்புகிறேன்.  அதையும் தாண்டி சில கேள்விகள் இருந்தால் தவிர்க்க முடியாத இந்த சிறு குறைபாடுகளை பெரிய சட்டகத்துக்குள் கடந்துவிடலாம் என்ற சிந்தனை முறையில் இருந்து உங்கள் அரசியல்வழி உங்களை சமாதானப்படுத்தி இருக்கலாம். ஆகவே,  நான் அங்கிருந்து – மாவோயிஸ்டுகள் படுகொலையில் இருந்துதான் உங்களிடம் உரையாடலைத் தொடங்க விரும்புகிறேன்.

 

                                                                      

பினராய் விஜயன் தலைமையில் இடது முன்னணி அரசு பதவி ஏற்ற பிறகு இதுவரை 7 மாவோயிஸ்டுகள் கேரளாவில் கொல்லப்பட்டுள்ளார்கள். அதில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சென்னையை சார்ந்த வழக்கறிஞர் அஜிதா. அவர் சென்னையில் பெண்கள் அமைப்பின் கள செயல்பாட்டில் மட்டுமல்ல பல்வேறு அரசியல் சமூக மனித உரிமைச் செயல்பாடுகளில் முன்னின்று பணியாற்றியவர். இன்னொருவர் குப்புராஜ். மிகவும் அறிவார்த்தமான மார்க்சியக் கோட்பாட்டாளர். இப்பொழுது கொல்லப்பட்டிருக்கிற மணிவாசகம் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து, மார்க்சிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, ஆசிரியர் பணியை துறந்து, தனது ஒட்டுமொத்த குடும்பத்தையே அமைப்பு செயல்பாடுகளில் ஈடுபடுத்தியவர்.  மூன்றாண்டு காலமாக திருச்சி சிறையில் அடைபட்டுள்ள அவரது தங்கை சந்திரா தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகம் என்ற பெண்கள் அமைப்பை வழிநடத்தி 90களில் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெண்கள் போராட்டங்களை முன்னின்று  வழிநடத்தியவர். மணிவாசகத்தின் இணையரான கலாவும் ஒரு கள செயல்பாட்டாளர். அவரும் இப்பொழுது திருச்சி சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல கொல்லப்பட்ட கார்த்தி சென்னையில் ஒரு தொழிலாளியாக பணியாற்றி, மார்க்சிய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு மாவோயிஸ்ட் அமைப்பிற்கு சென்றவர். இவர்கள் யாரும் திருடர்களோ கொள்ளையர்களோ கிடையாது. மார்க்சியம் என்ற தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, மக்களிடையே பணிபுரிந்து, இன்று ஆயுதப் போராட்டத்தை ஓர் அரசியல் வழிமுறையாக ஏற்று களத்திலேயே ஈகம் செய்து இருப்பவர்கள்தான். ஏன் உங்களுக்கு இவர்களின் சாவு ஒரு சலனத்தை, வருத்தத்தை ஏற்படுத்தவில்லை?  நீங்கள் சேகுவாராவின் ஆயுதத்தை, சாகசத்தை ரசிப்பவர்கள் தான்.  ரஷ்யாவின் ஆயுத எழுச்சியை ஏற்றுக்கொண்டு இருந்தவர்கள்தான்.  ஆனால் மாவோயிஸ்டுகளின் சாகசமும் ஆயுதமும் உங்களுக்கு நெருக்கமானதாக தெரியவில்லை. அவர்கள் அராஜகவாதிகள், மார்க்சிஸ்டுகள் கிடையாது என்ற உங்கள் கட்சியின் ஒற்றைவரி உங்களின் பொதுபுத்தியைக் கட்டிப்போடுகிறது. ஏன் மார்க்ஸ் காலந்தொட்டு இன்றுவரை உலகத்தில் நடந்துவருகிற மக்கள் எழுச்சிகளில் அராஜகவாதிகளோடு இணைந்து கம்யூனிஸ்டுகள் பணியாற்றவில்லையா? மாவோயிஸ்டுகள் விவகாரத்தில்மட்டும் அது ஏன் உங்கள் நினைவிற்கு வரமறுக்கிறது. உங்கள் கட்சி சொல்லிக் கொண்டிருக்கும் அராஜகவாதிகள் என்ற ஐம்பதாண்டு பழங்கதையை ஏற்று எவ்வளவு நாள்தான் மாவோயிஸ்டுகளின் படுகொலையை வேடிக்கை பார்க்கப் போகிறீர்கள்.  அந்த அராஜகவாதிகளோடு உரையாடுவதற்கு இப்பொழுதுகூட உங்களுக்கு ஒன்றுமே இல்லையா?

உடனே மேற்குவங்கத்தைப் பற்றிய அண்மைய கதை ஒன்று உங்கள் நினைவுக்கு வரக்கூடும்.  மம்தா பானர்ஜியோடு கூட்டு சேர்ந்து மாவோயிஸ்டுகள் சிபிஐ(எம்) மை தோற்கடித்தார்கள் என்று நீங்கள் கூறலாம். இந்த அராஜகவாதத்தை ஏற்க முடியுமா? என்று நீங்கள் கேட்கலாம். நான் ஒன்று கேட்கிறேன். இன்றைக்கு மேற்குவங்கத்தில் உங்களுடைய ஒட்டு மொத்தக் கட்சி அடித்தளமே ’எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற வகையிலே பாசிச பாஜகவிற்கு கைமாறி இருக்கிறதே! இதை நீங்கள் என்ன வாதத்தில் சேர்க்கப் போகிறீர்கள். பாஜகவினரைவிடவா இந்த நாட்டிற்கு மாவோயிஸ்டுகள் ஆபத்தானவர்கள்? இப்போது கூடவா மாவோயிஸ்டுகளுடன் பேசுவதற்கு உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறீர்கள். ஆனால் உங்கள் கூட்டணியில் இருக்கின்ற  உங்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் மற்ற எல்லா எம்-எல் குழுக்களுக்கும் தாய் கட்சியான சிபிஐ கேரளாவில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் படுகொலையையும் சத்தீஸ்கரில் நடைபெறும் மாவோயிஸ்டுகள் மீதான இராணுவ நடவடிக்கையையும் கண்டனம் செய்கிறதே, ஏன் ? இதில் ஏதாவது நீங்கள் வேறுபாட்டை புரிந்து கொள்ள முடிகிறதா?  70 ஆண்டு காலம் காங்கிரஸின் தொங்கு சதையாக இருந்து இந்த நாட்டை இந்துத்துவப் பாசிஸ்டுகள் இடம் பறிகொடுத்த பின்னரும் மாவோயிஸ்டுகளைக் கொல்வதை நியாயப்படுத்தும் உங்கள் தலைமையை நோக்கி உங்களுக்கு கேள்வியெழ வில்லையா?

 

மீண்டும் உங்கள் வழியிலேயே வருகிறேன். இப்பொழுது இந்த நாட்டின் முதன்மை எதிரிகள் இந்துத்துவப் பாசிச சக்திகளா? மார்க்சிய அராஜகவாத குழுக்களா? இன்றைக்கு சிபிஐ கட்சி ஒரு நடுவாந்திர நிலையை எடுத்து இருக்கிறது.  ஒரு கோடியில் சிபிஐ(எம்) கட்சி, மறுகோடியில் மாவோயிஸ்டுகள் வரை இடதுசாரிகள்  என்ற அதிகாரபூர்வமற்ற ஓர் அணுகுமுறையை கடைபிடித்துக் கொண்டிருக்கிறது.  இதுவொரு தெளிவான நிலைப்பாடாக தோற்றம் பெறவில்லை என்றாலும் நிலைமாறுதலுக்கு உரிய தோற்றப் பாடுகளை வெளிப்படுத்துகிறது.  ஆனால் சிபிஐ(எம்) கட்சியின் நிலைப்பாடு என்ன?  காங்கிரசோடு தேர்தலுக்கு முன்பு கூட்டணி சேரலாமா,  பின்பு கூட்டணி சேரலாமா என்பதைத் தாண்டி பாஜகவை எதிர்ப்பதற்கு அதற்கு வேறு வழியிருப்பதாக தெரியவில்லை என கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.  தேர்தலுக்கு முன்பு நீங்கள் கட்டிய ஆறு கட்சிகளைக் கொண்ட இடதுசாரி முன்னணியைக் கைவிட்டதுதான் தேர்தல் நேர உத்தியாக இருந்தது. பாசிச பாஜக திரிபுராவில் லெனின் சிலையை அடித்து நொறுக்கி உங்கள் ஆட்சியை மண்ணில் புதைத்தப் பின்பும் உங்கள் தலைமை மாவோயிஸ்டுகளை எதிரிகளாகவும் அவர்களின் கொலையை நியாயமாகவும் சித்தரிக்கிறது என்றால் இந்த நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழலைப் பற்றி, அதன் பல்வேறு திறவுகோல்களைப் பற்றி உங்கள் தலைமைக்கு என்ன புரிதல் இருக்கிறது?

 

பாராளுமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் படுதோல்வியடைந்தது, பாராளுமன்ற முட்டுச்சந்தில் முட்டி நின்றபிறகு நான்கு சீட்டுகளைக் கொடுத்து மானத்தை காப்பாற்றியது தமிழகம். அதனால்தான் தமிழக தோழர்களே,  உங்களைப் பார்த்து கேட்கிறேன். பாசிச சக்திகளுக்கு எதிராக உங்கள் தலைமையின் வேலைத்திட்டம் என்ன? நாட்டில் மிக முக்கியமானதோர் அரசியல் சக்தியாக இருக்கிற மாவோயிஸ்டுகளைப் பாசிச எதிர்ப்பு வேலைத்திட்டத்தில் இணைப்பதற்கு உங்கள் தலைமைக்கு ஏதாவது அக்கறை இருக்கிறதா?  தற்போதைய அரசியல் சூழலில் தமிழகத்தில் நீங்கள் நான்கு சீட்டைப் பெற்றதற்கான காரணத்தை தேடி ஓர் உள்ளகப் பரிசீலனையாவது மேற்கொண்டீர்களா? மொழி உணர்வு, இன உணர்வு, இந்துத்துவ எதிர்ப்பு, இயற்கையைக் காக்கும் கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்கள் என தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நீங்கள் கிண்டலாக சொல்லுகின்ற முகமற்ற சிறு குழுக்களின்(fringe group) பணியைத் திமுக தலைமையிலான உங்கள் கூட்டணி அறுவடையாக மாற்றியதை மறுக்க முடியுமா? அதேபோல உங்கள் கட்சியின் பெயரில் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வழியாகவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழியாகவும் நீங்கள் முன்னெடுக்கும் சாதி எதிர்ப்பு, மொழி இன உணர்வு, இந்துத்துவ எதிர்ப்பு இயக்கத்தின் தேவையை நாங்கள் புரியாமலா இருக்கிறோம்.  இதையாவது உங்கள் அகில இந்திய தலைமை புரிந்துகொண்டு இருக்குமா? அதனால்தான் தமிழக தோழர்களே, உங்களைப் பார்த்து கேட்கிறேன். பாசிச பாஜக எதிர்ப்பு வேலைத்திட்டத்தில் உங்கள் கட்சியின் தலைமைக்கு ஏதாவது சிந்தை இருக்கிறதா? வலதுசாரி பாசிச பாஜகவின் எழுச்சிக்கு எதிராக நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் சக்திகள் தோற்றம் பெறுகிற, பெற்றுக் கொண்டிருக்கிற சூழலில் உங்கள் தலைமை அதே பழைய பல்லவியைப் பாடி,  அரசியலில் காங்கிரசின் தொங்கு சதையாக பொருளாதாரத்தில் அதன் செயற்பாட்டாளனாக அரச ஒடுக்குமுறை வடிவத்தில் காங்கிரஸ் பாஜக விற்கு பதிலியாக இருக்கப் போகிறதா? மாவோயிஸ்டுகளை இந்தச் சூழலிலும் கொலை புரிய போகிறதா? அல்லது பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் ஊடாக இடதுசாரிகளைப் பலப்படுத்துவதற்கு ஏதாவது தன்னை மாற்றிக்கொள்ள போகிறதா? என்பதுதான் நான் உங்கள்முன் வைக்கும் கேள்வி.

 

தோழர்களே,  இந்த கேள்விகள் அனைத்தும் நான் உங்களோடு உரையாடுவதற்காக  முன்வைத்திருக்கும் கேள்விகள். தொடர்ந்து விவாதிப்போம்.  ஆனால் இப்பொழுது உடனடி அக்கறைக்குரிய சில விவகாரங்கள் இருக்கின்றன.  வருகின்ற காலங்களில் பல உயிர்களோடும் எதிர்கால அரசியல் திசைமாற்றத்தோடும் சம்பந்தப்பட்டது. இன்னும் பல பத்து பேரை உள்ளடக்கிய மாவோயிஸ்டுகளின் ஆயுத கெரில்லா குழுக்கள் தமிழக – கேரள கர்நாடக எல்லை வனப்பகுதியில் செயல்படுவதாக போலீஸ் தரப்பு செய்திகள் கூறுகின்றன.  இவர்கள் குறித்து கேரள சிபிஐ(எம்) அரசாங்கம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பதுதான் உயிராதாரமானக் கேள்வி. நீங்கள் எப்படி பாராளுமன்ற அரசியல் வடிவத்தை சமூக புரட்சிக்கான வழிமுறையாக வைத்திருக்கிறீர்களோ, அதேபோல அவர்கள் ஆயுதப் போராட்டத்தை வழிமுறையாக வைத்திருக்கிறார்கள்.  இது நாம் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய அரசியல் கேள்வி.  இப்போதைக்கு இதற்கு தீர்வு காண முடியாது. ஆனால் நடக்கின்ற படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியும்.  தண்டர்போல்ட் சிறப்பு ஆயுதப் படை அதிகாரிகளும் கேரள அரசும் ஒன்றைச் சொல்கிறது. மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கி இருக்கிறார்கள். அவர்களை சரணடைய வைப்பது கடினம். எனவே, அவர்கள் மோதலில் கொல்லப்படுகிறார்கள் என்று கொலைக்கான நியாயத்தைக் கூறுகிறார்கள்.

ஆனால் அக்கொலைகளை தவிர்க்க முடியும்.  எப்படி என்று சொன்னால் காவல்துறையினுடைய ஆயுத சுடுதிறன்,  படை எண்ணிக்கை,  தகவல் தொடர்பு என்பது மாவோயிஸ்டுகளுடையதைவிட பல மடங்கு மேம்பட்டதும் உயர்சக்தி வாய்ந்ததும் ஆகும். எனவே அவர்களைப் படை நடவடிக்கையில் சுற்றிவளைத்து கொள்வதற்கான எந்த தேவையும் இல்லை.  இதுநாள்வரை நடைபெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஒரு காவல் துறையினர்கூட கொல்லப்படவில்லை என்பதே இதற்கு சான்று. மேலும் அந்தப் பகுதியில் பல ஆண்டுகாலமாக மாவோயிஸ்டுகள் செயல்பட்டு வந்தாலும் இதுவரை காவல்துறையையோ அதன் அலுவலகங்களையோ அரசு நிறுவனங்களையோ தாக்குதல் குறி இலக்காக அவர்கள் மாற்றவில்லை. எனவே, ஒரு யுத்த நடவடிக்கை போன்று கருதி அவர்களை கொல்வதற்கான எந்த நியாயமும் இல்லை. மேலும் சமீபத்தில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் வயதும் உடல்நிலையும் மிக மோசமாகவே இருந்திருக்கிறது.  அவர்களைக் கொன்றுதான் பிடிக்க வேண்டும் என்றெந்த அவசியமுமில்லை. அதேபோல நடைபெற்ற சில சம்பவங்களில் போலி மோதல் கொலைகளும் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த நடைமுறை உண்மைகளைக் கணக்கிலெடுத்து போலீஸ் தாக்குதலில் கொலை செய்வதற்கான எந்த நியாயமும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  எனவே மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூக சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பு  கேரள சிபிஐ(எம்) அரசின் கையில்தான் இருக்கிறது.

 

இதற்கு நமது நாட்டிலேயே பல்வேறு உதாரணங்களைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் வடகிழக்குப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய பல்வேறு போராளிக் குழுக்களோடு அவர்கள் ஆயுதம் தாங்கி படைநடத்தி கொண்டிருக்கும்போதே மைய அரசு அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில்தான் இருக்கிறது.  எனவே இதை கேரள சிபிஐ(எம்) அரசாங்கம் மாவோயிஸ்டுகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். சிபிஐ கட்சியும் மாவோயிஸ்டுகளைப் படுகொலை செய்யக் கூடாது, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. எனவே சிபிஐ(எம்) மும் அந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.  சிபிஐ யோடு சேர்ந்து அந்தக் கோரிக்கையை தமிழக சிபிஐ(எம்) தோழர்கள் அகிலஇந்திய தலைமைக்கும் கேரள பினராய் விஜயன் அரசாங்கத்திற்கும் வலியுறுத்த வேண்டும்.  ஒருவேளை மத்திய அரசு கேரள மாநில அரசை மாவோயிஸ்டுகளுக்கு எதிரானப் படை நடவடிக்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினால் அதை மாநில அரசு தன் அதிகாரத்தைக் கொண்டு நிராகரிக்க முடியும். அதேபோல நடைபெற்ற படுகொலைகள் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டிய கோரிக்கைகளை, தீர்மானங்களை கவனத்தில் எடுத்து அதை கேரள அரசு அமல்படுத்துவதற்கு தமிழக சிபிஐ(எம்) தோழர்கள் வலியுறுத்தவேண்டும்.

 

இதை நான் உங்கள் முன் கோரிக்கையாக மட்டும் வைக்கவில்லை, இன்றைய பாசிச எதிர்ப்பு சூழலில் அதை எதிர்கொள்வதற்கான  தார்மீகமான கேள்விகளை எழுப்பி உரையாடலுக்காகவும் முன்வைத்திருக்கிறேன்.  நன்றி

–  பாலன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW