நீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது?

09 Jun 2019

இவ்வாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்து வழக்கம் போல் தற்கொலைகளும் நடந்துவிட்டன. திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷியா, விழுப்புரம் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகியோர் நீட் தேர்வில் வெற்றிப் பெறாததால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டு பிரதீபா, அதற்கு முந்தைய ஆண்டு அனிதா என மருத்துவக் கனவோடு மண்ணில் புதைந்தோர் பட்டியலை எழுதி வருகிறோம். தற்கொலை செய்து கொண்டோர் மூவர் தான். ஆனால், நீட் தேர்வின் மூலம் ஏழை, எளிய அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவர்கள் ஆயிரம் ஆயிரமாகும். தற்கொலைகள் சிற்சில, கொலைகளோ ஆயிரக்கணக்கில்!

இன்னொருபுறம், இவ்வாண்டு தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 1.35 லட்சம் பேர். அதில் 59,785 பேர் வெற்றிப் பெற்றுள்ளனர். வெற்றிப் பெற்றோர் 48.57%. கடந்த ஆண்டு வெற்றிப் பெற்றோர் 39.56%. இதைக் காட்டி, தமிழக மாணவர்கள் எந்தளவுக்கு முன்னேற்றம் காட்டியுள்ளனர் என்று ஊடகங்கள் கொண்டாடுகின்றன, பா.ச.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் நீட் தேர்வு முறைக்கு ஆதரவாக கும்மியடிக்கின்றார்.

நாடு தழுவிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் பொதுப்பட்டியலைச் சேர்ந்தவர்கள் 7,04,335, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 63,749, பட்டியல் சாதியினர் 20,009 பேர், பழங்குடியினர் 8455 பேர். இந்த புள்ளிவிளக்கங்கள் நீட் தேர்வு எந்த சமூகப் பிரிவினருக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.

அரசுப் பள்ளியில் படித்தோர் நீட் தேர்வுக்கு முன்பே அதிக இடங்களைப் பெற முடியாத நிலையே இருந்தது. இப்போது, அந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துவிட்டது. அரசுப் பாடத்திட்டத்தில் படித்தோர் கடுமையாக முயன்று படித்து, சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று தேர்வை எதிர்கொள்கின்றனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களில் படித்தோருக்கு அளவற்ற வாய்ப்பை அள்ளித் தந்துள்ளது நீட் தேர்வுமுறை.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் மருத்துவக் கல்விக்கும், மருத்துவ உயர்கல்விக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இன்றைக்கு வரை அதை ஏற்பதாகவோ, மறுப்பதாகவோ நடுவண் அரசு பதிலளிக்கவில்லை. ’எங்களுடைய கொள்கை நிலைப்பாடு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதுதான்” என்று அமைச்சர் ஜெயக்குமார் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் பா.ச.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த அதிமுகவால் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் பெற இயலவில்லை அல்லது முயலவில்லை. எனவே, தங்கள் கொள்கை நிலைப்பாடு இதுவென்று மக்களிடம் சொல்லிக் கொண்டே நீட் தேர்வு முறைக்கு மாணவர்களையும் மக்களையும் மனதளவில் அணியப்படுத்தும் பணியை மிகத் தீவிரமாக அடிமை எடப்பாடி அரசு செய்து வருகிறது. எந்தளவுக்கு மோசடியானவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் என்பதற்கு இதுவொரு அப்பட்டமான சான்று. இந்த அடிமைகள் தமிழக ஆட்சியில் அப்புறப்படுத்தப்பட்டாக வேண்டும்.

அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்ளும் எதிர்க்கட்சிகள்:

மிக விரிவான அறிக்கை ஒன்றை முரசொலியில் வெளியிட்டுள்ளது திமுக. ஆனால், தமிழகத்தில் அதிமுக அரசால் இயற்றப்பட்டுள்ள சட்ட மசோதா நடுவண் அரசின் மேசையில் உறங்கிக் கொண்டிருக்கிறது என்பதை கவனமாக குறிப்பிடவில்லை. அந்த சட்ட மசோதாவுக்கு நடுவண் அரசிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்பதுதான் நீட் தேர்வு விசயத்தில் நம்முன் இருக்கும் சவால். நமது கோரிக்கையும் அந்த சட்ட மசோதாவுக்கு நடுவண் அரசு ஒப்புதல் வழங்கச் செய்வதே ஆகும். ஆனால், பொத்தாம் பொதுவாக நடுவண் அரசைக் கண்டித்துவிட்டு,  அடுத்த தேர்தலில் வாக்கு அறுவடைக்கு அணியமாகிவிட்டது திமுக. அறிக்கை விடுவதோடு கடமை முடிந்துவிட்டதா?

அனைத்திந்திய இடதுசாரிக் கட்சிகளைப் பொருத்தவரை நீட் தேர்வை தமிழகம் ஏன் எதிர்க்கிறது? என்ற் சாறத்தை உள்வாங்காமல் முதலாளித்துவக் கட்சிகளைப் போல் தேர்தல் வாக்கு வங்கி நலனை முன்னிட்டு இக்கோரிக்கையை ஆதரித்து வருகின்றன போலும். கடந்த 2007 ஆம் ஆண்டே தமிழகத்தில் தொழிற் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நீக்கப்பட்டுவிட்டன. அதற்கு என்ன காரணம்? ஏழை, எளிய மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளவியலாது என்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்தே தொழிற்படிப்புகளுக்கு வாய்ப்பு வழங்குவது என்று தமிழக அரசு முடிவு செய்தது. இது சமூக நீதிக் கண்ணோட்டத்திலானது. அதுவும் குறிப்பாக, பணம் படைத்தோருக்கும் பணமில்லாதவருக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பும் முயற்சியாகும். நீட் தேர்வு மேட்டுக்குடியினருக்கும் மேல்தட்டு வகுப்பாருக்கும் கூடுதல் வாய்ப்பை வழங்கக் கூடியதென்றால் அதன் பொருட்டு தமிழ்நாட்டில் இந்த தேர்வு முறைக்கு எதிர்ப்பு வருகின்றதென்றால், இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களில் இதேப் பிரிவினர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுவார்கள் இல்லையா?. மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் ஏழைகளும் அடித்தட்டு மக்களே இல்லையா? மேலும் இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கான சந்தையை ஒன்றுகுவித்து பன்னாட்டு மூலதனத்தோடு இணைக்கு நோக்கிலானதே நீட் தேர்வு முறை. இதை இந்திய அளவில் எதிர்த்து நிற்க வேண்டியது இந்திய அளவிலான இடதுசாரி கட்சிகள் தானே. ஆனால், அத்தகைய கொள்கை நிலைப்பாடு அவர்கள் ஏன் எடுக்கவில்லை? ஏனென்றால், இந்திய அளவில் இவற்றையெல்லாம் முடிவு செய்து மாநிலங்கள் மீது திணிப்பது இந்திய இடதுசாரிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.

மோடி 2.0 வந்துவிட்டது, இனி என்ன?

2017, 2018, 2019 என்று மூன்றாண்டுகள் நீட் தேர்வு முறைக்குள் இழுத்து வரப்பட்டுவிட்டது தமிழகம். பயிற்சி நிறுவனங்களின் விளம்பரங்கள் அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் நிரம்பி வழிகின்றன. இலட்சத்திற்கும் மேல் செலவு செய்து மாணவர்கள் இப்பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்கு அணியமாகின்றனர். நீட் தேர்வைக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் குவிக்கும் நிறுவனங்கள் ஒருபுறம். அந்த நிறுவனங்களில் சென்று பணம் கட்டி படிக்கக் கூடிய வகுப்பார் இன்னொருபுறம். நீட் தேர்வு முறையால் பலன் பெற்று மருத்துவக் கல்லூரியில் படித்துவரும் மருத்துவ மாணவர்கள் இன்னொருபுறம் என நீட் தேர்வை ஆதரிக்கக் கூடியோர் மெல்லப் பெருகி வருகின்றனர். காலம் போகபோக இந்த பிரிவினரின் எண்ணிக்கை மென்மேலும் பெருகும். நீட் தேர்வு முறையை நீக்கிவிட்டு பழையபடி +2 மதிப்பெண் முறைக்கு மாறும் நிலை ஏற்பட்டால் இந்தப் பிரிவினர் போர்க்கொடி தூக்குவர். இவர்களை ஒரு சமூக சக்தியாக அணி திரட்டிக் கொண்டு பா.ச.க. போராட்டக் களத்தில் நிற்கும். தெள்ளத் தெளிவாக மேல் தட்டு வகுப்பாருக்கும் அடித்தட்டு வகுப்பாருக்குமான வகுப்புப் பிர்ச்சனையாக இது வெடிக்கும். எனவே, இன்னும் ஐந்தாண்டுகள் இழுத்தடிக்கப்பட்டால் நீட் தேர்வு நிரந்தரமாகிவிடும்.

மோடி ஆட்சி நீட் தேர்வைத் திணித்தது என்பதைக் காட்டி மோடி ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாக்கு கேட்டனர். காங்கிரசின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்படும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்ற உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், காங்கிரசு ஆட்சி அமைக்கவில்லை. தமிழ்நாட்டில் பா.ச.க. கூட்டணி தமிழக மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டாலும் அதிமுக தொடங்கி காங்கிரசு வரை எல்லோரும் நீட் தேர்வுக்கு விலக்களிப்பதில் நேர்க்கோட்டில் நின்றாலும் ’தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா?’ என்பதை கடந்த முறைபோல் இம்முறையும் வட இந்திய மக்கள் தான் தீர்மானித்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டிருந்தாலும் எல்லாக் கட்சிகளும் இக்கோரிக்கையை ஆதரித்து நின்றாலும் தமிழகத்தில் அனுப்பப்பட்டுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீட் தேர்வு முறைக்கு எதிராக இருப்பினும் நீட் தேர்வு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மக்களின் துயரங்களையும் துன்பங்களையும் காட்டி ஆட்சியாளர்களின் கொள்கையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டவர்களையும் கொல்லப்பட்டவர்களையும் காட்டி வாக்கு கேட்டு வெற்றி வாகை சூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி  என்ன செய்யப் போகிறார்கள்? நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள். ஆனால், கடந்த முறையும் தமிழகத்தில் உள்ள அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைதான் செய்தார்கள். குரல் எழுப்புவதைத் தாண்டி வேறென்ன செய்வார்கள். நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வார்கள். நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்கக் கூட செய்யலாம், அதனால் அவர்கள் இடைநீக்கம் கூட செய்யப்படலாம், ஆனால், அதற்குமேல் என்ன செய்யப் போகிறார்கள்? ஒருவேளை, பா.ச.க. ஆட்சி முடியும்வரை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு காத்திருக்கச் சொல்லப் போகின்றார்கள? ஒருவேளை மோடி 2.0 போல் அடுத்த முறையும் இந்திப் பகுதிகளில்மட்டும் வாக்குகளைப் பெற்று பா.ச.க.வே ஆட்சி அமைத்துவிட்டால் என்ன செய்வது? நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு காண்போம் என சொல்லி மக்களுக்கு நம்பிக்கையை விதைத்து வாக்கு கேட்டனர். தேர்தலில் போட்டியிட்ட பெருமக்கள் எல்லாம் தாம் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்துவிட்டால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றலாம் என்பதாக பரப்புரை செய்தார்கள். வெற்றிப் பெற்றவர்கள் குதூகலித்தனர், தோல்வி அடைந்தவர்கள் துவண்டு போயினர்.  ஆனால், இதோ நீட் தேர்வு முடிவுகளால் மீண்டும் தற்கொலைகள் நடந்துள்ளன. இங்கிருந்து செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட ஒரு கொள்கை விசயத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை நடுவண் அரசை நிறைவேற்றச் செய்வதில் வெற்றிப் பெற முடியுமா? ஏனெனில் அதிமுகவும் இவ்விசயத்தில் எதிராக இருக்கப் போவதில்லை. அரசமைப்பு சட்டப் படியும் கல்வி பொதுப்பட்டியலில் தான் இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு வெளியிலான உரிமை, சட்டத் திருத்தம் வேண்டும் போன்ற சிக்கல்கள் கூட இல்லை. மக்களின் ஏற்பும், அதிமுக வின் ஏற்பும், சட்ட மசோதாவும், அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதும் என எல்லாம் சாதகமாக இருக்கிறது. இத்தனையும் இருக்கும் போதாவது நாடாளுமன்றத்திற்குள் போகிறவர்கள்   இந்த நீட் விசயத்திலாவது தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியுமா? அப்படி நிறைவேற்ற முடியாதெனில், இந்த நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் நாடாளுமன்றத்தில், தமிழகத்தில் இருந்து செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தனித்து எந்தவொரு தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாதெனில் இதுதான் கூட்டாட்சியா? இப்போதாவது இந்த உண்மையை மக்களுக்கு சொல்வார்களா? அல்லது ஒவ்வொருமுறையும் தற்கொலை செய்து சாகும் மாணவர்களைக் காட்டி வாக்கு மட்டும் கேட்டுக் கொண்டிருப்பார்களா?

தில்லி சுல்தான்களின் அதிகாரக் குவிப்புக்கு எதிராய் தமிழ்த்தேச குடியரசு உரிமைக்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே அரும்பும் போதே சருகாய் உதிர்ந்த நம் மாணவர்களின் சாவுச் செய்திகள் சொல்லும் உண்மை.

 

-செந்தில், இளந்தமிழகம்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW