தண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு!

18 Jun 2019

கடந்த மூன்று நான்கு மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக பேசப்பட்டுவந்த சென்னை மாநகர தண்ணீர் நெருக்கடி தற்போது கொதிநிலையை எட்டிவிட்டது. மாநில  உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியோ சென்னை மாநகரில் தண்ணீர் சிக்கல் என்பது திட்டமிட்டு பரப்பபடுகிற “வதந்தி” என ரிப்பன் கட்டிட வளாகத்தில் பேட்டி கொடுத்து விட்டு காரில் செல்கிறார். குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலைந்து திரிவதும், தண்ணீர் இல்லாமல் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மூடப்படுவதும், ஐடி நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனங்கள் பணிப்பதும், தண்ணீருக்காக சாலை மறியல் நடப்பதும், போர்வெல் ஆழப்படுத்துகிற பணிகள் சென்னையின் மூளை முடுக்கெல்லாம் நடந்து வருவதும், தனியார் தண்ணீர் லாரிகளுக்கு அப்பார்ட்மென்ட் வாசிகள் காத்துக் கிடப்பதும் அன்றாட யதார்த்த செய்தியாக உள்ள நிலையில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை “திட்டமிட்ட வதந்தி” என பொறுப்புமிக்க அமைச்சர்  கூறுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

1

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

சென்னை மாநகரின்  தண்ணீர்  தேவை நாளொன்றுக்கு   830MLD ஆகும்(80 கோடி லிட்டர்).சென்னையின் தண்ணீர் தேவையை பெருமளவிற்கு தீர்க்கின்ற  சோழவரம், புழல், பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் முழு கொள்ளளவும் தற்போது வெறும் 0.23 விழுக்காடாக சரிந்துவிட்டது. ஆகவே தற்போது சென்னை மாநகருக்கு 525 MLD தண்ணீர் விநியோகப்பட்டு வருவதாக  சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை பொறியாளர் திரு ஆறுமுகமே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நிலையில் வீராணம் ஏரியில் இருந்து 180MLD நீரும், நெமிலி மற்று மீஞ்சூரில் உள்ள கடல் நீரைக் குடிநீராக மாற்றுகிற திட்டத்தில் இருந்து 180MLD நீரும்,  தாமைரப்பாக்கம், பூண்டி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் ஆழ்துழாய் கிணறுகளில் இருந்து 95 MLD  நீரும், கொளத்தூர் ரெட்டேரியில் இருந்து 10 MLD நீரும், மாநகரின் பல்வேறு பகுதிளில் போடப்பட்டுள்ள ஆழ்துழாய் கிணறுகளில் இருந்து 35 MLD  நீரும் பெற்று தற்போது 525 MLD நீரை மாநகருக்கு விநியோகப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் சென்னை குடிநீர் வாரிய வரலாற்றின் முதல் முறையாக 900 தண்ணீர் லாரிக்களை வாடைகைக்கு அமர்த்தி, தண்ணீர் விநியோகித்து வருவதாக தலைமைப் பொறியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2

தொடர்ந்து 180 நாட்கள் மழை பெய்யாமல் போனது சென்னைக்கு புதிதா?

சென்னையில் கடந்த ஆறு மாதகாலமாக  மழை பெய்யாத  காரணத்தால்  தற்போது நெருக்கடி வந்ததெனவும் இதை தீர்ப்பதற்கான  அனைத்து முயற்சியையும் அம்மாவின் அரசு செய்து வருகிறது எனவும் இதை அரசியலாக்க கூடாது என முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிற அமைச்சர் வேலுமணி, தண்ணீர்  மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை  மீது பழி சுமத்துகிறார். 2015 சென்னை பெரு வெள்ள  பாதிப்பின்போது நூறாண்டு காணாத மழையால் பேரிடர் ஏற்பட்டது என செயற்கை பேரிடரை இயற்கை பேரிடராக கட்டமைத்து அரசின் மெத்தனத்தை மறைக்க முயன்ற ஆளும்கட்சி,  தற்போதைய தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கை மீதே பழிபோடுகிறது. இது எந்தளவிற்கு உண்மை ?

கடந்த இருபது ஆண்டுகால புள்ளி விவரங்களை பார்த்தால் சிறு புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தவிர சென்னையில்  பலமுறை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மழை இல்லாமல் இருந்துள்ளது. அதாவது வடகிழக்கு பருவமழைக்கும் தென்மேற்கு பருவமழைக்கும் இடைப்பட்ட இந்த காலத்தில் சென்னைக்கு மழையில்லாமல் போனது இது முதல் முறையல்ல. போன வருடம் கூட இந்த காலகட்டத்தில் தொடர்ந்து 187 நாட்கள்  மழையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை தமிழ்நாடு வேதேர்மன் தெளிவாக சான்றுகளுடன் எடுத்துக் கூறுகிறார்.

வேலூர் மாவட்டத்தில் உருவாகிற மேகக் கூட்டங்கள், தென் மேற்கு பருவக் காற்றால் கடல் நோக்கித் தள்ளப்படுகிற போது சென்னை, புதுவை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை கிடைக்கிறது. தற்போது கேரளாவில் தென்மேற்குப் பருவக்காற்று தொடங்கி விட்டதால்,அடுத்த வாரத்தில் சென்னைக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த மழையால் சென்னை மாநகரம் எதிர்கொண்டுவருகிற தண்ணீர் சிக்கல் முழுவதுமாக தீரப் போவதிமில்லை. ஒருவேளை ஓடிசாவை தாக்கிய பனிப்புயல் தமிழகத்திற்கு வந்திருந்தால் (அது மேலே செல்ல செல்ல வலுவாகியது, தமிழகத்தில் கரையை கடந்திருந்தால் வலுக்குறைவுடன் கடந்திருக்கும்) நமக்கு மழை கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. அது நடைபெறாமல் போனதுடன், ஈரப்பதத்தையும் ஈர்த்து சென்றுவிட்டதால், வெயிலின் தாக்கம் அதிகமாகியது. இவ்வாறு சென்னையின் நிலவியல் அமைப்பை சுமாராக ஆய்வு செய்தாலே மழை பொழியாமல் போனதற்கான காரணத்தையும் அதிக வெப்பத்திற்கான காரணத்தையும் அறிவியல் பூர்வ சான்றுகளுடன்  எளிதில் அறியமுடியும்.

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரில் தலைவிரித்தாடுகிற தண்ணீர் பஞ்சத்திற்கு இயற்கை மீது காரணம் காட்டுவது தவறான வாதமாகும். அப்படியானால் பிரச்சனைக்கு காரணம்தான் என்ன?

3

தண்ணீர் பஞ்சம்-இயற்கைப் பேரிடாரா ? செயற்கை பேரிடரா?

ஒவ்வொரு இயற்கை பேரிடர் கால சூழலும் சிவில் சமூகத்திற்கும் அரசிற்கும் படிப்பினைகளை வழங்குகின்றன. நாம் அதை எவ்வறு உள்வாங்கி நம்மை தயார் படுத்திக் கொள்கிறோம் என்பதே  கேள்வி. 2015 சென்னை வெள்ளமானது  நீராதார ஆக்கிரமிப்புகள், மழை வெள்ள வடிகால் குறித்த அரசின் அலட்சியத்தை அம்பலப்படுத்தின. போலவே ஓக்கி புயல் மற்றும் கஜா புயல்களானது பேரிடர்  ஆயத்தக் கட்டம், பேரிடர் கால மீட்பு/நிவாரணம்   மற்றும் புயலுக்கு பிந்தைய மறுக்கட்டமைப்பு ஆகியவற்றின் தோல்வியை அம்பலப்படுத்தின. தற்போது மாபெரும் தண்ணீர் பஞ்சகால பேரிடரை எதிர்கொண்டுவருகிறோம். வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை, திடீர் புயல் போன்ற நிகழ்வுகள் யாவும் காலம் காலமாக தமிழகம் எதிர்கொண்டுவருகிற நிகழ்வுகள்தான் என்பதை கடந்த கால சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன நிலையில் இவை யாவும் எவ்வாறு பேரிடராக மக்களை பாதிக்கின்றது?

நீர்நிலை பராமரிப்பு

அதிக மழை பொழிவும் நீண்டகாலம் மழை பெய்யமால் போவதும் சென்னை புவியியல் அமைப்பின்படி காலம் காலமாக நடைபெறுகிற நிகழ்வாக இருந்துபோதும், திட்டமிடப்படாத நகர்மயமாக்கத்தின் விளைவாக மேற்கொள்ளபட்ட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் நிலத்தடி நீர் சுரண்டலும்  வடகிழக்கு மழைபொழிவை  பேரிடராகவும் மழை குறைவாக பெய்கிற காலங்களை பஞ்சமாகவும்  மாற்றி விட்டன. உதாரணமாக ஆவடிக்கு அருகில் 229 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட பருத்திப்பட்டு ஏரி தற்போது  40 ஏக்கராகவும் 23 ஏக்கராக இருந்த தண்டரை ஏரி தற்போது  7 ஏக்கர் பரப்பளவிற்கும் 36 ஏக்கராக இருந்த முத்தாபுதுப்பேட்டை ஏரி, தற்போது 10 ஏக்கராக  416 ஏக்கராக இருந்த கோவில்பதாகை ஏரி தற்போது  50 ஏக்கராக சுருங்கி விட்டதாக அப்பகுதி வாழ் மக்களே குறிப்பிடுகிறார்கள் (விகடன் செய்தி) ஆக்கிரமிப்பு ஒருபுறம் என்றால், நீர்நிலை மேலாண்மை மற்றொருபுறம் பல்லிளிக்கின்றது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முறையாக  தூர்வாரப்படாமல் கிடப்பதால், விரைவாக நிரம்பி வழிகிறது. விளைவாக நீண்ட காலம் நீரை சேமிப்பதற்கு வழி அற்று ஏரி நிரம்பி நீர் வெளியேறுகிறது.அல்லது உடைந்து வீணாகிறது.

சில வருடங்குளுக்கு முன்பாக சென்னையின் மையத்தில் உள்ள போரூர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்கிற முயற்சிகள் நடைபெற்றபோது, சூழல் ஆர்வலார்கள் பொது மக்கள் சேர்ந்து போராடி அந்த முயற்சியை தடுத்தனர். இன்று சென்னை குடிநீர் வாரியமானது  போரூர் ஏரி நீரை சுத்திகரித்து நகரத்திற்கு குடிநீராக விநியோக்கின்றது. நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்த அரசின் அலட்சியமும் நீர்நிலைகளை மீட்பதற்கு சாமானிய மக்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டத்தையும் இந்த உதாரணம் காட்டுகிறது.

தண்ணீர் வளச் சுரண்டல்

சென்னை மாநகர சுற்றுவட்டாரத்தில் (காஞ்சிபுரம்,சென்னை,திருவள்ளூர் மாவட்டம்) வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறுஞ்சப்பட்டு வருகின்றது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடை செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராகபோராடிய தனியார்  லாரி விநியோகஸ்தர்கள்  போராட்டத்தில் இறங்கி நகரின் குடிநீர் அளிப்பை நிறுத்தினர். இறுதியில் வெற்றியும் பெற்றனர். தற்போதைய தண்ணீர் நெருக்கடி சூழலில் எரிகிற கொள்ளியில் பிடுங்குகிற வரை லாபம் என எந்தவித வரை முறையும் இன்றி கட்டணம் நிர்ணயத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். மறுபுறம் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களில் வரைமுறையற்ற வரையில் நிலத்தடி நீரை சூறையாடுகின்றன.

இந்நிலையில் தற்போது சென்னை எங்கிலும் குறைந்தபட்சம் இருநூறு  அடி ஆழத்திற்கு ஆழப்படுத்தி நிலதிடி நீர் உறுஞ்சப்பட்டு வருகின்றது. நிலை இப்படியே சென்றால், நீர் வற்றி உப்பு நீர் புகுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நிதி ஆயோக் ஆய்வறிக்கையும் இதை உறுதி செய்துள்ளது.

4

நமது பிரச்சனைக்கான காரணமும் அதற்கான தீர்வும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக உள்ளது. அதாவது மழை நீரை ஏரி கண்மாய் குளங்களில் சேமிப்பதும், மழை நீர் சேமிக்கிற திட்டத்தை முறையாக செயல்படுத்துவதும்/பராமரிப்பதும், பயன்படுத்திய நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவதுமே இதற்கு தீர்வாகும். இதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பையும் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை. சொல்லப்போனால் வடிகால் வாரியத்தின் சில ஆக்கப்பூர்வ பொறியாளர்களால்தான் நிலைமை ஏதோ இந்தளவிற்காகவது சமாளிக்க முடிகிறது. ஆனாலும் அரசின் கையில் லகான் இருக்கிற வகையில் அதிகாரிகளால் மட்டும் ஏதும் செய்திட முடியாது நிலை உள்ளது.

சிவில் சமூகத்திற்கு தலைமை தாங்குகிற அரசே நீர் மேலாண்மை கொள்கை மற்றும்  நடைமுறையாக்கத்திற்கு பொறுப்பு ஏற்கவேண்டும். ஆனால் நமது ஆட்சியாளர் என்ன செய்கிறார்கள்? குடிநீர் பஞ்சத்தை செயற்கையான வதந்தி என்கிறார்கள், அமைச்சர் ஜெயகுமாரோ டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு கேட்டுள்ளார். இந்நிலையில் முதல்வரின் முயற்சியைக் மறைக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விடலாமா என்கிறார். பெரும் உப்பு நீர் கழிவும், செலவும் பிடிக்கிற மாபெரும் திட்டங்களை ஒருபுறம் அறிவிப்பது அல்லது பஞ்சமே பொய் என்பது என நடைமுறைக்கு சற்றும் பொருத்தமில்லாத பொறுப்பிலாத அமைச்சர்களை வைத்து என்ன செய்வது?

வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 10 அல்லது 20 விழுக்காடு குறைந்தாலே தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கட்டமைப்பு வசதி இல்லை, இயல்பை விட 10 அல்லது 20 அதிகம் மழை பெய்தால் சேமிப்பதற்கும் வழி வகை இல்லை. இயற்கையாக பார்த்து, ஆண்டுக்கு ஒருமுறை அதிகமும் அல்லாமல் குறைவும் இல்லாமல் மிகச் சரியான கொள்ளளவிற்கு மழை பொழிய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எண்ணக்கூடும்.

 

-அருண்  நெடுஞ்சழியன்

ஆதாரம்:

https://www.thehindu.com/news/cities/chennai/water-supply-in-city-cut-to-525-from-830-mld-hc-told/article28023481.ece

https://www.thenewsminute.com/article/tn-minister-denies-water-scarcity-chennai-calls-it-manufactured-news-103779

https://tamil.thehindu.com/opinion/reporter-page/article25247171.ece

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW