நமது கோரிக்கைகள் சம்பிரதாயத்திற்காகவா ? சாத்தியப்படுத்தவா?

22 Apr 2020

 

ஆளும் அதிமுக, எதிர்க் கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தாண்டி செயல்படுகிற இடதுசாரி  ஜனநாயக இயக்கங்களின் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு இங்கு என்ன அர்த்தபாடு இருக்கிறது ? தேர்தல் காலங்களிலும், அதற்கு முன்பும் பின்பும், பல்வேறு அரசியல் நெருக்கடிகள் கோரிக்கைகள் தீவிர படுகின்ற சூழலிலும், நிறைய முழக்கங்களை கோரிக்கைகளை எழுப்புகிறோம், சிறு வெளியீடுகளை கொண்டு வருகிறோம், பிரச்சாரங்களை மேற்கொள்கிறோம், தற்போது சமூக ஊடகங்களை தீவிர பிரச்சார சாதனமாக பயன்படுத்துகிறோம், இதன் சமுதாய விளைவுகள் என்ன என்பதைப்பற்றி அறியமுற்படுகிறோமா?      சங்கை ஊதுவோம் விடிந்தால் விடியட்டும் என நம்மை நாமே ஆசுவாசப்படுத்தி கொள்கிறோமா? இயற்கை  பேரிடர், பெரும்  கொள்ளைநோய், பொருளியல் நெருக்கடி என ஒன்றை பின் தொடர்ந்து இன்னொன்று நமது சமுதாய வாழ்வை, மானுட இருப்பை கேள்விக்குறியாக மாற்றி இருக்கிற தருணத்திலும் வழக்கமான ஒன்றாக நமது நடைமுறையை தொடரப் போகிறோமா? நமது கோரிக்கைகள் மக்களின் வாழ்வோடு தொடர்புடையதென்றால், அவர்களின் வாழ்வை இருப்பதிலிருந்து பறிபோய் விடாமல் ஒரு அடி முன்னேற்றும் என்பதை உண்மையாக நாம் நம்பினால், அன்றாட நடைமுறை அரசியலில் தொட்டு அறியத்தக்க விளைவுகளை அது ஏன் உருவாக்கவில்லை என்பதைப்பற்றி பரிசீலிக்க தயாராக இருக்கிறோமா?

 

சோஷலிசமா ஜனநாயகமா, இந்திய புரட்சியா தமிழ்தேச புரட்சியா, வர்க்க புரட்சியா சமூக நீதியா, ஆயுதப் போராட்டமா அரசியல் பிரச்சாரமா, என்ற அடிப்படை கோரிக்கைகளுக்கு திட்டங்களுக்கு விடாப்பிடியாக வருடக்கணக்கில் சண்டையிடுகிற நாம், அன்றாடம் பறிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் அரசியல் ஜனநாயகத்திற்காகவும் போராட, குறைந்தபட்ச கோரிக்கையை அதற்கான செயல்திட்டத்தை கூட்டு வலிமையை உருவாக்க சண்டையிட வில்லையே ஏன்?. கடந்துபோன காங்கிரஸ் ஆட்சி பொருளாதார சீர்திருத்தங்களை  விரைவுபடுத்தி மாநில உரிமைகளைப் பறித்தது, நம் உணர்வோடும் அரசியல் வாழ்வோடும் இணைந்த ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானார்கள், ரத்த ஆறு ஓடிய நாட்களில் கூட நமக்குள் ஒரு குறைந்தபட்ச கோரிக்கையை தீட்டி சிதறுண்டு கிடக்கிற ஆற்றல்களை ஒன்று திரட்டி சிறு நீதியை கூட ஈட்ட முடியவில்லை, இந்துத்துவ பாசிசத்தின் இருள் மேகம் நம்மீது கவிழ்ந்தது, கிராமத்து கிழவியின் சிறுவாட்டிலிருந்து மாநில அரசின் கஜானா வரை நிதி மூலதன கும்பலால் சூறையாடப்பட்டு சிறு கும்பலின் ஒற்றை அதிகாரம் நிறுவப்பட்டது, இப்பொழுது கொரோனோ என்ற பெரும் கொள்ளைநோய், பாசிசத்தின் இருளை கொடும்சீற்றமாய் மாற்றி, நமது உயிர்வாழ்வை, வாழ்வாதாரத்தை, அரசியல் கூட்டுரிமையை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது, இப்பொழுதும் கூட குறைந்தபட்ச கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் இயக்கங்களின் ஐக்கிய அணியை உருவாக்குவதற்கு நாம் பேசத் தயாராக இல்லை.

 

தத்துவம் பேசிக்கொண்டு நடைமுறையில் இல்லாமல் இருப்பது மட்டும் மலட்டுத்தனமானதல்ல, அடிப்படை திட்டத்தை பேசிக்கொண்டு, மக்களின் பொருளாதார கோரிக்கைகளுக்கு துணை நின்றுவிட்டு, நடைமுறை அரசியலில் ஊக்கமாய் தலையிடுவதற்கு வழிவகைகளை அமைப்பு வடிவங்களை கண்டறியாமல் இருப்பதும் மலட்டுத்தனமானதுதான். மக்களின் அன்றாட பொருளாதார வாழ்வை தீர்மானிப்பது அன்றாட  நடைமுறை அரசியல்  நமது எதிர்கால தேசம் பற்றிய பொன்னுலகம் பற்றிய கனவுகள் அல்ல, மக்களின் வாழ்வாதாரத்திற்காக நின்றவர்கள் நாம்தான் என உரிமை பாராட்டலாம், ஆனால் 60களின் நிலச்சீர்திருத்தம் தொடங்கி இன்றைய ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை அதன் அரசியல் வெற்றியை அறிஞர் அண்ணாதுரை மட்டுமல்ல கிராமத்து விவசாயி எடப்பாடி பழனிச்சாமி கூட நம்மிடமிருந்து தட்டி பறித்து விட முடிகிறது, அரசியலில் நீங்கள் தலையிட வில்லை என்றால் அது உங்கள் வாழ்வில் தலையிடும் என்று பழைய மொழிக்கு ஏற்ப, நாம் அமைப்புரீதியாக மட்டும் சிதறுண்டு சிறுத்துப் போகவில்லை இந்த அரசியல் வாழ்வின் பரப்பிலுருந்தும் சிதறுண்டு சிறுத்து சூனியம் ஆகிவிடுவோம், இது நமது அனுபவம் மட்டுமல்ல இந்நேரத்தில் பல நாடுகளில் இடதுசாரிக் குழுக்களோ பெயர் சொல்ல ஒரு கம்யூனிஸ்ட் கட்சியோ கூட கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் தோழர்களே.

 

இடதுசாரி ஜனநாயக சக்திகளின் பலம், அடிப்படை திட்டம் மற்றும் கண்ணோட்டம் சார்ந்த வேறுபாடுகளின் பால் சிதறுண்டு கிடக்கிறது, அது தவிர்க்க முடியாதது, நீண்ட காலத்துக்கு தொடரவும் கூடும், நடைமுறை அரசியலின் வெற்றியில் சோதித்து அறியப்படாத கருத்துகளுக்கு இடையிலான போராட்டங்கள் காலாகாலத்துக்கும் இருக்கத்தான் போகிறது, ஆனால் நடைமுறை அரசியலில் சிதறுண்டு கிடக்கும் நமது பலம் நமக்கு மட்டுமல்ல மக்களுக்கு அதிக தீங்கு பயக்கும், நடைமுறை அரசியலில் தாக்கம் செலுத்த முடியாத நமது கருத்துப் போராட்டங்கள் நாளடைவில் நம்பிக்கை இழக்க செய்து அமைப்புகளை பலவீனமடையச் செய்து சிதைகின்றன, மக்களோ அவர்கள் ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கிற வாழ்வாதார அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டு கொடுநெறியின் கீழ் தள்ளப்படுகிறார்கள், அனைத்திற்கும் மேலாக மக்களின் நலன் முதன்மையானது என அரசியல் கருத்துக்களை விழுமியமாக ஏற்று இருக்கிற நாம், கருத்தியல் ரீதியாக ஒன்றுபடாமல் போகலாம், திட்டரீதியாக ஒன்றுபடாமல் போகலாம், அமைப்பு ரீதியாக ஒன்றுபடாமல்  போகலாம், நடைமுறை அரசியலில் உடனடி கோரிக்கைகளில் ஒன்றுபடுவது அதற்கான அமைப்பு தளத்தை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும், இப்போதும் காலம் கடந்துவிடவில்லை இருள் சூழ்ந்த பாசிசத்தின் கொடு நிழல் நம்மை அச்சுறுத்தியது, இப்பொழுது கொரானா பேரிடர் மக்களின் வாழ்வு, வாழ்வாதாரம், அரசியல் கூட்டுரிமை மூன்றையும் பாசிச கும்பலின் பிடியில் ஒப்படைத்துள்ளது. பேரிடர்கள் நெருக்கடிகள் சவால்களை மட்டும் தோற்றுவிப்பதில்லை, புதிய வாய்ப்புகளையும் புதிய அரசியல் முன் முயற்சிகளையும் தோற்றுவிக்கிறது, நாம்தான் பற்றி பிடித்துக் கொள்ள வேண்டும். நாம் தனித்தனியே அமைப்புகள் கொரானா கொள்ளைநோய் சம்பந்தமாக பாசிச அரசியல் நெருக்கடி சம்பந்தமாக நிறைய கோரிக்கைகளை அறிக்கைகளை நேரலைகளை வெளியிட்டு வருகிறோம், இதுமட்டும் போதுமானதல்ல இப்பொழுது நமக்கு தேவை இந்த கோரிக்கைகளிலெல்லாம் குறைந்தபட்ச உடன்பாடு வருபவைகளில், ஒன்றுபட்டு செயல் திட்டத்தை உருவாக்கி, நமது கூட்டு வலிமையை ஒன்று திரட்டும் தளத்தை உருவாக்கி, எதிர்கட்சிகளை செயல்பட வைப்பதாகவும், ஆளும் கட்சியை அரசை நிர்ப்பந்திப்பதாகவும், மக்களை செயலூக்கம் மிக்க அரசியல் பங்கேற்பாளனாக மாற்றுவதாகவும் அமைய வேண்டும், கொரானாவுக்கு பிந்தைய உலகம், நலவாழ்வு அரசை, அனைவருக்குமான பொது சுகாதார கட்டமைப்பை, அனைவருக்குமான அடிப்படை ஊதியத்தை பேச தொடங்கியிருக்கிறது, நாம் இதில் ஏதாவது ஒரு குறைந்தபட்ச வெற்றியை மக்கள் பெறுவதை நோக்கி அரசியல் திசையை நகர்த்த வேண்டும், அதுதான் மக்களை பிழைப்புவாத கும்பலிடமிருந்தும் பாசிச கும்பலிடமிருந்தும் விடுவிப்பதோடு, நம்மை சம்பிரதாயவாதத்திலிருந்து விடுவித்து சாத்தியபாட்டாளர்களாக மாற்ற கூடும்.

-பாலன்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW