மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார்?

07 Jul 2025

பாசிச பாசக ஆட்சியை வீழ்த்துவதற்கு வழியென்ன? பகுதி – 2

  • நாடாளுமன்ற அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுதல், பாசிச மோடி – ஷா சிறுகும்பல் அதிகாரத்தை நிறுவுதல்

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே இருந்து கொண்டு நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டுவதை ஓர் உத்தியாக செய்துவருகின்றது; மக்களவை, மாநிலங்களவை விவாதங்களை சம்பிரதாயப் பூர்வமாக்கி, சட்ட மசோதாக்களை நிறைவேற்ற இரண்டு அவைகளையும் ஒன்றாக கூட்டி, வாக்கெடுப்புகளில்  தில்லுமுல்லு செய்து குறுக்குவழியில் பெரும்பான்மைக் காட்டுவது, நாடாளுமன்ற நிலைக்குழுக்களைச் செயலற்று ஆக்குவது, கேபினட் அமைச்சரவையை செல்லாக்காசு ஆக்கி பிரதமர் அலுவலகத்தில் அதிகாரத்தைக் குவிப்பது ஆகியவற்றின் மூலம் மோடி – ஷா கும்பலாட்சி நடத்துவதை நாடாளுமன்ற அமைப்புமுறையை ஒழித்துக்கட்டுவதற்கான முதற்படியாக பாசக செய்து வருகிறது.

பாசக திட்ட ஆணையத்தைக் கலைத்துவிட்டு நிதி ஆயோக்கை கொண்டு வந்தது, தன்னாட்சி நிறுவனங்களான இந்திய ரிசர்வ் வங்கி, அமலாக்கத் துறை, நடுவண் புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம், நிதி ஆணையம் போன்றவற்றை தன்னுடைய தலையசைவிற்கு செயல்படுவனவாக மாற்றியது,  முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதி என்றொரு புதிய பொறுப்பைக் கொண்டு வந்தது என இந்திய நாடாளுமன்ற அமைப்புமுறை அதிகாரக் குவிப்புக்கு எதிராக தன்னகத்தே கொண்டிருக்கும் நிறுவனங்களை தூள்தூளாக்கிக் கொண்டிருக்கிறது; உச்சநீதிமன்ற நீதிபதிகளை உருட்டியும் மிரட்டியும் ஆசை காட்டியும் தன்வசமாக்குவதன் மூலம் நீதித்துறையின் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது; ஊடக , கருத்துச் சுதந்திரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. முக்கிய முடிவுகள் நாடாளுமன்றம், கேபினட் ஆகியவற்றிற்கு வெளியே மோடி – அமித்ஷா கும்பலால்  எடுக்கப்பட்டு அதிபர் பாணியில் அறிவிக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற அமைப்புமுறையை சிறுகசிறுக அழிக்கும் நோக்கில் அதன் மேலே இந்த பாசிச மோடி – ஷா சிறுகும்பல் சர்வாதிகாரம் இப்போது நிறுவப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமைப்புமுறையை முற்றாக அகற்றி ஒரு பாசிச அரச வடிவம் பெறுவதற்கு ஓர் இடைமாறுகால அரச வடிவமாக இது தேவைப்படுகிறது. நாடாளுமன்றத்திற்குள் இருந்தே அதை முற்றாக அழித்து முடித்துவிட்டுதான் அவர்களுடைய உண்மையான அடுத்தக்கட்ட பயங்கரவாத, இனவழிப்பு ஆயுதத்தை எடுப்பார்கள். அதுவரை மோடி – ஷா சிறுகும்பல் செய்துவரும் மாற்றங்களைத் தனித்தனி விவகாரமாய்ப் பார்ப்பதன் மூலம் இந்த சதியைப் புரிந்துகொள்ள முடியாது.

  • மாநில அதிகாரம் – அரைக் கூட்டாட்சி வடிவத்தை அழித்தல், ஒற்றையாட்சியை நிறுவுதல்

இரண்டாம் முறை ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் மோடி – அமித் ஷா சிறுகும்பல் காசுமீர் மீதான தாக்குதலை நடத்தியது. இந்திய ஒன்றியத்தில் அதிகபட்சமான சிறப்பு உரிமைகளைக் கொண்டிருந்த மாநிலமான காசுமீரையே ஓரிரவில் ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்ற முடிந்திருக்கிறது என்பது ஏனைய தேசிய இனங்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகும்.  மாநிலங்களை ஒன்றிய ஆட்சிப்புலத்தின் நிலைக்கு கீழிறக்குவதற்கு காசுமீர் தொடக்கப்புள்ளி. சட்டப்பேரவைகளைக் கொண்ட ஒன்றிய ஆட்சிப்புலங்களை துணைநிலை ஆளுநரைக் கொண்டு ஆள்வதற்கு தில்லியும் புதுச்சேரியும் தொடக்கப்புள்ளி. சட்டப்பேரவை இல்லாத ஒன்றிய ஆட்சிப்புலங்களை இந்துராஷ்டிரத்தின் முதல் நிலமாக பரிசோதித்துப் பார்ப்பதற்கு இலட்சத் தீவு தொடக்கப்புள்ளி.

மாநில அதிகாரப் பட்டியலைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அதில் புதிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்கிறது; சட்டங்களை இயற்றி வருகின்றது. தமிழ்நாட்டு சட்டப்பேரவை இயற்றிய சட்ட முன் வரைவுகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக மாதக்கணக்கில் காத்துக் கிடந்தன. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பதைக் கேள்விக்குள்ளாக்கியது. பாசிச பாசக அரசு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கொண்டு ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறது. ‘ஒரே நாடு , ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை முன் வைத்து இதில் “விவாதிப்பதற்கு எதுவும் இல்லை” என்று மோடி – ஷா கும்பல் சர்வாதிகார சாட்டையை சுழற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா மருத்துவ நெருக்கடியை எதிர்கொள்வதிலும் மாநில அரசைக் கட்டிப் போட்டு தன் விருப்பம் போல் ஒன்றிய அரசு செயல்பட்டது; ஜி.எஸ்.டி. வருவாய் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்தது; பேரிடர்களின் போதும் மாநில அரசுகள் கேட்கும் தொகையைக் கொடுக்க மறுத்தது.  மாநில அரசின் நிர்வாகம், சட்டமியற்றும் உரிமை, நிதி, வருவாய் இனங்கள், மாநில அதிகாரப் பட்டியல் என மோடி – ஷா சிறுகும்பல் கைவைக்காத துறைகளே இல்லை என்று சொல்லலாம்.

உலகமய, தாராளமய, தனியார்மய காலத்தில் ஒற்றை சந்தையைக் கட்டமைப்பதையும் தில்லியில் அதிகாரத்தை மையப்படுத்துவதையும் காங்கிரசு ஆட்சி தீவிரப்படுத்தியது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மொழிவழி மாநிலங்கள் என்ற ஏற்பாட்டையே ஏற்காத அமைப்பாகும், இந்தியா நூறு ஜன்பத்களாகப் பிரிக்கப்பட்டு ஒற்றையாட்சி வடிவத்திற்குள்தான் ஆளப்பட வேண்டும் என்பதைக் கொள்கையாக கொண்டது. எனவே, முன்பு மையப்படுத்தலை ஆதரித்த காங்கிரசு, சிபிஐ(எம்) போன்ற அனைத்திந்திய கட்சிகள்கூட இப்போது மோடி – ஷா கூட்டணியின் மையப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தேசிய விடுதலைப் போராட்டங்கள் வளர்ச்சி  பெற்றுள்ள மாநிலங்களில் பல்வேறு முரண்பாடுகளை முன்னுக்கு கொண்டுவந்து தேசியப் பிரச்சனையைப் பின்னுக்குத் தள்ளுகிறது பாசக. தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை நேருக்குநேர் எதிர்த்துப் பேசுவதற்கு மாறாக திராவிட எதிர்ப்பு, இந்துவிரோத அரசியல் ,சாதிகளைக் கையாளுதல், சாதித் தலைவர்களைக் கொண்டு வட்டார வளர்ச்சியைக் காரணங் காட்டி மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கத் திட்டமிடுவது, ஈழ அரசியலில் இந்துத்துவ சக்திகளின் ஊடுறுவல் என்ற வேறுபட்ட முரண்பாடுகளின் ஊடாக தமிழ்நாட்டின் தமிழ்த்தேசிய அரசியல் வளர்ச்சியைப் பின்னுக்கு தள்ள முயற்சிக்கின்றது.

’வலிமையான மைய அரசு’ என்பது அதிகாரத்தை  மையப்படுத்தி கார்ப்பரேட் ஏகபோக சக்திகளின் சிறுகும்பலாட்சிக்கு வழிவகுக்கிறது, மாநில அரசுகளை செல்லாக்காசு ஆக்குகிறது.

பாசிச மோடி – ஷா சிறுகும்பலாட்சி நடத்தும் மாநில அதிகாரத்தின் மீதான தாக்குதலின் எதிர்வினைகள் தமிழ்நாடு மட்டுமின்றி பஞ்சாப், மேற்குவங்கம், கேரளா, கர்நாடகம், அசாம், மராட்டியம், தில்லி, இலட்சதீவுகள் எனப் பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றிய ஆட்சிப்புலங்களிலும் எழுந்துள்ளன.  இது மாநில அதிகாரம் பற்றிய நாடு தழுவிய உரையாடலுக்கும் மாநில அரசுகளின் எதிர்ப்புக் குரல்களுக்கும் மாநில மக்களின் மொழிவழி தேசிய உணர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது.

மோடி  – ஷா சிறுகும்பலாட்சியின் ஒற்றையாட்சி சர்வாதிகாரத்தை ஒன்றுபட்ட வகையில் எதிர்த்து நின்று மாநில அதிகாரங்கள் சூறையாடப்படுவதை தடுத்தால்தான் சிறுகும்பலாட்சி பாசிச வடிவமெடுக்காமல் தடுக்க முடியும்.   

  • நிதிமூலதன சிறுகும்பலாட்சி

 வங்கிகள் இணைப்பு, பண மதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை, பி.எப்., ஈ.எஸ்.ஐ. பணங்களை ஒன்றிய அரசின் ஒரே ஆணையத்தின்கீழ் கொண்டு வருதல் ஆகியவை நிதிமூலதன திரட்டலையும் குவிப்பையும் இலக்காக கொண்ட சில சீர்திருத்தங்களாகும். மொத்தத்தில் முதல் ஐந்து ஆண்டு கால நிதித்துறை சீர்திருத்தங்களால் தொழில்மூலதனமும் வங்கிமூலதனமும் இணையும் நிகழ்வு தீவிரப்பட்டு, நாட்டை நிதிமூலதனத்தின் கையில் ஒப்படைத்தது மட்டுமல்லாமல் இதன் உடன் நிகழ்வாக நிதியாதிக்க கும்பலினுடைய சிறுகும்பலாட்சியை அரசியலில் வலுப்படுத்தியது.

மோடி – ஷா சிறுகும்பலாட்சி  செய்த பொருளியல் சீர்திருத்தங்கள் நிதிமூலதனக் குவிப்புக்கு வழிவகுத்தது மட்டுமின்றி அதன்விளைவாக இரண்டாம் ஆட்சிக்காலத்தின் தொடக்கத்திலேயே மோட்டார் வாகனத்துறை, கட்டுமானத்துறை, உற்பத்தித் துறை, முதலீடு, ஏற்றுமதி எல்லாவற்றிலும்  மிகப்பெரிய பொருளியல்  சுணக்கம் வெளிப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பொருளியல் சுணக்கத்தை எதிர்கொள்வதன் பெயரால் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து 1,76,000 கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு புறவாசல் வழியாக, கார்ப்பரேட்களுக்கு வரிக்குறைப்பு செய்து 1,45,000 கோடி ரூபாய் வரி வருவாயை தாரை வார்த்தது. 2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை பொருளியல் துறையை மென்மேலும் நிதிமயமாக்கி ஏகபோக முதலைகளிடம் ஒப்படைப்பது, டிஜிட்டல்மயமாக்குவது என்ற பெயரில் தொழில்நுட்ப பில்லியனர்களை உருவாக்குவது என்ற திசையிலேயே சீர்திருத்தங்களை அமலாக்கத் தொடங்கியது.

பொருளியல் சுணக்கம் நீடித்து கொண்டிருந்த போதுதான் கொரோனா பெருந்தொற்று வெடிப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானுடனான தேசியவெறி மோதல் போக்கை மட்டுப்படுத்திக் கொண்டு, மோடி அரசு சீன எதிர்ப்பை ஒரே குரலில் பேசத் தொடங்கியது. அப்படிப் பேச ஆரம்பித்ததைத் தொடர்ந்து லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன – இந்திய எல்லைச் சண்டை தொடங்கி அந்த தகராறு நீடித்துக் கொண்டிருந்தது. இந்த சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலுள்ள நிதி நிறுவனங்களின் முதலீடுகள் பெருமளவு இந்தியப் பங்கு சந்தையை நோக்கியும் இந்திய நிறுவனங்களை நோக்கியும் பாயத் தொடங்கின. அமெரிக்காவுடைய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகிள், ஃபேஸ் புக், அமேசான் போன்ற நிறுவனங்களிடம் இருந்தும் ப்ளாக் ஸ்டோன், கேகேஆர் போன்ற வெண்ட்சர் கேபிடலிஸ்ட் நிறுவனங்களிடம் இருந்தும்,   வரி சொர்க்கம் ( tax heaven ) என்று அழைக்கப்படுகிற சிறிய தீவுகளில் செயல்படும் வெட்ஜ் பண்ட்ஸ் ( Wedge Funds) நிறுவனங்களிடம் இருந்தும், சில அரசுகளிடம் உபரியாக குவிந்துள்ள சாவரின் பண்ட்ஸ் ( Sovereign State Funds) களில் இருந்தும் முதலீடுகள் இந்தியாவுக்குள் வந்தன. இப்படியாக 2020 ஆம் ஆண்டில் மட்டும் 88 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு உள்ளே வந்தது. அத்தகைய முதலீடுகள் எல்லாமே விரல்விட்டு எண்ணக்கூடிய நிதிமூலதன கும்பலுக்குத்தான் போய் சேர்ந்திருக்கின்றன.

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் அரசியல், இராணுவ ரீதியான கூட்டின் மூலம் பொருளியல் தளத்தில் அமெரிக்க நிறுவனங்களுடன் இந்திய நிதிமூலதனக் கும்பல் இளைய பங்காளியாக மாறியுள்ளது.  பொருளியல் சுணக்கம், மாதக்கணக்கிலான கொரோனா முழுமுடக்கம் ஆகியவற்றுக்கு இடையில் உண்மையான பொருளியல் நடவடிக்கை ( Real Economy) என்பது ஒன்றுமே கிடையாது. ஆனால், மக்களின் வாழ்க்கைக்கும் உற்பத்திக்கும் தொடர்பில்லாத வகையில் நிதிமயமாக்கப்பட்ட பொருளாதாரம்( எடுத்துக்காட்டு – ஊக வணிகம்,நேரடி அன்னிய நிதி நிறுவன முதலீடுகள்) ஒன்று வளர்ந்துவருகிறது.  நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சரிவு, கோடிக்கணக்கானோருக்கு வேலையிழப்பு ஆகியவை நடந்துகொன்டிருந்தது. 

கோவிட் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தற்சார்பு இந்தியா ( ஆதம் நிர்பார்), உற்பத்தி சார்நத ஊக்குவிப்பு ( PLI)  என்ற பெயரில் 20 இலட்சம் கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்தது மோடி அரசு. இதிலும் பெரும்பகுதி ஏகபோகங்களுக்கே தரப்பட்டது. சிறுகுறு தொழில்களுக்கு சொற்பமான நிதியுதவியே அறிவிக்கப்பட்டது.

இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் எண்ணெய் – எரிவாயு மட்டுமின்றி தொலைதொடர்பு மற்றும் சில்லறை வணிகத்திலும் ஏகபோகமாக மாறியிருக்கிறது. அதானி குழுமம் நிலக்கரி, துறைமுகம் ஆகிய துறைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில் இருந்து மாற்று எரிசக்தி, விமானத் துறை , உள்கட்டமைப்பு விவகாரங்களிலும் மிகப்பெரிய ஏகபோக சக்தியாக மாறியது.  கொரோனா கால நிவாரண திட்டம் என்ற பெயரில் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத்துறை, வங்கித்துறை, விண்வெளித்துறை போன்ற இதுவரை தனியார்மயமாக்கப்படாத துறைகள் திறந்துவிடப்பட்டன. சுரங்கத் துறையில் ஓர் ஏகபோக குழுமமாக வேதாந்தா குழுமம் வளர்ச்சிப்பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் தொழில்நுட்ப பில்லியனர்கள், நிதித்துறை சார்ந்த செயலிகளை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ( Fintech) பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பாசிச மோடி – ஷா சிறுகும்பலும் நிதிமூலதனக் கும்பலும் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. இதுமட்டுமின்றி, பாசக என்ற கட்சியே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் மாறியிருக்கிறது.  அரசுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் கட்டாயம் இல்லாத இரகசிய தேர்தல் பத்திர முறை ( Electoral Bonds) அறிமுகப்படுத்தப்பட்டது. வேறெந்த கட்சியைவிடவும் பெரும் பணம் படைத்த கட்சியாக பாசக மாறியுள்ளது. எந்தக் கட்சியில் இருப்பவரையும் விலைக்கு வாங்கக் கூடிய,  மாநிலங்களில் ஆட்சி மாற்றத்தை நடத்தக்கூடிய அளவுக்கு பணப்பலம் கொண்டிருப்பது பாசகவின் அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக  இருக்கிறது.

சீனாவிலும் அமெரிக்காவிலும் ஏகபோகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என்பது துளியும் இந்தியாவில் இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளியலையும் நிதித்துறையையும் அரசியலையும் எவ்வித தடைகளுமின்றி கட்டுப்படுத்தி ஏகபோகங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 

ஒட்டுமொத்த மூலதன வளத்தையும் மக்களிடம் இருந்து சுரண்டி நிதிமூலதன சிறுகும்பலிடம் எப்படி குவிப்பது என்பதையே பொருளியல் கொள்கையாக  நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நோக்கத்திற்காக மோடி –ஷா சிறுகும்பல்  நாடாளுமன்ற அமைப்புமுறையை பெயரளவுக்கானதாக மாற்றிக் கொண்டுள்ளது. ’ஒரே தேசம், ஒரே சந்தை’ என முன்வைத்து அரசியல் துறையில் இதை செயலாக்கத் துடிக்கின்றது. ஒவ்வொரு நெருக்கடி வரும்போதும் தேசியவாதக் கூச்சல் போட்டுக் கொண்டே ஏகபோக கார்ப்பரேட் சிறுகும்பலும் பாசிச மோடி – ஷா சிறுகும்பலும் ஒட்டுமொத்தமாக அரசியல் அதிகாரத்தையும் நிதி அதிகாரத்தையும் தங்கள் கையில் குவித்துக்  கொண்டிருக்கின்றன.

பாசிச அரசு அதிகாரத்தை நிறுவனமயப்படுத்தவதை நோக்கி இந்த நாடு செல்லாமல் இருக்க வேண்டுமானால் நிதிமூலதனக் குவிப்பையும் பல்வேறு தொழில்துறையில் ஏகபோகங்கள் உருவாவதையும் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.   

  • இந்துராஷ்டிரப் பாதை

மோடி – ஷா கூட்டணி குஜராத்தில் ஆட்சி செய்த போது ‘குஜராத் மாதிரி’ என்ற ஒன்றை செய்துகாட்டினர். ஒருபுறம் இசுலாமியர்களுக்கு எதிரானப் படுகொலைகளை நிகழ்த்திக் காட்டியதை உள்ளடக்கிய மாதிரி அது. இன்னொருபுறம், சில பெருமுதலாளிகளை வளர்த்தெடுக்கும்  ஒட்டுண்ணி, ஏகபோகமாதிரி அது. ஆகவே இந்த ‘குஜராத் மாதிரி’ ஆர்.எஸ்.எஸ். க்கு மட்டுமின்றி பெருமூலதன சக்திகளுக்கும் மனங்கவர்ந்த ஒன்றாக இருந்தது. இதை புரிந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைமை பெருமூலதனத்தின் நலனுக்கு சேவை செய்வதன் மூலம் தங்களுடைய இந்துராஷ்டிரக் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று மோடி – ஷா கூட்டணிக்கு பக்கப்பலமாக நின்று அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களை அகற்றி, ‘ஒரே தேசம், ஒரே சந்தை’ என்ற கொள்கையுடன் இவர்களை ஆட்சியில் அமர்த்தியது. காவி – கார்ப்பரேட் கூட்டணியின் ஆட்சியாக இது அமைந்தது.

காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கான பாதையில் மற்ற எல்லா ஆபத்துகளைவிடவும் முதன்மையான ஒன்று இருக்கிறது. அரசியல் அதிகாரத்தில் இச்சக்திகள்  இருப்பதால் எந்நேரம் வேண்டுமானாலும் இசுலாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடக்கக்கூடும் என்ற யதார்த்தம் நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவில் விருந்தினராக இருக்கும்போது  வட கிழக்கு தில்லியில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தபட்டன. உத்தரபிரதேசத்தில் பசு பாதுகாப்புக் குண்டர்களின் இசுலாமியர் – தலித் மக்களுக்கு எதிரானக் கும்பல் படுகொலைகள், சமயங் கடந்த காதலுக்கு எதிரான சட்டம் ( லவ் – ஜிகாத்), இசுலாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுதல், இசுலாமியர் வாழ்விடங்களில் அவர்களுக்கு எதிரான வன்முறைகள், புல்டோசர் வீடு இடிப்புகள் என இசுலாமியர்களுக்கு எதிரான அரச வன்முறையும் காவிக் குண்டர்களின் வன்முறையும் இயல்பான ஒன்றாக மாறியிருக்கிறது.

எப்படி ஜெர்மன் பாசிசத்தின் இனவழிப்பு இலக்கு மக்களாக ( Target Population) யூதர்கள் இருந்தார்களோ அதுபோல் இந்துத்துவப் பாசிசத்தின் இனவழிப்பு இலக்குமக்களாக இசுலாமியர்களும் மற்ற மதச்சிறுபான்மையினரும் இருக்கின்றனர்.  காவி – கார்ப்பரேட் பாசிசம் அனைவருக்கும் எதிரானதாக இருப்பினும் ஒரு சமூகக் குழு என்ற வகையில்  இசுலாமியர்கள் ஆக அதிகபட்சமாக இனத் துடைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுவதற்கான பதற்றமான அரசியல் நீரோட்டம் நிலவிக் கொண்டிருக்கிறது. நாட்டின் ஆட்சிக்கட்டிலில் இந்த அரசியல் தலைமை நீடித்துக் கொண்டிருக்கும்வரை அதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்து கொண்டிருக்கின்றன.

இரண்டாம் ஆட்சி தொடங்கிய நூறு நாட்களிலேயே பொருளியல், நிதித்துறை சீர்திருத்தங்களைவிடவும் இந்துராஷ்டிரத்திற்கான அடிப்படை நிகழ்ச்சிநிரலை வேகமாக செயல்படுத்தியது பாசக அரசு.

பாசக அரசு சம்மு காசுமீர் மாநிலத்திற்கான சிறப்பு தகுதியான உறுப்பு 370 ஐ நீக்கியது, மாநிலத்தை இரண்டாக உடைத்ததோடு மாநில தகுதியில் இருந்து கீழிறக்கி ஒன்றிய ஆட்சிப்புலமாக்கியது; குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் மூலம் பல மாநிலங்களில் அசாம், மேற்குவங்கம், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இசுலாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கவும் ஏனையப் பகுதிகளில் வாழ்ந்துவரும் பூர்வகுடி இசுலாமியர்களை இரண்டாம் நிலை குடிமக்கள் ஆக்கவும் இச்சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) என்ற பெயரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வங்கத்தில் இருந்து வந்திருந்த இசுலாமியர்களும் இந்துக்களும் குடியுரிமைப் பறிக்கப்பட்ட நிலையில் முகாம்களில் உள்ளனர்.

பாசக பாபர் மசூதியின் இடத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தை வளைத்துப் பெற்றது; இராமர் கோயிலை கட்டி கடந்த 2024 சனவரியில் மாபெரும் திறப்பு விழா நடத்தி தேசிய பெருமிதத்தைத் தூண்டிவிட்டு தேர்தலில் வாக்கு அறுவடை செய்ய முயன்றது. தேசிய விடுதலை இயக்கம் வளர்ச்சிப் பெற்றிருந்த மணிப்பூரில் ஆட்சியைப் பிடித்த பாசக, மெய்த்தி இனத்திற்கும் குக்கி இனத்திற்கும் இடையிலான முரண்பாட்டை இந்து  – கிறித்தவ முரண்பாடாக சித்திரித்து இவ்விரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மாதக்கணக்கில் தொடர்வதற்கு வழிவகுத்துள்ளது. மணிப்பூரில்  ”குக்கி பழங்குடிகளுக்கு எதிரான இனவழிப்பு” என்று சொல்லத்தக்க வகையில் இன்றுவரை மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

 ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தோ, ”இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்துக்களே. வெவ்வேறு சமயத்தவர் ஆயினும் அவர்கள் எல்லோரும் பூர்வீக இந்துக்களே” என்ற புதுவிளக்கத்தைக் கொடுத்தார். இவையாவும்  பெளதீக வகையில் நடைபெறும் இனப்படுகொலை, இனத்துடைப்பு நடவடிக்கைகளைவிடவும் மோசமான எதிர்கால விளைவுகளைக் கொண்ட கருத்துகள் இவையாகும். இசுலாமிய சமூகத்தின் பொது ஒப்புதல் இன்றி  ‘முத்தலாக் தடைச் சட்டம்’ இயற்றி,  இசுலாமியர்களின் சிவில் விவகாரத்தில் இந்துப் பெரும்பான்மைவாத அரசு மிக மோசமான தலையீடு செய்ததைக் கண்டோம்.

இன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ்.,  இந்துராஷ்டிரத்தின் வழிகாட்டும் கருத்தியலாக    பார்ப்பனியத்தைக் கடைபிடிக்கிறது; பார்ப்பன மேலாண்மையைத் தொடர்ந்து கடைபிடிக்கிறது.

காங்கிரசு, இடதுசாரிகளை காலனிய அடிவருடிகள் என்று முத்திரையிட்டு அக்கட்சிகளை எதிர்ப்பதன் மூலம் தாம் காலனிய நீக்கம் செய்ய முயல்வதாக ஆர்.எஸ்.எஸ் காட்டிக் கொள்கிறது. கருத்தியல் தளத்தில் காலனியம் எதிர் காலனிய எதிர்ப்பு என்ற சட்டகத்தை உருவாக்க முயல்கிறது பாசக. அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், மதச்சுதந்திரம், மதச்சார்பின்மை, சோசலிசம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கான அம்சங்களைக் காலனியத்தின் எச்சமாக காட்டி அதில் உள்ள முற்போக்கான கூறுகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டுவதுதான் அதன் நோக்கமாகும். காங்கிரசு , இடதுசாரிகள் மட்டுமல்ல, தாராளவாதிகள், காந்தியர்களின் கருத்தைக்கூட சகித்து கொள்ள முடியாத அமைப்புத்தான் ஆர்.எஸ்.எஸ்.அதேநேரத்தில், வலது பாசிச கருத்தியலுக்கான கூறுகளை ஐரோப்பாவில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு தயங்குவதில்லை.

பாசக அரசு இட ஒதுக்கீடு கோட்பாட்டையே அடித்து நொறுக்கும் வகையில் முன்னேறிய பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றிக் கொண்டது.  நாட்டின் உயர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் நவீன அரசியல் கருத்துகளின் சிந்தனை மையங்களாக இருந்து வருகின்றன. அவற்றை நேரடியாக வன்முறை கொண்டு தாக்குவதை ஆர்.எஸ்.எஸ். தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகரில் உள்ள சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் நேரடியாக காவிக் குண்டர்களைக் களமிறக்கி தாக்குதல் நடத்தினர்.

இசுலாமியர்களைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். இன் மையநிகழ்ச்சி நிரலில் எஞ்சியிருப்பவை பொதுசிவில் சட்டம், வஃபு வாரிய சட்டத்திருத்தம், தேசிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை செயல்படுத்துவது, ஹிஜாப் தடை ஆகியவை ஆகும். தேர்தலின் போது பிரதமரும் அவரது சகாக்களும் மேடைதோறும் இசுலாமிய வெறுப்புப் பேச்சை உமிழ்ந்து தள்ளினார்கள். பிரதமரே அப்படி பேசியதன் மூலம் வெறுப்பு அரசியலை நாட்டின்  அரசியல் யதார்த்தமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். என்ற நவீனகால மடத்தின் இந்துராஷ்டிர சிந்தனை இன்றைக்கு இந்நாட்டின் தேசியத்தைக் கட்டமைப்பதற்கான சிந்தனையாக மாறிவருகிறது. அந்த சிந்தனை இசுலாமியர்களின் அடையாளத்தை அழிப்பது அல்லது இசுலாமிய சமூகத்தையே அழிப்பது என்பதை இலக்காக கொண்டிருக்கிறது. இசுலாமியர்களுக்கு எதிரான இனத்துடைப்புக்கு சிறுகசிறுக தயாரிப்பு செய்துகொண்டிருக்கிறது. இந்த சிறுகும்பலாட்சியில் நாட்டில் வன்முறையான இரத்தக் களரியை உருவாக்கி, இசுலாமியர்களுக்கும் ஏனைய மதச் சிறுபான்மையினருக்கும் எதிரான பெரிய  படுகொலைகளை நோக்கி கொண்டு செல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW