தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை
தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தேனி மாவட்ட அரசினர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த விக்னேசு என்ற மாணவர் கடந்த பிப்ரவரி 13 நாள் விடுதி கழிவறையில் இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி சடலமாக கிடந்தார். பட்டியல் சாதியை சேர்ந்தவரான விக்னேசின் சாவில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவரது பெற்றோர் புலன் விசாரணைக் கோரி காவல் துறையில் முறையிட்டனர். இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் விக்னேசின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் அவரது குடுபத்தாருக்கு உரிய இழப்பீடு கொடுக்கவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் கோரி தமிழ்த்தேசிய மார்க்சியக் கழகம் மற்றும் தமிழ் மக்கள் உரிமை முன்னணி சார்பில் 07.03.2025 அன்று மாலை பெருந்திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக இவ்வார்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்டக் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்றிருக்கிறார் தோழர் மதியவன்.
இந்த பின்னணியில்தான், அவ்வார்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்தும் இரு சமூகங்களுக்கு இடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியதாக குற்றஞ்சாட்டி தோழர் மதியவன் மற்றும் அவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சிபிஐ(எம்-எல்) விடுதலை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சாதி ஒழிப்பு முன்னணி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மீதும் தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அந்த வழக்கில்தான் தோழர் மதியவன் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதால் இரு சமூகங்களுக்கு இடையே எதாவது மோதல் ஏற்பட்டதா? இக்கூட்டம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் அபப்டி எதுவும் நடக்கவில்லை.
அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அது குறித்து அவர் காவல் நிலையம் சென்று விளக்கம் அளித்துள்ள்ளார். அப்படியிருக்க, அவரை இரவோடு இரவாக கைது செய்ய வேண்டிய தேவை என்ன? அவரை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தும் நோக்கமா?
சாதிய வன்முறை தமிழகத்தில் அன்றாட நிகழ்வாக இருக்கும் போது வன்முறையைத் தூண்டும், அதில் ஈடுபடும் சாதி ஆதிக்க சக்திகளைக் கண்டு அஞ்சும் திமுக அரசு மறுபக்கமாக சாதிய வன்முறைகளை எதிர்த்துப் போராடக் கூடியவர்களின் முயற்சிகளுக்கு அனுமதி மறுக்கிறது; வழக்கு தொடுக்கிறது: சிறையில் அடைக்கிறது.
சமூகநீதி கண்காணிப்புக் குழு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்புக் குழு என தமிழ்நாடு அரசின் கீழ் வரும் குழுக்கள் உரிய வகையில் செயல்பட்டு தமிழ்நாட்டில் சமூகநீதியை வளர்த்தெடுக்கவும் சாதியக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் பங்களிக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளோ தலைகீழகாவும் எதிர்மறையாகவும் இருக்கின்றன.
தேனியில் நடந்துவருவது ஒருசில காவல் அதிகாரிகளின் பிரச்சனையல்ல, தமிழ்நாட்டின் காவல் இயந்திரத்திற்குள் புரையோடிப் போயிருக்கும் சாதி ஆதிக்க சார்பின் பகுதியாகும். எனவே, காவல்துறையின் அடாவடித்தனத்திற்கும் அத்துமீறல்களுக்கும் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்று சீர்செய்ய வேண்டும்.
தேனி மாவட்டத்தில் சாதிய வன்முறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் தோழர் மதீயவனை அச்சுறுத்தும் நோக்கிலும் பழிவாங்கும் நோக்கிலும் செய்யப்பட்ட இக்கைது நடவடிக்கையை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தோழர் மதியவனை விடுதலை செய்யவும் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறவும் மாணவர் விக்னேசு வழக்கை முறையாக விசாரிக்கவும், குற்றவாளிகளைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் தேனி மாவட்டக் காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்த்தேச மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.
தோழமையுடன்,
தி. செந்தில்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மககள் முன்னணி