ஜே.என்.யூ தேர்தல் – பாசிஸ்டுகள் இந்தியாவை வெற்றிக் கொள்வது இப்படித்தான்! – தோழர் செந்தில்

”Neo fascism இல்லை Fascism என சிபிஐ(எம்) இடம் வந்து கதறியவர்கள் இப்போது திபங்கரிடமும் AISA விடமும் போய் கதறுங்கள். JNU வில் left unity இல்லாததால் ABVP ஜெயிக்கும் நிலை. AISA மூன்று இடங்களில் வெற்றி பெற்றது என்றாலும் ABVP யின் வளர்ச்சிக்கு AISA இடது கூட்டணியில் இருந்து விலகியது உதவுகிறது”
ஜே.என்.யூ தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் சிபிஐ(எம்) கட்சி தோழர் ஒருவர் தமது முகநூலில் இட்ட பதிவு இது.
இந்த தேர்தலில் சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ( ஜே.என்.யூ) 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் ஆல் வழிநடத்தப்படும் ABVP மாணவர் அமைப்பு துணைச் செயலாளர் பொறுப்பை வென்றுள்ளது. இடதுசாரி மாணவர் அமைப்புகள் ஓரணியில் நின்று போட்டியிடாததே இதற்கு காரணம். அதிலும் சிபிஐ(எம்-எல்) விடுதலையின் மாணவர் அணி AISA தான் இடது ஒற்றுமையை குலைத்துவிட்டது என்ற விமர்சனத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் சிபிஐ(எம்) இன் நவ பாசிசக் கூறுகள் என்ற வரையறை மீது செய்யப்பட்ட விமர்சனங்களைக் ’கதறலாக’ சுட்டி அப்படி விமர்சித்தவர்களை நோக்கிய பதிவு இது.
சிபிஐ(எம்-எல்) விடுதலையின் மாணவர் அமைப்பான AISA வும் DSF என்ற கட்சி சாராத மாணவர் அமைப்பும் ஓரணியாக போட்டியிட்டுள்ளனர், சிபிஐ(எம்) மாணவர் அமைப்பு SFI , சிபிஐ மாணவர் அணி AISF, RSP கட்சியின் மாணவர் அணியான PSA, Birsa Ambedkar Pule Students Association ( BAPSA) ஆகியோர் ஓரணியாகப் போட்டியிட்டுள்ளனர். வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமக்கு மேற்படி இரு அணிகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற காரணத்தின் பெயரால் தனியாகப் போட்டியிட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். உடைய மாணவர் அமைப்பான ABVP தனித்து போட்டியிட்டுள்ளது.
தலைவர், துணைத் தலைவர், செயலாளர் பொறுப்புகளை AISA கூட்டணி வென்றுள்ளது. துணைச் செயலாளர் பொறுப்பை ABVP வென்றுள்ளது. மொத்தம் உள்ள 42 கவுன்சிலர் இடங்களில் 24 இல் ABVP வென்றுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் ABVP இத்தகைய வெற்றியைப் பெற்றதில்லை.
கடந்த முறை ஓரணியில் போட்டியிட்ட AISA வும் SFI யும் இம்முறை பிரிந்து போட்டியிட்டதுதான் வாக்குகள் பிளவுபடுவதற்கு காரணமாகி ABVP யின் தலையெடுப்புக்கு உதவியுள்ளது. AISA கூட்டணி வெற்றி பெற்ற பதவிகளிலும்கூட கொஞ்சம் தவறியிருந்தாலும் ABVP வென்றிருக்கக் கூடும். எனவே, இடது அணி மூன்று முக்கியப் பதவிகளில் வெற்றி பெற்றிருப்பது பெறுமதியானது என்ற போதும் அதன் காரணமாக பிரிந்து நின்றது சரி தான் என்றாகிவிடாது.
ஏன் பிரிந்து நின்றீர்கள்? என்ற கேள்விக்கு AISA செயலாளர் நிதிஷ் குமார் சொல்லியிருக்கும் காரணம் – கருத்தியல் வேறுபாடு. நாங்கள் இந்திய அரசியல் சூழலைப் பாசிசம் என்கிறோம். SFI நவ பாசிசக் கூறுகள் என்கிறது. இந்த வேறுபாடுதான் தனித்துப் போட்டியிடக் காரணம், இடங்கள் பங்கிடுவதல்ல என்ற பொருள்பட பேட்டிக் கொடுத்துள்ளார்.
SFI தரப்பில் சொல்லப்படும் காரணம் ( முகநூல் பதிவுகளில் இருந்து அறியப்பெறுவது), தலைவர், செயலாளர் பொறுப்புகளில் யார் போட்டியிடுவது என்ற பிரச்சனைதான். வழக்கமாக கடைபிடிக்கும் சுழற்சி முறைக்கு AISA இணங்கவில்லை என்று SFI சொல்கிறது. SFI இன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தாம் தொடக்க முதலே ஒன்றுபட்டு போட்டியிடுவதற்கு முயன்றதாக சொல்லப்பட்டுள்ளது.
பாசிசமா? நவ பாசிசமா? என்ற கருத்தியல் வேறுபாடுதான் தனித்துப் போட்டியிட காரணம் என்று சொல்லும் AISA தோழர் நிதிஷ் குமார், இன்னொரு பேட்டியில் SFI அணி தனித்துப் போட்டியிட்டு பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை என்றும் சொல்கிறார். இப்படி பிரிந்து போட்டியிட்டதால் ஓரிடத்தில் ABVP வெற்றிப் பெற்றது குறித்த கவலையையும் விடவும் SFI அணி ஒரு முக்கியப் பதவியிலும் வெற்றி பெறாமல் போனது குறித்த மகிழ்ச்சியே மேலோங்கியிருப்பதை மேற்படி கூற்று காட்டுகிறது.
பாசிசமா? நவ பாசிசக் கூறுகளா? என்ற விவாதத்தின் நோக்கம் என்ன? பாசிசம் என்று வரையறுப்பதன் மூலம் இதுதான் நாட்டின் முதன்மை முரண்பாடு, இந்த எதிர்ப்புரட்சிகர சக்திகளுக்கு எதிராக ஆளும் வகுப்பின் இன்னொரு தரப்புடன் அணி சேர்வதற்கு கட்டளையிடும் ஒரு முடிவுதான் அது. அந்த முடிவு வழிவகுக்கும் உத்தியை மனதில் கொண்டுதான் நவ பாசிசக் கூறுகள் என்பதோடு சிபிஐ(எம்) நிறுத்திக் கொள்கிறது. அது மேற்குவங்கத்தில் பாசகவையும் திரினாமுல் காங்கிரசையும் சமப்படுத்துவதற்கும் கேரளத்தில் பாசகவையும் காங்கிரசையும் சமப்படுத்துவதற்கும் இடம் கொடுக்கக் கூடிய பகுப்பாய்வாகும். எனவே, இங்கு ” பாசிசம் , நவபாசிசக் கூறுகள்” என்ற வேறுபாடு ஆளும்வகுப்புடன் கூட்டணி வைப்பதா? கூடாதா? என்ற முடிவை எடுப்பதற்கு உரியதே ஒழிய இடதுசாரிகள் ஒரு களத்தில் ஒன்றுபட்டு நிற்பதற்கு குறுக்கே வரும் வரையறை அல்ல.
ஒன்றுபடுவதற்கு அறைகூவல் விடுக்கும் ஒரு வரையறையின் பெயராலே ஒன்றுபடுவதை புறந்தள்ளியிருக்கிறது AISA. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை சோசலிச சகாப்தத்திலும்கூட மீறப்படலாகுது என்ற கோட்பாட்டை வகுத்து அளித்த லெனினின் பெயராலேயே பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமையை மறுப்பதை போன்றது இது.
இதுதான் நம் நாட்டின் கெடுவாய்ப்பாகும்.
கடந்த ஆண்டு ஜே.என்.யூ தேர்தலில், பொதுச் செயலாளர் பதவிக்கு இடது கூட்டணி சார்பாக போட்டியிட்ட DSF வேட்பாளர் சுவாதி சிங் கடைசி நேரத்தில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கிக் கொள்ள, BAPSA வைச் சேர்ந்த பிரியன்சி ஆர்யாவுக்கு வாக்களிக்குமாறு இடது கூட்டணி அறைகூவல் விடுத்தது. இது ABVP க்கு ஓரங்குலம் கூட இடம் கொடுத்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செய்யப்பட்டதாக AISA தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு தேர்தலில் ‘Not an inch to ABVP’ என்ற உறுதி AISA விடம் காணாமல் போய்விட்டது. SFI உடன் கூட்டுச் சேர மறுத்ததன் மூலம் ABVP க்கு இடம் கொடுத்துவிடக் கூடும் என்பதைப் பற்றிய கவலையின்றி AISA தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
கொள்கைக்கும் நடைமுறை உத்திகளுக்கும் எவ்வளவு முரண்பாடு! ஒருமுறை ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் புகுந்து சங் பரிவாரங்கள் தாக்குதல் வெறியாட்டம் நடத்திய போது, ஆர்.எஸ்.எஸ். ஐ சேர்ந்த குருமூர்த்தி, ஜே.என்.யூ அதன் பிறப்பிலேயே சிக்கலானது. அதன் டி.என்.ஏ வே பிரச்சனை. அங்கே நம்மால் வெற்றி கொள்ள முடியாவிட்டால் அதை அடியோடு கூட்டிப் பெருக்க வேண்டியதுதான் என்ற பொருள்பட பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். இன்னும் நுழைய முடியாத களமாக நாட்டின் உயர் பல்கலைக்கழகங்கள் இருந்து வரும் நிலையில், பாசிச எதிர்ப்பின் பெயராலேயே பாசிஸ்டுகளுக்கு வாய்ப்பை வாரி வழங்கும் வேலையை சிபிஐ(எம்-எல்) விடுதலையின் மாணவர் அணி செய்து முடித்திருக்கிறது.
இதில் இன்னொரு உண்மை இருக்கிறது. பாசக ஆட்சியில் நீடித்துக் கொண்டிருந்தால், ஒன்றிய அரசதிகாரத்தில் அவர்கள் குந்திக் கொண்டிந்தால் ஜே.என்.யூவோ மேற்கு வங்கமோ, தமிழ்நாடோ , கேரளாவோ எந்தக் களத்தையும் நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியாது. இந்த உண்மையை விளங்கிக் கொண்டால்தான் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டிய உடனடி, அவரச அவசியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
ஜே.என்.யூ வில் ABVP உள் நுழைந்ததற்கு AISA பொறுப்பேற்க வேண்டும் என சிபிஐ(எம்) தோழர்கள் சொல்கின்றனர்.
ஆம். உண்மை தான். இந்த களத்தில் AISA பொறுப்பேற்க வேண்டும். நேற்றொரு களத்தில் ஆம் ஆத்மி, மற்றொரு களத்தில் காங்கிரசு, வேறு ஒரு களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, இன்னொரு களத்தில் சிபிஐ(எம்) என யாரோ ஒருவர் ஒன்றுபடுவதற்கு மறுப்பதன் மூலம் குனிந்து நின்று அவர்களது முதுகில் கால் வைத்து ஆர்.எஸ்.எஸ். அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதற்கு உதவி வருகின்றனர். இந்த நாட்டை இப்படித்தான் பாசிஸ்டுகள் வெற்றி கொண்டு வருகிறார்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலை எடுத்துக் கொள்வோம். அதில் பாசகவை ஆட்சியில் அமர்த்த யாரெல்லாம் உதவி இருக்கிறார்கள்? என்று பாருங்கள்.
உத்தரபிரதேசத்தில் மட்டுமின்றி நாடெங்கும் வாக்குப் பிரிக்கும் பணியைச் சிறப்பாக செய்திருக்கிறது பகுசன் சமாஜ் கட்சி. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் பாசக வெற்றிபெற்ற தொகுதிகளில் 16 இடங்களில், பகுசன் சமாஜ் கட்சி பாசக அடைந்த வாக்கு வித்தியாசத்தைவிடவும் அதிகமான வாக்குகளைப் பெற்று பாசகவுக்கு உதவியிருந்தது.
மேற்கு வங்கத்தில் பாசக வெற்றி பெற்ற தொகுதிகளில் 5 இடங்களில் ( Rajganj, Maldaha North, Tamluk, Puralia, Bishnupur) சிபிஐ(எம்) கட்சி பாசக அடைந்த வாக்கு வித்தியாசத்தைவிடவும் அதிகமான வாக்குகளைப் பெற்று பாசகவுக்கு உதவியிருந்தது
இதுபோல் மராட்டியத்தில் 4 தொகுதிகளில் பிரகாஷ் அம்பேத்கரின் VBA பாசக வெற்றியடைய உதவியிருந்தது. ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஒளரங்கபாத்தில் பாசகவின் வெற்றிக்கு உதவியது. கேரளாவில் காங்கிரசும் சிபிஐ(எம்) மும் திருச்சூர் தொகுதியில் பாசகவுக்கு வெற்றியை தங்க தாம்பாலத்தில் வைத்துக் கொடுத்தன.
சத்தீஸ்கரில் ஒரு தொகுதியில் பாசக வெற்றி பெறுவதற்கு கணிசமான வாக்குகளைப் பிரித்து சிபிஐ உதவியது.
மேற்சொன்ன யாவும் வாக்கு வித்தியாசத்தை விட நேரடியாக அதிக வாக்குகள் பெற்ற இடங்களில் பெரும்பாலானவை . முழுமையான கணக்கு அல்ல. இதை மட்டும் கணக்கில் எடுத்து கூட்டினால் வரும் இடங்கள் 28. இதை கழித்தால் பாசகவின் இடங்கள் 212 ஆகவும் பாசக கூட்டணியின் இடங்கள் 266 ஆகவும் குறைந்திருக்கும்.
மேலும் கூட்டணி அமைவதால் ஏற்படக் கூடிய கூட்டுப்பெருக்க விளைவை கணக்கில் எடுத்தால் இன்னும் அதிகமான தொகுதிகள் பாசகவுக்குப் போனதை தடுத்திருக்க முடியும்.
தாம் தனித்து நிற்பதற்கு காரணமாக காங்கிரசு மீதோ திரினாமுல் காங்கிரசு மீதோ அல்லது சிவ சேனா மீதோ அல்லது வேறொரு கட்சி மீதோ இவர்கள் குறை கூறுகின்றனர்.
மொத்தத்தில், ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்க வேண்டிய பாசகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியதற்கு இவர்கள் எல்லோரும் பொறுப்பேற்க வேண்டும். இன்றைய பன்னாட்டு நிலைமையில், இனி ஏற்படக் கூடிய அழிவுகளுக்கும் இவர்கள் மக்கள் மன்றத்தில் ஒருநாள் பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்.
அரியானா, தில்லி, மராட்டியம் என அடுத்தடுத்த தேர்தல்களில் பாசகவுக்கு எதிராக கூட்டுச் சேர்வதில் எதிர்க்கட்சிகள் கோட்டைவிட்டு பாசகவை பதவியில் அமர்த்தினர்.
இந்த வரிசையில்தான் ஜே.என்.யூவில் ஒரு முக்கிய பதவியையும் பாதிக்கும் மேற்பட்ட கவுன்சிலர் இடங்களையும் ABVP யிடம் நாம் இழந்துள்ளோம்.
சிங்கங்கள் ஒரு வியூகம் இரண்டு முறை தோற்றுப் போனால் அதை மூன்றாவது முறையாக முன்னெடுப்பதில்லை. அவை தம்மை மாற்றிக் கொள்கின்றன. ஆனால், நம் நாட்டு எதிர்க்கட்சிகள் மீண்டும்மீண்டும் அதே தவறை செய்யத் தயங்குவதில்லை.
உண்மைக்கு உண்மையாகவும் மக்களுக்கு உண்மையாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை விழுமியங்களால் வழிநடத்தப்படும் பொழுதுதான் சரியான முடிவை வந்தடைந்து செயலுக்குப் போக முடியும். இப்படி சரியான முடிவை எடுப்பதில் வரலாற்றில் அரிதான எடுத்துக்காட்டுகளே இருக்கின்றன. ஆனால், குறுங்குழுவாத நலன், அமைப்புக்குள்ளேயும் வெளியேயும் தனிநபர் பதவி/ அதிகார நலன் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுத்துவிட்டு அதற்கு புரட்சி/ விடுதலையின் நலன், கட்சியின் நலன், மக்களின் நலன் என்ற முலாம்கள் பூசப்பட்டதற்கு வரலாற்றில் எத்தனையோ எடுத்துக்காட்டுகளை சொல்ல முடியும். சமகாலத்தில் அத்தகைய முடிவுகளுக்கு நியாயங்கள் கற்பிக்கப்பட்டாலும் வரலாற்று அன்னை அதை தோலுரித்துக் காட்டிவிடுகிறாள்!
எனவே, இங்கு பாசிசமா? பாசிச அபாயமா? நவ பாசிசமா? நவ பாசிசக் கூறுகளா? நவ பாசிச தன்மையா? என்பதல்ல கேள்வி. இந்நாட்டின் முதன்மை முரண்பாடு என்ன? என்பதே கேள்வி. அந்த முதன்மை முரன்பாட்டை முறியடிப்பதற்கு ஆளும் வகுப்பு உள்ளிட்ட பரந்துபட்ட அணி சேர்க்கைக்கு அணியமாக இருக்கிறோமா? என்பதே கேள்வி.
அதாவது, நவ பாசிசக் கூறுகள் என்று வரையறுப்பதன் மூலமும் அதன் பொருளியல் அடிப்படைக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் அதை எதிர்க்க வேண்டும் என்று வலிந்துவலிந்து கூறுவதன் மூலமும் உலகமய, தாராளமய, தனியார்மய பொருளியல் கொள்கைகளைக் கொண்ட காங்கிரசுடன் கேரளாவிலும் திரினாமுல் காங்கிரசுடன் மேற்கு வங்கத்திலும் கூட்டுச்சேர இயலாது என்று சொல்கிறது சிபிஐ(எம்). எனவே, இங்கு வரையறை என்பது யார் நண்பர்? யார் பகைவர்? யாருடன் அணி சேர்வது? என்பது பற்றிய நடைமுறை சார்ந்த கேள்வியே ஒழிய கல்விப்புல அறிவுப்பயிற்சி அல்ல!
இந்த ஆண்டு பீகாரில் தேர்தல் களம் விரிய இருக்கிறது. எதிர்க்கட்சிகள் வலுவான அணி சேர்க்கையின் மூலம் பாசகவை தனிமைப்படுத்தி அதன் கூட்டணியை வெற்றிக் கொள்ள போகிறார்களா? என்ற கேள்வி இருக்கிறது.
மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் களம் விரியும். ”தேர்தல் நடப்பதால் அது நவ பாசிசக் கூறுதான், பாசிசம் கிடையாது” என்று சிபிஐ(எம்) சொல்லும். திரினாமுலும் பாசவுக்கும் ஒன்று என்பதன் பெயரால் சிபிஐ(எம்) மும் காங்கிரசும் ஓரணியாகப் போட்டியிடும். வங்கத் தேச அரசியல் சூழலும் ஆர்.ஜி. கர் மருத்துவமனைப் போராட்டங்கள் போன்ற திரினாமுல் ஆட்சிக்கு எதிரான அதிருப்திகளும் சேர்ந்து பாசகவுக்கு கூடுதல் வாய்ப்புகளைத் தரத்தான் போகின்றன. தேர்தலுக்குப்பின் திரினாமுலும் சிபிஐ(எம்) மும் ஒருவர் மேல் ஒருவர் பழி சொல்லிக் கொள்வர். பாசக ஒருவேளை வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் அல்லது குறைந்தபட்சம் கடந்த முறையைவிட அதிக இடங்களில் வெற்றிப் பெறலாம். இதற்கு மாறாக ஏதாவது நடக்க வேண்டும் என்றால் மக்களின் பெயரால் இந்நாடு சந்தித்திருக்கும் நெருக்கடியின் பெயரால் எதிர்க்கட்சிகள் பண்பாட்டுச் செழுமையுடனான அரசியல் தீர்மானங்களுக்குப் போக வேண்டும்!
திபங்கர் பட்டாச்சார்யாக்களும் பிரகாஷ் காரத்களும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் அதே இடத்தில் இராமர் கோயில் கட்டப்பட்டதையும் தமது கண்களால் கண்டவர்கள்; இந்த வரலாற்றுக் காலத்தின் சாட்சியாகவும் பகுதியாகவும் இருப்பவர்காள். இந்த வரலாற்று கால வளர்ச்சியில் இந்தியாவின் அரசியல் சூழல் பற்றிய தமது மதிப்பீடுகள் என்ன? அதன் அடிப்படையில் தாம் செய்தது என்ன? செய்யத் தவறியது என்ன? அதிலிருந்து பெற்ற படிப்பினை என்ன? இனி செய்யப் போவதென்ன? அடுத்த 25 ஆண்டுகளில் அதிகபட்சமாக இந்நாட்டில் என்ன அழிவுகளைத் தடுக்க முடியும்? என்ன ஆக்கங்களை ஏற்படுத்த முடியும்? என்பது குறித்து வெளிப்படையாக சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
யாருக்கு? அடித்துக் கொல்லப்பட்ட முகமது அக்லக்குகளின் சொந்தங்களுக்கும் காசுமீர் மக்களுக்கும் சிறையில் வாடும் குல்சிமா பாத்திமாக்களுக்கும் தம் குடியுரிமைக் காக்க சாஹீன் பாக்குகளில் பதைப்பதைப்புடன் போராடிய பெண்களுக்கும் உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இசுலாமியர்களின் சொந்தங்களுக்கும் மணிப்பூரில் காலத்தால் ஆற்ற முடியாத வகையில் முரண்பட்டு கிடக்கும் மெய்திகளுக்கும் குக்கி பழங்குடிகளுக்கும் சத்தீஸ்கரில் வேட்டையாடப்பட்டு வரும் பழங்குடி மக்களுக்கும் வேலையின்றி தவிக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கும் வாழ்க்கை நிலைமையில் மென்மேலும் கீழே இறங்கிப் போகும் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும்.
இந்த எதிர்ப்புரட்சிகர சக்திகளை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு வெளியே புரட்சிக்கான பாதையைத் தேடுவதைவிடவும் மக்களுக்கும் புரட்சிக்கும் வரலாற்றுக்கும் செய்யும் இரண்டகம் வேறெதுவும் இருக்க முடியாது.
நாம் நமக்குள் சண்டையிட்டு எதிரியின் காலடியில் சரணடையப் போகிறோமா? அல்லது நமக்குள் விட்டுக்கொடுப்புகளைச் செய்து ஒன்றுபட்டு நின்று எதிரியிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கப் போகிறோமா? என்பதுதான் ஜே.என்.யூ தேர்தல் நம்மிடம் எழுப்பும் கேள்வி.