உத்தரகாண்ட்டில் நடந்துவரும் பாஜவின் இனத்துடைப்பு முயற்சிகள் – பாலாஜி
கடந்த மே 26 ஆம் தேதிக்குப் பிறகு, பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்தரகண்டிலுள்ள புரோலா என்னும் சிறிய ஊர், இந்திய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.கவின் வெறுப்பரசியலுக்குக் கிடைத்த அண்மைய தீணியாக மாறிப்போயுள்ள புரோலாவில், கடந்த மே 26 ஆம் தேதி அன்று 14 வயது சிறுமியைக் கடத்த முயன்றதாக ஜிதேந்தர் சைனி என்ற இந்துவும் உபெத்கான் என்ற இஸ்லாமியரும் மறுநாள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், இதனை பா.ஜ.க மற்றும் அதன் சங்பரிவாரங்கள் “லவ்ஜிகாத்” என்று திரித்து வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொள்ளத் துவங்கின. இந்தியாவில் பாஜக ஆளுகின்ற பல மாநிலங்களில் ஏற்கெனெவே ’லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம்’ என்று அழைக்கப்படும் கட்டாய மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் அமலில் உள்ளது.
குறிப்பாக இந்த சட்டம் உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்கெனவே இருக்கும் இந்த சட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப்போவதாக முதலமைச்சர் புஷ்கர்சிங்தாமி அறிவித்தார். இருந்தபோதும், அந்தப் பெண்ணைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதியப்பட்டதே தவிர, கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் பயன்படுத்தப்படவில்லை.
வழக்குபதிவு செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்கூட, இதில் ’லவ்ஜிகாத்துக்கு எந்த தொடர்புமில்லை’ என்று மறுக்கிறார். இந்தவழக்கிற்கு முதலிலிருந்தே மதச்சாயம் பூச முயற்சி நடப்பதாகத் தெரிவித்தஅவர், இது ஒரு சாதாரண குற்றம்தான், லவ்ஜிகாத் அல்ல. குற்றம்புரிந்தவர்கள் சிறையிலிருக்கிறார்கள். நீதித்துறை இதற்கு மேல் முடிவு செய்யும் என்று ஹெட்லைன்ஸ் டுடே பத்திரிக்கைக்கு ஜீன் 28, 2023 அன்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுபோல ஆட்கடத்தல்கள் உத்தர்காசி மாவட்டத்திலுள்ள மோரி, மற்றும் சமோலி மாவட்டத்திலுள்ள கவுச்சர் ஆகிய இடங்களிலும் நடந்ததாக குற்றம்சாட்டிய பா.ஜ.கவும் அதன் சங்பரிவாரங்களும் கடந்த மே 29 ஆம் தேதி புரோலாவில் ’லவ்ஜிகாத்திற்கெதிரான பேரணி’ என்ற பெயரில் புரோலா ஊரில் வாழ்ந்த இஸ்லாமியர்களுக்கெதிரான போராட்டம் ஒன்றை நடத்தின.
சுமார் 1000 பேர் கலந்துகொண்ட அந்தப் பேரணியில் இஸ்லாமியர்களது கடைகளின் முன்நின்று “ஜெய்ஸ்ரீராம்”, “ஜிகாதிகளே ஓடுங்கள்” போன்ற முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் சில இஸ்லாமியக் கடைகளை சூறையாடவும் செய்தனர்.
சுமார் 400 கடைகள் கொண்ட புரோலா கடைவீதியில், இஸ்லாமியர்களது கடைகளின் எண்ணிக்கை வெறும் 40 தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் சுமார் 30 கடைகள் சேதப்படுத்தப்பட்டன.
நான்கு நாட்களுக்குப் பிறகு பார்கோட் என்னும் பகுதியில் மேலும் ஒரு பேரணி நடத்தப்பட்டு, குறைந்தது 25 இஸ்லாமியர்களது கடைகள் சேதப்படுத்தப்பட்டன. அதில் சில கடைகள் ”X” என்று தெளிவாகத் தெரியும்படி குறியிடப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து தேவ் பூமி ரக்ஷா அபியான் என்ற அமைப்பின் பெயரில் அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒன்று புரோலாவிலுள்ள இசுலாமியர்களது கடைகளின் மீது ஜூன் 4 ஆம் தேதி ஒட்டப்பட்டது.
அதில், ”லவ் ஜிகாதிகள் தங்களது கடைகளை வரும் ஜூன் 15ஆம் தேதி நடக்கவிருக்கும் மகாபஞ்சாயத்துக்கு முன்னர் காலி செய்ய வேண்டும். மீறினால், காலம் பதில் சொல்லும்”, என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் இந்த மகாபஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன.
தொடர்ந்த அச்சுறுத்தல்களால் புரோலாவில் வாழ்ந்துவந்த பல இசுலாமியக் குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் கடைகளையும் காலி செய்துவிட்டு ஊரைவிட்டுச் செல்லத் துவங்கின. அதில் பா.ஜ.கவின் உத்தர்காசி மாவட்டத்தின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் சாகித் மற்றும் அதன் மற்றொரு மூத்த தலைவரான அகமது ஆகியோரும் அடங்குவர். ”நாற்பது ஆண்டுகளாக நடத்தி வந்த கடையை உடனடியாக காலிசெய்யுமாறு இடத்தின் உரிமையாளரான இந்து ஒருவர் கூறினார்”, என்றார் அகமது.
இசுலாமியர்கள் மீது பா.ஜ.க மற்றும் சங்பரிவாரங்களின் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இசுலாமிய அமைப்புகள் ’முஸ்லிம் சேவாசங்காதன்’ என்ற அமைப்பு மூலம் டெஹ்ராடூனில் ஜூன் 18 ஆம் தேதி மகாபஞ்சாயத்துக்கு அழைப்புவிடுத்தன. மாவட்ட நிர்வாகம் ஜீன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த மகாபஞ்சாயத்தைத் தடுக்க இந்திய அளவில் அழுத்தம் ஏற்பட்டது. ஆனால், சங்பரிவாரங்கள் ஒப்புக்கொள்ளாததையடுத்து, மகாபஞ்சாயத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு ஜுன் 14 முதல் ஜீன் 19 வரை 144 தடையுத்தரவு மாவட்ட நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்டது. ஜீன் 15 அன்று, புரோலாவுக்கு 18 கீலோமீட்டர் தொலைவிலேயே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து காவல் பணிகளில் ஈடுபட்டனர்.
தடுப்பை மீறி நுழைய முயன்றதாக 19 பேர் மீது வழக்கும் தொடரப்பட்டது. புரோலா வியாபார் மண்டலின் வேண்டுகோளையொட்டி, புரோலாவில் கடையடைப்பு நடத்தப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பையும் மீறி மகாபஞ்சாயத்து நடைபெறவிருந்த மைதானத்தை அடைந்த வி.எச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் கைதுசெய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பிறகு காவல்துறையின் பாதுகாப்புடன் சில இஸ்லாமியர்கள் தங்கள் கடைகளைத் திறந்தனர்.
புரோலா மெல்ல மெல்ல தன் இயல்பை நோக்கித் திரும்பினாலும், பா.ஜ.கவும் அதன் பரிவாரங்களும் ஏற்படுத்திய பதற்றம் இன்னும் அங்கு தணியவில்லை.
இந்நிகழ்வு பற்றிப் பேசிய உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங்தாமி, காவல்துறை அதிகாரிகளிடம் வழக்குப் பற்றி விசாரித்ததாகவும், இந்த வழக்கு மட்டுமல்லாது, இதுபோன்ற அனைத்து வழக்குகளிலும் லவ்ஜிகாத்தில் ஈடுபட்ட நபர்கள்மீது தளர்வுகாட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
அம்மாநில பா.ஜ.க தலைவரான மகேந்திரபட் உத்தரகண்ட் மாநிலத்தை முஸ்லிம் மாநிலமாக மாற்ற நடக்கும் முயற்சிகளை இந்த அரசு தடுக்கும் என்று தெரிவித்தார்.
எதிர்கட்சியான காங்கிரசோ, 2024 மக்களவை தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் இப்போதிருந்தே பா.ஜ.க பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகிறது.
லவ்ஜிகாத் மட்டுமல்லாது லாண்ட் ஜிகாத் அல்லது மசார்ஜிகாத் (நிலஆக்கிரமிப்பு) என்ற பெயரிலும் பொது சிவில் சட்டம் இயற்றும் முயற்சியிலும் உத்தரகண்ட் அரசு முனைப்புடன் இசுலாமியர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது.
புரோலாவில் கடத்தல் சம்பவம் நடைபெற்ற அதேநாளில் ஹரித்வாரில் வி.எச்.பி அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட கேந்திரிய மர்காதர்ஷாக் என்ற நிகழ்வில் கலந்துகொண்ட உத்தரகண்ட் முதலமைச்சர் தாமி, இரண்டு நாடுகளுடன் எல்லையைப் பகிரும் உத்தரகண்ட் மாநில எல்லைப்பகுதியில் பொதுஇடங்களையும் வனப்பகுதிகளையும் ஆக்கிரமித்து ஒருகுறிப்பிட்ட சமூகம் பலமசார்கள் (சமாதிகள்) கட்டியுள்ளதாகவும், அவற்றை எந்த தயவு தாட்சன்யமுமின்றி தனது அரசு அப்புறப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 2022 ஆம்ஆண்டு முதல் உருவாக்கப்பட்டுவரும் பொதுசிவில் சட்டம் முழுமைபெறும் நிலையில் இருப்பதாகவும் அது விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் ’லவ்ஜிகாத்’, ’மசார்ஜிகாத்’போன்று வெற்று வார்த்தகளைப் பயன்படுத்தி, தற்செயலாகவும் தனித்தும் நடக்கும் குற்றங்களை இணைத்தும் திரித்தும்அவற்றை இசுலாமியர்களுக்கெதிரான வெறுப்புப் பரப்புரையாக மாற்றி அவர்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் துரிதமாக செயல்பட்டுவருகிறது.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.கவின் வெறுப்புப் பரப்புரைகளும், அதன் வன்முறை வெறியாட்டங்களும் சிறுபான்மையினருக்கெதிராக அதிகரிக்கவே செய்யும். அதனை முறியடிக்க வேண்டியது சனநாயக சக்திகளின் கடமையாகும்.
https://www.drishtiias.com/daily-updates/daily-news-analysis/uniform-civil-code-in-uttrakhand