இராமநவமி ஊர்வலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். வன்முறை! விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் தேசியத்தின் பின்னால் ஒளியும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்! – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை

12 Apr 2023

குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கை அம்பலப்படுத்திய பிபிசி காணொளிக்கும் அதானியின் மோசடிகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் நீதித்துறையை மோடி அரசு வளைக்க முயல்வதற்கு எதிராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்த விமர்சனத்திற்கும் உரிய வகையில் முகம் கொடுக்காமல் ’தேசத்தின் மீதான தாக்குதல்’ என்று சொல்லி தேசியத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது ஒன்றிய பாசக அரசு. அதுபோலவே, இராம நவமி ஊர்வலங்களில் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எ.ஸ்.எஸ். நடத்திய வன்முறைகளைக் கண்டித்து எழும் விமர்சனங்களையும் தேசியத்தை சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் பாசிச பாசக அரசுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் இராம நவமி ஊர்வலங்களில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறைகளை சங்க பரிவார அமைப்புகள் கட்டவிழ்த்துள்ளன.  மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், தெலங்கானா, கர்நாடகா, சம்மு காசுமீர், பீகார், மேற்குவங்கம் என நாடெங்கும் இசுலாமியர் எதிர்ப்பு வன்முறைகளைச் செய்து காட்டியுள்ளன சங்க பரிவார அமைப்புகள்.  

மார்ச் 31 ஆம் நாள் அன்று பீகாரில் ரோடாசு மாவட்டத்தில் உள்ள சாசரமிலும் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பீகார் சரிஃபிலும் குறிப்பிடத்தக்க மோதலும் கல்வீச்சும் நடைபெற்றது. பீகார் சரிஃபில் மசூதி ஒன்று தாக்கப்பட்டு தீயிடப்பட்டது.

இராம நவமி ஊர்வலத்தில் சுமார் 1000 பேர் அடங்கிய கும்பலால், பீகார் சரிஃபில் உள்ள புகழ்பெற்ற மதராசா அசிசியா மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அங்கிருந்த இமாமும் கல்லடிக்கு ஆளாகியுள்ளார். அங்கிருந்த 110 ஆண்டுகள் பழமையான நூலகம் எரிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த 4500 புத்தகங்கள் எரிந்து நாசமாயின. இது நமக்கு 1983 ஆம் ஆண்டு ஜூலை திங்களில் சிங்கள பெளத்த பேரினவாதிகள் யாழ் நூலகத்தை எரித்ததை நினைவுப்படுத்துகிறது. சாசரமில் இசுலாமியர்களின் விடுதிகள், கடைகள் தீயிடப்பட்டுள்ளன. வண்டி வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. சாசரமில் 144 தடை உத்தரவு போடும் அளவுக்கு அடுத்த அடுத்த நாட்களும் பதற்றம் நிறைந்ததாக இருந்துள்ளது. பீகாரில் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பக்ரி சிற்றூரில் ஓர் இசுலாமிய இளைஞரும் பெண்ணும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் அளவுக்கு தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஈடுபட்டவர்கள் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மேற்படி அனைத்து தாக்குதலின் போதும் இந்துத்துவக் கும்பல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை எழுப்பியுள்ளது.

மேற்குவங்கத்தில் அவுராவில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை நடந்துள்ளது. ஊர்வலங்களில் இராமனின் மிகப் பெரிய கட் அவுட்கள், வாள், திரிசூலம், தடிகள், துப்பாக்கி, புல்டோசர், பேரிரைச்சலை எழுப்பக்கூடிய மேள தாளங்கள் ஆகியவற்றோடு சங்க பரிவார சக்திகள் சென்றுள்ளன. வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன, காவல்துறை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் தல்கோலா நகரில் உத்தர் தினஜ்பூர் என்ற பகுதியில் வன்முறை வெடித்தது. காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். வன்முறை நடந்த பொழுது இசுலாமியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  இங்கும் கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து கலவரக்காரர்களை அழைத்து வந்து பாசக கலவரங்களைச் செய்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மராட்டியத்தில் மார்ச் 28 அன்றே ஜல்கோன் மாவட்டத்தில் வன்முறை வெடித்துவிட்டது. மசூதியின் முன்பு சத்தமாகப் பாட்டு வைத்துக் கொண்டு சென்றதால் இரு தரப்புக்கு இடையே மோதலாக வெடித்து இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல், முன்னாளைய அவுரங்கபாத்திலும் ( இப்போது சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது) மார்ச் 30 அன்று இரு தரப்புக்கு இடையிலான கலவரம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம்.கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் இம்தியாசு ஜலீல் அங்குள்ள புகழ்ப்பெற்ற இராமர் கோயிலை தாக்கிவிட்டதாகவும் கோயிலுக்குள் இருந்த இந்துக்கள் காயம்பட்டுவிட்டதாகவும் புரளி பரப்பப்பட்டது. அவர் அதை மறுத்து ஒரு காணொளியை வெளியிட்டார். ஆனாலும் இதையொட்டி எழுந்ததாக சொல்லப்படும் பதற்றத்தில் இசுலாமியர்களுக்கு ஆத்திரம் ஊட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டு கல்வீச்சு நடத்தப்பட்டது. வண்டி வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டு வீசி காவல்துறை கட்டுப்படுத்த முனைந்துள்ளது. இதில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தன்னுடைய அடுக்கக வாயிலில் பூட்டிய கதவுக்கு முன்பு நின்று பார்த்துக் கொண்டிருந்த 45 அகவை கொண்ட முனிருதீன் சேக் என்பவர் கொல்லப்பட்டார். ஆனால், காவல்துறையால் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது மகளுக்கு ரமலான் முடிந்த கையோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியுள்ளார். காவல்துறை ஒருபக்க சார்பாக புலனாய்வு செய்வதாக இசுலாமியர்களிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

ஏப்ரல் 2 அன்று சிவசேனா, தேசியவாத காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்துவதாக திட்டமிட்டிருந்த ஊர்வலத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்த வன்முறைகள் நடத்தப்பட்டுள்ளன என்று அவை குற்றஞ்சாட்டியுள்ளன.   

குஜராத்தில் உள்ள வடோடராவில் இராம நவமிக்கு அடுத்த நாள் நடக்கும் சோபா யாத்திரையின் போது இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றது. வழக்கமான பாதையில் செல்லாமல் இசுலாமியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஒரு மசூதிக்கு முன்பு நின்று பேரிரைச்சல் கொண்ட மேள தாளங்களை அடித்தும் முழக்கமிட்டும் இசுலாமியர்களுக்கு ஆத்திரம் ஊட்டினர். அதை தொடர்ந்து அங்கு கல்வீச்சும் நடைபெற்றது. விசுவ இந்து பரிசத்தை சேர்ந்த யாரையாவது காவல்துறை கைது செய்யுமாயின் மீண்டுமொரு ’2002 ஐ’ நிகழ்த்தி காட்டுவோம் என ரவுசன் குமார் ஷா என்பவர் பேசினார். அவரது பேச்சுதான் ஊர்வலம் சென்றோரை தூண்டிவிட்டது என்று சொல்லப்படுகிறது. காவல்துறையோ 500 – 600 பேர் மேல் முதல் தகவல் அறிக்கை பதிவிட்டுள்ளது. ஆனால், அதில் பெயரிடப்பட்ட 45 பேரும் இசுலாமியர்கள். அதில் ஐந்து பேர் பெண்கள். ஒருபக்கம் காவல்துறையின் கைது நடவடிக்கை. இன்னொரு பக்கம் இந்துத்துவக் குண்டர்களின் மிரட்டல் என குஜராத் மக்கள் மீண்டுமொரு ’2002’ நடந்தேறிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.

ஐதராபாத்திலும் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை நடந்தேறியுள்ளது. இராம நவமி ஊர்வலத்தில் பாசகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ராஜா சிங் கோட்சேவின் படத்தைக் கையில் ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அதேபோல், ஊர்வலத்தில் பங்குபெற்ற பலரும் கோட்சேவின் படத்தைக் கையில் ஏந்தியிருந்தனர். சம்மு காசுமீர் மாநிலத்தில் சம்மு பகுதியில் நடந்த ஊர்வலத்தின் போது ”இந்த நாட்டை இந்து தேசமாக உருவாக்குவோம்” என உறுதிமொழி ஏற்கப்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் நடந்த ஊர்வலத்தில் ஜமா மசூதி மேல் ஏறி காவிக் கொடியைப் பறக்கவிட்டனர். இந்த காணொளி இணையத்தில் வெகுவாக பரவியதால் சமூகப் பதற்றம் ஏற்பட்டது. ஊர்வலம் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் காவல்துறை முன்னிலையில் ஊர்வலம் முடிக்கப்பட்டது. தில்லியில் இராம நவமி நிகழ்வை ஒரு பூங்காவில் நடத்துவதற்கு அகில பாரதிய இந்து யுவ மோர்ச்சா  என்ற அமைப்பு அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிகழ்வில் பஜ்ரங் தள் அமைப்பும் இந்து சேனா அமைப்பும் கலந்துகொள்வதாக இருந்தது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், ஜகாங்கிர்புரியில் உள்ள பூங்காவில் இருந்து நூறு மீட்டருக்கு ஊர்வலம் சென்று காவி உடையணிந்த கும்பல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இப்படி நாடெங்கும் இராம நவமி நிகழ்வின் வாயிலாக பதற்றத்தை ஏற்படுத்தின சங்க பரிவார அமைப்புகள். இதை பயன்படுத்திக் கொண்டு நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசையும் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசையும் வம்பிழுக்கும் வேலையை உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தார். தாங்கள் ஆட்சியில் இருந்தால் கலவரம் செய்பவர்களை தலைகீழாக தொங்கவிட்டிருப்போம் என்று அமித் ஷா பேசினார். போதாக்குறைக்கு மேற்குவங்க ஆளுநரும் மம்தா அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொண்டார். திரினாமுல் காங்கிரசில் இருந்து கட்சித் தாவி பாசகவுக்கு சென்ற சுவேந்து அதிகாரியோ இராம நவமி வன்முறைகள் மீதான விசாரணையை என்.ஐ.ஏ. வுக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினார்.

 கடந்த மார்ச் 25 ஆம் நாள் குடிமக்கள்  மற்றும் வழக்கறிஞர் முன்னெடுப்பு ( Citizens and Lawyers initiative) என்ற அமைப்பு 2022 ஆம் ஆண்டு இராம நவமி ஊர்வலங்களிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களிலும் இசுலாமியர்களுக்கு எதிராக சங்க பரிவார அமைப்புகள் நடத்திய வன்முறைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இது போன்ற கலவரங்களைத் தூண்டும் நோக்கிலேயே சங்க பரிவார அமைப்புகள் இசுலாமியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளின் வழியாக ஊர்வலம் செல்வதற்கு அனுமதி கோருகின்றனர். இது ஒரு பொதுப் போக்காகவே இருந்து வருகிறது. இதன் மூலம் மசூதியின்  முன் நின்று பேரிரைச்சலுடன் பாட்டு வைப்பது, முழக்கமிடுவது, கல்லெறிவது என்று வன்முறையைத் தூண்டுகின்றனர். இந்துராஷ்டிரம் அமைப்பது பற்றியும் அதில் இசுலாமியர்களின் நிலைப் பற்றியும் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தியும் முழக்கமிடுகின்றனர். இந்த வன்முறைகள் அமைப்புசார் தன்மையிலானவை – தூண்டும் விதம், பெரும்பான்மையினரை அணிதிரட்டும் உத்தி, நிர்வாகத்தின் எதிர்வினையாக கூட்டு தண்டனை என எல்லாவற்றிலும் ஒரு பொதுத்தன்மை இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இதற்கு எதிர்வினை ஆற்றக்கூடிய இசுலாமியர்கள் மீது பழியைப் போட்டு தப்பித்து கொள்வது என்பது நடந்து வருகிறது. இந்த ஊர்வலங்களில் வாள், திரிசூலம், தடி, கத்தி, துப்பாக்கி ஆகியவற்றை எடுத்துச் செல்கின்றனர். சிவ ஜெயந்தி, விநாயகர் ஊர்வலம், இராம நவமி, அனுமன் ஜெயந்தி, ராம்சீலா ஊர்வலம் என எல்லா விழாக்களையும் வன்முறையைத் தூண்டுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த அறிக்கைக்கு முன்னுரை எழுதிய முன்னாள் நீதியரசர் ரோகிங்டன் நாரிமன், “ ‘ இந்தியாவில் உள்ள இசுலாயியர்களும் இந்தியர்களே’ என்ற உணர்வை காவல்துறையினருக்கு ஊட்ட வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.    

 கடந்த காலத்தில் நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்துப் புலனாய்வு செய்ய ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இப்போதோ ஊர்வலங்கள் நடக்கும் போது அதற்கு இடையூறு என்றறியப்படும் வீடுகள், கடைகளை இடித்துத்தள்ளுவதற்கு அரசாங்கத்தின் புல்டோசர்களும் வருகின்றன. நகராட்சி நிர்வாகம் சட்டப்புறம்பான கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் என்று சொல்லி இசுலாமியர்களின் கட்டிடங்களை இடித்து தள்ளிவிடுகின்றன என்று அறிக்கை கவலை கொள்கிறது.

இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவதில்லை. குற்றங்களுக்கு தண்டனையின்மை என்பது ஒரு பண்பாடாக மாறிப்போய்க் கொண்டிருக்கிறது. இந்தாண்டு இராம நவமி வன்முறைகள் நடந்து கொண்டிருக்கும்போது  இரு தீர்ப்புகள் வெளிவந்தன. ஒன்று குஜராத்திலும் மற்றையது உத்தர பிரதேசத்திலும் ஆகும்.

குஜராத் வன்முறைகளில் ஈடுபட்டு காந்திநகர் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரத்தில் 13 இசுலாமியர்கள் கொல்லப்பட்டமை, ஓர் இசுலாமியப் பெண் கூட்டு வன்புணர்வு, மசூதி இடிப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 39 பேரில் 12 பேர் இறந்துவிட்டனர், எஞ்சிய 27 பேரை ’போதிய சான்றுகள் இல்லை’ என்று வழக்கிலிருந்து விடுவித்தது குஜராத்தில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம். இந்த தீர்ப்பு மார்ச் 31 ஆம் நாள் அன்று வெளிவந்தது. 

அதேபோல், உத்தரபிரதேசத்தில் 1987 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று மீரட் மாவட்டத்தில் உள்ள மலைனா என்ற சிறுநகரில் இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் 72 பேர் கொல்லப்பட்டனர். மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 93 பேரில் 40 பேர் இறந்துவிட்டனர், சிலர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை, எஞ்சிய 40 பேரது  ’குற்றத்தை மெய்ப்பிக்க போதிய சான்றுகள் இல்லை’ என்ற அடிப்படையில் ஏப்ரல் 1 ஆம் நாள் அன்று மீரட் மாவட்ட நீதிமன்றத்தால் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த கால வன்முறைகளைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவது சங்க பரிவார சக்திகளை இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட ஊக்குவிப்பதற்கு ஒப்பானதாகும். எத்தகைய கொடிய குற்றங்களை செய்தாலும் புலனாய்வு துறையும் நீதித் துறையும் தம்மை விடுவித்து விடும் என்ற நம்பிக்கையை ஒன்றிய பாசக அரசு வழங்கி வருகிறது.  

உள்நாட்டில் புலனாய்வு துறை, நீதி துறை, ஆட்சி நிர்வாகம் ஆகியவை தோற்றுப் போய் இசுலாமியர்களுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாமல் இருக்கும் சூழலில் வெளிநாடுகளில் இருந்து கண்டனங்கள் எழுகின்றன.  57 உறுப்பு நாடுகளைக் கொண்ட இசுலாமிய கூட்டுறவுக்கான அமைப்பு ( Organisation of Islamic Cooperation) இராம நவமி வன்முறைகளைச் சுட்டிக்காட்டி இது விரும்பத்தகாதது. என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக நூறாண்டு பழமையான மதராசாவையும் நூலகத்தையும் இந்துத்துவ கும்பல் எரித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டு இவை இந்தியாவில் இசுலாமிய வெறுப்புவாதமும் இசுலாமிய சமூகம் அமைப்புவகையில் குறிவைக்கப்படுவதும் அதிகரித்துக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு என்கிறது அறிக்கை. மேலும் குற்றமிழைத்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு இசுலாமிய சமூகத்தின் பாதுகாப்பையும் நலனையும் உரிமையையும் கண்ணியத்தையும் உறுதி செய்யுமாறு இந்திய அரசுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.

 உடனே, இசுலாமிய கூட்டுறவுக்கான ஒத்துழைப்பை சாடியுள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம். அவர்களுடைய வகுப்புவாத மனநிலைக்கும் இந்திய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு இதுவொரு எடுத்துக்காட்டாம். இந்திய எதிர்ப்பு சக்திளால் தொடர்ச்சியாக குழப்பபடுவதால் இசுலாமிய கூட்டுறவுக்கான ஒத்துழைப்பு தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்கிறதாம். ஒன்றிய பாசக அரசு இசுலாமிய கூட்டுறவுக்கான ஒத்துழைப்பின் அறிக்கைக்கு எதிர்வினையாக அவ்வமைப்பை ஒன்றிய பாசக அரசு கண்டித்திருப்பதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கண்டிக்கிறேன்.

இசுலாமியர்களுக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட ஒரே தன்மையிலான வன்முறைகள், அந்த வன்முறைக் குற்றங்களை செய்தவர்களுக்கு எவ்வித தண்டனையுமில்லை என்ற பண்பாடு, வரக்கூடிய கண்டனங்கள், எதிர்ப்புகளை தேசத்திற்கு எதிரானதாக சித்திரிக்கும் உத்தி. இதுதான் இப்போது நம் நாட்டில் நடந்துவருகிறது.

ஒரு பகுதியில் பண்டிகைகளின் பெயரால் ஊர்வலங்களை நடத்தி அதன்மூலம் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறையை நடத்தி இந்து – இசுலாமியர் என மக்களைப் பிளவுபடுத்தி இந்துக்களின் வாக்குகளைப் பெருக்கிக் கொள்வதில் எப்போதும் பாசக வெற்றிப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் ஏதாவது ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி அத்தகைய வன்முறைகளைத் தூண்டிவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டு மக்கள் வடக்கே நடந்த வன்முறைகளில் இருந்து பாடங் கற்று, சங்க பரிவார அமைப்புகளைத் தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிக்க துணிய வேண்டும், பாசகவை தனிமைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக அறைகூவல் விடுக்கிறேன்.   

தோழமையுடன்,

மீ.த. பாண்டியன்,

தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தொடர்புக்கு: 9443184051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW