முன்னாள் நீதிபதி இராமராஜ் கைது! சிறை! அநீதிக்கு கண்டனம்! – மீ.த.பாண்டியன்

13 Jan 2023

முன்னாள் நீதிபதி இராமராஜ் நிலஉரிமைக்கான போராட்டத்தில் குற்றாலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நீதிபதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், காவல்துறையின் அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருபவர் என்பதாலும் காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். 2016இல் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் படுகொலைக்கு உள்ளான ஐடீ பணியாளர் வழக்கில் சம்பந்தமில்லாமல் கைது செய்யப்பட்ட மள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இராம்குமார் புழல் சிறையில் கொல்லப்பட்டார். சிறைக்குள்ளே மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகச் சித்தரிக்கப்பட்டார். இது பொய்யான சித்தரிப்பு, சிறைக் காவலர்களால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பதை விளக்கித் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் முன்னாள் நீதிபதி இராமராஜ். ஒரு பார்ப்பன நீதிபதிக்கு இது போல் நடக்குமா?

நிலப்பிரச்சனைக்காகப் போராடினால் விசாரிக்கலாம். பொய்வழக்கில் கைது செய்வது மதுரை, செக்காணூரணி காவல்நிலையமாகவிருந்தாலும், நெல்லை – தென்காசி காவல்நிலையமாகவிருந்தாலும் ஒடுக்கப்படும் பட்டியல் சமூக மக்கள் மீது பொய்வழக்குப் போடுவது இன்றும் தொடர்கிறது.

நீதிபதி மீதே பொய்வழக்கு சித்ரவதை, சிறை என்றால் சாதாரண வேளாண்குடி மக்களின் நிலையோ பரிதாபம். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மோதி வளர்ந்த நெல்லை – தென்காசி மாவட்டங்களிலுள்ள காவல்நிலையங்கள் படுமோசமான சாதிய மனோபாவம் கொண்டவர்களாக உள்ளனர்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாததாக காவல் நிலையங்களின் நிலை மாறாததாக உள்ளது.தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சீர்திருத்த, மாற்றியமைக்க முயல வேண்டும். போராடும் மக்கள் இயக்கத் தலைவர்கள் முன்னாள் நீதிபதி இராமராஜ் அவர்கள் மீதான வன்செயலை, கைதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். சிறையிலிருந்து நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்த வேண்டும்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW