புதுக்கோட்டை, அன்னவாசல் வட்டம், முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் – இறையூரில் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சாதிவெறியர்களைக் கைது செய்!
மீ.த.பாண்டியன்

29 Dec 2022

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் வேங்கைவயல் – இறையூரில் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலத்தைக் கலந்த கொடுஞ்செயலை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. நேருக்கு நேர் மோதமுடியாத கோழைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

நேரடியாக கிராமத்திற்குச் சென்று விசாரித்ததோடல்லாமல், நேரடியாகக் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா மற்றும் காவல்துறைத் தலைவரைப் பாராட்டுகிறோம். மூன்று தலைமுறையாக அங்கிருக்கும் அய்யனார் கோவிலுக்குள் பட்டியல் சாதி மக்கள் செல்ல அனுமதியில்லை என்பதைக் கேட்ட ஆட்சியர் கோவிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். வழிபாடு முடித்துத் திரும்பிய பட்டியல் சாதி மக்கள், ஆட்சியர், அதிகாரிகள் முன்பு ஊரில் ஆதிக்கம் செய்யும் சாதிப் பெண்மணி சிங்கம்மாள் என்பவர் சாமியாடுவது போல் நடித்து ‘ எச்சக்கலை நாய்கள் ‘ என விமர்சித்துள்ளார். ஊரில் உள்ள டீக்கடையில் இரட்டை டம்ளர் கடைப்பிடிப்பதைக் கேள்விப்பட்ட ஆட்சியர் மூக்கையா என்பவரையும், சாமியாடி சிங்கம்மாளையும் எஸ் சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு வழக்கில் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் இருக்கும் போதே நெருக்கடியைச் சந்திக்கும் நிலையில் சாதிஆதிக்கம் தலைவிரித்தாடும் கிராமம் ஒன்றல்ல! மதுரை உசிலம்பட்டி,மேலூர் வட்டம் தொடங்கி சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சாதிய இறுக்கம் பல்வேறு வடிவங்களில் செயல்பட்டு வருகிறது.

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களின் நிர்வாகங்கள் அனைத்துக் கிராமங்களிலும் நிலவும் சனநாயகமற்ற சாதி ஆதிக்கத் தன்மைகளை ஆய்வு செய்து களைந்திட நடவடிக்கைககளை முன்னெடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரே! நீங்கள் வேங்கைவயலில் பார்த்த பட்டியல் சமூகத்தினரின் நிலையே புதுகை மாவட்ட அனைத்துக் கிராமங்களிலும் நிலவுகிறது. களைய நடவடிக்கைகள் தொடர வேண்டுகோள் விடுக்கிறோம். மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகள், பட்டியல் சமூக இயக்கங்கள், உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைக் கூட்டி உண்மை நிலவரத்தை சேகரித்து களைந்திட முயற்சியுங்கள். எஸ் சி & எஸ் டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கறாராக நடைமுறைப்படுத்துங்கள்.

சாதிவெறியுடன்,மதவெறியைப் பரப்பும் பாசக உள்ளிட்ட சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் வேங்கைவயல் பிரச்சினையில் வாய்திறக்கவில்லை.
தமிழ்நாடு அரசு சாதிவெறியர்களையும், சனாதனப் பார்ப்பனிய மதவெறியர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருபுறம் தமிழ்நாடு அரசின் கறாரான நடவடிக்கைகள் தொடர வேண்டிய அதேவேளை, சனாதனச் சாதி, மதவெறிக்கு எதிராக பெரியார், அம்பேத்கர், மார்க்சிய, தமிழ்த்தேசிய அமைப்புகளின் ஒன்றிணைந்த பணிகள் கிராமங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவேண்டும். உழைக்கும் தமிழர்களின் ஒற்றுமையைச் சாதிக்க வேண்டிய சவாலை எதிர்கொள்வோம்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 9443184051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW