தமஜக தலைமைக்கு பாராட்டும் தமிழ்நாடு அரசுக்கு கண்டனமும்! – மீ.த. பாண்டியன்
தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பதவி தேவையா? தேவையில்லையா?
வாக்கெடுப்பு. தமிழக மக்கள் சனநாயகக் கட்சி முன்னெடுப்பில் தமிழ்நாடு தழுவிய வகையில் 28-12-2022 நடத்த முறையாக அனுமதி கோரியுள்ளனர். தமஜக தலைமை முன்னெடுத்துள்ள நேற்றைய முயற்சியைப் பாராட்டுகிறேன்.
மதுரை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அனுமதி மறுப்பு. கைது!
திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அனுமதி!
எந்த அடிப்படையில் இது போல் தீர்மானிக்கப்படுகிறது. அங்கங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளின் விருப்பமா? தமிழ்நாடு அரசுக்கு பொதுவான அணுகுமுறை தேவை இல்லையா?
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு இணை அரசு நடத்தும் ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் இரவியின் காவி அரசியல் அடாவடித்தனம் வரைமுறையில்லாமல் அதிகமாகிக் கொண்டே போகிறது.
ஆளுநருக்கு எதிரான அதிருப்தியை தமிழ்நாட்டின் பொதுக் கருத்தாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது. ஆளுநரே வெளியேறு எனும் முழக்கம் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய முயற்சியை தமஜக முன்னெடுத்துள்ளது. அதனால்தான் அனுமதி மறுப்பா?
அனுமதி மறுப்பதற்கு, தடுப்பதற்கு மறியலோ, பெரிய போராட்ட அறிவிப்புகளோ இல்லை. சனநாயக ரீதியில் வாக்கெடுப்பு அறிவிப்பைத் தடுக்க வேண்டிய அவசியமென்ன? மாநில உரிமைகளுக்காக ஆளுநர் எதிர்ப்பை முன்னெடுக்கும் முயற்சிகளைத் தடுப்பது சனநாயக விரோதச் செயலாகும்.
கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 29-12-2022 கவர்னரை வெளியேற வலியுறுத்தி பேரணி போராட்டம் நடைபெறுகிறது. …மக்கள் இயக்கங்கள் கண்டனம் தெரிவிப்பதுடன் ஆளுநரை திருப்பி அழைக்க ஒன்றிய அரசை வலியுறுத்திப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனக் கோருகிறேன்…
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி