2020 இந்திய தேசிய புதிய கல்விக் கொள்கையும், ஏகபோக பன்னாட்டு சுரண்டலும் – சுரேஸ்

07 Dec 2022

மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு, தன் இரண்டாம் ஆட்சிகாலத்தில், தன் அகண்ட பாரத கனவை நனவாக்கும் முனைப்பில், வளரும் இளம் தலைமுறையினர் மத்தியில் காவிச் சிந்தனையை விதைக்கவும், ஏகபோக பன்னாhட்டு கார்பொரேட் சுரண்டலுக்கு ஏற்ற களமாக, இன்னும் வேகமான பாய்ச்சலான வளர்ச்சியை நோக்கி இந்தியத் துணைக் கண்டத்தை மாற்றும் முகமாக 2020 இந்திய தேசிய புதிய கல்விக் கொள்கையை முன்வைத்துள்ளது. மோடியின் பாசிச பாஜக அரசு, பதவி ஏற்றதில் இருந்து, ஒருபுறம், வரலாற்று புத்தகங்களை, இந்துத்துவ அரசியலுக்கு தகுந்தாற் போல திருத்துதலும், பிற்போக்கு இலக்கியங்களை அனைத்து கல்வி மட்டங்களிலும் நுழைப்பதும், நன்கு பயின்ற அறிவியற் புலத்தாரும் பண்டைய வேத இலக்கியங்களை அறிவு பொக்கிசமாக, புஸ்பக விமானம், விநாயகர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பெறப்பட்டவர் என்பது போன்ற இந்துத்துவ போலி அறிவியல் குப்பைகளை விதந்தோதுவதும் நடந்து வருகின்றது.

மறுபுறம், கல்வியை முழுவதுமாக மத்திய பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியும், கல்வியை முழுவதுமாக ஏகபோக பன்னாhட்டு சுரண்டலுக்கு திறந்து விடும் முகமாக, நாடாளுமன்றத்தில் தமக்குள்ள அசுர பலத்தைக் கொண்டு, விவாதங்களே இல்லாமல், பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மூலமாக,  உயர்கல்வி கமிசன் (HEC – Higher Education Commission), தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை (NRF – National Research Foundation), தேசிய தேர்வு முகமை (NTA – National Testing Agency), தேசிய கல்வித்தர நிர்ணய நிறுவனம் (NAC – National Assessment Center – PARAKH) தேசிய கல்வித் தொழில்நுட்ப பரிமாற்ற அரங்கம் (NETF – National Educational Technology Forum) தொழிற் சார்ந்த தரநிர்ணய வாரியம் (PSSB – Professional Standard Setting Board) ஆசிரியர்களுக்கான தேசிய தொழிற்சார் தரம் நிறுவனம் (NPST – National Professional Standards for Teachers) போன்ற நிறுவனங்களை உருவாக்கி வருகின்றது. அதாவது சத்தமே இல்லாமல் புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் கல்விக் கட்டணத்தை உயர்த்துவது, ஆசிரியர்களை ஒப்பந்த முறையில் மட்டுமே நியமிப்பது, கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் மற்றும் மானியங்களைக் குறைப்பது, ஆசிரியர்களின் வேலைப்பளு மற்றும் வேலை நேரத்தை அதிகரிப்பது, நிரந்தரமற்ற பணியிடம், ஆன்லைன் கல்வி முறை மற்றும் மதிப்பீட்டு முறை, CBCS (Choice based credit system) முறை போன்றவற்றை அமலாக்கம் செய்து, ஏகபோக பன்னாட்டு முதலாளிகளுக்கு லாபத்தை அதிகரிக்க முடியும்.

காட்ஸ் (GATS) ஒப்பந்தமும், ஏகபோக பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளின் கூட்டிணைவும்:

காட்ஸ் (GATS – General Agreement on Trade and Services) என்பது உலக வர்த்தக மையத்தால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு சந்தைகளில், அந்தந்த நாடுகளின் அரசுகளின் கொள்கை மற்றும் பொருளாதார இறையாண்மையின் பொருட்டு, ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களை, உலகு தழுவிய தாராளவாத சந்தைப்படுத்துதலுக்கான தடைகளாகக் கருதி, அந்த நாடுகளை தன் வல்லாதிக்க பொறியமைவு மூலம் மிரட்டி, தாராளவாத சந்தைக்குத் தக்க அந்நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மாற்றச் செய்வதற்கான, சேவைத்துறைக்கான ஓர் அமைப்பு ஆகும். டிசம்பர் 18, 2000 அன்று, உலக வர்த்தக மையத்தின் காட்ஸ் ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வெளியிட்ட அறிக்கையில் எவ்வாறு கல்வி என்னும் சேவைப்“பண்டத்தை”, தாராளவாதச்சந்தையில் வர்த்தகம் செய்வது என்பதை விளக்குகின்றது. அதாவது அந்த அறிக்கை உலகளாவிய கல்விச்சந்தையின் ஏகபோக வளர்ச்சியின் எதிர்கால திசைவழியை சுட்டிக்காட்டுகின்றது. “கல்விச்சந்தை தாராளமயமாக்குதல் என்பது உலகச்சந்தையின் வளர்ச்சிக்கு மிகுந்த அவசியம் வாய்ந்தது. இதுவரை கல்லுhரிகளில், பாலிடெக்னிக்குகளில், தொழிற்பயிலகங்களில், தொழிற்கூடங்களில் அளித்து வந்த படிப்புகள் அப்படியே தொடரட்டும். அவற்றுடன், (1) கல்விப் புலங்களில் அளிக்கப்பட்டு வரும் ’தத்துவ ரீதியிலான பயிற்சியைக் குறைத்து “பணி”க்குத் தேவைப்படக்கூடிய பயிற்சியை மட்டும் அளித்தல்’ (2) மாணவர்களின் திறன்களையும், பாடத்திற்கான மூலப் புத்தகங்கள் மற்றும் பாடத் துணைவன் மற்றும் குறிப்புப்புத்தகங்களின் (Text books and Course Materials) தரத்தையும் சோதித்தல் (3) மாணவர் (அ) தொழில் பயில்பவர்களுக்கான தேர்வுகளை வடிவமைப்பது, தேர்வுகளை நடத்துவது, தேர்வு முடிவுகளின் மூலம் தரம் பிரிப்பது போன்ற கல்விரீதியிலான தேர்வுச் சேவைகளை வழங்குவது – போன்ற அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றது” என்கிறது அந்த அறிக்கை.

இந்திய ஒன்றிய அரசு, கடந்த 1996ம் ஆண்டே காட்ஸ் ஒப்பந்தத்தில் இணைந்திருந்தாலும், 2005 ஆகஸ்ட் 24 அன்று தான் தன் சக உறுப்பினர்களின் மத்தியில் “கல்விச்சேவை”க்கான காட்ஸ் ஒப்பந்தப்படியான சந்தை அனுமதிகளுக்கான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. காட்ஸ் படி கல்விச்சேவையை நான்கு முறைகளில் தன் சக உறுப்பு நாடுகளுக்கு அளிக்கவோ/பெற்றுக்கொள்ளவோ முடியும். அவை 1. தொலைதுhர ஆன்லைன் கல்வி முறை 2. சக உறுப்பு நாடுகளுக்கு மாணவர்களை கல்வி கற்க அனுப்பும் முறை 3. சக உறுப்பு நாட்டு கல்வி நிறுவனக் கிளைகளை தம் நாட்டில் துவக்க அனுமதிக்கும் முறை 4. தம் நாட்டு ஆசிரியர்களை சக உறுப்பு நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் முறை. இந்தியா மேற்கண்ட முதல் மூன்று முறைகளுக்கும், எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, ‘தன் சொந்த நாட்டு நிறுவனங்களை வளர்க்கும் பொருட்டு எவ்வித சட்டங்களோ, விதிகளோ விதிக்கக்கூடாது’ (National Treatment) என்ற அடிமைசாசனத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் 1 மற்றும் 3ம் முறையில் வெளிநாட்டு கல்விச்சேவை நிறுவனங்கள் இந்திய சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை.

காட்ஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து,  இந்திய பெருமுதலாளிகள் இந்தியாவிலுள்ள அந்நிய நேரடி முதலீட்டு நடைமுறைகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தச் சொல்லி முறையிட்டு வருகின்றன. 2005லேயே வாஜ்பேயி அரசு, இந்தியக் கல்வியில் தனியார் பங்கேற்ப்பை அதிகரிப்பது மற்றும் அந்நிய மூலதனத்தை கல்வித்துறையில் அனுமதிப்பது மற்றும் அதை சட்டப்பூ  ர்வமாக்குவது என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட அம்பானி – பிர்லா என்ற இரு முதலாளிகளைக் கொண்ட கமிட்டி மற்ற பெருமுதலாளிகளின் குழாம்கள் கொண்ட விருப்பங்களை முன்சொன்னது. 2006ம் ஆண்டே இந்திய பெருமுதலாளிகளின் குழாமான FCCI (Federation of Indian Chambers of Commerce) கல்வித்துறையிலான வர்த்தகம் முழுவதும் அமெரிக்காவுடன் மட்டுமே மிகநெருக்கமாக அமைய வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்து விட்டது. மற்றொரு இந்திய தேசிய முதலாளிகளின் குழாமான ASSOCHAM (Associated Chambers of Commerce and Industry in India) நவம்பர் 2, 2006 அன்று மாணவர் மற்றும் ஆசிரியர் நலன் பற்றி எந்த கவலையும் இல்லாமல் கல்விக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம் பல்கலைக்கழகங்கள் தங்களுக்குத் தேவையான வசதிகளை மிகக்குறைந்த விலையில் பெற்றுக் கொண்டு, கொள்ளை லாபத்தை வாரிச்சுருட்டலாம் என்றும், ஆசிரியர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைப்படியான சம்பள விகிதங்களை விட்டுவிட்டு, வித்தியாசப்படுத்தப்பட்ட சம்பள விகிதங்களை (Differential Salary Structure) அறிமுகப்படுத்துதல், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்கும் படியான சட்டபூர்வ வழிகளை அமைத்தல் போன்ற அந்நிய மூலதனத்திற்கு கல்விச்சந்தையைத் திறந்து விடும் பொருட்டு, புதிய சட்டமியற்றும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகின்றன.

ஏகபோக பன்னாட்டு சுரண்டலுக்கான நிறுவனமயப்படுத்துதல்:

காட்ஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விதமாகவும், சர்வதேச ஏகபோக பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்திய பெருமுதலாளிகளுக்கும் இந்திய கல்விச்சந்தையை திறந்துவிடும் முயற்சியே புதிய தேசிய கல்விக்கொள்கை 2020 ஆகும். ஆனால், அரசாங்கத்தின் கைகளில் இருக்க வேண்டிய கல்வி, தனியார் கைகளில் அளிப்பதற்கான, சட்டப்பூர்வ, நிறுவனமயப்பட்ட வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடைமுறைகள், 1970களிலேயே தொடங்கிவிட்டன. இந்திய ஒன்றியம் சுதந்திரம் பெற்ற போது, பொருளாதார ரீதியிலான சுதந்திரத்தை (வேகமான முதலாளிய வளர்ச்சி) பெறுவதற்கான கல்விக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பொருட்டு மானியங்கள் வழங்குவதற்காகவும், உயர்கல்வி நிறுவனங்களை முறைப்படுத்தவும், 1956ல் பல்கலைக்கழக மானியக் குழு ஏற்படுத்தப்பட்டது. மானியங்கள் வழங்கப்பட்டதன் நோக்கம், நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகுவதற்கு தேவையான டெக்னிக்கல் கல்வி நிறுவனங்களையும், ஆராய்ச்சி நிறுவனங்களையும் உருவாக்குவதாகும். ஆனால், மக்களின் அறிவு வளர்ச்சிக்கோ, சமூக வளர்ச்சிக்குத் தேவையான இலவச, கட்டாயக்கல்வி குறித்த அக்கறை முதலாளிகளுக்கு இல்லை. இந்திய ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற எந்த அரசும் பல்கலைக்கழகங்களில், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான திட்டத்துடன் செயல்படாததால், 1960களின் முற்பகுதியில் அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம், ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நெருக்கடியைத் தொடர்ந்து, கல்வித்துறையை மறுசீரமைக்க 1964ல் கோத்தாரி கமிட்டி அமைக்கப்பட்டது. அது, மக்களின் ஜனநாயகக் கோரிக்கையான இலவச, கட்டாயக்கல்வியை வலியுறுத்திய அதே வேளை, அதன் பரிந்துரைகள் உயர்கல்வியில் பல்வேறு கட்டுப்பாடுகளை (பல்கலையில் இருக்கும் ஆய்வக, நூலக வசதி, நிதி வசதி பொறுத்து மாணவர்களை சேர்ப்பது, ஆராய்ச்சி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களை சார்ந்து இயங்குவது, தொழில்நுட்பக்கல்வி மற்றும் ஆராய்ச்சி தொழில்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருத்தல், சிறப்பு அந்தஸ்து பெற்ற நிறுவனங்களை (Centres of Excellence) நிறுவுதல், கல்விக்கு 6% GDP ஒதுக்குதல்) விதித்தது. ஆனால், அரசு, முதலாளித்துவ நலன்களை காக்கும் நோக்குடன், மேலே அழுத்தம் தரப்பட்டவற்றை மட்டும் நடைமுறைப்படுத்தியது. அதே போல, 1969ம் ஆண்டு உயர்கல்வி சீரமைப்பிற்காக அமைக்கப்பட்ட கன்ஹென்றகட்கர் கமிட்டி அளித்த  பரிந்துரைகளில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் செனட் உறுப்பினர் நியமனம் ஆகிய முதலாளிய நலம் சார்ந்தவற்றை மட்டும் அமல்படுத்தியது. அதன் மூலம் பெருமுதலாளிகள் பல்கலைக்கழகங்களின் முடிவெடுக்கும் அதிகாரங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர்.

1970களில் இந்திய பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது – ஆனால் இன்னும் செமஸ்டர் முறையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. செமஸ்டர் முறையை நடைமுறைப்படுத்த முதலாளியம் சொல்லும் காரணம் -மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக (6 மாதங்களுக்கு ஒருமுறை) மதிப்பீடு செய்து கொள்ள முடியும். உண்மையில் அதிகமான பாடங்களை இம்முறையில் கற்றுக் கொடுத்தாலும், மாணவர்களுக்கு இது அழுத்தத்தை தான் கொடுக்குமோ ஒழிய முதலாளியம் எதிர்பார்க்கும், 4Cகளான, விமர்சன சிந்தனை, துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்புத் திறன், படைப்பாற்றல், தொடர்புபடுத்தும் திறன் (Critical Thinking, Cooperation, Creativity, Communication) ஆகியவற்றை மாணவர் பெற முடியாமலேயே போகும். இந்த கற்றல் – கற்பிப்பு இடைவெளியை நிரப்ப தான் முதலாளியம், CBCS முறை திணிப்பை மேற்கொள்கிறது. விருப்பத்தேர்வு அடிப்படையிலான கிரெடிட் முறை – Choice Based Credit System (CBCS) – 2008 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் ஒரு படிப்பிற்கு விதிக்கப்பட்ட கிரெடிட் புள்ளிகளை, மாணவர் விருப்பப்பட்ட பல்வேறு வகைப்பட்ட துறைகளின் பாடங்களை மட்டும் கலந்து படித்து பெற வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கு பல்துறை விழிப்புணர்வு கிடைக்கலாம். ஆனால், அத்துறைகளில் 4C திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாது. போட்டித் தேர்வுகளுக்கு தேவைப்படக்கூடிய கணிதத் திறனும் வளராது. ஆனால் அவற்றிற்கும் முதலாளியம் பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்தி கல்லா கட்டுகின்றது.

7வது திட்டகமிசனிலிருந்தே (1985), உலகமயத்தையும், தனியார்மயத்தையும், தாராளவாதத்தையும் ஊக்குவிக்கும் விதமாக முதலாளிகளுக்கு வரிதள்ளுபடிகள் அளிக்கத் துவங்கியதிலிருந்து, அரசு கல்விக்கு அளித்துவந்த நிதியை குறைக்கத் துவங்கிவிட்டது. ஏனெனில், இந்திய முதலாளி வர்க்கம், சர்வதேசிய முதலாளிகளாக மாறுவதற்கு தேவையான மூலதனத்தை திரட்ட தேவையான ஏற்றுமதியை அதிகரிக்கத் தேவை ஏற்பட்ட போது, அதற்கான உயர் தொழிற்நுட்பங்களில் (உருவாக்க அல்ல) வேலை செய்ய பயிற்றுவிக்கப்பட்ட ஆட்கள் தேவை. புதிய தொழில்நுட்பங்களை கற்பிக்க தேவையான தொழில்நுட்ப பாடத்திட்டமும், கற்பித்தல் முறைகளும், இந்திய சமூகத்திலிருந்த உயர்சாதியனருக்கே அளிக்கப்பட்டன. அதற்காகவே 60களில் தொடங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பெற்ற நிறுவனங்களும், தேசிய முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் பயன்பட்டன. இக்காலகட்டத்தில் ஆட்சிபுரிந்த வி.பி.சிங் தலைமையிலான அரசு, மண்டல் கமிசன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அளித்த சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையாலும் கூட, இன்று வரையிலும் ஐஐடி போன்ற நிறுவனங்களில் அனைத்து பிரிவு மக்களாலும் படிக்க முடிவதில்லை. 7வது திட்டகமிசன் அறிக்கையே, இந்திய முதலாளிகளின் சர்வதேசிய சந்தை ஆசைகளை நிறைவேற்ற, குறைந்தபட்சம் GDPயில் 8% ஆவது கல்விக்கு செலவிட வேண்டும் என்கின்றது. ஆனால் ஆளும் வர்க்கம், தன் தொழிற்சாலைகளுக்கு தேவையான நபர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்க தேவையான அளவுக்கு மட்டும், 7வது திட்டகமிசன் நிதி ஒதுக்கினால் போதும் என்றது. கூடுதலாக தொழிற்பயிற்சி பள்ளிகளை, தனியாரும் தொடங்கலாம் என 7வது திட்டக்கமிசன் அனுமதித்தது. மாடல் பள்ளிகள், ஐஐடி மற்றும் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற முன்னெடுப்புகள் உயர் வகுப்பாருக்கும் (மெரிட் அதாவது தகுதி, திறமை), திறந்தவெளி பல்கலைக்கழகங்கள், முறைசாரா கல்வி வழிகளான டிவி மற்றும் சேட்டிலைட் மூலம் அனைவருக்கும் கல்வி போன்ற முன்னெடுப்புகள் உழைக்கும் வர்க்கத்திற்கும் என பாகுபாடுகளை விதைத்தது முதலாளித்துவ அரசு. இதன் மூலம், பல்கலைக்கழகக்கழக பட்டம் அல்லது தொழில் பயிற்சி என்பது வேலையை உறுதி செய்யாது என்ற கருத்தை இந்திய சமூகத்தில் விதைத்துள்ளது.

இந்திய பொருளாதாரம் தனியார்மய, தாராளமய காலக்கட்டத்தில் 1995ம் ஆண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம் இயற்றப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் மாணவர் குறைவாக உள்ள, தேர்ச்சி குறைவாக உள்ள பள்ளிகளை தனியாரிடம் அந்தந்த மாநில அரசுகளே தாரை வார்க்கின்றன. 1996ல் உச்சநீதிமன்ற நீதிமன்றம் உன்னிக்கிருஷ்ணன் என்னும் வரலாற்றுப் புகழ் பெற்ற வழக்கில், 14 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச, கட்டாயக்கல்வி அளிக்க வேண்டியது அடிப்படை கடமை என தீர்ப்பளித்தது. ஆனால் அதன் நோக்கத்தை, மக்களின் நியாயமான ஜனநாயகக் கடமையை சீர்குலைக்கும் நோக்குடன், ஒன்றிய மோடி அரசு 2009ல் கல்வி உரிமைச்சட்டத்தை கொண்டுவந்தது. அதன் படி 9 முதல் 14 வயது குழந்தைகளுக்கு மட்டும் இலவச மற்றும் கட்டாயக்கல்வி அளிக்கப்படும் என்றும் அதிலும் கிராமப்புற மாணவர்கள் 25% மட்டும் இலவசக்கல்வி அளிக்க தனியார் கல்வி நிலையங்களில் அனுமதிக்க அரசு நிதியுதவி செய்யும் என்றும் மக்கள் ஜனநாயகப்படுகொலையை நிகழ்த்தியது.

தொடர்ந்து 2009ல் அமைக்கப்பட்ட அறிவு கமிசன் (Knowledge Commission), இந்திய தேசிய கல்விக் கொள்கை 2020க்கான பாய்ச்சல் அறிகுறிகளை காண்பிக்கத் தொடங்கியது. அது, இந்தியாவில் தனியார் மற்றும் சர்வதேசிய பல்கலைக்கழகங்களை அமைக்கவும், கல்விச்சாலைகளை அரசிடமிருந்து பறிக்கவும் ஆன குறிக்கோள்களைக் கொண்டிருந்தது. அது, இந்தியாவில் மேலும் 1500 பல்கலைக்கழகங்கள் அமைக்கப் பரிந்துரைத்தது. அதில் 20 தேசிய பல்கலைக்கழகங்களைத் தவிர, மற்றவை தனியார் அல்லது டிரஸ்ட் அல்லது கம்பெனிகள் சட்டம் பிரிவு – 25ன் படி அமைக்கப்பட்ட லாபநோக்கமற்ற கம்பெனி டிரெஸ்ட் வசம் ஒப்படைக்கப்படும் என வெளிப்படையாக அறிவித்தது. கல்வி வளர்ச்சியில் அரசு, கூடுதலாக GDPல்1.5% மட்டும் செலவளித்தால் போதும் எனவும், பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க 20% பங்கு மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்தது. அதாவது, எடுத்துக்காட்டாக ஒரு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஓராண்டிற்கு ரூ.100 கோடி ஆகிறதெனில், அதில் 20 கோடி மாணவர்களிடமிருந்து மட்டும் வசூலித்துக் கொள்ள வேண்டுமாம். மேலும், முதலாளித்துவ வேட்டைக்கு கல்வி நிறுவனங்களை இலக்காக்க, யுஜிசியை விட சிறப்பாக சேவை செய்கின்ற ஒரு புதிய நிர்வாக அமைப்பு தேவை எனவும், அது சர்வதேசிய நிதி மூலதனத்தை ஈர்க்கும் நோக்குடைய சட்டம் பிரிவு – 25ன் படி அமைக்கப்பட்ட லாபநோக்கமற்ற கம்பெனி நடத்தும் கல்வி நிறுவனம், முழுக்க முழுக்க தன்னாட்சி அதிகாரத்துடன், சிறப்புப் பொருளாதார மண்டலக் கூறுகளுடன், மாணவர்களின் கல்விக் கட்டணத்தை சந்தை நிலவரப்படி நிர்ணயிக்கவும் அந்த அமைப்பு துணை அமைப்புகளை கட்டமைக்கும் எனவும் பரிந்துரைத்தது. அது பின்னர் HEERA என்ற பெயருடன் அமைக்கப்பட்து. நம் வரிப்பணத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களுக்கு எவனோ டில்லிக்காரனோ, வெளிநாட்டுக்காரனோ உட்கார்ந்து கொண்டு, கொள்ளை வசூல் செய்வதை அனுமதிக்கக் கூடாது. 2011 – 2017 ஆண்டுக்கான 12வது திட்டகமிசன் கல்வி வியாபாரத்தில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.

12வது திட்டக்கமிசன், பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் போது மட்டுமே, தரமான ஆசிரியப்பணியை மேற்கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஆசிரியத்தின் மூலம் மட்டுமே, நாட்டில் பல்துறை ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் ஏற்படும் மூலதன திரட்சியை உற்பத்தி மற்றும் நுகர்வு அமைப்பாக (Knowledge Economy) உருத்திரட்ட முடியும். எனவே ஆராய்ச்சியை ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டு உலகம் முழுவதுமான ஆராய்ச்சி பயன்பாட்டு கணக்கீட்டின் படி இந்தியாவின் பங்கு உலகளவில் வெறும் 2.7% மட்டுமே. இந்தியாவில் நடக்கும் ஆராய்ச்சிகள், ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரசுரிக்கும் சஞ்சிகைகள் உலகத்திலுள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது 11% அதிகம். ஆனால், இந்தியர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை உலகெங்கிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் 1% மட்டுமே தமது ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இது இந்திய ஆராய்ச்சியாளர்கள் பற்றிய மதிப்பீடு ஆகும். ஆனால், இந்தியாவிலேயே ஆராய்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியில் பெரும்பங்கைப் பெறும் அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனங்கள், ஐஐடிக்கள், என்ஐடிக்கள் தம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தம் ஆராய்ச்சி முடிவுகளை, வழிமுறைகளை பதிப்பிக்கும் அறிக்கைகளை பொதுவெளியில் வைப்பதே இல்லை. நாடெங்கிலுமுள்ள மற்ற ஆராய்ச்சியாளர்கள் அவற்றை அணுக முடியாத அளவுக்கு அளப்பெரிய அதிகாரம் படைத்தவர்களாக அவர்கள் இருக்கும் போது, ஆராய்;ச்சிகள் அளர்வது சிரமமே. மேலும், இந்தியாவில் ஆராய்ச்சி நிலையங்களில் ஆராய்ச்சியாளர்களுக்கு தரப்படும் அரச நிர்வாகரீதியாலன அழுத்தங்கள், வேலைப்பளு, சிறு சாதனைகளை பாராட்டும் நடைமுறையின்மை போன்ற மற்ற காரணங்களும் இதில் கவனிக்கப்பட வேண்டியது. மேலும், அரச அதிகாரமிக்க ஆராய்சி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்குழுக்கள் சிறு நிலஉடைமையாளரைப் போலவோ, குறுநில மன்னரைப் போலவோ நடந்துகொள்ளும் போக்கு, ஆராய்ச்சி மனப்பான்மையை மழுங்கடித்துள்ளது. அமைப்பியல் ரீதியிலான சீர்திருத்தங்கள், கொள்கை மற்றும் சிந்தனாவாத சீர்திருத்தங்களை மேற்கொள்ளாமல், ஆராய்ச்சியிலோ, ஆசிரியத்திலோ எவ்வித முன்னேற்றமும் வெறும் காகிதத்தில் மட்டுமே சாத்தியப்படும்.

12வது திட்டக்கமிசனைத் தொடர்ந்து, நிதி ஆயோக்கின் ஆலோசனைப்படி, கீழ்க்கண்ட பட்டியலில் இந்திய தேசிய கல்விக் கொள்கை – 2020ஐ அமல்படுத்த, ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ள நிறுவனங்கள் தரப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் பெயர் செயல்பாடு செயல்பாட்டு விளக்கம்
HEFA – Higher Education Funding Agency (2022) யுஜிசிக்கு மாற்றாக மானியங்களுக்கு பதிலாக கடன்கள் வழங்குவது ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஆளுனர்கள் குழுவை நியமிக்க வேண்டும். ஆவர்களே HEFA ஏற்பாடு செய்துதரும் கடன் தொகையை நிர்வகித்து, மாணவர்களின் கல்விகட்டணத்தை நிர்ணயிப்பது, ஆசிரியர்களை நியமிப்பது, அவர் தம் சம்பளத்தை நிர்ணயிப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். அரசு இதில் தலையிடாது. அந்நிய நேரடி மூலதனத்தின் மூலம் அரசு நிறுவனங்களை தனியார் எடுத்துக் கொள்ள முடியும்.
NTA – National Testing Agency (2018 – 2019) CUET (Common University Entrance Test) (2022) மற்றும் INDSAT (Indian Scholastic Assessment Test) – (2018 – 2019) போன்ற தகுதித் தேர்வுகளை நடத்துவது INDSAT தேர்;வு ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களில் உதவித்தொகையுடன், தேர்வு செய்யப்பட்ட படிப்புகளில், தேர்வு செய்யப்பட்ட 116 இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் ”இந்தியாவில் படி” திட்டம் மூலம் படிக்க நடத்தப்படும் தேர்வு ஆகும். CUET தேர்வு என்பது மத்திய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் நுழைவதற்கான தேர்வு. போட்டித் தேர்வுகள் எப்போதுமே முதலாளிகளின் லாபத்திற்கான, முதலாளிய உற்பத்தி முறையால் வார்க்கப்பட்ட சிந்தனை முறை, முதலாளித்துவ ஒழுக்கச்சிந்தனை முறையால் (முதலாளித்துவ தாராளவாத சிந்தனையைக் கூட தடையாக எண்ணக்கூடிய்) வளர்க்கப்பட்டவர்களை தேர்ந்தெடுப்பதற்கே பயன்படும்.
RUSA – Rashtriya Uchhtar Shiksha Abhiyan (2018 – 2019) தர நிர்ணயம் செய்து அதற்கேற்ப நிறுவனங்களின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு நிதி அளிப்பது. ஒருவேளை நிறுவனம் தனியாரிடம் கடன் பெற்றிருந்தால், அதை செலுத்த முடியாவிட்டால், அவர்களுக்கே அரசு நிறுவனத்தை தாரை வார்க்கும். உயர்கல்வி நிறுவனங்களின் தரம் உயர்த்தலுக்கு நிதி வழங்குவது. CBCS, செமஸ்டர் முறை மற்றும் தரச்சான்று பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே அவர்களின் செயல்படுதிறன் பொருத்து நிதி ஒதுக்குவது. இந்த முடிவுகளில் அரசு தலையிடாது.
HEERA – Higher Education Empowerment Regulation Agency 2005ல் அமைக்கப்பட்ட National Knowledge Commission (NKC) ஆல் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட அமைப்பு. HEERA Educational System Bill 2022 மூலம் செயல்படக்கூடிய அமைப்பு. UGC மற்றும் AICTE ஆகிய இரு நிறுவனங்களின் சட்டதிட்டங்களால் நிர்வகிக்கப்படும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், இந்திய முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தி வைத்திருந்த சட்ட சிக்கல் வடிவிலான தடைகளை தவிர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. ஆராய்ச்சி நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சிகளை கண்காணிப்பது, நிதி ஆயோக்கின் நேரடி கட்டுப்பாட்டுக்கு கீழ் வரக்கூடிய அமைப்பு. முhணவர்கள் படித்து முடித்தவுடன் தொழிற்சாலைகளில் பணியில் அமரத்தேவையான திறன்களை பெறுகின்றனரா என கண்காணிப்பது, சமூகவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவித்து அதன் மூலம் சமூக பிணக்குகளைத் தீர்ப்பது, (சாதி தான் சமூகத்தின் ஒரே தீராத முதன்மைப் பிரச்சினை. அதைத் தீர்ப்பார்களா?), உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை தயாரிப்பதற்கான NIRF (NationalInstitutional Ranking Framework) நிறுவனத்தை நிர்வகித்தல், திறந்தநிலை மற்றும் தொலைதுhர படிப்புகளுக்கான சிறப்பு விதிகளை ஏற்படுத்தி செயல்படுத்துதல்.

 

தனியார் கல்வி, கடன் பொருளாதாரம்; மற்றும் சுரண்டல்:

இந்திய தேசிய கல்விக் கொள்கை – 2020ஐ அமல்படுத்த, காட்ஸ் ஒப்பந்த உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் 1985ம் ஆண்டு அமெரிக்கா முன்வைத்த அனைத்து விதமான கல்விச் சேவை பண்டங்களும், இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. அவை சர்வதேசிய முதலாளித்துவ சந்தையில் ஏற்பட்டுள்ள மென்பொருள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவான மென்பொருட்களை அவை தம் தொழிற்நுட்ப அடிப்படையில், இணையவழிக் கல்வி (Online e – learning), கற்றல் மேலாண்மை (Learning Management System), கைப்பேசி வழி இணையவழிக்கல்வி (Mobile e – learning), துரித இணையவழிக்கல்வி (Rapid e – learning), அரூபமான வகுப்பறை வழிக்கல்வி (Virtual Classroom) எனப்பிரித்துக் கொள்ளலாம். வரலாற்று ரீதியில் கணிணி  வன்பொருள் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்த மல்டிமீடியா (ஒலி மற்றும் ஒளி) வன் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்கள் கல்வி கற்பிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டுவந்தன. 1997ல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மையமிட்டு இயங்கி வரும் IMS Global Learning Consortium என்னும் தொண்டு நிறுவன கூட்டமைப்பு, பல்வேறு திறந்த மூலமென்பொருள் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இணையவழி கற்றலுக்கான செயலுhக்கமிக்க பாடத்திட்ட வடிவமைப்பு (Evolving to Effective Digital Curriculum), பல்வேறு வன் – மென்பொருள் அமைப்புகளில் பணிபுரியதக்க கற்றல் செயலிகளை உருவாக்குவது, இணையவழி இயங்கும் கற்றல் மதிப்பீட்டு மென்பொருள் உருவாக்குவது (Actionable e – Assessment), மாணவரின் கற்றல் திறன் அலசல் மற்றும் தரவுத்தளங்களை நிர்வகித்தல் (Learning Data and Analytics and Database Management), மாணவரின் வாழ்வு முழுமைக்குமான கற்றல் திட்டங்களை வடிவமைத்தல் (Digital credentials and Life long Learning), அரூபமான வகுப்பறை வழிக்கல்விக்கான மென்பொருள்களை வடிவமைத்தல் (Software for Virtual Classroom), பல்வேறு கல்வி கம்பெனிகளிலிருந்து திறந்த மூலமென்பொருள்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு தொழிற்படுதலை உறுதிசெய்வது மற்றும் மென்பொருள் தொழிற்படு கொள்கைகளை வடிவமைத்தல் (Interoperable EdTech Procurement & Policy), உறுப்புக் கம்பெனிகளின் மென்பொருள்கள், செயலிகள், வன் – மென்பொருள் அமைப்புகளிடையே சூழலிய அமைப்பை நிர்வகித்தல் (Ecosystem of Learning Platforms, Apps and Tools) போன்ற செயல்பாடுகளையும், தரநிலைகளையும் (Learning Tools Interoperatability & Question and Test Interoperatability Standards) உருவாக்கிவருகின்றது. இக்கூட்டமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா போன்ற காட்ஸ் உறுப்பு நாடுகளின் கல்வி மென்பொருள் கம்பெனிகள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இக்கம்பெனிகளை சார்ந்துள்ள பல்வேறு கல்வி கம்பெனிகளும்  இந்த கூட்டமைப்பின் மென்பொருள் தரநிலைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுத்தும் அளவுக்கு ஏகபோகமாக செயல்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் இது போன்றதொரு கூட்டமைப்பு இந்திய கல்வி கம்பெனிகளின் மத்தியிலும் 2021ல் உருவாக்கப்பட்டுள்ளது (Indian EdTech Consortium – IEC). இதில் BYJU’s, Doubtnet, Unacademy போன்ற இந்திய ஏகபோக கல்வி கம்பெனிகள் உறுப்பினர்களாகியுள்ளனர். ஆனால் இவர்கள் மென்பொருள் சேவைகளை IMS Global Learning Consortium உறுப்பினர்களிடமிருந்தே பெறுகின்றனர்.

இந்த இணையவழி தொழில்நுட்பம் சார்ந்த கம்பெனிகள் இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளில், கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளன. இந்தியாவில் அவற்றிற்கு நிதியளிக்க, அரசின் தாராளவாத நிதிக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்திய கல்வித்துறையின் கட்டமைப்பை மேம்படுத்த 2002ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுடன் (FDI – Foreign Direct Investment), அந்நிய வர்த்தகக்கடனளிப்புகளும் (ECB – External Commercial Borrowings) மேற்கொள்ளப்படும் என 2020 – 2021 பட்ஜெட் உரையில் எனக் கூறினார்.

2025க்குள் 220 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய இணையவழிக் கல்வித்துறையில், ஏப்ரல் 2000லிருந்து செப்டம்பர் 2020 வரையிலான (சற்றேறக்குறைய 20 ஆண்டுகள்) காலக்கட்டத்தில் இந்தியாவிற்குள் புகுந்த ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீட்டில் வெறும் 0.77 சதவீதம் தான் (3.89 பில்லியன் டாலர்). ஆனால் அதே சமயம் இந்திய கல்விசார் மென்பொருள் தொடக்கநிலை தொழில்நுட்பக் கம்பெனிகள் (Edtech Startups) 2020ல் மட்டும் 2.22  பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடாகப் பெற்றுள்ளன. மேலும் 2020ம் ஆண்டில் மட்டும் அந்நிய வர்த்தகக்கடனளிப்பு (ECB) மூலம் மட்டும் 13.5 கோடி ரூபாய் நிதியை தன் பணி மூலதனத்திற்காக மட்டும் மென்பொருள் தொடக்கநிலை கம்பெனிகள் பெற்றுள்ளன. உண்மையில் FDI வழியிலும் ECB வழியிலும் இந்திய கல்விச்சந்தைக்கு, கோவிட்டுக்குப் பின் மிகக்குறைந்த அளவிலேயே அந்நிய மூலதனம் வந்துள்ளது. இதற்கு மிகமுக்கியமான காரணமாக இந்திய பெருமுதலாளிகள் கூறுவது, இந்தியாவில் அன்னிய நிதி மூலதனம் பெறுவதற்கான நடைமுறை கடினமாக உள்ளது என ஏகபோக முதலாளிகள் கருதுகின்றனர்.

உண்மையில் ஏகபோக பன்னாட்டு முதலாளிகளின் கூடாரங்களில் (அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான்) பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும், உபரி பெருக்கமும், நிதி நெருக்கடியும் தலைவிரித்தாடுகின்றது. நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அனைத்து நாடுகளும் இந்த நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இணையதள நெருக்கடி வெடிப்பு (dot com bubble – 1995 to 2000), ரியல் எஸ்டேட் நெருக்கடி வெடிப்பு (housing bubble – 2008) போன்ற பொருளாதார பெருமந்தத்திற்கு இட்டுச் சென்ற நெருக்கடிகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களும் மற்றும் அவற்றை சார்ந்து இயங்கும் மூன்றாம் உலக நாடுகளும் பின்பற்றும் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளே காரணம். FDI மற்றும் ECB போன்ற நவ தாராளவாத வழிகள் மூலம் உள்ளே வரும் அன்னிய மூலதனம், இந்தியா போன்ற சார்பு பொருளாதாரங்களில் அமைப்பு ரீதியிலான, தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக, சேவைத்துறைகளில் (கல்வி, மருத்துவம் உள்ளிட்ட) பணி செய்த தொழிலாளர்கள் வேலையிழந்து வேறு வேலைகளுக்கு செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகின்றனர். இதனால், வேலையில்லா பட்டாளங்கள் அதிகரிப்பதுடன், மலிவு ஊதியத்தில் அதிக தொழிலாளர்கள் பணிக்குச் செல்லும் நிர்பந்தம் ஏற்படுகின்றது. இது மக்களின் வாங்கும் சக்தியை குறைத்து, உற்பத்தி உபரியையும், தேவைக்கு அதிகமான உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இது இந்தியா போன்ற சார்புப் பொருளாதாரங்களில் கடனையும் (சேவைத்துறையில் உற்பத்தியை விட நுகர்வு அதிகரிப்பதால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை, செலாவணி சந்தையில் டாலரின் ஆதிக்கம் ஆகியவற்றால்), ஏகாதிபத்திய நாடுகளில் பணவீக்கத்தையும், உபரி பெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம், தன் கஜானா மூலம் செலவு செய்து, வட்டி விகிதங்களைக் குறைத்து, பணப்புழக்கத்தை அதிகரித்தாலும், சொத்து மற்றும் சேவைகளின் விலை கடுமையாகக் குறைகிறது. இது அதிகப்படியான உற்பத்தி நெருக்கடியை தற்காலிகமாக சரி செய்தாலும், மக்களின் வாங்கும் சக்தியில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல், இந்த நெருக்கடியிலிருந்து முதலாளிகளால் மீளவே முடியாது. இந்த நிகழ்வுச் சக்கரம், நெருக்கடியை மேலும் சிக்கலாக்கி, கம்பெனிகளை கடனில் மூழ்கடித்து, திவாலாக்கி, நாட்டின் பொருளாதாரம் பெருமந்தநிலைக்கு மாற்றமடையும். இதன் மூலம் நாம் காணும் படிப்பினை யாதெனில், நவதாராளவாத கொள்கையின் செயல்தந்திரமான போன்றவற்றால் நாடு கடனில் மூழ்குவதும், நாட்டின் இறையாண்மையை இழப்பதும், மக்களின் வாழ்க்கை நாசமாய் போவதும் மட்டும் தான் நடக்கும்.

முடிவுரை:

2020 தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏகபோக, இந்திய பெருமுதலாளிகளின் கல்வித்தொழில்நுட்ப கம்பெனிகளை கல்வித் துறையில் நுழைப்பதற்கான நடவடிக்கைகளை பாசிச முதலாளித்துவ அரசு எடுக்கின்றது. இணையவழி தொழிற்நுட்ப நுகர்வின் மூலமான கல்வியின் மூலம் மட்டுமே மாணவர்களின் திறன் வளரும் என மூடத்தனமாக நம்புகின்றது: தொழிற்நுட்ப நுகர்வு கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலம் மாணவர்களையும், பெற்றோரையும் சுகபோக வாழ்வுக்கான வேலைவாய்ப்பை பெற்றுவிடலாம் என நம்ப வைக்கின்றது. ஆனால் கல்வித்துறை கம்பெனிகளால் அளிக்கப்படும் கல்விக்கு ஆகும் கடும்செலவை முழுவதையும் கடனாகப் பெற்று, அதை அடைக்க உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொட்டவேண்டிய அவலநிலை உருவாகிறது. அத்துடன், நீட், கேட், க்யுட், சாட் போன்ற தேர்வுகள் மூலம் திறமை என்ற கருத்தாக்கத்தை சமூகத்தில் விதைக்கின்றது. இந்த கருத்தாக்கத்தின் மூலம் ஆனது “ஒருவரின் அறிவினை தீர்மானிப்பது அவரின் செயலாற்றுகையே. குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மட்டுமே அது உண்மையாக வெளிப்படும்” என்ற பின்நவீனத்துவக் கருத்து தான். இது எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே மனிதனின் செயலாற்றுகை கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற கருத்துமுதல்வாதத்திற்கு இட்டுச் செல்கின்றது. (இக்கருத்தின் மூலவர் லியோடார்ட் என்னும் பிரன்சு பின்நவீனத்துவவாதி). பின்நவீனத்துவ சிந்தனைப்போக்கு முதலாளித்துவ ஏகபோக சுரண்டலுக்கு வழிவகுக்கக்கூடியது. ஆனால் அறிவென்பது ஒருவரின் வாழ்நிலையிலிருந்தும்;, உழைப்பின் மூலம் மட்டுமே, பொருளை உணர்ந்த கல்வி மூலம் மட்டுமே வளரக்கூடியது என்கிறது மார்க்சியம். மனித சமூகத்தின் முன்னேற்றத்தில் மனித உழைப்பின் மூலம் பெறப்பட்ட ஆராய்ச்சி அறிவை ஒவ்வொரு சமூகப்படி நிலையிலும் ஆளும் வர்க்கம், உழைக்கும் வர்க்கத்தை சுரண்டும் பொருட்டு, உற்பத்தியின் விளைபொருட்களான அறிவை, உற்பத்தி உபரியை, உற்பத்தி கருவியை தன்வயப்படுத்திக் கொள்ளும். தத்துவார்த்த ரீதியில் 2020 தேசிய கல்விக் கொள்கையின் சாரம் இந்த சுரண்டல் தான். சுரண்டலை எதிர்கொள்ள உழைக்கும் மக்களின் கையிலிருப்பது வர்க்கப்போராட்டமும், மார்க்சிய தத்துவமும், கம்யுனிஸ்ட் கட்சியும் மட்டுமே. 2020 தேசிய கல்விக் கொள்கை எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம். மார்க்சிய சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்

உதவிய கட்டுரைகள்:

  1. National Policy on Education: Declaring the End of Public Education, Rajiv Kunwar, July 10, 2022, People’s Democracy.
  2. GATS and Higher Education in India: Implications and Concerns, Dr.Vijender Sharma. (https://vijendersharma.wordpress.com என்ற தளத்திலிருந்து பெறப்பட்டது)
  3. 4 years of systematic Destruction of Education under Modi Regime, Vikram Singh, 17 June, 2018, People’s Democracy.
  4. Education and The Ruling Classes, Sitaram Yechuri, The Marxist, Volume: 3, No: 3 – 4, July – Dec. 1985.
  5. Dismantling of Planning Commission & Higher Education: A Perspective, Dr.Monalisa Bal, IJEIS, Vol:4, No.2 (2014), பக்கம் 71 – 79.
  6. Indian research quality lags quantity, The Economic Times, December 24, 2019.
  7. Many Hurdles to research in India, Alice Mani, Aug 09, 2022, Deccan Herald.
  8. Foreign funds in education remains scant, Narayanan V, Jan 29, 2021, The Business Line
  9. E – Learning platforms slowly changing India Education Landscape, The Economic Times, April 12, 2019.
  10. http://imsglobal.org/ – IMS Global Learning Consortiumன் அதிகாரப்பூர்வ வலைத்தளம். மற்றும் IEC ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
  11. சமகால கல்வி வளர்ச்சி, கலாநிதி சபா.ஜெயராசா, அகவிழி வெளியீடு, கொழும்பு, மார்கழி
  12. Finance Capital and World Economy, Prabhat Patnaik, People’s Democracy, October 10, 2021.
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW