திலகவதி சாதி ஆணவக்கொலையும் தலித் இளைஞர் மீதான பழிதுடைத்த தீர்ப்பும்
திலகவதி சாதி ஆணவக்கொலையும் தலித் இளைஞர் மீதான பழிதுடைத்த
தீர்ப்பும்
கருத்தரங்கம் பற்றிய செய்திக் குறிப்பு
நேற்று மேற்குறிப்பிட்ட தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தை சாதி ஒழிப்பு முன்னணி, இளந்தமிழகம், தமிழ்நாடு பெண்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்திருந்தன.
மாலை 5:30 மணி அளவில் தொடங்கிய கருத்தரங்கம் சுமார் 8:15 மணி அளவில் நிறைவுற்றது.
சாதி ஒழிப்பு முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் இராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினார். இக்கருத்தரங்கத்தில் சாதி ஒழிப்பு
முன்னணியின் பொதுச்செயலாளர் ரமணி தலைமை தாங்கினார். ”மேலும் வழக்கறிஞர் திருமூர்த்தியையும் அவரது குழுவையும் பாராட்டும் வகையில்
தோழர் திருமூர்த்திக்கு இந்திய அரசின் முதன்மை செயலாளர் ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ். கிருஷ்ணன் எழுதிய ”சமூகநீதிக்கான அறப்போர்”
என்ற தலைப்பிலான நூல் வழங்கப்பட்டது.
”திலகவதி கொலை நடந்தவுடனேயே உண்மையறியும் குழுவாக சென்று திலகவதி மற்றும் ஆகாஷ் குடும்பத்தாரையும் அந்த ஊர் மக்களையும்
சந்தித்து உண்மைகளைக் கண்டறிந்தோம். அப்போது கொலைக்குற்றத்திற்காக ஆகாஷ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யவில்லை என்பதையும் இது சாதி ஆணவக்கொலையாக இருக்கும் வாய்ப்புண்டு
என்பதையும் எடுத்துச்சொன்னோம். மேலும் இதில் பாமக, பாசக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது என்பதையும் முன்வைத்தோம்.
இந்த கொலை வழக்கை வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, திருமூர்த்தி மற்றும் குழுவினர் மிகச் சிறப்பாக நடத்தி ஆகாஷ் குற்றமற்றவர்
என்ற தீர்ப்பை வென்றுள்ளனர். இப்போது இந்த தீர்ப்பின் மீது ஐயம் கொள்வோர் நீதிபதி உத்தமராசா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீதி
பிறழ்ந்துவிட்டதாகவும் அரசு தரப்பு சரியாக வாதாடவில்லை என்றும் சொல்லி வருகின்றனர்.
காவல்துறையினரும் ஊடகமும் சொல்வதைக்
கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது, உண்மையைத் தேடி மக்களிடம்
தான் செல்ல வேண்டும்” என்று தனது தலைமையுரையில் பேசினார் தோழர்
ரமணி.
நாம் உண்மைக்குப் புறம்பாக தலித் இளைஞர் ஆகாஷுக்காக பக்கச் சார்பாக
பேசுவதாக வன்னியர் சமூகப் பின்புலம் சனநாயக ஆற்றல்கள் குறை கூறுகின்றனர். நாம் திலகவதிக்காவும் ஆகாசுக்காகவும் அவர் தம் காதல்
உரிமைக்காகவும் அவரது மண உரிமைக்காகவும் நிற்கிறோம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று இளந்தமிழகம்
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் பேசினார்.
இந்த வழக்கில் உள்ள முரண்பாடுகளை எல்லாம் விளக்கி எப்படி ஆகாஷ் மீதான குற்றச்சாட்டு முறியடிக்கப்பட்டது என்பதை வழக்கறிஞர் திருமூர்த்தி
எடுத்துச் சொன்னார். திலகவதியின் தந்தை முதல் தகவல் அறிக்கையில் சொல்லியிருந்ததும் உயர்நீதிமன்றத்தில் அவர் செய்திருந்த முறையீட்டில்
சொல்லியிருந்ததும் முரண்பட்டு இருப்பதை எடுத்துக்காட்டினோம்.
திலகவதி – ஆகாஷ் ஆகியோருக்கு இடையே பகிரப்பட்ட குறுஞ்செய்திகள் கணக்கில்
கொள்ளப்பட்டன. ஆகாஷ் கொலை நடந்த அன்றே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் அதற்கு அடுத்த நாள் கிராம நிர்வாக அலுவலரிடம்
சரணடைந்து தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்பட்டது நீதிமன்ற விசாரனையில் அம்பலமானது. உண்மையான குற்றவாளி யார்
என்பதைக் கண்டுபிடிப்பதில் காவல்துறை அக்கறை காட்டவில்லை. ஆனால், திலகவதியைக் கொல்வதற்கு இரண்டு நாள் முன்பு அதற்கான திட்டமிடல்
நடந்திருக்கக் கூடும். உறுதியானவர்களோடு நின்று போராடினால் உறுதியாக வெற்றி பெறமுடியும் என்று சொல்லி தனது உரையை
வழக்கறிஞர் திருமூர்த்தி நிறைவுசெய்தார்.
விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பாலு, “ அப்பகுதியில் வன்னியர் – தலித் மக்கள் வாழும்
ஊர் அமைப்பு, அவர்களுடைய உழைக்கும் வர்ககப் பின்புலம், அவர்களுக்கு இடையே நடந்த கடந்த கால காதல் மண அனுபவங்கள் ஆகியவற்றை
எடுத்துச் சொன்னார். மேலும், கொல்லப்பட்ட திலகவதி சமூக அக்கறை மிக்கவர். சமூகப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொண்டவர். நாம் ஒரு
தோழரை சாதிவெறிக்கு இழந்துவிட்டோம் என்றார்.
Dalit Intellectual Collective ஐ சேர்ந்த பேராசிரியர் இலக்ஷ்மணன், “ தமிழ்நாட்டில் சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு என்று புரிந்து கொள்ளும் நிலை இருக்கிறது ஆனால் அது அப்படி அல்ல, சமூக நீதி என்பது விரிந்த பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டியது. அம்பேத்கர், பெரியார், சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் தென்னாப்பிரிக்காவில் நிகழ்ந்தது போல் மீளிணக்கத்திற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை” என்று பேசினார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, “ ஆகாஷ் மீது பொய்ப் பழி சுமத்தி காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று பார்க்க வேண்டும். மேலும், திவ்யா(இளவரசன்0, திலகவதி
போன்றவர்கள் தான் பல்வேறு நெருக்கடியை சந்தித்து உறுதியாக நிற்கிறார்கள். திலகவதியைக் கொன்றவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து
நீதியின் முன்பு நிறுத்துவதற்கான சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.” என்று பேசினார்.
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, “ ஏன் சாதி ஆணவக் குற்றங்களுக்கு எதிரான சிறப்பு சட்டம் வேண்டும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அப்படி ஒரு சட்டம் இருந்தால் வழக்கறிஞர் திருமூர்த்திக்கு வேலையிருக்காது. இதில் உள்ள
குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுவிட முடியும். மேலும் அப்படி ஒரு சட்டம் இருந்தால் இது போன்ற குற்றங்கல் நிகழாமல் தடுக்க முடியும்”
என்று பேசினார்.
இறுதியாக நன்றியுரை ஆற்றிய தமிழ்நாடு பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் துர்கா பேசுகையில், ‘பள்ளிப் பாடப் புத்தகத்திலேயே பெரியார்,
அம்பேத்கர் கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
”பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையாம்” என்று பேசினார்.