மலையகம் 200 – பன்னாட்டு மாநாடு

27 Oct 2023

வணக்கம். நேற்று அக்டோபர் 22, கோவையில் காலை 9:30 மணியில் இருந்து இரவு 8:30 மணி வரை ”மலையகம் 200 – பன்னாட்டு மாநாடு” சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு காந்திபுரத்தில் 100 அடி சாலை, 4 வது தெருவில் பாத்திமா சர்ச் வளாகத்தில் நடைபெற்றது.

200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட நம் மக்கள் இலங்கையில் மலையகத் தமிழர்களாகவும் இந்தியாவில் தாயகம்திரும்பியோராகவும் தமிழ்நாட்டில் முகாம்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏதிலிகளாகவும் சிதறிப்போய் வாழ்ந்து வருகின்றனர். இவர்ளின் கோரிக்கைகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

இம்மாநாட்டில் தொடக்க அமர்வு, தாயகம் திரும்பியோர் அமர்வு, மலையகத் தமிழர் அமர்வு, ஏதிலியர் அமர்வு, பொது அமர்வு என ஐந்து அமர்வுகள் நடைபெற்றன.

இம்மாநாட்டிற்கு மலையக, தாயகம்திரும்பிய தமிழருக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.சி.கந்தையா தலைமையேற்றார்.

நிகர் கலைக்குழுவின் எழுச்சிப் பறை இசையுடன் இம்மாநாடு தொடங்கியது. இம்மாநாட்டில் இரு நூறாண்டுகால துயரத்தைப் படம்பிடிக்கும் வகையில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழர் நல ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவருமான மருத்துவர் கலாநிதி வீராசாமி தொடக்கவுரை ஆற்றினார். அதில் ஏதிலியர் குடியுரிமை தொடர்பில் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள முன்முயற்சிகள் பற்றி விளக்கிப் பேசினார்.

பின்னர், தாயகம் திரும்பியோர் அமர்வுக்கு ம.தா.த.இ வைச் சேர்ந்த தோழர் குணசேகரன் தலைமையேற்றார். இவ்வமர்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.இராசா சிறப்புரை ஆற்றினார். தாயகம் திரும்பியோர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி விளக்கிப் பேசி இக்கோரிக்கைகள் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று உறுதியளித்தார். மாநாட்டில் வெளியிடப்பட்ட மாநாட்டு மலரின் முதல் பிரதி திருமிகு ஆ.இராசா அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இவ்வமர்வில் மாநாட்டுத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

பின்னர், உணவு இடைவேளைக்குப் பின்பு மறுவாழ்வு முகாம்களில் இருந்து வந்த கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது.

அதை தொடர்ந்து நடைபெற்ற மலையக அமர்வுக்கு ம.தா.த.இ வைச் சேர்ந்த தோழர் செந்தில் தலைமையேற்றார். நடைப்பெற்றது. இதில் இலங்கையைச் சேர்ந்த ஓய்வு நிலை கல்வி கல்லூரி பீடாதிபதி தோழர் சிவ. இராஜேந்திரனும், ஓய்வு நிலைக் கல்லூரி முதல்வர் தோழர் மோகனும் எழுத்தாளர் அ.மார்க்சும் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற ஏதிலியர் அமர்வுக்கு தமிழர் குடியுரிமை இயக்கத்தைச் சேர்ந்த சரவணன் தலைமையேற்றார். அதில் இலங்கை தமிழர் நல ஆலோசனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் இளம்பரிதி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

கூடலூர் ஆமைக்குளம் கலைக்குழு வழங்கும் காமன் கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து மாலையில் பொது அமர்வு நடைபெற்றது. அதில் சிபிஐ(எம்) இன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ யின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் ஐயாசாமி, அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வழக்கறிஞர் பொன்.ஜெயசீலன், ஆதித் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இரவிக்குமார், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

பன்னாட்டு உரையாளர்களாக இம்மாநாட்டில் பங்குபெற்ற இலங்கை முன்னாள் எம்.பி. மல்லியப்பூ சந்தி திலகர், கனடாவைச் சேர்ந்த திருமிகு சுபாஷ், மலையக மக்களின் காணியுரிமைக்கான ஒன்றியத்தைச் சேர்ந்த ப.சுந்தரேசன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த மாநாட்டுச் செய்தியையும் மாநாட்டுத் தீர்மானங்களையும் தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு மக்களுக்கு கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாநாட்டுத் தீர்மானமும், புகைப்படங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இப்படிக்கு,

மு.சி. கந்தையா, ஒருங்கிணைப்பாளர்,
மலையக, தாயகம்திரும்பிய தமிழருக்கான இயக்கம்

9751155636
தொடர்புக்கு : செந்தில்  99419 31499
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW