பாசிச எதிர்ப்பில் சமப்படுத்தும் அரசியல் போக்குகள் – ஓர் உரையாடல் -செந்தில்

20 Jul 2023

அண்மையில், “பாசிச பாசகவை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும், பாசிச எதிர்ப்பில் குழப்பங்கள் ஏற்படக் கூடாது என்று அறிவித்துக் கொண்டு ஒரு சாராரும் ’பாசிச பாசகவை தேர்தலில் வீழ்த்த முடியாது, மக்கள் போராட்டத்தால்தான் வீழ்த்த முடியும்’ என்று அறிவித்துக் கொண்டு இன்னொரு சாராரும் என  இருதரப்புகளிடைய இணைய உலகில் கருத்துப்போர் நடக்கக் கண்டோம்.

அதில் பாசகவையும் காங்கிரசு – திமுகவையும் ஒரு சாரார் சமப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு அப்படி சமப்படுத்துவோரைப் பாசகவோடு சமப்படுத்தி விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்கள் கோட்பாட்டுத் தளத்திற்கு உயர்த்தப்படவில்லை. மாறாக தனி மனித சிந்தனை திறன், அறிவாற்றல், நேர்மை, யோக்கியத்தனம், வகுப்புப் பின்புலம், ஈக நெஞ்சம், அமைப்புத் தன்மை என்பவற்றை எல்லாம் சுற்றி வந்தது. 

சமப்படுத்தலுக்கு செல்லும்முன்  இந்தியாவில் பாசிசம் குறித்து இருக்கும் பல்வேறு நிலைகள் பற்றி பார்த்து விடுவோம்.

’பாசிசமாவது பாயசமாவது’ என்று சொல்வோரும் இந்நாட்டில் உள்ளனர். பாசிசம் என்று வரையறுக்க முடியாது என்பதுதான் பெரிய இடதுசாரி கட்சிகளான சிபிஐ, சிபிஐ(எம்) இன் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. பாசிசம் என்றோ பாசிச அபாயம் என்றோ நிலைப்பாடு எடுத்திருப்போர் இன்னொருவகை. இந்த பரந்து விரிந்த முகாமுக்கள்தான் பல்வேறு வண்ணங்களிலான சமப்படுத்தல் நிலவிவருகிறது.

தாராளிய முதலியக் கட்சிகளான காங்கிரசு, திமுக போன்றவை பாசிசம் என்று சொன்னாலும் கோட்பாட்டு நிலையில் இருந்து சொல்வதில்லை. முதலியக் கட்சிகளுக்கு அத்தகைய நெருக்கடி இல்லை. நடைமுறையிலும் பாசிச அபாயத்திற்கு ஏற்றாற் போன்ற எதிர்வினையும் அக்கட்சிகளிடம் இருந்தது கிடையாது. எடுத்துக்காட்டாக, ஒன்றிய அரசில் ஆட்சியில் இருக்கும் பாசக சட்டப்புறம்பான கைதுகளை நடத்திக் கொண்டிருக்கிறது. பாசக ஆளும் மாநில அரசுகளில் பசு வதை தடை சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற சிறுபான்மை விரோத சட்டங்களை இயற்றுகின்றன. ஆனால், பாசக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதுபோல சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டங்கள் இயற்றப்படுவதில்லை. தேர்தலை எதிர்நோக்கி அவை நகர்கின்றன. அதுவரை ஆளும்வகுப்பாராகிய தமக்கு அவகாசம் இருப்பதாக கருதுகின்றன.

கோட்பாட்டு நிலையில் இருந்து,  பாசிசம் என்றோ பாசிச அபாயம் என்றோ சொல்லக்கூடிய முகாமுக்குள்தான் இந்த சமப்படுத்தல் பற்றிய பிரச்சனையைப் பேச வேண்டியிருக்கிறது. பாசகவும் பாசிசம், காங்கிரசும் பாசிசம்  என்று சமப்படுத்தும் போக்கு தமிழ்நாட்டுக்கு மட்டும் உரித்தானதல்ல, தமிழ்த்தேசியம், ஈழ ஆதரவு பேசுவோருக்கு மட்டும் உரித்தானதல்ல.

பாசகவும் காங்கிரசும் பாசிசக் கட்சிகள் என்று சமப்படுத்துவோரை மூன்று வகையினராக பிரிக்கலாம்.

  1. புதுத்தாராளியப் பொருளியல் கொள்கை கொண்ட கட்சிகள் என்ற நிலையில் காங்கிரசுக்கும் பாசகவுக்கும் வேறுபாடு இல்லை என்றும் இந்தப் பொருளியல் கொள்கைதான் பாசிசத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறது என்றும் ஏகாதிபத்தியத்திற்கு பாசிசம் தேவை என்றும் இனி உலகில் பாசிசம் தவிர்க்க முடியாதது என்றும் பல மாதிரியாக கருத்துகளைச் சொல்லி, பாசிசத்தைப் பற்றி வேறு எவரையும்விட தமக்கே மேம்பட்ட புரிதல் இருப்பதாக காட்டிக் கொண்டு, “பாசக பாசிசத்தை வீழ்த்திவிட்டு, காங்கிரசு பாசிசத்தை தூக்கிப் பிடிக்கப் போகிறோமா?” என்று கேட்கக் கூடிய அமைப்புகள். மஜஇக, மஜஇமு, SUCI, மாவோவியர்கள் என ஒரு பெரும் பட்டியலே இதில் வருகின்றது.
  2. தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் களத்திலும் காங்கிரசும் பாசகவும் ஒன்று. இவ்விரு கட்சிகளும் வடவர் கட்சி, ஆரியக் கட்சி, பார்ப்பன – பனியா மார்வாடிகளுக்கான கட்சி. தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதிரானக் கட்சி. மாநில அதிகாரங்களைப் பறிப்பதில் எவ்வித வேறுபாடும் இல்லாத கட்சிகள் என்று வாதிடுவோர் உள்ளனர். ஆரியமும் திராவிடமும் பங்காளிகள் என்றும் பாசிச பாசக என்பதே திமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் வேலை என்று சொல்லி, பாசிச பாசக எதிர்ப்பைவிட திராவிட எதிர்ப்பே முதன்மையானது என்று அரசியல் செய்யக்கூடியவர்கள். தமிழ்த்தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பற்பல இன அரசியல் பேசும் அமைப்புகள் இந்நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகின்றனர்.
  3. காங்கிரசும் மென்மையான இந்துத்துவக் கட்சிதான் என்று சொல்லி காங்கிரசு எதிர்ப்பு அரசியல் செய்யும் ஒரு சிறு ஆளும் வகுப்புக் கூட்டம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு ஒவைசியின் அரசியல்.

    இவை மிக வெளிப்படையாக தெரிபவை. பாசிச எதிர்ப்பு இயக்கம் வேகமெடுப்பதில் தடையாக இருக்கும் போக்குகள் ஆகும். இவற்றுக்கு உரிய கவனம் கொடுத்து விவாதித்தாக வேண்டும்.

    இந்த சமப்படுத்தும் போக்குகளை நோக்கி கேள்விகளை எழுப்பி விவாதிக்கப் புறப்படும் பாசிச எதிர்ப்பு ஆற்றல்களும் அதே சமப்படுத்தும் புதைக்குழியில் மாட்டிக் கொள்ளும் போதுதான் பாசிசம் தொடர்பில் அவர்கள் கொண்டிருக்கும் புரிதலில் உள்ள இடைவெளி தெரிகிறது. அவர்கள் ஆளும்வகுப்பின் நிலையெடுத்து நிற்கின்றனர் என்று சொல்வதை விடவும் புரிதல் குறைபாடு என்று சொல்வது சற்று மென்மையானதாக இருக்கலாம்.

    பாசகவை எதிர்க்கக் கூடிய ஒருவர் காங்கிரசையும் எதிர்க்க வேண்டும் என்று சொன்னால் அதன் இறுதியான விளைவு பாசகவுக்கு ஆதரவாக அமையும் என்பது உண்மைதான். அப்படியான நிலைப்பாட்டை இன்றைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் எல்லோரும் பாசகவின் கைக்கூலிகள் கிடையாது. அதாவது சவுக்கு சங்கர் பாசகவையும் காங்கிரசையும் சமப்படுத்துவதையும் மஜஇக காங்கிரசையும் பாசகவையும் சமப்படுத்துவதையும் சமப்படுத்திவிட முடியாது. இந்த இடத்தில்தான், பாசிச எதிர்ப்பாளர் எனத் தம்மை அறிவித்துக் கொண்டு, காங்கிரசு – திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று களமிறங்கி வாள் சுழற்றும் வீரர்கள், சவுக்குசங்கரையும் ஓர் இடதுசாரி தோழரையும் கைக்கூலிகள் என்று கடிந்து கொள்கின்றனர். சுருங்கச் சொன்னால், பாசகவையும் காங்கிரசு – திமுக அணியை ஆதரிக்காதவர்களையும் சமப்படுத்தும் வேலை செய்வதன்மூலம்  பாசிச எதிர்ப்பு முகாமைப் பலவீனப்படுத்துகின்றனர்.

    அதுபோலவே, காங்கிரசு – திமுக அணியை ஆதரிக்க வேண்டும் என்று நிலையெடுத்திருக்கும் முற்போக்காளர்களும் புரட்சியின் மீது பற்று கொண்டவர்களும் நாடெங்கும் உள்ளனர். இவர்கள் எல்லோரும் சத்தியமூர்த்தி பவனிலும் அறிவாலயத்திலும் பொற்கிழிப் பெற்றுக் கொண்டு புகழ்ச்சிப் பா இசைப்பவர் அல்லர்.

    பாசிச அபாயம் என்ற் நிலையில், இதைவிட்டால் வேறு வழியில்லை என்று அவர்கள் உண்மையாகவே நம்புவதால் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பவர்கள் ஆவர்.

    பாசிச எதிர்ப்பில் அக்கறை கொண்டோர் விவாதிக்கும் முறை என்பதும்கூட பாசிச எதிர்ப்புக்கு வலுசேர்கும் வகையில் இருக்க வேண்டும். குட்டி முதலியப் பண்புடன் கத்தியை எல்லாப் புறமும் வீசிவிட்டால் நமக்குள் வெட்டிக் கொண்டு இரத்த சகதியாகிப் போய் அது இறுதியில் எதிரிக்கே சேவை செய்யும்.

    எதிரியைப் பொறுத்தவரை தோழர்கள் கோவனும் மருதையனும் மருதுவும் திருமுருகனும் பாசிச எதிர்ப்புக் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியவர்கள்தான். ஒருவரை ஒருவர் எதிர்த்து சண்டையிடுவதன் மூலம் இறுதியில்  பாசகவுக்கு எதிரான களம் ஆள் அரவம் அற்றுப்போகுமே ஒழிய அக்களத்திற்கு வலிமைச் சேரப் போவதில்லை.

    மோடியும் ராகுலும் ஒன்று, ஆரியமும் திராவிடமும் ஒன்று என்று தமிழ்த்தேசியத்தின் பெயராலும் நிதிமூலதன ஆதிக்க எதிர்ப்பின் பெயராலும் சொல்லிக் கொண்டிருப்போர் ஒருபுறம்.

    பாசக எதிர்ப்பும் காங்கிரசு – திமுக ஆதரவும் எல்லா நேரத்திலும்   ஒன்றுதான் என்று பத்தாம் பசலித்தனமாக சொல்லிக் கொண்டிருப்போர் இன்னொருபுறம்.

    இந்த இரு  நிலைகளை நோக்கி ஒரு பெரிய உரையாடலை நடத்த வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். அது பாசிச எதிர்ப்பு  முகாமுக்கு வலுசேர்க்க வேண்டும், முயன்று பார்ப்போம்.

    RELATED POST

    Leave a reply

    சமூக வலைத்தளம்

    NEWSLETTER

    CONNECT & FOLLOW