தமிழக அரசு கொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்! லாக்கப் மரணங்களுக்கு முடிவுகட்டு!!

07 May 2022

கடந்த ஏப்-18 அன்று சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணமடைந்துள்ளார். அவர் கடற்கரையில் குதிரை சவாரி வேலைசெய்யும் தொழிலாளி இந்தக் கொலையை மறைப்பதற்காக பெற்றோர்களிடம் உடலை ஒப்படைக்காமல், வேகவேகமாக காவல்துறையினரே தடயமின்றி எரித்துள்ளனர் என்பதிலிருந்து இது ஓர் அப்பட்டமான காவல்நிலையப் படுகொலை என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்தக் குற்றத்தைச் செய்த காவல்துறையினர்   பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் “இதனை வெளியில் சொல்ல வேண்டாம்“ என்று 1 இலட்சம் பணம் கொடுத்து அவர்களை சீனிவாசபுரம் பகுதியைவிட்டு வெளியேற்றியுள்ளனர். சட்டத்தை நிலைநாட்டும் காவல்துறையினரே எந்தக் காரணமுமின்றி இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையிலும் ஆபாசமாகவும் துன்புறுத்தி சித்திரவதை செய்து கொலை செய்யும் வக்கிரப் புத்திக்கு என்ன தண்டனை கொடுப்பது? எந்த துணிச்சலில் இவர்கள் இத்தகைய கொலையை, சித்ரவதையை செய்கிறார்கள்? உண்மையில் யார் குற்றவாளிகள்? மக்களா? காவல்துறையா? என்கிற விவாதத்தை நாம் நடத்தியாக வேண்டும்.

தமிழ்நாட்டில் காவல்துறையின் ரவுடித்தனத்திற்கு ஆதிக்கத் திமிருக்கு  பலியாக்கப்படுபவர்கள், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுபவர்கள், பொய் வழக்கில் கைதுசெய்யப்படுபவர்களில் முதன்மையானவர்கள் தலித் மக்கள், பழங்குடிகள், இஸ்லாமியர்கள் மற்றும் அடித்தட்டு ஏழை எளிய மக்களே. மாமூல் வரவில்லை என்றால் காவல்துறையினரால் தாக்கப்படுபவர்களும் இவர்களே. அன்றாடம் காவல்துறையினர் கணக்கு காட்டுவதற்கு பொய் வழக்குப் போடுவதும் இவர்கள் மீதே. ஏனெனில், “இவர்கள் அதிகாரமற்றவர்கள், கேட்பாரற்றவர்கள், அரசியல் பலம், பண பலம், அடியாட்கள் பலம் ஏதுமில்லாத பாமரர்கள் என்ற ஏளனமும் ஆணவப்போக்கும் சாதித் திமிருமே காக்கிச்சட்டை மண்டைக்குள் ஊறியிருக்கிறது.

இதற்கு அடுத்து முன்னணி சக்திகள், இயக்கத்தினர் குறிவைக்கப்படுவார்கள் என்பது காவல்துறையின் அறிவிக்கப்படாத சட்டமாகும்.

இன்று விக்னேஷ் என்றால், கடந்த ஆண்டு சாத்தான்குளம் ஜெயராஜ் பெலிக்ஸ் படுகொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. வணிகர்களின் தொடர் போராட்டத்தினால் முதல்முறையாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். இதுபோன்ற எண்ணற்ற கொலைகளை தொடர்ந்து செய்துவருகிறது தமிழக காவல்துறை. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது வாச்சாத்தி பழங்குடிகள் பட்ட துயரங்கள் வெளியில் சொல்ல முடியாதவை. வீரம் எனப் பீற்றிக்கொள்ளும் அதிரடிப்படை வீரர்களுக்கும் போலீசுக்கும், இராணுவப்படையினருக்கும் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளுக்கும் இவ்வளவு வக்கிரப்புத்தியா? என்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூரங்களை அரங்கேற்றினார்கள். பலர் காமக்கொடூரன்களாகவும் இருப்பதால்தான் பல பெண்கள் லாக்கப்பில் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அதிகாரவர்க்கத்தினர் தவறு செய்வதால் அரசு அவர்களை சட்டப்படி தண்டிப்பதற்கு மாறாக பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறது. இந்தப்போக்குதான் காவல்நிலையத்தில் அப்பாவிகளின் மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலம் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என்பதெல்லாம வெறும் வாய்ச்சவடாலகவே இருக்கிறது.

தமிழ்நாட்டில் (2011-2016) ஆறு ஆண்டுகளில் காவலில் இருக்கும்போது இறந்ததாக கூறப்படும் 46 (96%) நபர்களில் 44பேர் கைதுசெய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இறந்தனர் என்று தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதற்கு வெளியே  அன்றாடம் நடக்கும் சித்திரவதைகள், மரணங்கள் எத்தனை என்பது கணக்கில் வராத ஒன்று.

குறிப்பாக கடந்த 2011ல் மதுரை அப்பாஸ், ஷாஹின்ஷா, சாகுல் ஹமீது, ரபீக் ராஜா, அல்ஹாஜ், 2014ல் ஆம்பூர் எஸ்.பி. பட்டிணம் சையது முகம்மது, (காவல் சித்திரவதை), 2020ல் காயல்பட்டினம் ஹபீப் முகமது( காவல் சித்ரவதை) 2018-2020ல் கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், கண்ணகி நகர் முகேஷ், அம்பேத்கர் காலனி சுரேஷ், சூணாம்பேடு சிற்றரசு, ராமநாதபுரம் மணிகண்டன், தஞ்சை சத்யவாணன் போன்ற பல இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. அதற்கு அரசியல்வாதிகள், ஒரு பகுதியைச் சேர்ந்த பெரும் புள்ளிகள் எனப் பலர் உதவியுடன் நடக்கும் லாக்கப் கொலைகள் வெளியில் தெரிவதில்லை. ஒவ்வொரு குடிசைப்பகுதிகளிலும் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளிலும் சித்திரவதையால் ஊனமாகி வேலைக்கு செல்ல முடியாமல் முடமாகிப்போன இளைஞர்கள் ஏராளம். இத்தகைய சித்திரவதைகளால் விளிம்புநிலை மக்களின் எதிர்கால வாழ்வு நசுக்கப்டுகிறது. ஆனால், எதுவும் குற்ற வழக்காகப் பதியப்படுவதில்லை. புகார் கொடுக்கப்படுவதில்லை. அனைத்தும் அச்சுறுத்தலில் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மீறி வரும் புகார் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இடமாற்றம், பணிமாற்றம் மட்டும் செய்கிறது என்றால் மக்களுக்கு எவ்வாறு சட்டத்தின்மீது நம்பிக்கை ஏற்படும்?

“திருடினாய், கஞ்சா விற்றாய், கல்லெறிந்தாய்“ என ஏதோ ஒரு காரணத்தைச்சொல்லி கைதுசெய்கிறது காவல்துறை, அப்படியானால், அதே தொழிலில் பாதி கமிசன் வாங்க சாப்பிடும் காவல்துறை அதிகாரிகள் திருடர்கள் இல்லையா? எந்த வியாபாரத் தொழிலாகட்டும் மக்கள் கொந்தளிக்கிற வார்த்தை “மாதந்தோறும் மாமூல் கரெக்டா வாங்குறாங்க போலீசு, அப்புறமும் வந்து கடைபோடாத எடுன்னு தொல்லை பண்றாங்க. திரும்பவும் பணத்த புரட்டி கொடுத்தா கொஞ்ச நாளைக்கு இந்த பக்கம் வராம இருப்பாங்க. கவர்மெண்ட் சம்பளத்தையும் வாங்கிட்டு எங்க பொழப்பலயும் கை வைக்குறாங்க வாழவிடாம“ என்று ஆதங்கப்படுவதை பார்க்கமுடியும். ஏழைங்க வயிற்றில் அடிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்வதுதான் காவல்துறையினரின் கடமையா?  உழைப்பாளி மக்களிடம் தன் ரவுடித்தனத்தைக் காட்டும் காக்கிச்சட்டைகள், அதிகாரம் படைத்த கொள்ளை கும்பலிடம் மண்டியிடுகிறது காவல் அதிகாரிகளின் வீரம். உழைப்பாளி வர்க்கம் எழுந்து நின்றால் உச்சியில் ஏறும் காக்கிகளின் திமிர், அப்பகுதியில் வாழும் மாணவர்கள், இளைஞர்கள் அனைவரையும் அவர்களின் பூட் கால்கள் பதம் பார்க்கும். எதிர்த்து கேள்வியா கேட்குற , இனி கை கால் இருக்க்க கூடாது அவனுக்கு,”  “எவனும் வெளியில் வர கூடாது, பறைப்பசங்களுக்கு படிப்பு ஒரு கேடு”  அவனுங்க கிழித்தது போதும் குப்பை, மலம் அள்ள போகட்டும் இழுத்துட்டு வா ஏட்டு”  “உள்ள வச்சி முட்டிக்கு முட்டி தட்டி உண்மைய  ஒத்துக்க வைப்போம்,”

“ஐயா எம் புள்ள படிக்குறவன் எந்த வம்பு தும்புக்கும் போகாதவன் இனிமேல் ஏதும் நடக்காமல் நாங்க பார்த்துக்குறோம் ஐயா, கை எடுத்து கும்பிடுறோம் உங்க காலில் வேணும்னாலும்  விழுறோம் விட்டுருங்க என் புள்ளைய. அவன்  வாழ்க்கை வீணாயிடும் சாரு” ”ஒரு முறை அவன காட்டுங்க ’பார்த்துட்டு போய்டுறோம் சாரு”

இப்படி  கெஞ்சியும் மன்றாடியும் அதிகாரிகளின் ஆணவம் அனுமதிக்காத கையறு நிலையில்  திரும்பி வரும் காட்சிகள் அன்றாடம் அரங்கேறுகிறது. இப்படி எத்தனை எத்தனை காவல் நிலையங்களில் தாய்மார்களின், மனைவிகளின், குழந்தைகளின்  கண்ணீர் காட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன!

“ சும்மா விசாரிக்கத்தான் கூட்டிட்டுப் போறோம்,  விட்டுடுவோம்  என்று அழைத்து செல்வதும், நாளை வந்து கூட்டிட்டு போ“ என்ற காவல் அதிகாரியின் சித்திரவதைக்கான சமிக்ஞையைக் கேட்டதும் குலை நடுங்கி இரவு முழுவதும் சாப்பிடாம, தூங்காம என்னாகுமோ ஏதாகுமோ புள்ள உசுரோட வருவானா? என்று ஏங்கித்தவித்து விடிந்ததும் விடியாமலும் எழுந்து ஓடும் பெற்றோர்கள் காவல்  வாசலை அடைந்து தன் பிள்ளையின்  கோலத்தை கண்டு அய்யோ என்று அலறி சரிந்து விழும் சம்பவங்கள் எத்தனை எத்தனை!

உயிரைப்பிடித்துகொண்டு ரத்தக்கசிவோடு உடல் முழுவதும் வீங்கிய நிலையில் நடக்க முடியாமல் தாங்கி வரும் தன் மகனை உயிரைக்காப்பாற்ற மருத்துவமனையைத் தேடி ஓடினால், அங்கு காவல் அதிகாரிகள் தயார் நிலையில் நிற்பார்கள். “போலீசு அடிச்சதா சொல்லக்கூடாது, அடிபட்டு விழுந்துட்டான், என்று ஏதா ஒரு பொய்யை சொல்ல சொல்லி எழுதி வாங்கிவிட்டுதான் மருத்துவமனையில் அனுமதிக்க வழிவிடும். அடுத்து மருத்துவமனையின் செலவை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அந்தக் குடும்பம் அவர்களின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும்.  அத்தனை கட்சிகளின் கொடிகள் ஒவ்வொரு பகுதியிலும் பறக்கும். ஆனால், இந்த அட்டூழியத்திற்கு முடிவு இல்லை. இத்தனை வன்மங்களை கொண்ட காவல் நிலைய வாசலில் தான்  “காவலன் உங்கள் நண்பன்” என்று எழுதிவைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

தெருக்கள் தோறும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மக்களையும் அவர்களின் அந்தரங்கத்தையும் அரசும் காவல்துறையும் கண்காணிக்கிறது. லாக்கப் மரணங்களை தடுத்திட காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இதுவரை இந்த் தீர்ப்பு தமிழ்நாட்டில் எங்கும் அமலாக்கப்படவில்லை. சட்டத்தை இவர்களே மதிக்கவில்லை. மக்களை பார்த்து ’ஏன் மாஸ்க் போடவில்லை. ஏன் வெளியில் வந்தாய், ஏன் லைசன்ஸ் இல்லை’ என்று பல கேள்விகளால் துளைத்து, நடுரோட்டில் அடித்து துன்புறுத்தும் அதிகாரத் திமிருக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாக காவல்நிலையங்களில் கேமராக்களைப் பொருத்திட வேண்டும்.

விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசு 10லட்சத்தை அறிவித்திருக்கிறது. குற்றவாளிகளை தற்காலிக பணிநீக்கம் செய்திருக்கிறது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிட உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், உயிரைப் பலிகொடுத்த அக்குடும்பத்திற்கு பணத்தை கொடுத்து ஆறுதல் செய்வதைவிட குற்றவாளிகளைக் கொலைவழக்கில் கைதுசெய்வதுதான் ச்ட்டப்படி செய்ய வேண்டியதாகும். ரவுடித்தனத்திற்கும் அராஜகத்திற்கும் மாற்றாக மனிதநேயத்தை கற்றுக்கொடுப்பதே மக்களாட்சி. காவல் துறையினரின் சித்ரவதையால் கொல்லப்பட்ட விக்னேஷ் உள்ளிட்ட பல இளைஞர்களுக்கு நீதி வேண்டும். இன்னுமொரு லாக்கப் மரணங்கள் நடக்காமல்  இருக்க வேண்டுமென்றால் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும். கறாரான நடவடிக்கையும் காவல்துறைக்குள் சீர்திருத்தமும் செய்யப்பட வேண்டும். மக்களுக்கு அறிவுரையை வழங்குமுன் காவல்துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.

இல்லையென்றால் ஒரு நாள் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

ரமணி,

aruvi1967@gmail.com

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW