பார்ப்பனரல்லாத சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் சமூகநீதியா? 20 ஆண்டுகளுக்கு மேலான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை மறுப்பதேன்?

29 Nov 2021

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளைக் கடந்து 38 இஸ்லாமியர்கள், இராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் மற்றும் வீரப்பன் வழக்கில் உள்ள மாதையன் ஆகியோர் தமிழ்நாட்டுச் சிறையில் வாடுகின்றனர். எழுவர் விடுதலையைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அவர்களை விடுவிப்பதாக கொள்கை முடிவெடுத்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு ஆளுநர் வழியாக முட்டுக்கட்டைப் போட்டுவருகிறது.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையும் 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையும் குறுக்கே நின்று கொண்டிருந்தன. இது தொடர்பான அரசாணை ஒன்றை நவம்பர் 15 அன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அது 2018 ஆம் ஆண்டு அரசாணையைவிடவும் மோசமான ஒன்று என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். தமிழ்நாடு அரசு 700 பேரை முன் விடுதலை செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அதில் நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஒருவர்கூட வெளிவர முடியாதபடியான அரசாணை இது. பிரிவு 161 இன் கீழ் விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது. ஆனால், திமுக தலைமையிலான மாநில அரசு முந்தைய அதிமுக அரசு போலவே விதிகளை வகுத்திருப்பதில் இருந்து திமுகவின் கடந்தகால கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை என்று தெரிகிறது.

  1. கோவை குண்டுவெடிப்புக்கு முன்பாக 1997 இல் 18 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட , சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்கூட விசாரனைக் கைதியாக சிறையில் இல்லை என்பது மட்டுமின்றி ஒருவர்கூட தண்டிக்கப்படவும் இல்லை. அதேநேரத்தில், குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட167 பேரும் விசாரணைக் காலம் முழுவதும் அதாவது ஒன்பதரை ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாக சிறையிலேயே கழித்தனர். இது விசயத்தில் முந்தைய திமுக, அதிமுக அரசுகள் இஸ்லாமியர் என்றும் இந்துக்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டியது நாடறிந்த செய்தியாகும்.
  2. குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும் சமத்துவத்திற்கும் சமநீதிக்கும் எதிராக நடத்தப்பட்ட, பாகுபாடுடன்கூடிய விசாரணையாகும் என்பது அவ்வழக்கில் வழக்கறிஞராக வாதாடிய தோழர் ப.பா. மோகனின் கூற்று.
  3. நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் சிபிசிஐடி காவல்துறை, அரசு வழக்கறிஞர் எல்லோரும் இவ்விசயத்தில் மதப்பாகுபாட்டுடனே நடந்து கொண்டனர்.

இந்நிலையில் 2014 இல் பாசிச பாசக தில்லியில் ஆட்சியைப் பிடித்தவுடன் மதச்சார்பின்மை, மதப் பாகுபாடு காட்டாமை போன்றவையின் தேவை முன்னிலும் அதிகமாகப் பேசப்பட்டது. திமுக தன்னைப் பாசிச பாசவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிரான கட்சியென்று மக்கள் முன் காட்டிக்கொண்டது. பாசிச பாசக எதிர்ப்பை முதன்மைப்படுத்தியே தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வாக்கு சேகரித்தன. இஸ்லாமிய, கிறித்தவ மக்கள் பாசக எதிர்ப்பு என்ற வகையில் சிந்தாமல் சிதறாமல் தமது வாக்குகளை திமுகவுக்கு போட்டனர். இந்நிலையில் நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை என்பது திமுக அரசிடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோரிக்கையாகும். ஆனால், பெருத்த ஏமாற்றத்தை தரும் வகையில் இந்த அரசாணை வெளிவந்துள்ளது.

குற்றத்தின் தன்மை மற்றும் அளவு ( எத்தனை கொலைகள் போன்றவை) ஆகியவற்றைத் தண்டனைக் குறைப்பின்போது பார்க்க கூடாது என்பதே மனித உரிமை அமைப்புகளின் கண்ணோட்டம் ஆகும். அப்படியிருந்தும் சிறைச்சாலை சீர்திருத்தம் தொடர்பான ‘அகில இந்தியக் குழு’ வழங்கியுள்ள பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக் கொண்டுதான் இன்ன இன்ன குற்றங்களில் தண்டனைப் பெற்றவர்களுக்கு முன்விடுதலை இல்லை என்று தமிழ்நாடு அரசு விதிகளை உருவாக்கிக் கொண்டுள்ளது.

அதிலும், பயங்கரவாதக் குற்றங்கள், அரசுக்கு எதிரானக் குற்றம் என்பவை எல்லாம் பொத்தாம் பொதுவான விதிகள் ஆகும். மத / வகுப்புவாத அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றை ஒரு விதியாக வைத்திருப்பது நெடுநாள் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு தடையாக இருக்கிறது.

மேலும் குண்டுவெடிப்பு குற்றங்களில் தண்டனைப் பெற்று, தண்டனையைக் கழித்து முடிந்திருந்தாலும் முடியாவிட்டாலும் அவர்கள் முன்விடுதலைக்கு தகுதியில்லாதவர்கள் என்ற அறிவிப்பு இந்த அரசாணையில் இருக்கிறது. இதுவும் பலரது விடுதலைக்கு தடை போடக்கூடியது.

மொத்தத்தில் இந்த 38 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என்ற நோக்கத்துடனே இவ்விதிகள்  தக்க வைக்கப்படுகின்றன.

மேலும் 10 ஆண்டுகளுக்குமேல் கழித்தவர்களுக்கும் 20 ஆண்டுகளுக்குமேல் கழித்தவர்களுக்கும் போடப்பட்டுள்ள விதிவிலக்குகள் ஒரேமாதிரியானப் பட்டியலாக உள்ளன. குற்ற நடைமுறை சட்டத்தின் 433 A பிரிவு மரணத் தண்டனை பெற்றுப் பின் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட கைதிகள் மட்டும் 14 ஆண்டுக் காலம் தண்டனை முடியும் முன்பாக விடுதலை செய்யப்படக் கூடாது என வரையறுக்கிறது. அப்படியிருக்கும் போது முன்விடுதலை என்பதை அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குமேல் நீட்டக் கூடாது. சிபிஐ(எம்) கட்சியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் லீலாவதி கொலை வழக்கில் குற்றமிழைத்தவர்கள் 7 ஆண்டுகள் தண்டனையோடு விடுவிக்கப்பட்டனர். இது திமுக அரசு செய்தது. தர்மபுரியில் 3 மாணவிகள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தண்டனைப் பெற்றுவந்த 3 பேர் முன்விடுதலை செய்யப்பட்டனர். மேலவளவு கொலை வழக்கில் தண்டனைக்குள்ளானோர் முன்விடுதலை செய்யப்பட்டனர். இவை அதிமுக அரசு செய்தது.

ஆகவே, யாராகினும் அதிகபட்சம் 10 ஆண்டுகளோடு அவர்களது நடத்தையை மட்டுமே கணக்கில் கொண்டு முன்விடுதலை செய்வதற்குரிய வழிகாட்டு நெறிகள்தான் இருக்க வேண்டும். எவரையும் ஆயுள் தண்டனை என்ற பெயரில் 20 ஆண்டுகள் சிறையில் அடைத்து வைக்கக்கூடாது.

‘அரியானா அரசு எதிர் மகேந்திர சிங்கும் மற்றவர்களும்’ என்கிற வழக்கில் எஸ்.பி. சின்கா மற்றும் எச்.எஸ்.பேடி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2.11.2007 இல் அளித்துள்ள தீர்ப்பு முக்கியமானது. ”கைதிகள் தண்டனைக் குறைப்பைக் கோருவதற்கு அரசியல் சட்ட அடிப்படையில் உரிமை பெற்றவர்கள் அல்லர் என்ற போதிலும் தண்டனைக் குறைப்பை அளிக்க வேண்டியது அரசின் சட்டப்பூர்வமான கடமைகளில் ஒன்று. மாநில அரசுகள் இருக்கிற விதிகளுக்குட்பட்டு அரசியல் சட்ட பிரிவுகள் 72 மற்றும் 161 பிரிவின் கீழ் பொது மன்னிப்பு அளிக்க விதிமுறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். கைதிகளை வகை பிரிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என்ற போதிலும் இவ்வாறு மேற்கொள்ளப்படும் வகைப்பாடு குடிமக்களுக்கிடையே சமத்துவ உரிமையை அளிக்கும் அரசியல் சட்டப் பிரிவு 14க்கு முரணாக அமையக் கூடாது என்பதை மேற்கண்ட தீர்ப்பு உறுதிப்படுத்தியது.

இதுவிசயத்தில் தமிழ்நாடு அரசு வகுக்கும் வழிகாட்டு நெறிகள் மதப் பாகுபாடு பார்க்கின்றன. அது அரசமைப்பு சட்டப் பிரிவு 14க்கு எதிரானது. அரசமைப்புச் சட்டம் ஒருபுறம் இருக்கட்டும், அதனினும் மேம்பட்ட சமூகவியல் கண்ணோட்டம் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுக்கு அடிப்படையாக இருக்கின்றது என்று நமக்கு நாமே பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அதற்கு ’சமூகநீதி’ என்று பெயரிட்டு கொண்டாடுகிறோம். அந்த சமூகநீதி என்பதை கல்வி, வேலைவாய்ப்பில் பார்ப்பனர்களோடு பார்ப்பனரல்லாதோர் பங்குபோட்டுக் கொள்வதாக மட்டும் சுருக்கி விடுவதால் அது அதன் ஆன்மாவை இழந்துவிடுகிறது.

பாபர் மசூதி இடிப்போடு தலைவிரித்து ஆடத் தொடங்கிய இந்துத்துவம் தமிழ்நாட்டையும் விட்டுவைக்காததன் எதிர்வினைதான் கோவை குண்டுவெடிப்பு ஆகும். கோவையில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைதான் கோவை குண்டுவெடிப்புக்கு வழிவகுத்தது. அந்த இந்துத்துவம் இன்றைக்கு இந்திய அரசில் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாசிசப் பாதையில் நாட்டை இழுத்துச் செல்கிறது. அதனால் ஆக அதிகபட்சமான ஒடுக்குமுறைக்கு இஸ்லாமியர்கள்தான் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களும் விதிவிலக்கின்றி இந்திய அரசியலின்  நச்சு சுழலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் கண்ணோட்டத்துடன்தான் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைப் பிரச்சனையை அணுக வேண்டும். இந்த அரசியல் கண்ணோட்டத்தை நீக்கிவிட்டு சட்டச் சிக்கலாக இதை  சுருக்கிப் பார்த்துவிடக்கூடாது.  இந்த அரசியல் கண்ணோட்டத்தை நீக்கிவிட்டால் அது இந்துத்துவ சக்திகளின் வீச்சுக்கு பலியாவதாகவே அமைந்துவிடும்.

அதிமுகவை விட திமுக முற்போக்காக இருக்கிறதா? என்பதல்ல மக்களின் அளவுகோல். இத்தனைகாலமாக இப்படித்தான் மதிப்பீடுகள் செய்யப்பட்டன; கதையாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இனியும் அப்படி காலம் தள்ளமுடியாது. இந்த அரைகுறை கொள்கை அரசியலையும் இரட்டைத்தனங்களையும் கேள்விக்குள்ளாக்கிடும் சூழல்  இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ளது. எனவே, இனி சுயமரியாதை, சமூக நீதி, மனித உரிமைகள், மனித மாண்பு, மதச்சார்பின்மை ஆகிய விழுமியங்களுக்கு ஊடாகத்தான் திமுக அரசின் நிலைப்பாடுகளை மதிப்பிட வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கான போராட்டத்தின் வரலாற்றுப் பின்புலம் என்பது இந்திய அரசு ஈழத் தமிழர் மீது  நிகழ்த்திய விரிவாதிக்க ஒடுக்குமுறையில் இருந்து தொடங்குகிறது. இராஜீவ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் முள்ளிவாய்க்காலில் இலட்சத்திற்கும் மேற்பட்டோரை இந்திய அரசு கொன்று குவித்தது என்பதே மக்களின் கருத்து. எனவே, ஒருவருக்கு வெட்டிய குழியினில் ஒன்றரை இலட்சம் பேரைப் புதைத்தப்பின் எதற்கிந்த மூவரைத் தூக்கில் போட வேண்டும் என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்தது. அதை ஒட்டியே ஈகி செங்கொடியின் தற்கொடை நடந்தது. இந்தப் பின்புலத்திலேயே மூவருக்குமான தூக்குகயிறு அறுந்தது , எழுவர் விடுதலைக் கோரிக்கையும் திமுக, அதிமுக கட்சிகளால் ஏற்கப்பட்டது. ஆனாலும், ஒன்றிய அரசு இதற்கு குறுக்கே நிற்கிறது.

ஈகி செங்கொடியின் இறுதி ஊர்வலத்தில்,

”இது மூன்று தமிழரின் உயிரல்ல, முத்தமிழ்நாட்டின் மானம்” என்றும் “ செத்து விழுந்தது செங்கொடியல்ல, இந்திய தேசிய கொடியாகும்” என்றும் முழக்கங்கள் எழுந்தன. அதுபோல்,  இப்பிரச்சனை 38 இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையல்ல, தமிழர்களின் இந்துத்துவ எதிர்ப்புக்கான அமில சோதனையாகும்.

எழுவர் விடுதலையை எதிர்நோக்கி அற்புதம்மாக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். 38 இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக முபீனாக்கள் கண்ணீருடன் காத்திருக்கின்றனர். கண்ணீருக்கு ஏது மதம், எதற்கு இந்தப் பாகுபாடு? இந்திய அரசின் இந்திய தேசிய மற்றும் இந்துத்துவ தேசிய ஒடுக்குமுறையால் தமிழ்த்தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இது. எந்தப் பாகுபாடும் காட்டாமல் கண்ணீரைத் துடைப்பதில்தான் தமிழ்த்தேசியம் மலர்கிறது. அதில்தான் சனநாயகம் உயிர்த்துடிப்புடன் வாழ்கிறது.

எழுவர் விடுதலையில் கொள்கை முடிவெடுத்தது போல் 38 இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையிலும் திமுக கொள்கை முடிவெடுக்கட்டும். சட்டச் சிக்கலையும் தில்லியின் தடைக்கற்களையும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

திமுகவின் சமூக நீதி அரசியலில் இந்துத்துவ எதிர்ப்பின் வரம்பென்ன என்பதை தீர்மானிப்பது நெடுநாள் சிறைவாசிகள் விடுதலை விவகாரமே ஆகும் என்பதை திமுக தலைமை மறந்துவிட வேண்டாம்.

கண்ணகியின் கண்ணீர் மதுரையை சுட்டெரித்தது. அரசியல் பிழைத்தோருக்கு முபீனாக்களது கண்ணீரும் சுடும்!

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW