உயிரைக் காப்பாற்ற தஞ்சம் கேட்டு வந்தது சட்ட விரோதமா?

02 Aug 2021

– கேள்வி எழுப்புகிறார்  இளந்தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்

உரிமை மின்னிதழ் நேர்காணல்

2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் வந்ததில் இருந்து தமிழ்நாட்டில் வாழும் ஏதிலிகள் தொடர்பான கோரிக்கை முன்னுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் உள்ள பிரதானக் கட்சிகள் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ஈழ ஏதிலிகளின் குடியுரிமை தொடர்பான வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் களம் கண்டன. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இது தொடர்பான வழக்கு ஒன்றில் ஒன்றிய அரசு தமிழ் ஏதிலிகளை சட்டவிரோத குடியேறிகள் என்று சொல்லியிருப்பது தமிழ்நாட்டில் ஏதிலி தொடர்பான சிக்கல் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் நலன் தொடர்பில் தொடர்ச்சியாக செயல்பட்டுவரும் இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் இது குறித்து ’உரிமை’ மின்னிதழுக்கு வழங்கிய பேட்டி.

  1. இலங்கை ஏதிலிகள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்றும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று முன் தினம் இந்திய ஒன்றிய அரசு கூறியுள்ளதே இது குறித்து?

கடந்த 17-6-2019 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வாழும் தமிழ் ஏதிலிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான தீர்ப்பொன்றை வழங்கியது.

இந்த வழக்கைப் போட்டது திருச்சி கொட்டப்பட்டு முகாமைச் சேர்ந்த 65 பேர். இவர்கள் எல்லோரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மலையகப் பின்புலம் கொண்ட தமிழர்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.  தீர்ப்பை வழங்கியவர் நீதியர் ஜி.ஆர். சுவாமிநாதன். இந்திய வம்சாவழித் தமிழர், இலங்கையின் வடக்கு கிழக்கைப் பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழர் என்ற பாகுபாடின்றி ஏதிலியரின் குடியுரிமைச் சிக்கலாகவே அணுகி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

”மாவட்ட ஆட்சியரிடம் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சியர் அதை மத்திய அரசுக்கு முன் அனுப்ப வேண்டும்,  16 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பில் சொல்லப்பட்டது.   ஆயினும் ஏதிலிகளுக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படாத நிலையில், அந்த 65 பேர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் போட்டு மீண்டும் முறையிட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்கும்போதுதான் ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகம் ‘சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுக்கவியலாது” என்ற காரணத்தை மீண்டும் சொல்லியுள்ளது. முந்தைய தீர்ப்பில் இதை மறுத்து குடியுரிமை கொடுப்பதற்கான காரணங்களும் வழிவகையும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனால் சுட்டிக்காட்டப்பட்டது.

”மனுதாரர்கள் தங்கள் உயிருக்கும் உறுப்புகளுக்கும் கடுமையான அச்சுறுத்தலை சந்தித்ததால் இந்தியாவிற்கு வந்தனர் என்பதை இந்திய் அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் இந்தியாவில் அடைக்கலம் தேட  வேண்டியதாயிற்று. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவர் விசாவுக்காக காத்திருப்பாரென எதிர்பார்க்க முடியாது. அதனால், சட்டத்தின் செய்நுட்ப தேவைகள் என்ற கண்ணாடி வழியாக மனுதாரரின் வழக்கை ஆராய்வது மாந்தநேயமுள்ள அணுகுமுறையாக தோன்றவில்லை.

”ஒன்றிய அரசு வேறு வழியில்லை என்று உணரவும் இந்திய குடியுரிமை சட்டம் 1955 ல் பிரிவு 5 க்குப் பின்னால் ஒளிந்து கொள்ளவும் தேவையில்லை. இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 இல் பிரிவு 5(1) இன் தொடக்கத்தில் உள்ள உட்பிரிவுகளின் கடுமையான கட்டுத்திட்டங்களைத் தளர்த்த வெளிப்படையான அதிகாரம் இல்லாவிட்டாலும் இறையாண்மையுள்ள அரசுக்கு அவ்வாறு தளர்த்த உள்ளீடான அதிகாரம் உண்டு என்பதை இந்நீதிமன்றம் நிலைநிறுத்த வேண்டும். உண்மையில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 இன் கீழ் எழுகிற வழக்குகளில் விதிகளைத் தளர்த்தும் உள்ளீடான அதிகாரம் உள்ளதை மாண்புமிகு தில்லி உயர்நீதிமன்றம் பெலிக்ஸ் ஸ்டீபன் காயே எதிர் அயலவர் மண்டல பதிவு அலுவலகம் என்னும் வழக்கில் கண்டுணர்ந்து உறுதிசெய்துள்ளது.”

மேற்படி இரண்டு கூற்றையும் மறுத்து, ’சட்டவிரோதக் குடியேறிகள்’ என்பது செய்நுட்பக் காரணமல்ல, சட்டக் காரணம். ”இறைமையுள்ள அரசு இதை தளர்த்த முடியும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கக் கூடாது” என்றும் வெளியுறவு அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

2. இந்திய வெளியுறவு அமைச்சகம் குடியுரிமை மறுத்து ’சட்டவிரோத குடியேறிகள்” என்று சொல்லக் காரணம் என்ன?

நேற்று முன் தினம் போடப்பட்ட பதில் மனுவில் அதை வெளிப்படையாக சொல்லியுள்ளது ஒன்றிய அரசு. இவர்கள் சட்டவிரோத குடியேறிகள் இல்லை என்று தளர்த்தினால் அது வெளிநாட்டில் இருந்து வெள்ளம் போல் சட்டவிரோதக் குடியேறிகள்  வருவதற்கு வழிவகுத்துவிடும் என்று சொல்லிவிட்டு வங்கதேசம், ஆப்கன், மியான்மர்(ரோஹிங்கியா), ஆப்பிரிக்கா, மத்திய ஆசிய நாடுகள் என்றொரு பட்டியலைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களே. இஸ்லாமியர்களின் வருகையே உள்நாட்டுப் பாதுகாப்புப் பற்றிய பிரச்சனையாக முன்வைப்பர். பிரச்சனை மிகவும் ஆழமானது.  அதன் வேர்கள், கட்டமைப்பு வகையிலான இஸ்லாமிய எதிர்ப்புவாதம் கொண்ட  இந்திய அரசமைப்பு, இந்திய – பாகிஸ்தான் பிரிவினை என நீளக் கூடியது.

அண்மையில் கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் தனது இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தில் இருந்து பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசம் ஆகிய நாடுகளில் ‘வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினர்’ (persecuted minorities)   என்று இஸ்லாமியர் அல்லாதவர்களை வரையறுத்து குடியுரிமை தரச் சொல்கிறது. அதுபோலவே, இலங்கையில் வஞ்சிக்கப்பட்ட சிறுபான்மையினராக தமிழர்கள் உள்ளார்கள் என்று ஏற்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கையோடு தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, அதில் இலங்கை அரசோடு இருக்கும் தனது நட்புறவுக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை காட்டி தமிழ் ஏதிலிகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.

3. தற்காலிக குடியுரிமையாவது வேண்டும் என்று காத்திருந்த ஈழ ஏதிலிகளின் வாழ்வில் ஒன்றிய அரசின் இந்த கருத்து  எவ்வாறான   தாக்கங்களை ஏற்படுத்தும்?

மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். தெற்காசியப் பிராந்திய அளவில் சமகாலம் என்பது தேசிய இனங்களின் துயரம் தோய்ந்த காலம். இலகுவான குறுக்கு வழிகள் நம்முன் இல்லை. ஈழ ஏதிலிகளுக்கு இரண்டு சிக்கல் இருக்கிறது. ஒன்று அவர்களுக்கு ஏதிலிகள் என்ற சட்டத் தகுநிலை இல்லை. இரண்டாவது, இங்கேயே 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த பின்னும் குடியுரிமை கொடுக்கப்படவில்லை. இந்திய அரசு ஏதிலிகள் தொடர்பான 1951 ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் 1967 வகைமுறை உடன்படிக்கை ஆகிய பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒப்பமிடவில்லை. அதேநேரத்தில் 1948 உலகளாவிய மாந்தவுரிமைச் சாற்றுரையில் இந்தியா ஒப்பமிட்டுள்ளது. எனவே, தன் விருப்பம் போல் தலைமுறை தலைமுறையாக எவரையும் சட்டவிரோத குடியேறிகளாக முகாம்களில் அடைத்து வைக்க முடியாது.  இந்தியாவில் ஏதிலிகளுக்கான உள்நாட்டுச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதன் மூலமே ஏதிலிகள் என்ற தகுநிலையை தமிழர்கள் பெற முடியும். அதனடிப்படையிலேயே குடியுரிமைக்கான கதவுகளையும் திறக்க முடியும்.

4. திமுக    தனது தேர்தல் அறிக்கையில்  ஈழ அகதிகளின் குடியுரிமை குறித்து முன்முயற்சி எடுக்கப்படும் என்று சொல்லியுள்ள் நிலையில் மத்திய அரசின் இந்நிலைப்பாட்டுக்கு என்ன எதிர்வினையாற்ற வேண்டும்?

திமுக அரசு தம்மால் இயலக்கூடியவற்றில் இருந்து தனது பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும். ஈழ ஏதிலி தொடர்பில் முதலில் செய்ய வேண்டியது சிறப்பு முகாமைக் கலைக்க வேண்டியதாகும். இதை திமுக அரசு ஒரு கையெழுத்தில் செய்துவிட முடியும்.

வட இந்தியாவுக்குள் ’சட்டவிரோத குடியேறிகள்’ வந்துவிடுவர் என்ற காரணத்தின் பெயரால் இன வழிப்பில் இருந்து தப்பி வந்த தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பதை ஏற்க முடியாது என்று ஒன்றிய அரசிடம் உரிமை  முழக்கம் எழுப்ப வேண்டும். முதலில் சட்டவிரோத குடியேறிகள் என்ற தகுநிலையை மாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஏதிலிகளுக்கான தனிச்சட்டம் இயற்ற இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதற்கிடையில், கல்வி, வேலைவாய்ப்பு, தரமான் குடியிருப்பு வசதிகள், காவல் துறை கெடுபிடிகளை இல்லாதொழித்தல் என மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW