ஜூன் 7 முதல் முழுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்! வறியோர் வாழ்வு முடங்கிவிடாமல் மீட்டெடுக்கப் போர்க்கால அடிப்படையில் பொருளியல் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்!

02 Jun 2021

தமிழக அரசுக்கு தமிழத்தேச மக்கள் முன்னணி சார்பாக பொதுச்செயலாளர் பாலன் வேண்டுகோள்

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொள்ள கடந்த மே 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்ட முழுமுடக்கம், தளர்வுகளற்ற முடக்கமாய் மாற்றப்பட்டும் நீட்டிக்கப்பட்டும் ஜூன் 7 ஆம் நாள் காலை 6 மணி வரை திட்டமிடப்படுள்ளது. தொற்றுப் படிப்படியாய் குறைந்துவருகிறது, முழுமுடக்கத்தை நீடித்துக்கொண்டே இருக்க முடியாது என்ற முதல்வரின் குறிப்பு ஆறுதல் தருகிறது. அதேநேரத்தில் மக்களின் ஒத்துழைப்பை சார்ந்ததுதான் அது என்ற பொருள்பட அவர் சொல்லியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.  மருத்துவக் கட்டமைப்பு விரிவாக்கப்பட்டதையும் பரிசோதனை விரிவாக்கத்தையும் தொற்று எண்ணிக்கையையும் சார்ந்தது  அது. இதில் முழுமுடக்கக் காலத்தை சீரிய முறையில் பயன்படுத்தி மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, பரிசோதனையை விரிவாக்குவதன் மூலம் தொற்று எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முதன்மையாகப் பொறுப்பேற்க வேண்டியது அரசே ஆகும். தொற்று எண்ணிக்கையைக் குறைப்பதற்கு ஓர் இலகுவான தெரிவாக முழுமுடக்கத்தைப் பாவிப்பதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இனியேனும் பகுதியளவிலான கட்டுப்பாடுகளின் வழியாக தொற்று எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவர முயல வேண்டும்.

முதல் அலையின் முழுமுடக்கம் சிறுகுறு தொழில்செய்வோர், சிறுவணிகர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களிடம் ஏற்படுத்திய பெருந்தாக்கத்திலிருந்து அவர்கள் மீண்டெழ முயன்றுக் கொண்டிருக்கும்போதே இரண்டாம் அலையின் முழுமுடக்கம் அவர்கள் மீது அழுத்தப்பட்டுவிட்டது. சிறுகுறு தொழில் செய்வோரிடம் சேமிப்பு கிடையாது, சொந்த பணத்தை முதலீடு செய்தோர் மிக குறைவு, பெரும்பாலோர் கடன் முதலீடு செய்தோர். சிறுகுறுதொழில் செய்வோரும் சிறுவணிகர்களும் அரசின் பெரிய உதவியேதும் இன்றி தன் சொந்த உழைப்பில் முன்னேறி வந்தவர்கள். ஆனால், அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதன் பேரில் குறுக்கே வந்துள்ள அரசு, அவர்களின் பொருளியலின் மீது பெருந்தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

சிறுகுறு தொழில் செய்வோர், சிறுவணிகர்கள் மீது விழும் அடியென்பது அப்பிரிவினரோடு முடிந்துவிடுவதல்ல, உற்பத்தி – விநியோகச் சங்கிலியின் அடுத்த அடுத்த கண்ணிகளைப் பெருந்தொற்றுப் பரவல் போல் பாதிக்கக்கூடியதாகும். எனவே, முழுமுடக்கம் என்று முக்காடுப் போட்டுக் கொண்டிருப்பதற்கான நேரம் இதுவல்ல, போர்க்கால அடிப்படையில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு இவர்தம் சரியும் வாழ்வுக்கு முட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, முழு முடக்கம் அமலாகும் பகுதிகளிலும் காலகட்டங்களிலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும்  மாதந்தோறும் 6000 ரூ உதவித்தொகை கொடுக்க முன்வர வேண்டும். இது இப்போதைய ஆளுங்கட்சி எதிர்கட்சியாக இருந்தபோது  எழுப்பிய கோரிக்கைதான். இப்பிரிவினர் ஏற்கெனவே வாங்கியுள்ள கடன்களைக் கட்டுவதற்கு ஆறு மாத காலத்திற்கு அவகாசம் கொடுக்க வேண்டும். அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுக்களில் தரப்பட்டுள்ள கடன்களைக் கட்டுவதற்கு ஆறு மாத கால அவகாசம் தர வேண்டும், புதிய கடன்களை தந்துதவி தொழில் மீட்பதற்கென்று ஆலோசனை வழங்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.

கடந்த அலை போலன்றி,வேளாண் பிரிவினரும் இரண்டாம் அலையில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வேளாண் துறையை மீண்டெழச் செய்ய தனிக்கவனம் செலுத்த வேண்டும்.  குறிப்பான ஒவ்வொரு துறையினரையும் மீட்பதற்கென்று பொருளாதார திட்டமிடலை செய்வதற்கென்று ஒரு குழுவை அமைக்க வேண்டும்.

இந்த காலாண்டிற்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) முடிவுகள் நேற்று முன் தினம் வெளிவந்துள்ளன. இந்த பெருந்தொற்றுக் காலத்தில் எதிர்பார்த்த அளவுக்கான பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் அதற்கான காரணமாக, வெளிநாட்டு மதிப்பீட்டு நிறுவனங்கள் சொல்லியிருப்பது முழுமுடக்க ஆதரவாளர்கள் கவனத்திற்குரியது. இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக முழுமுடக்கம் என்று முடிவெடுக்காமல் மாநில அளவிலும் பகுதியளவிலும் முடிவெடுக்கப்பட்டு முடக்கம் அமல்படுத்தப்பட்டதால்தான் இத்தகைய முடிவுகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளன. இதை கருத்தில் எடுத்து, கண்ணைக் மூடிக்கொண்டு ‘மாநில அளவில் தளர்வுகளற்ற முழுமுடக்கம்’ என்ற பாணியை நாம் அடியோடு கைவிட வேண்டும்.

ஒரு பேரிடரை எதிர்கொள்வதற்கு இன்னொரு பேரிடரை உருவாக்குவதா? மருத்துவப் பேரிடரை எதிர்கொள்வதற்கு அமலாக்கப்படும் முழுமுடக்கம் என்பது பொருளியல் பேரிடரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.  அடுத்தஅடுத்த அலைகள் வரக்காத்திருக்கின்றன என அறிவியல் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. முழுமுடக்கத்தைப் போட்டு தொற்றைக் குறைப்பதும் பிறகு தளர்த்த தொடங்கும் போது தொற்று அதிகரிப்பதும் என ஒட்டுமொத்த செய்முறையும் ஒரு விளையாட்டு போல் மேற்கொள்ளப்படுகிறது. மாதச் சம்பளக்காரர் அல்லாத பிரிவினர்களுக்கு முழுமுடக்கத்திற்குள் தள்ளிவிடுவது என்பது மூச்சடக்கி கடலுக்குள் முங்கச் சொல்வது போலாகும். கொரோனா பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது ஒரு நாளிலோ ஓர் அலையுடனோ முடியப்போவதில்லை. பல மாதங்கள் தொடரப் போகும் போராட்டம் என்பது  தெளிவாகியுள்ளது. இந்நிலையில், பொருளியல் நடவடிக்கைகளைத் தொடங்கி, கூடவே தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு அமலாக்க வேண்டும்.

முழுமுடக்கத்தை தீர்வென்று முழங்கும் அரசியல் கட்சியினர், அதிகார வர்க்கத்தினர் தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் நடந்துள்ள திட்டமிடலின்மையைப் பற்றி வாய்திறப்பதில்லை. மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்துவது பற்றி பேசுவதில்லை. இது விசயத்திலெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இருப்போர்தான், தொற்று எண்ணிக்கை அதிகரித்தவுடன் ’லாக்-டவுன்’ என்று கூச்சலிடுகின்றனர். அதாவது, மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்தத் தவறிவிட்டு ஒட்டுமொத்த சுமையையும் மக்கள் மீது சுமத்தும் மோசடியாகத்தான் முழுமுடக்கம் அறிவிக்கப்படுகிறது.

முழுமுடக்கம் எந்த காரணிகளின் அடிப்பையில் தேர்வு செய்யப்படுகிறது? முழுமுடக்கக் காலத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் என்ன? அதற்கு தேவையான வளங்கள் என்ன? முழுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வரையறைகள் என்ன? இவை பற்றியெல்லாம் எந்தப் பார்வையும் இல்லாமல்தான் முழுமுடக்கம் அறிவிக்கப்படுகிறது. உண்மையில் அறிவித்த பிறகுதான் இது பற்றியெல்லாம் சிந்திக்கவே தொடங்கின்றனர். மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, பெருந்தொற்றுக்கெதிரான தொடர் கண்காணிப்புப் பொறிமுறையை உருவாக்கி, அதை அமலாக்காமல் இந்த சுழலிலிருந்து நாம் வெளிவர இயலாது. அபிமன்யு சக்கரவியூகத்திற்குள் சென்று வெளிவர முடியாமல் மாட்டிக் கொண்டதுபோல் அரசும் முழுமுடக்கத்திற்குள் சென்று வெளிவர முடியாமல் மாட்டிக் கொள்வதைத் தான் ஒவ்வொருமுறையும் காண முடிகின்றது.

கடந்த பிப்ரவரியில் கொரோனாவை வென்றுவிட்டதாக ஓலமிட்ட ஒன்றிய அரசு இரண்டாம் அலை சுனாமிப் போல் எழுந்துவந்தபோது கைவிரித்துவிட்டு மலையுச்சி மேல் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்கிவிட்டது. புள்ளிவிவரங்களை அறிவிப்பதோடு தனது புனிதக் கடமை முடிந்துவிட்டதுபோல் செயல்படுகிறது. அதிகாரம் அனைத்தும் எனக்கென்று எக்காளம் பேசிய மோடி, இப்போது பொறுப்பனைத்தும் உனக்கு என்றும் மாநில அரசின் தலைகளில் பெருந்தொற்று நெருடிக்கையையும் துயரங்களையும் வலியையும்  தூக்கி வைத்துவிட்டார். தடுப்பூசி வாங்கிக் கொள்வதையும் அந்தந்த மாநில அரசுகளே செய்து கொள்ள வேண்டும், தடுப்பூசி விலை நிர்ணயத்தில் ஒன்றிய அரசு , மாநில அரசு என்ற பாரபட்சம் எனக் கொள்கை குளறுபடிகளும் கைகழுவல்களும் ஏராளம், ஏராளம்.

எதிர்க்கட்சிகள் முழுமுடக்கத்தை கோருவது, அதன் அமலாக்கத்தைக் கண்காணிப்பது, அதற்கு கண்டன அறிக்கைகள் வழங்குவது, படைப்பூக்கமிக்க ஆலோசனைகள் வழங்குவது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்த, தடுப்பூசி வாங்க, அடுத்த அலையை எதிர்கொள்வதற்கான போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள, பாதிப்புற்ற சமூகப் பிரிவினருக்கு வாழ்வைத் தாங்கிப் பிடிக்க ஆயிரமாயிரமாய் தேவைப்படும் கோடிகளை வழங்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்த முன்வர வேண்டும். இந்த ஆண்டு வரசெலவு திட்டமிடலில் ஆயுதம் வாங்கி குவிப்பதற்கும், இராணுவத்திற்கு ஆள் எடுப்பதற்கும் என முன்னுரிமையற்ற செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியையும், புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணிகளை நிறுத்தி அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியையும், கொரோனா பேரிடருக்கெனத் திரட்டப்பட்டுள்ள பிரதமரின் பி.எம். கேர் நிதியையும், பெட்ரோல், டீசலுக்கு வரிக்கு மேல் வரிப் போட்டு வாரி சுருட்டியுள்ள நிதியையும்உயிர்க் காக்கும் மருத்துவக் கட்டமைப்பைப் பலபப்டுத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும்.

இப்போது தமிழக அரசுக்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்களுக்கும் தேவை கொரோனா பெருந்தொற்று தடுப்பையும் பொருளியல் வாழ்வையும் சேர்ந்தே பாதுகாக்க வேண்டும், முழுமுடக்கத்தை தீர்வாக்கக் கூடாது என்ற மனத்திட்பமும் ஒன்றிய அரசின் பிடறியைப் பிடித்து நமக்கு சேர வேண்டிய தொகையைப் பெற வேண்டும் என்ற போர்க்குணமும்தான். முழுமுடக்கத்தை முடித்துக்கொண்டு பகுதியளவிலான கட்டுப்பாட்டு முறைக்கு மாறுவது, மாதந்தோறும் 6000 ரூ நிதியுதவி, கடன் கட்ட கால அவகாசம், புதிய கடனுதவி உள்ளிட்ட பொருளியல் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது, மருத்துவக் கட்டமைப்பை உடனடித் தேவைக்கும் மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கும் ஏற்றாற் போல் பலப்படுத்துவது, இதற்கெல்லாம் தேவையான நிதியை ஒன்றிய அரசிடம் போராடிப் பெறுவது என்ற உறுதியுடன தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW