நீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.

18 Sep 2020

நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான நெருக்கடியில் தமிழகத்தில் வட்டார சாதி வேறுபாடு இன்றி அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன, இந்தாண்டு கல்வியில் முன்னேறிய நாமக்கல், மதுரை நகரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவரும், அரியலூர் தருமபுரி என கல்வி ரீதியாக பின்தங்கிய மாவட்டத்தை சார்ந்த இரண்டு மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டார்கள்.  இன்னொரு சமூக அளவுகோலாக சாதி அடிப்படையில் பார்த்தாலும், இந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மாணவர் பிரகாஷ், நீட் தேர்வில் முதலாவதாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா ஆகிய இருவரும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மிகவும் பின்தங்கிய வகுப்பு வன்னியர் சமூகத்தையும், பட்டியல் வகுப்பு பறையர் சமூகத்தையும் சார்ந்தவர்கள், ஆக சமூக ஆய்வு கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டாலும் கூட இது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களை பாதிக்கக் கூடிய ஒன்றாக, குறிப்பாக பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை எதிர்கால  குடும்ப மூலதனமாக கருதுகிற சமுதாயத்தில் கடும் நெருக்கடியை தோற்றுவிப்பதாக அமைந்திருக்கிறது.

கடந்த காலங்களில் தமிழகத்தில் எழுந்த திராவிட இயக்கம், தலித் மக்கள் இயக்கம், குறிப்பிட்ட சாதி அமைப்புகளின் இயக்கங்கள் கல்வியில் இட ஒதுக்கீடு கோரி எழுப்பிய சமூகநீதி கோரிக்கைகள் அனைத்தும் கூட சாராம்சத்தில் கல்வியை அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளிக்க கூடியதாக மாற்ற வேண்டும் என்ற கல்வியை மேலும் மேலும் பரவல் ஆக்குவதற்கான கோரிக்கைதான். மேலும் இந்த கோரிக்கைகளில் வளர்ச்சி ஏற்பட்டு பின்பு கிராமப்புற மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்வழியில் பயின்றவர்கள் பெண்கள் என கோரிக்கைகள் விரிவடைந்து அதனடிப்படையில் இடங்களை பகிர்ந்து அளிக்கக்கூடிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன, இது அடிப்படையில் தமிழகத்தில் கடந்த 80 ஆண்டுகளாக தொடரும் சமூகத்தின் பொது வளத்தை குறிப்பிட்ட சாரார் மட்டும் அனுபவிக்கக்கூடாது அனைவருக்கும் அனைத்து தரப்புக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பரவலாக்கம் ஜனநாயகம் என்கிற கொள்கை வழியின் தொடர்ச்சிதான். அதேபோல பள்ளிக் கல்வியில் இருந்து  உயர்கல்வி செல்வதற்கான நுழைவுத் தேர்வுகள் தொடக்கக்கல்வியிலே தேர்ச்சி வடிகட்டுதல் போன்றவை எல்லாம் கைவிடப்பட்டு நுழைவுத்தேர்வு ரத்து,  நடுநிலைப் பள்ளி வரை கட்டாய தேர்ச்சி என அனைவரும் உயர் கல்வியை நோக்கி செல்வதற்கு  கல்வி முறையில் ஜனநாயக மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் இந்த கொள்கை வழிக்கு நேர் எதிரானது நீட் தேர்வு முறையாகும், இது பரவலாக்குதல் என்ற ஜனநாயக கொள்கைக்கு எதிராக ஒன்றின் மேல் ஒன்று என அடுத்தடுத்த வடிகட்டல் தேர்வு முறைகளை வைத்து, தரப்படுத்துதல் என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் அத்தனை பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் கல்வியிலும் தொடர செய்வதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கிறது.

தமிழகத்திலேயே இத்தனை சீர்திருத்தங்கள் வந்தபோதிலும் இன்னும் தாய்மொழி வழி அற்ற அன்னிய மொழி கல்வி முறை ,வணிகமயமான பல்வேறு கல்வி அமைப்பு பாடத்திட்ட முறைகள், ஆராய்ச்சி தொழில்நுட்பம் அறிவியலை வளர்க்க முடியாத ஒட்டுமொத்தமான பின்தங்கிய கல்வி அமைப்பு முறை என தீர்க்கவேண்டிய சிக்கல்கள் ஏராளமாக இருக்கின்ற சூழலில்,

நீட் தேர்வு திணிப்பு சுமை என்பது தமிழகம் ஏற்கனவே தனக்கு தேவையற்றது ஜனநாயகத்திற்கு விரோதமானது என தூக்கி எறிந்த சுமையை மீண்டும் கட்டாயமாக சுமக்க வேண்டும் என பின்னோக்கி தள்ளுவதாகும்.

அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு தேவை என்பதை மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் மாநிலங்கள் மீது வலிந்து திணித்து இருக்கின்றன, ஒற்றை ஆட்சி ஒற்றை சந்தை என்ற அதிகார மையப்படுத்தல் என்ற பார்வையை கொண்ட இந்நிறுவனங்கள், தன் சர்வாதிகார கொள்கையை நியாயப்படுத்த ,நடைமுறை காரணங்களாக மருத்துவ கல்வியில் தனியார் நிறுவனங்களின் நிதிக் கொள்ளை முறைகேடுகள் ஏழை எளிய மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதை தனது வாதப்பிரதிவாதங்கள் ஆக எடுத்துக் கொண்டன, கல்வியில் தனியார்மயத்தை வணிக மையத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் நீதியாளர்களே அதில் உள்ள கேடுகளை எதிர்க்கும் ஜனநாயக காவலர்களாக வேஷம் போடுவது தான் இதிலுள்ள வேடிக்கை.

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளில் அகில இந்திய நீதிமான்கள் வாதாடிய எந்த மாற்றமும் மருத்துவக் கல்வித் துறையில் நிகழவில்லை, முன்பு தனியார் மருத்துவ கல்லூரிகள் கொள்ளையடித்தது போய் இப்பொழுது தேர்வு நடத்துகின்ற பன்னாட்டு தனியார் நிறுவனம், அந்த நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயாரிப்பதற்காக புற்றீசல்கள் போல உருவாகி இருக்கின்ற தனியார் பயிற்சி மையங்கள், இன்றைக்கு மேலும் பல்லாயிரம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து கட்டணமாக சுருட்டி கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் இருக்கின்ற 4,000 மருத்துவக்கல்லூரி இடங்களுக்கு 3 லட்சம் மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களுக்கு பணத்தைக் கட்டி படிக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2006ல் கருணாநிதி அரசு  நுழைவுத் தேர்வுகள் ரத்து, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்  கல்லூரிக் கல்வியில்  சேர்ந்து கொள்ளலாம் என்ற அரசாணை  மூலமாக தனியார் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களின் பணம் கொள்ளை, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்து  நுழைவு தேர்வு நெருக்கடி என்பதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவந்தது.

நீட் தேர்வு வந்த பிறகு தமிழகத்தை பொறுத்தவரை மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் தேவையற்ற சுமைகள் தான் கூடி இருக்கின்றன, இன்றைக்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் யாரும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு நேரடியாக மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவர்கள் இல்லை, 2 அல்லது 3 வருடம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்துவிட்டு அதன்பிறகு நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள்தான் இன்று மருத்துவ கல்லூரி மாணவர்களாக இருக்கிறார்கள், இது இரண்டு மூன்றாண்டு படித்தும் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களுக்கும் குடும்பத்திற்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி மாணவர்களை தற்கொலைக்கு தள்ளி வருகிறது.

2017 வரை நீட் இல்லாத காலத்தில் அந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள்தான் பெரும்பான்மையானோர் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர் அடுத்து நாமக்கல் போன்ற இடங்களில் உள்ள 12 ஆம் வகுப்பு மட்டும் நடத்தும் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் தான் மருத்துவக்கல்லூரியில் சேர முடியும் என்ற மோசடி தமிழ்நாட்டில் நிகழ்கிறது என்ற குற்றச்சாட்டை விட இப்பொழுது பெரும் மோசடியாக நீட் நுழைவுத்தேர்வுக்கு அதைவிட அதிகமாக பல லட்ச ரூபாய் செலவழித்து கேரளாவுக்கும் வேலம்மாள் போன்ற கல்வி நிறுவனங்களுக்கும் கட்டி அழ வேண்டிய நெருக்கடி பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதைவிட பெரும் கொடுமை சம்பந்தமே இல்லாத மாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வு மையங்கள், தேர்வு மைய கெடுபிடிகள், நுழைவு தேர்வை நடத்துகின்ற நிறுவனம் எது, யார் திருத்துவது, மதிப்பெண் போடுவது, மதிப்பெண்ணில் தவறுகள் நடந்தால் யாரிடம் முறையிடுவது என எந்த அருகாமை வாய்ப்புகளும் தெளிவும் இல்லாத பின்தங்கிய சமூக நிலைமையிலும் பெற்றோர்களும் மாணவர்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒரு சில பெற்றோர்கள் வேறு மாநிலங்களில் செல்லும்போது இறந்தும் போயினர், எதற்கு இந்த தூரத்து அகில இந்திய சுமை, அகில இந்திய சந்தை வாய்ப்பை தேர்வு வாய்ப்பை கைப்பற்றிக் கொள்வதற்கு வாய்ப்புள்ள தமிழகத்திலும்  பிற மாநிலங்களிலும் உள்ள சிறிய மேல்தட்டு கூட்டத்திற்காக, ஒட்டுமொத்த ஏழை எளிய கிராமப்புற நடுத்தர வர்க்க மக்களும் இந்த சுமையை ஏன் சுமக்க வேண்டும் என்ற கேள்வி நியாயம் பேசும் நீதிவான்களுக்கு எலாதா ?

 

தமிழகத்தில் 250 பேருக்கு ஒரு மருத்துவர், 4000 இளங்கலை மருத்துவ கல்லூரி இடங்கள், மற்ற மாநிலங்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் முதுகலை மற்றும் பல்நோக்கு மருத்துவக் கல்வி இடங்கள், 30 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் என இந்திய அளவிலான சராசரியைவிட சர்வதேச தரத்திற்கு போட்டி போடக்கூடிய சூழலை நெருங்கிக் கொண்டிருக்கின்ற தமிழக மருத்துவ கல்வி கட்டமைப்பு மீது, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் , குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவக்கல்லூரிகள் , மிகக்குறைவான மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிக்கு பெரும் முதலீடுகளை ஒதுக்காத மத்திய அரசு, தன்னுடைய பின்தங்கிய தன்மையை சுமையை தமிழகத்தின் மீது ஏன் சுமத்த வேண்டும், மேலும் முதுகலை மருத்துவத்திற்கான நீட் தேர்வு மற்ற மாநிலங்களில் குறைவான இடங்களை கொண்டு தமிழகத்தின் இடங்களை பறிக்கின்ற கொடும் செயலை செய்கின்றது, மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் முதலீடு செய்து பெருமளவில் மருத்துவக் கல்வியை நிறுவனங்களை பரவல் ஆக்காமல், வட இந்திய மாநிலங்களில் உள்ள பெருநகரங்களில் மட்டும் நிறுவனங்களை வைத்துக்கொண்டு, அங்குள்ள சலுகை பெற்ற உயர்சாதி உயர் வர்க்க கும்பலின் நலனை மட்டுமே இதுவரை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்த கிராமப்புற ஏழை எளிய மக்களையும் கைவிட்டுவிட்டு ,சலுகை பெற்ற நகர்ப்புற மேட்டுக்குடி அதிகாரவர்க்க மாணவர் குழாமோடு ,அகில இந்திய தேர்வு என்ற பெயரில் நமது அனைத்து தரப்பு மாணவர்களையும் போட்டியிட சொல்லி தரம் பற்றி பேசுகிறது சமூக அறிவியல் புரியாத வீணர் கூட்டம் ,இதைத்தான் நாம் சொல்கிறோம் நமது கல்வி கொள்கையின் நோக்கம் பரவலாக்கல் ஜனநாயக படுத்துதல் ,இந்தியத்துவ நீட் தேர்வு கல்வி கொள்கையின் நோக்கம் தரப்படுத்துதல் திறமை என்ற பெயரில் சலுகை பெற்ற ஒரு வர்க்கத்தை மேல்தட்டு பிரிவை (elite force)உருவாக்குதல், எனவேதான் அநீதியான கொள்கை சுமையையும் நமது இடங்கள் பறிபோவதற்கான அகில இந்திய சுமையையும் ஏற்க மறுக்கிறோம்.

தமிழகத்தின் பட்ஜெட்டில் இந்த ஆண்டு கூட பள்ளிக் கல்விக்கு 30 ஆயிரம் கோடியும் உயர்கல்விக்கு 5000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது, இது ஏதோ எடப்பாடி பழனிச்சாமியின் கருணையோ தானமோ அல்ல, தொடர்ந்து தமிழகத்தில் கல்விக்கான முக்கியத்துவமும் வேட்கையும் இருந்து வருவதன் தொடர்ச்சி, ஆனால் மத்திய அரசு 4% கூட பட்ஜெட்டில் கல்விக்காக முறையாக ஒதுக்குவதில்லை ,மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனமான எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களை தமிழகத்தில் அமைக்கக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடினாலும், அதை மட்டும் அவர்களுக்கு கொடுப்பதற்கு பணம் ஒதுக்கி செயல்படுத்துவதற்கு ஆர்வமில்லை, ஆனால் நமது  மக்கள்  வரி பணத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிற கட்டமைப்புகளின், தரம் ,நடத்தை தேர்வுகளின் பண்புகள் பற்றி கேள்வி எழுப்பிக் கொண்டே நமது வளர்ச்சியின்  சுயேட்சை தன்மையை நமது இடங்களை அகில இந்திய தன்மைக்கு மாற்றவும் பறிக்கவும் முயற்சிக்கிறார்கள்.

தமிழகத்தின் கல்வி உரிமை கோரிக்கை ஏதோ குறிப்பிட்ட கட்சிகளின் ,இன்றுள்ள தலைமைகளின் அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல, பல பத்தாண்டுகளாக தொடரும் கல்வி பெறுவதற்கான தமிழகத்தின் ஜனநாயக வேட்கை, பாஜகவின் கூட்டணியில் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசையும், பாட்டாளி மக்கள் கட்சியின்  மருத்துவர் ராமதாசையும்  , நீட் தொடக்கத்தில் அமலுக்கு வரும்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நீட் தேர்வை எதிர்க்க வைத்திருக்கிறது , இதற்கு காரணம் அவர்களின் கொள்கைத் தெளிவோ, சமரசமற்ற போராட்டத் தலைமையோ அல்ல ,அதற்கு மாறாக மேலே குறிப்பிட்டது போல தமிழக மக்களின் கல்வி சார்ந்த ஜனநாயக வேட்கை உணர்வு, அதனால் ஏற்படும் அரசியல் நெருக்கடி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்கவைக்கிறது, ஆனால் இப்பொழுது கூட இவர்கள் தமிழகத்தின் நலன் சார்ந்து நீட் தேர்வை ஒழிப்பதற்கான ஒரு ஒன்றுபட்ட வழிமுறையை காணாமல், ஏற்கனவே தமிழக சட்டமன்றம் ஒரு மனதாக இயற்றிய நீட் விலக்கு மசோதாவை அமலாக்க தடையாக இருக்கிற மோடி அரசை எதிர்த்துப் போராடி அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்காமல், சட்டமன்ற லாவணி அரசியலுக்கும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் கால கோரிக்கையாகவும் மட்டுமே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்றைய தினம் கூட விவசாயிகள் நலன் முக்கிய பிரச்சினையாக இருக்கிற பஞ்சாப் மாநில அகாலி தள மத்திய அமைச்சர் கௌர் அவர்கள், விவசாய மசோதாக்களை எதிர்த்து மோடி அரசில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார், ஆனால் கல்வி பிரச்சினை பிரதானமாக இருக்கிற தமிழ்நாட்டிலிருந்து ஒரு அரசியல் கட்சி கூட இதுபோன்ற அரசியல் நெருக்கடியை கொடுப்பதற்கு தயாராக இல்லை, இந்த சந்தர்ப்பவாதத்தை புரிந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சி இந்த கட்சிகளை மட்டுமல்ல தமிழகத்தையும் உதாசீனப்படுத்தி தான் நடத்தி வருகிறது.  உண்மையைச் சொல்லப்போனால் இந்த இரட்டை நாக்கு சந்தர்ப்பவாதிகளை பயன்படுத்தி, அம்பலப்படுத்தி தமிழகத்தில் தனக்கான ஒரு ஆதரவு வர்க்கத்தை திரட்டி வருகிறது, சமூக அநீதியான நீட் தேர்வை டாக்டர் கிருஷ்ணசாமி அண்ணாமலை ஐபிஎஸ் போன்றவர்களை வைத்து நியாயப்படுத்தி, கல்வி வணிக  மாபியாக்களை எதிர்த்துப் போராடுவதாக, ஏழை எளிய மக்களுக்காக நிற்பதாக பம்மாத்து காட்டுகிறது, எனவேதான் நாம் குறிப்பிடுகிறோம் நீட் எதிர்ப்பை அரசியல் லாவணியாக மாற்றினால் மக்களுக்குப்  பயன்படாது, மாறாக தமிழகத்தின் கொள்கையான கல்வியை பரவல் ஆக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்கும், இந்துத்துவ இந்தியத்துவ கல்வி கொள்கையான தரப்படுத்தவதற்கும் மேட்டுக்குடி மயமாக்குவதற்கும் இடையிலான, போராட்டமாக தமிழக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டும் என கோருகிறோம்.

 

– பாலன்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW