சட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு

25 Jul 2020

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வண்ணாதாங்கல் பகுதியில் ஷாலினி (35) க/பெ ஜானி பால்ராஜன் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் ஷெனிசால் என்ற பெண் குழந்தை உள்ளது. ஷாலினி சட்டம் படித்து வரும் மாணவி ஆவார். ஷாலினியின் கணவர் ஜானி பால்ராஜ் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் போலீசாருக்கு பயந்து ஜானி பால்ராஜ் 2018 ஆம் ஆண்டில் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையில் செயல்படும் தனிப்படை போலீசார்  23.03.2020 அன்று மதியம் சுமார் 11.30 மணியளவில் வீட்டிலிருந்த ஷாலினி மற்றும் அவரது குழந்தை ஷெனிசால்  ஆகிய இருவரையும்  மிரட்டி வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அதன்பின் ஷாலினி வீட்டிலிருந்த மடிக்கணினி, கல்வி சான்றிதழ்கள், பத்திரம், செல்போன்கள், ஆதார் அட்டை ஆகியவற்றை பீரோவை உடைத்து எடுத்துள்ளனர். போலீஸ் வாகனத்தில் இருந்த ஷாலினி மற்றும் அவரது மகள் ஷெனிசால் ஆகிய இருவரையும் சுமார் நான்கு மணி நேரமாக வாகனத்திலேயே வைத்து சுற்றியுள்ளனர். பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் வேலூர் தெற்கு மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்துள்ள்ளனர். அப்போது வேலூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர், நாகராஜ்  மேலும் இவர்களோடு பெண் காவலர்கள் நாகலட்சுமி, புனிதா, காஞ்சனா ஆகியோர் இருந்துள்ளனர்.

இவர்கள் கூட்டாக இணைந்து 21.03.2020 அன்று மாலையில் இருந்து அடுத்த நாள் 22.3.2020 அன்று அதிகாலை 5.30 மணி வரை ஷாலினி மற்றும் அவரது குழந்தை ஷெனிசால் ஆகியோரை விடிய விடிய தூங்க விடாமல் பல்வேறு சித்திரவதைகளை நடத்தியுள்ளனர். குறிப்பாக ஷாலினி கைகளில் விலங்கிட்ட நிலையில், விரல்களின் நடுவே பேனாவை வைத்து இறுக்கமாக அழுத்தியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் சத்தமாக கத்தி அழுதுள்ளார். மேலும் நீண்ட நேரமாக இயற்கை உபாதை கழிக்க அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். அங்கிருந்த பெண் காவலர்கள், கடந்த இரண்டு வருடங்களாக உன் புருசன் உன்னோடு இல்லையே? நீ யாரோடு குடும்பம் நடத்துகிறாய்? என இழிவுபடுத்தி பேசியுள்ளனர். தாய் அழுவதைப் பார்த்த குழந்தை ஷெனிசால், தாயின் அருகாமையில் வர முயன்ற போது ஆய்வாளர் புகழ் லத்தியால் அடித்து தனிமைப்படுத்தியுள்ளார். இது போல் பல்வேறு சித்தரவதைகளை தொடந்து செய்துள்ளனர்.

22.03.2020 அன்று காலை சுமார் 9.00 மணியளவில் தெற்கு மகளிர் காவல் நிலையம் வந்த காட்பாடி சார்பு ஆய்வாளர் ராஜசேகர் என்பவர் ஷாலினியை பார்த்து மிகவும் இழிவான வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாலை சுமார் 3.00 மணியளவில் ஷாலினியை ஒரு பெஞ்சின் மீது உட்கார வைத்து, இரு கால்களையும் பெண் காவலர்கள் பிடித்துக் கொள்ள ஆய்வாளர் புகழ், சுமார் அரை மணி நேரம் இடைவிடாமல் லத்தியால் உடல் முழுவதும் அடித்துள்ளார். ஷாலினி மற்றும் அவரது மகள் மீது காவல்துறையினர் நடத்தும் சித்திரவதைகள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வேலூர் தெற்கு மகளிர் காவல் நிலைய கதவுகள் இரண்டு நாட்களாக மூடப்பட்டு இருந்துள்ளது. மேலும் ஷாலினி அவரது குழந்தை ஷெனிசால் ஆகிய இருவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் ஷாலினி தம்பி விக்னேஷ் த/பெ நாகராஜ் என்பவரையும் ஆய்வாளர் புகழ் தலைமையில் செயல்படும் போலீசார் சட்டவிரோதமாக கைது செய்து தெற்கு காவல் நிலையத்தில் இரு நாட்களாக அடைத்து வைத்திருந்துள்ளனர்.

23.03.2020 அன்று காலை சுமார் பத்து மணியளவில் ஷாலினியின் அப்பா நாகராஜ் (58), அம்மா நிர்மலா (49) ஆகியோரை தெற்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்து ஆய்வாளர் புகழ் அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு குழந்தை ஷெனிசாலை போலீசார் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் ஷாலினியை ரிமாண்ட் செய்ய முடிவு செய்த போலீசார், மருத்துவ தகுதிச் சான்று பெறுவதற்காக பெண்கிளான்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் பணியில் இருந்த ஆண் மருத்துவர் ஷாலினிக்கு உரிய மருத்துவ பரிசோதனை  செய்யவில்லை இதனால் மருத்துவரிடம் எனக்கு உடலில் பல்வேறு இடங்களில் போலீசார் லத்தியால் அடித்த வீக்க காயங்கள் உள்ளது. மேலும் உடலில் பல்வேறு பகுதிகளில் நகக்கீறல்கள் உள்ளது. மேலும் உடல் முழுவதும் வலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே என்னை பெண் மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுமதியுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அரசு ஆண் மருத்துவர் ரத்தக் காயங்கள் இருந்தால்தான், நான் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை வழங்க முடியும் என்று கூறியுள்ளார். மேலும்  சுமார்  அரை மணி நேரம் கழித்து  கொரோனா தொற்று சம்பந்தமாக சில கேள்விகளை கேட்டு விட்டு காவல்துறையிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழ் கொடுத்துள்ளார்.

அரசு மருத்துவரிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்ட போலீசார் காலை சுமார் 11.30 மணியளவில் சிவில் நீதிமன்ற நடுவர் சச்சிதானந்தம் முன்பாக, ஷாலினியை நிறுத்தியுள்ளனர். அப்போது சிவில் நீதிமன்ற நடுவரிடம் ஷாலினி தன்னையும் தனது குழந்தை மற்றும் தம்பிகளையும் கடந்த இரண்டு நாட்களாக சட்டவிரோதமாக கைது செய்து ஆய்வாளர் புகழ் தலைமையில் செயல்படும் காவல்துறையினர் சட்ட விரோத காவலில் வைத்துச் சித்திரவதை செய்தனர்  என்று தெரிவித்துள்ளார். இதனை குறித்துக் கொண்ட நீதிமன்ற நடுவர் சச்சிதானந்தம் ஷாலினியிடம் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது போலீசார் ஷாலினியின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஷாலினி நீதிமன்ற நடுவரிடம் என்னை போலீசார் அடித்ததில் உடல் முழுவதும் வீக்க காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் உள்ளதால் எனக்கு சிகிச்சை அளிக்க உதவுங்கள் என கேட்டுள்ளார். ஆனால் நீதிமன்ற நடுவர், சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஷாலினிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வராமல் 15 நாட்கள்  நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஷாலினிக்கு மருத்துவ உதவி கிடைக்கவில்லை. நீதிமன்றத்திலிருந்து ஷாலினியை,  சிறையில் அடைப்பதற்காக வாகனத்தில் போலீசார் கொண்டு செல்லும் வழியில் காவல் ஆய்வாளர் புகழ், எங்களைப் பற்றி நீ நீதிமன்ற நடுவரிடம் சொன்னதற்கு, உன் குடும்பத்தின் மீது வழக்கு போடுவேன் என்றும்  உன் அண்ணன் தம்பிகள் இருவர் மீதும் உன் பெற்றோர் மீதும் நான் வழக்குப் போட்டு, அவர்களையும் சிறையில் அடைப்பேன் என்றும் உன் குழந்தையையும் அனாதை இல்லத்தில் சேர்ப்பேன் என்றும் மிரட்டியுள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த ஷாலினிக்கு பிணை கிடைத்து 07.05.2020 அன்று வெளியே வந்துள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் ஷாலினியை மீண்டும் கைது செய்ய முயன்றுள்ளனர். இதனால் ஷாலினி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறுவதற்காக சென்னை சென்றுள்ளார் இவ்வேளையில் ஷாலினியை கைது செய்ய முடியாத காவல் ஆய்வாளர் புகழ் ஆத்திரமடைந்து பழிவாங்கும் நோக்கத்தோடு 28.05.2020 அன்று காலை சுமார் 11.00 மணியளவில் ஷாலினியின் அப்பா நாகராஜ் (58) அம்மா நிர்மலா (49) தம்பிகள் விக்னேஷ் மற்றும் ஜெயப்பிரகாஷ் இவர்களோடு குழந்தை ஷெனிசால் ஆகியோரை வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளார். ஆய்வாளர் புகழ் தலைமையில் செயல்பட்ட சார்பு ஆய்வாளர் ராஜசேகரன் மற்றும் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜெகன் ஆகியோர் இணைந்து ஷாலினியின் பெற்றோரிடம் உங்கள் அனைவரையும் பெண் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் ஆய்வாளர் புகழ் துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சாலினியின் பெற்றோர் போலீசார் கேட்டது படியே வெள்ளைக் காகிதத்தில் கையொப்பமிட்டு கொடுத்துள்ளனர். அதன்பின் ஆய்வாளர் புகழ் குழந்தை ஷெனிசால் குறித்து யாராவது கேட்டால்  எங்களால் குழந்தையை பராமரிக்க முடியவில்லை அதனால் குழந்தைகள் காப்பகத்தில் நாங்கள் ஒப்படைத்து விட்டோம் என கூற வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

ஷாலினியின் கணவன் வழி உறவினர்கள் மற்றும் தாய்வழி உறவினர்கள் பலர் இருக்கும் நிலையில் காவல் ஆய்வாளர் புகழ் பழிவாங்கும் நோக்கத்தோடு திட்டமிட்டு குழந்தை ஷெனிசாலை வேலூரில் உள்ள குழந்தைகள்  காப்பகத்தில் சேர்த்துள்ளார். இதற்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு (CWC) துணை போயுள்ளது. தனது மகனின் குழந்தையான ஷெனிசால் குழந்தைகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த செய்தியை கேள்விப்பட்ட ஷாலினியின் மாமியார் பாப்பா குட்டி (50) க/பெ ஜான் பீட்டர் என்பவர் வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் (CWC ) தனது பேத்தியை ஒப்படைக்கக் கோரி மனு செய்துள்ளார் இதனைக் கேள்விப்பட்ட ஆய்வாளர் புகழ் உன் மருமகள் ஷாலினியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லை என்றால் உன் மீதும் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவும் (CWC) எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் காவல் ஆய்வாளர் புகழ் என்பவருக்கு சாதாரணமாகவே தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. இதனால் குழந்தை ஷெனிசால் காப்பகத்தில் மூன்று வாரங்களாக உறவினர்கள் ஆதரவின்றி தவித்து உள்ளது.

இன் நிலையில் ஷாலினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து 10.07.2020 அன்று குழந்தையை மீட்டு உள்ளார்.

தாய், மற்றும் குழந்தை மீதும் ஆய்வாளர் புகழ் தலைமையில் செயல்பட்ட போலீசார் தொடர்ந்து பல்வேறு சித்திரவதைகளை நடத்தி பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நீதிமன்ற பிணையில் வீட்டில் இருக்கும் ஷாலினி மற்றும்  அவரது குழந்தை ஷெனிசால் ஆகிய இருவரையும் சட்ட விரோதமாக 24 மணி நேரமும் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார் வீட்டிற்கு முன்பு சட்டவிரோதமாக கண்காணித்து கொண்டு  அச்சுறுத்திக் கொண்டு உள்ளார்கள். இந்த சட்ட விரோத செயலினை காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

ஷாலினியின் கணவர் ஜானிபால் ராஜன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் மீது சட்டரீதியாக காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும், காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்திற்கு (JAACT-TN) இல்லை. ஆனால் கணவனை பிடிப்பதற்காக மனைவி ஷாலினி மற்றும் குழந்தை ஷெனிசால் ஆகியோர் மீது சித்திரவதை நடத்தி பொய் வழக்கு போட்ட ஆய்வாளர்  புகழ் தலைமையில் செயல்பட்ட போலீசாரை கூட்டியக்கம் (JAACT-TN) வன்மையாக கண்டிக்கின்றது .மேலும் ஆய்வாளர் புகழ் தனது பணி காலங்களில் பல்வேறு நபர்களை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த நபர் ஆவார். இதனால் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது மேலும் பல முறை தற்காலிக இடைநீக்கம் செய்யப்ட்டுளார். குறிப்பாக வேலூர் மாவட்டம் செங்கமடம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மீது 2007 ஆம் ஆண்டு ஆசிட் வீசிய வழக்கில் ஆய்வாளர் புகழ் குற்றம் சாட்டப்பட்டு சிபிசிஐடி விசாரணையில் உள்ளார். அதபோல் 2019 ஆம் ஆண்டில் வேலூரில் வழக்கறிஞர் வேல் என்பவர் மீது ஆய்வாளர் புகழ் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இதை கண்டித்து வேலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சுமார் 25 நாட்களாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இப்படி தொடர்ந்து பொதுமக்கள் மீது சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர்  புகழை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் மனநல ஆலோசனைக்கு  உட்படுத்த வேண்டும். ஷாலினி அவரது குழந்தை ஷெனிசால் மீது சித்திரவதையில் ஈடுபட்ட வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன், சார்பு ஆய்வாளர் ராஜசேகரன், பாகாயம் சார்பு ஆய்வாளர் ஜெகன் மற்றும் காவலர்கள் நாகலட்சுமி, புனிதா, காஞ்சனா ஆகியோரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை ஷெனிசாலை சட்டவிரோதமாக காப்பகத்தில் அடைக்க துணைபுரிந்த வேலூர் மாவட்ட குழந்தைகள் நலகுழுவை (CWC) வன்மையாக,கூட்டியக்கம் (JAACT-TN) கண்டிக்கிறது. மேலும் காவல் ஆய்வாளர் புகழ் என்பவருக்கு துணைபுரிந்த வேலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் மீது மாவட்ட ஆட்சியர் உடணடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். காவல் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஷாலினிக்கு மருத்துவ உதவி செய்ய முன்வராத பெண் கிளாண்ட் அரசு மருத்துவமனை மருத்துவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஷாலினி அவரது குழந்தை ஷெனிசால் ஆகிய இருவருக்கும் உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோருகின்றோம்.

 

Sd/-ஒருங்கிணைப்பாளர்: தோழர் தியாகு Sd/-செயலாளர்: மீ.த. பாண்டியன்

 

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு

Joint Action Against Custodial Torture – Tamil Nadu (JAACT –TN)

RELATED POST
3 comments
  1. இதே போல எனக்கும் எங்கள் ஊரில் கபடி விளையாட்டு நடத்தியதற்காக காவல்துறை பழிவாங்கியது…எனது மேல் மூன்று பொய்யான வழக்குகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு தேதிகளில் பதிவானதாக..பொய் வழக்கு போட்டு…என்னை 1/10 வழக்கில் சேர்த்து…என்னை காவல்நிலையத்தில் ரவுடி லிஸ்டில் சேர்த்துள்ளது…நான் முதுகலை படித்த பட்டதாரி பொதுவுடைமை இளைஞன்….முகவரி சி.சரவணன் Msc…த/பெ ..து.சிங்காரவேல்…செருவாவிடுதி தெற்கு…பட்டுக்கோட்டை வட்டம்…தஞ்சாவூர் மாவட்டம்…614 628…எனது காவல்நிலைய முகவரி…திருச்சிற்றம்பலம் காவல்நிலையம்…காவல்நிலைய எண்-04373 286450…

  2. இது சம்பந்தமாக எனக்கு நிறைய பொருளாதார நெருக்கடி மற்றும் மன உலைச்சல் மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது….எனவே எனக்கு தாங்கள் மூலமாக உதவிகள் தேவைபடுகிறது….

  3. இது சம்பந்தமாக எனக்கு நிறைய பொருளாதார நெருக்கடி மற்றும் மன உலைச்சல் மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது….எனவே எனக்கு தாங்கள் மூலமாக உதவிகள் தேவைபடுகிறது…. காவல்துறைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பாக உதவி புரிய கேட்டுக் கொள்கிறோம்…

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW