ரூஸ்வெல்டின் நியூ டீல் திட்டமும் போரிஸ் ஜான்சனின் பொருளாதார மீட்பு திட்டமும்
சரிந்துவருகிற இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்பதற்காக பொருளாதாரத்தின் மீதான அரசின் தலையீட்டையும் முதலீட்டையும் அதிகரிக்கப்போவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அண்மையில் அறிவித்துள்ளார். கார்பரேட்களுக்கு அதிக வரிவிதிக்க இருப்பதாகவும், சாலை, வீடு, பள்ளி உள்ளிட்ட உட்கட்டுமான திட்டங்களுக்கு சுமார் 5 பில்லியன் பவுண்ட் (47,500 கோடி) நிதி ஒதுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமரின் இந்த அறிவிப்பானது அவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. போலவே சுதந்திர சந்தை ஆதரவு முகாம்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. போரிஸ் ஜான்சன் சோசலிஸ்டாகிவிட்டார் என்று கூட அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது! இதனால் தானொரு கம்யூனிஸ்ட் இல்லை என அறிவிக்கிற நிலைக்கு ஜான்சன் தள்ளப்பட்டுவிட்டார்! தான் என்றுமே சுதந்திர சந்தை ஆதரவாளன் என்றும் நிச்சயமாக முதலாளிகள்தான் நாட்டின் வளத்தை உருவாக்குவோர்கள் என்றுரைக்கிறார்.
போரிஸ் ஜான்சனின் ரூஸ்வெல்ட் திட்டம்
1930 இல் அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் NEW DEAL என்ற பெயரில் “அரசு முதலீட்டு” திட்டத்தை அமல்படுத்தினார். முதலாளித்துவ பொருளாதார அமைப்பு மற்றும் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பின் மீதான மக்களின் அவநம்பிக்கையை போக்குவதற்கும், புதிய நம்பிக்கையை கட்டமைப்பதற்கும் ரூஸ்வெல்ட் நியூ டீல் திட்டதிற்கு சென்றார். முதலாளித்துவ சக்திகளின் சரிவை எதிர்கொள்கிற தற்காலிக ஏற்பாடாக இத்திட்டத்தை கையாண்டார்.
போரிஸ் ஜான்சன் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் புதிய டீலை மேற்கோள் காட்டுகிறார். நெருக்கடியான காலங்களை மக்கள் எதிர்கொள்கிற போது, அரசு பலமாக தலையீடு செய்து மக்களை அரவணைக்க வேண்டும் என்கிறார்.
மோடியின் ரூஸ்வெல்ட் திட்ட ‘அழிப்புக்’ கொள்கை:
முதலாளித்துவ கட்டமைப்பு மிகவும் வளர்ச்சியடைந்த இங்கிலாந்து நாட்டிலேயே பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை போரிஸ் ஜான்சன் அறிவிக்கிறார். ஏதோ பெரு நெருக்கடி வந்துவிட்டது; அதை தீர்க்க அரசு முன்வரவேண்டும் என்கிறார். அரசின் மீதான மக்களின் கோபத்தை தணித்து, அரசை காப்பாற்றிக் கொள்கிற தற்காலிக உக்தியாக, வர்க்க சமரசத் திட்டமாக ரூஸ்வெல்ட் திட்டத்தை முயல்கிறார்.
ஆனால் இங்கே இந்தியாவின் பிரதமரோ ரயில்வே துறை முதற்கொண்டு, நிலக்கரி சுரங்கம், மின்சாரம், விண்வெளி துறை வரைக்கும் அரசின் பொதுத்துறை கட்டமைப்பை தனியார்மயப்படுத்துகிறார். பொருளாதாரத்தில் அரசின் தலையீடு அறவே ஒழிக்கப்படவேண்டும் என சபதமேற்று செயல்படுகிறது ஆளும் பாஜக அரசு. மக்களின் வாங்கும் சக்தியை ஊக்குவிக்கிற, வேலை வாய்ப்பை வழங்குகிற அரசின் நேரடி பொருளாதார திட்டங்களை கைவிட்டு, கார்பரேட்களுக்கு வரி குறைப்பு செய்யப்படுகிறது. கார்பரேட்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. கார்பரேட்களுக்கு நிலம் பிடுங்கித்தரப்படுகிறது. தொழிலாளர் நலச் சட்டங்கள் பறிக்கப்பட்டு உழைப்பு சுரண்டப்படுகிறது. ஜிஎஸ்டி வரிக் கொள்கை மூலமாக சிறு குறு தொழில் ஒழிக்கப்படுகிறது .ஆனால் ஏதும் நடந்தபாடில்லை. பொருளாதார சரிவு மீட்சியடையவே இல்லை. கொரோனாவிற்கு முன்பே தொடங்கிய பொருளாதார சீரழிவிற்கு தற்போது கொரோனா காரணமாக கூறப்படுகிறது. தொழில் வரி வருவாய் குறைப்பை சரிக் கட்ட பெட்ரோல் டீசல் விலை ஏற்றப் படுகிறது, மாநிலங்களுக்கு நிதி வெட்டப்படுகிறது. ஆக, இங்கே மோடி அரசு நேரடியான வர்க்கப் போராட்டத்தை முடுக்கிவிடுகிற தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் இரவு பகலாக செய்கிறது!
இது ஒருபுறம். நமது விமர்சனத்திற்கு வருவோம்.
போரிஸ் ஜான்சனின் இந்த அறிவிப்பின் முரண்பாடு குறித்து தோழர் பிரபாத் பட்நாயக் விரிவான கட்டுரையொன்றை பீபுள் டெமாக்ரசியில் எழுதியுள்ளார் (The Hindrance to a New Deal Today). அதையொட்டியே எனது கருத்துக்கள் வருமாறு
முரண்பாடு-1
ரூஸ்வெல்ட் காலத்தில் நிதி மூலதன சக்திகள் உலகளாவியதாக ஒரு சர்வதேச வலைப்பின்னல் அமைப்பாக தற்போது இயங்குவது போல இயங்கவில்லை. அவரது காலத்தில் நிதி மூலதன சக்திகள் தேச அரசுகளின் எல்லைக்குட்பட்டதாக சுழன்று வந்தது. ஆகவே ரூஸ்வெல்டின் புதிய டீலை பிரதிபலிக்கிற போரிஸ் ஜான்சனின் அறிவிப்பு இயல்பாகவே சர்வதேச நிதி மூலதன சக்திகளை எரிச்சலடைய செய்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் மேற்கொண்டுள்ள முதலீடுகளை திரும்ப பெறுகிற ஆபத்தும் உள்ளது. ஆகவே ஜான்சனின் அறிவிப்பு நடைமுறைக்கு வருவதற்கு நிதி மூலதன சக்திகளிடம் முரண்பட வேண்டும். அதற்கு அவரது வலது கட்சியான கண்செர்வேடிவ் கட்சி அனுமதிக்காது. செய்யவும் இயலாது. இதுதான் இன்றைய எதார்த்தம். மாறாக வழக்கமாக பொருளாதார நெருக்கடி காலத்தில், கார்பரேட் நிறுவனங்களை காப்பாற்றவே ஆளும் கட்சியை முதலாளிய வர்க்கம் நிர்பந்திக்கும். அரசின் செலவீனத்தை வெட்டச் சொல்லும், தொழிலாளார் பாதுக்காப்பு நலச்சட்டங்களை பறிக்கக் கோரும், கார்பரேட் வரியை குறைக்கைக் கோரும். இவ்வாறான கார்பரேட் அனுகூல நடவடிக்கையின் ஊடாக, தனது லாப வீத சரிவை தடுத்த நிறுத்த முயலும். ஆகவே ஜான்சனின் அறிவிப்பு நேராக நிதி மூலதன கும்பலின் நலனுக்கு முரண்படுகிறது.
முரண்பாடு- 2
போரிஸ் ஜான்சனின் அறிவிப்பு, முதலாளித்துவ சக்திகளின் வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கிறது. அதாவது போட்டி முதலாளித்துவ கட்டத்திற்கு தள்ளுகிறது. பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை சிரம் தாழ்த்தி ஏற்று கொள்ளக் கோருகிறது. ஆனால் இன்றைய முதலாளித்துவ சக்திகள் இதைச் செய்ய மாட்டார்கள்.
வரலாற்று வளர்ச்சிப் போக்கில், சமூக உற்பத்தியின் உடமை உறவு முன்னோக்கிச் செல்லுமே தவிர பின்னோக்கிச் செல்லாது. அதாவது நிலப்பிரபுத்துவ உறவில் இருந்து முதலாளித்துவ உறவாக வளர்ச்சியடைந்தது. இதற்கு அடுத்த கட்டமாக முதலாளித்துவ சக்திகளின் அழிவிலிருந்து அதன் அழுகளிலிருந்து சோசலிச சமூக கட்டமைப்பு முன்னேறும்.
முதலாளித்துவத்தின் உச்சபட்ச வளர்ச்சி கட்டமாக ஏகாதிபத்திய சகாப்தம் உள்ளது. ஏகாதிபத்திய சகாப்தத்தின் அழிவிலிருந்து சோசலிச சகாப்தம் உதித்தெழும். மாறாக முதலாளிதுவத்தின் வளர்ச்சியடைந்த ஏகபோக கட்டத்தில், ஏகாதிபத்தியமாக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்துள்ள கட்டத்தில் முதலாளித்துவத்தின் தொடக்க கட்டமான “போட்டி முதலாளித்துவ” கட்டத்திற்கு பின்னோக்கிச் திருப்ப இயலாது. அதாவது முதலாளித்துவ வளர்ச்சியை பின்னோக்கித் தள்ள முடியாது.
முடிவாக:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்பு தாராளமய சகாப்தத்தின் அழுகல் நிலையை, அதன் கையறு நிலையை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தியுள்ளது.
ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்தால் மட்டுமே இந்த முரண்பாட்டை, முதலாளித்துவ அமைப்பின் சமூகப் பொருளாதார கட்டமைப்பை மாற்ற முடியும். முதலாளித்துவ அமைப்பையும் அரசையும் வீழ்த்தாமல் முதலாளித்துவ சக்திகளின் உடமைகளை பறிக்காதவரைக்கும் இது சாத்தியமல்ல.
-அருண் நெடுஞ்சழியன்
ஆதாரம்:
https://www.bloomberg.com/opinion/articles/2020-06-30/boris-johnson-has-a-new-american-hero-franklin-delano-roosevelt