கஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்
2018 நவம்பர் 15 நடுசாமம், வயல்வெளியில் உழைத்து களைத்து உழைப்பாளர்கள் அசதியில் தன் சிறு குடிசைக்குள் குழந்தைகளோடு உறங்கி கொண்டிருந்த நேரம் ’கஜா’ என பெயரிடப்பட்ட கொடூர சூறைக்காற்று கடல் கடந்து கிராமங்களுக்குள் நுழைந்தது. காவிரிப் படுகையில் உயிரோடு இருக்கும் யாரும் இதுவரை கண்டிராத ஓர் சூறை காற்று – பெயருக்கு ஏற்றாற்போல் 30 கி.மீ. அகலமுள்ள கஜா என்ற மதம்கொண்ட யானை குடிசைகளையும், ஒட்டு வீடுகளையும் பிரித்தெறிந்து தென்னை மரங்களைத் தண்டோடும், கிழங்கோடும் கிழித்தும் பிடுங்கியும் எரிந்தது. பல தலைமுறைகள் கண்ட ஆலமரங்களையும் பிளந்து எரிந்தது. ஆடு மாடுகளின் நிலையைச் சொல்லவா வேண்டும் ?
கொட்டகைக்குள்ளயே மடிந்த ஆடு மாடுகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகும். ஒட்டுமொத்தமாக கஜா புயல் பசுமையாக காட்சியளித்த காவிரிப் படுகையைப் பொட்டல் காடாக்கியது. காவிரி மைந்தர்களை வாழ வழியற்றவர்களாக ஆக்கியது. தஞ்சை நகரத்தில் கஜா புயல் அதிகாலை 1.30 மணியிலிருந்து 5.30 மணிவரை வீசியது .புயல் முடிந்து காலை 6 மணி அளவில், நமது தமிழ்த்தேச மக்கள் முன்னணி தஞ்சை மாவட்ட அலுவலகம் அமைந்திருக்கக்கூடிய புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் சரபோஜி கல்லூரி மாணவர்களும் நமது தோழர்களும் அடங்கிய குழு அங்கு சாய்ந்து கிடந்த நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி சாலையை வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக்கியது.
காலை முதல் நமது குழு மரங்களை வெட்டுவதைக் கண்டு பகுதி இளைஞர்களும் கரம் கோர்த்தார்கள். அதன் பிறகு மாலை 3 மணிக்குள் ஒட்டுமொத்தமாகப் பகுதி சாலைகளை சீரமைத்து முடித்தோம். அதன்பின் மாலை முதல் இரவு வரை ஒரத்தநாடு சுற்றுவட்டார கிராமங்களில் புயல் பாதிப்புகளை நேரடியாக சென்று பார்வையிட்டு வந்தோம். மறுநாள் காலை தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் 17 பேர் புறப்பட்டு கஜா புயல் கரையை கடந்த இடங்களிலும், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களிலும் பணிசெய்ய அதிராம்பட்டினம் வழியாக திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் செல்வதாக திட்டமிட்டு அதன் அடிப்படையில் அதிராம்பட்டினம் சென்றடைந்தோம். செல்லும் வழிநெடுக தென்னந்தோப்புகள் முழுவதுமாக சாய்ந்து கிடந்ததைக் கண்டு மனம் விம்மியது. கடந்த காலங்களில் நீரா தொழிற்சாலை தொடங்கக் கோரியும் தென்னை கொப்பரைகளை உரிய விலைக்கு அரசே கொள்முதல் செய்யக்கோரியும் அப்பகுதி தென்னை விவசாயிகளோடு இணைந்து போராடியதும் பட்டுக்கோட்டையில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மிக பிரம்மாண்டமான பேரணியை நடத்தியதையும் அந்நேரத்தில் தென்னை விவசாயிகள் தமது துன்பங்களை நம்மிடம் சொல்லி புலம்பியதும் நிழலாடியது.
அதே நேரத்தில் மனதை நெருடிய இரண்டு விடயங்கள் – இதில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறார்களோ என்பதும் வருங்காலத்தில் தேங்காய் எத்தனை ரூபாய்க்கு விற்கப்போகிறதோ என்பதும் தான். அதிராம்பட்டினம் சென்றோம். அங்கு சாலையில் விழுந்து கிடந்த மரங்களை நாம் வாங்கி சென்றிருந்த அரிவாள், ரம்பங்களை கொண்டு வெட்டி சாலையை சீர்படுத்தினோம். மாலைவரை அங்கு தொடர்பணிகளை செய்துவிட்டு இருள் கவ்வும் நேரத்தில் தமிழகத்திலே அதிகமான குடிசை வீடுகளை கொண்டிருக்கும் திருத்துறைப்பூண்டிக்கு பயணித்தோம்.
அங்கு இரவு சென்று, கீழத்தஞ்சை மாவட்டத்தின் செங்கொடி ஏந்திய வீரம் செரிந்த போராட்டத்தின் சொந்தக்காரர், பண்ணைகளின் கொட்டத்தை அறுத்தெரிந்த தோழர் சீனிவாச ராவ் மணிமண்டபம் அருகில் வீடிழந்த மக்கள் தங்கியிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் மக்களோடு மக்களாக நாமும் தங்கினோம் . அங்கிருந்த எல்லோரும் கொடூரமான கொசுக் கடியிடில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கக் கண்டோம்.
18 ஆம் தேதி காலை பள்ளிவாசல், தேவாலயம் போன்ற வழிபாட்டுத் தளங்களில் மக்கள் தங்கியிருந்தார்கள் அங்கு சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்றினோம். பிறகு மிகவும் பாதிக்கப்பட்ட கிராமமான ‘கொருக்கை’ கிராமத்திற்கு சென்றோம். சின்ன கொருக்கை, பெரிய கொருக்கை ,கீழ கொருக்கை, மேல கொருக்கை என்ற மிகப்பெரிய கிராமம். ஆனால் சாலைகள் தெரியாத அளவிற்கு மரங்கள் சாய்ந்துகிடந்தன. அங்கு இருந்த மரங்களை எல்லாம் வெட்டி அகற்றத் தொடங்கினோம். மரம் வெட்டும் அனுபவம் இல்லாத மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். ஆயினும் சோர்வடையாமல் தொடர்ந்து செய்துகொண்டிருந்தோம். கொருக்கையில் பெரும்பாலும் மண்சுவரால் கட்டப்பட்ட கூரைவீடுகளும், ஓட்டுவீடுகளும் தான். அவை மேற்கூரைகள் இல்லாமல் வீழ்ந்து கிடந்தன. கொருக்கை மட்டும் அல்ல திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தாலுக்கா முழுக்க அதுதான் நிலை. மறுநாளும் அதே ஊரில் பணிதொடர்ந்தது. அன்று இரவு தஞ்சை சென்று தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பணம் திரட்டி வாங்கிவைத்திருந்த`இன்றியமையாத பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று மறுநாள் காலை கீழ் கொருக்கையில் கொட்டும் மழையில் விநியோகம் செய்தோம் . மறுநாள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீண்டும் வாங்கிவந்த பொருட்களை வேதாரண்யம் அருகில் உள்ள பழைய களிக்காடு கடிநெல்வயல் ஆகிய கிராமங்களில் போர்வை, பாய், அரிசி, ரவை, மெழுகுவத்தி, கொசுவர்த்தி, பால் பவுடர், தீப்பெட்டி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்தோம்.
மறுநாள் களப்பால் – தோழர் களப்பால் குப்பு பிறந்த ஊர்! அந்த ஊர் மக்களைக் கண்டவுடன் நமக்குள் ஓர் உணர்வு மேலோங்கியது, அங்கு நிவாரணப் பொருட்களைக் கொடுத்துவிட்டு வெங்கத்தாங்குடி சென்றோம், அடுத்தடுத்த நாள் மனக்காடு, துளசாபுரம், மாரி நகரி, செட்டிப்புலம், மணலி, தகரவெளி, இளநகர், சப்பணிக்காடு, பள்ளாங்கோவில், அருந்தம்புவனம், விளக்குடி, கத்திரிபுலம், செங்கல் மடப்புரம், காடஞ்செத்தி, குறவன்புலம் உள்ளிட்ட பிரதான சாலையிலிருந்து பல கிலோமீட்டர் உள்ளே செல்லக்கூடிய பல கிராமங்களுக்கு தார்பாய் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுபோய் சேர்த்தோம். கஜா புயல் கரைகடந்த நவம்பர் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய நமது களப்பணி 29ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு துளசாபுரத்தில் தார்பாய் கொண்டு சேர்த்ததோடு முடித்துக்கொண்டோம்.
நமது இந்த பணியில் பேருதவியாய் இருந்து பொருட்களை சேகரித்து நம்மிடம் கொண்டுவந்து சேர்த்து களத்திலும் நின்றவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் (தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி மாணவர் சங்கம்), இளந்தமிழகம் இயக்கம், FITE (தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கான மன்றம்), சென்னை தாமோதரன் நண்பர்கள், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மாணவர்கள், தஞ்சை 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள், குமரி நம்ம பசங்க அறக்கட்டளை, கோவையை சேர்ந்த நண்பர்கள், தனிநபராக பெருமளவில் தார்பாய்கள் மற்றும் பொருட்கள் வாங்கி அனுப்பிய திருச்சியை சார்ந்த தோழர் ராணி, தோழர் சம்சுதீன். இவர்களில்லாமல் நமது இந்த நீண்ட பணியில்லை.
நமது செயல்பாடுகளை பார்த்தோம். இனி அரசின் செயல்பாடுகளை பார்ப்போம். கஜா புயலினால் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தாலுக்காக்களில் உள்ள 90 % மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டநிலையில் அதனை சரி செய்வதற்கு தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து தங்கியிருந்து இரவுப் பகலாக உழைத்தனர். அதில் கொடுமையென்னவென்றால் அதில் 75 % ஒப்பந்தத்தொழிலாளர்கள். அதேபோன்று அணைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு பின்பு JIO, BSNL மட்டுமே வேலைசெய்தது . சாட்டிலைட் மூலம் JIO செயல்படுகிறது ஆனால் அரசால் 4G சேவை கூட தரப்படாத BSNL நிறுவன ஊழியர்கள்தான் போர்கால அடிப்படையில் வேலைசெய்து அனைத்து இடங்களிலும் சேவையை மீட்டெடுத்தனர். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால் எந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்பதற்கு முயற்சிக்கிறதோ அந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்கள்மட்டுமே இரவுப் பகலாக வேலை செய்து சிறப்பாக பணியாற்றினர் . மற்றொரு துறை – துப்புரவு பணியாளர்கள். சென்னை பெருவெள்ள பாதிப்பின்போது எப்படி துப்புரவுப் பணியாளர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களுமின்றி வேலையில் இறக்கிவிடப்பட்டார்களோ, அதுபோலவே டெல்டாவிலும் இறக்கிவிடப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான ஆடு மாடுகள் இறந்ததற்கு கால்நடை துறையிலிருந்து உடனடியாக கணக்கு எடுத்திருக்க வேண்டும் ஆனால் 8 நாட்களுக்கு பிறகே வந்தனர். கேட்டதற்கு, ”அரசு இழப்பீடு வழங்குமா என்று தெரியாமல் எப்படி போய் கணக்கெடுப்பது ? மக்கள் எங்களை அடிக்க வரமாட்டார்களா ?” என்று பதில் கூறினார். சுகாதாரத்துறையோ மக்கள் எப்படி ‘கொதிக்கவைத்து நீரை குடிக்க வேண்டும்’, ‘கையை எப்படி சோப்பு போட்டு கழுவவேண்டும்’ ,’ பாத்திரங்களை எப்படி மூடிவைக்க வேண்டும்’ என்றெல்லாம் வீடிழந்து சாலையில் படுத்துக்கிடக்கும் மக்களிடம் இன்னோவா காரில் வந்து கலர் கலராக துண்டறிக்கை விநியோகம் செய்தனர். பல கிராமங்களில் புயல் அடித்து ஒரு வாரம் வரை கிராம நிர்வாக அலுவலர் VAO பார்க்க வரவில்லை என்றுதான் மக்கள் சாலை மறியலை நடத்தினர். அனைவரையும் காட்டிலும் சிறப்பாக பணிசெய்தது மாண்புமிகு காவல்துறை தான்.
பாதிக்கப்பட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான காக்கிகள் இறக்கிவிடப்பட்டிருந்தனர். இவர்களின் வேலை என்னவென்றால் வழி நெடுங்க சாலையோரமாக அமர்ந்து தூங்குவதும், கைபேசி நோண்டுவதும், எங்காவது மக்கள் போராடினால் கும்பலாகப்போய் இறங்கி அவர்களை அச்சுறுத்துவதும் தான். இவர்களைக் காட்டிலும் உளவுத்துறை ஒரு படி மேலேபோய் மக்கள் இயக்கங்கள் யார்யார் நிவாரணப்பணிகளில் ஈடுபடுகிறார்கள் என்று கண்டறிந்து அவர்களைப் பணிசெய்யவிடாமல் தடுக்கும் பணியில் இருந்தது. நாங்கள் மக்களோடு மக்களாக ஒரு கிறித்துவப் பள்ளியில் தங்கி நிவாரணப் பணி செய்துவந்தோம். இதை அறிந்த உளவுத்துறை அந்த பள்ளியின் நிர்வாகிகளான அருட்சகோதரிகளை இரவு முழுவதும் தொந்தரவு செய்து எங்களை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள்.
அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியாளர்களும் மக்களுக்கு பாதிப்பே இல்லையென்று சத்தியம் செய்துவிட்டு சில இடங்களில் அதற்கு தட்சணையாக அடிகளையும் வாங்கி சென்றனர். இறுதியாக நமது குழு 15 நாட்கள் புயல் நிவாரண பணிக்குப் பின்னர் , அடுத்தகட்டமாக மக்களுக்கும் பகுதியின் சீரமைப்பிற்கும், நிவாரணத்திற்கும் என்ன மாதிரியான தேவைகள் இருக்கிறது என்பதை அறிவதற்கு பல்வேறு தரப்பினரிடமும் பேசி கோரிக்கைகளை சேகரித்து கொண்டு, முதல் சுற்றுப் பணி முடிவடைந்து திரும்பியுள்ளோம்(அறிக்கை கீழ்வருமாறு).
நமது நிவாரண பணி என்பது உடனடி துயர் துடைப்பு நடவடிக்கைதான், இனி அப்பகுதியின் நிலையை மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதென்பது அரசின் நடவடிக்கையை பொருத்துதான் அமைந்துள்ளது, ஏனெனில் தனிநபர்களோ குழுக்களோ தீர்வுகான கூடிய சிறு விபத்தல்ல, மக்கள் எதிர்கொண்டிருப்பது பேரிடர் ! திறனற்றும், செயலற்றும் உள்ள அரசு இயந்திரம் இனியாவது எழுந்து நடக்க தொடங்குமா என்பதுதான் மக்களின் கேள்வியும் எதிர்பார்ப்பும்.
அருண்சோரி
மாவட்ட செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
7299999168
1. நாடற்ற ஈழ ஏதிலிகளை வீடற்றவர்களாகவும் ஆக்கிய கஜா புயல்! – புதுக்கோட்டை தோப்புக்கொல்லை https://wp.me/pa5Qnr-qt
2. புதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா? – புதுக்கோட்டை கொத்தமங்கலம் https://wp.me/pa5Qnr-qG
3. இந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் ! – தஞ்சை அதிராமப்பட்டினம் https://wp.me/pa5Qnr-qX
4. கஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா? – நாகை வேதாரண்யம் https://wp.me/pa5Qnr-rg
5. கோடியக்கரையில் கஜா புயலின் கண்ணைக் கண்டவர்கள் அரசின் பார்வைக்காக காத்திருப்பு… வேதாரண்யம் கோடியக்கரை https://wp.me/pa5Qnr-rX
6. “கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத் தொழிலாளர்கள்! நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று ? https://wp.me/pa5Qnr-rH