அமெரிக்க ஜனநாயகத்தின் கழுத்தை நசுக்கும் பூட்ஸ் – கார்னெல் வெஸ்ட்

04 Jun 2020

(‘The Guardian’   பத்திரிக்கையில் ‘A boot is crushing the neck of American democracy’ என்ற தலைப்பில்  கார்னெல் வெஸ்ட் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு) 

தற்சமயம் எல்லோர் மனதிலும் எழும் அடிப்படை கேள்வி – அமெரிக்காவில் சீர்திருத்தம் சாத்தியமாகுமா?

அமெரிக்க காவலரால் மேலுமொரு கறுப்பினத்தவர் கழுத்தில் மிதிக்கப்பட்டு, குரல்வளை நெரிக்கப்பட்டு, மூளைக்கு செல்லும் குருதி அடைக்கப்பட்டு, நடு வீதியில் மக்கள் முன்னிலையில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

நாடெங்கும் மீண்டுமொரு பல்லின மக்களின் எதிர்ப்பலை, இடைவிடாது விவாதிக்க ஊடகங்களுக்கு கருப்பொருள், பன்முகத்தன்மையை பறைசாற்ற புதிய தாராளவாதிகளுக்கு இன்னும்மொரு  வாய்ப்பு, அமெரிக்க வெள்ளையர்களுக்கு மேலுமொரு பின்னடைவு. இருப்பினும், இம்முறை இது வழக்கம் போல கடந்து செல்லக்கூடிய மற்றுமொரு செய்தி அன்று. இது ஒரு புத்தம்புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய  துன்பியல் நிகழ்வு.

காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிலோய்டின் இறப்பிற்குப் பிந்தைய சமூக எழுச்சி, கொரோனாவின் தாக்கத்தால் பெருந்துயரில் நாதியற்று வாழும் ஏழை எளிய மக்களின் குமுறல், பெரும் பொருளியல் வீழ்ச்சிக் காலத்தையொட்டிய வேலையின்மையால் கலங்கி தவிக்கும் மக்களின் கதறல், முறையான தலைமை இன்றி, செறிவான கருத்தியல் இன்றி, சமூக அறநெறியின்றி பரிதவிக்கும்  இருகட்சிகள் என்று அமெரிக்க பேரரசின் முடிவுரையை எழுத துவக்கும் காரணிகள் நீண்டுகொண்டே செல்கின்றது.

அமெரிக்கச் சமூகத்தில் அதிகரித்து வரும் ராணுவமயம் என்பது அதன் ஏகாதிபத்திய கொள்கைகளின் தொடர்ச்சியே ஆகும். 1945 ஆம் ஆண்டு  முதல் இன்று வரை 67 நாடுகளில் 211 ராணுவ படையெடுப்புகளை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. ஜார்ஜ் பிலோய்டின் கொலைக்குப் பிந்தைய எழுச்சியின் போது மக்களை நோக்கி  ராணுவமயமான தாக்குதல்களை தொடுத்த அரசு எந்திரம் உலகிற்கு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்று தான். அமெரிக்காவிடம் கட்டுக்கடங்காத ராணுவ பலமும், சமூகத்தை கண்காணிக்க கணக்கிலடங்கா காவலர் பலமும் உள்ளது. இந்த பலம் பொருந்திய பெரும்படை போராடும் மக்களை எந்த ஒரு தூண்டுதல் இல்லாவிடினும் கண்மூடித்தனமாய் தாக்கி வருகின்றது. இதில் முரண்பாடு என்னவென்றால், போராடும் மக்கள் கலகக்காரர்களா அல்லது எதிர்பாளர்களா ?,   வெளியூர் ஊடுருவாளர்களா அல்லது உள்ளூர் குடிமக்களா என்ற தவறான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பெருந்திரளான படைகளின் அழுத்தங்களே காவல் துறைக்கு எதிராக மக்களை கிளர்த்தெழச் செய்கின்றது என்ற உண்மையை மூடி மறைத்து திசை திருப்பப்படுகின்றது. அதே வேளையில் துப்பாக்கிகளுடனும், வெடி மருந்துகளுடனும் தலைநகரங்களின் உள்ளேயும் வெளியேயும் அச்சுறுத்தும் விதமாக சுற்றி திரிந்த வலது சாரிகளை காவலர்கள் எதிர்கொண்டது முற்றிலும் வேறானது.

எனது தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து நினைவு கூறுகின்றேன். விர்ஜினியா மாகாணத்தில் உள்ள சார்லோட்ஸ்வில்லே நகரத்தில் முகமுடி அணிந்து பலத்த ஆயுதங்களோடும், வெடி மருந்துகளோடும் எங்களை கொடுமையாக தாக்கிய நாஜிக்களை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தோம். அங்கிருந்த காவலர்களோ நாங்கள் கருணையின்றி தாக்கப்படுவதை கண்டு  அமைதியாக பின்வாங்கி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்நேரத்தில் ஆன்டிபா (ANTIFA) அமைப்பின் தலையீடும் பாதுகாப்பும் இல்லையெனில் எங்களில் பெரும்பாலோனோர் கொல்லப்பட்டிருப்போம். ஆம், எங்கள் சகோதரி கெதர் கேயேர் கொல்லப்பட்டாள். எந்த ஒரு அப்பாவி மக்களும் தாக்கப்படக்கூடாது, அவ்வாறு தாக்கப்பட்டால் அது முற்றிலும் தவறு என்பதை உறுதியாக நம்புகின்றேன். ஆனால் போராட்டக்காரர்கள் மக்கள் அல்லது பிற சொத்துக்களை தாக்கும் பொழுது, அதன் மீது மட்டும் அனைவரின் கவனத்தையும் குவிப்பது, நூற்றுக்கணக்கான கறுப்பின ஏழை உழைக்கும் தொழிலாளர்களை கொலை செய்யும் காவல்துறையின் மீதான கவனத்தை சிதறடித்து, சீற்றத்தை சிறுமைப்படுத்தும் செயலாகும். அது மட்டுமின்றி மிகவும் அநியாயமான, கொடூரமான ஒழுங்கை பாதுகாப்பதற்காக கையாளப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் மூடி மறைக்கின்றது. மிருகத்தனமாக கொல்லப்படும் கறுப்பின மக்களுக்காக ஆழமான கவலையோடு எதிர்ப்பை தெரிவிக்கும் நாம், பெரும்பணத்தின் ஆட்சி, வர்க்க வேறுபாடுகள், பாலின படிநிலைகள், உலகளாவிய இராணுவவாதம் ஆகியவற்றின் பெயரால் நிகழும் அனைத்து கொடுமைகளையும் அழுத்தமாக கண்டிக்க வேண்டும்.

 

திரு. மார்ட்டின் லூத்தர் கிங் ஜே.ஆர் அவர்கள் நான்கு பேரழிவுகளை குறித்து நம்மை எச்சரித்தார்.

  1. இராணுவவாதம் (ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ராணுவத்தலையீடு)
  2. வறுமை ( அமெரிக்காவில் ஏறக்குறைய 14% விழுக்காட்டினர் வறுமையில் வாழ்கின்றனர். 2020 ஆம் ஆண்டின் கணக்கீட்டின் படி நாள் ஒன்றுக்கு $34 கீழ் வருமானம் உள்ள தனிநபரும், $69 கீழ் வருமானம் கொண்ட நால்வர் உள்ள குடும்பமும் வறுமையில் வாழ்வதாய் கருதப்படுகின்றனர்)
  3. நுகர்வுத்தன்மை (materialism) ( பணத்திற்கும் புகழுக்கும் அடிமையாகி தன்னை முன்னிலை படுத்துதல்)
  4. இனவாதம் (கறுப்பின மக்கள், பூர்விக குடிமக்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், வெள்ளை இனம் அல்லாத குடியேறிய பிறஇன மக்கள் ஆகியவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்)

இவை நான்கும் கட்டமைக்கப்பட்ட வெறுப்பையும், பேராசையையும், ஊழலையும் அமெரிக்க நாட்டில் விதைத்துள்ளது. இன்று அமெரிக்க ராணுவத்தின் படைபலம் தன் அதிகாரத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்   இழந்து நிற்கின்றது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு இயங்கும் முதலாளித்துவப் பொருளாதாரம் தன் பேராற்றலை  இழந்துள்ளது. சந்தை பொருளாதாரத்தால் உந்தப்பட்ட ஊடகம் மற்றும் அறிவுசார் கலாச்சாரம் இன்று ஒளியிழந்து வெற்றுத்தன்மையுடன் காணப்படுகின்றது.

தற்சமயம் நமக்கு எழும் அடிப்படை கேள்வி என்னவெனில் இவ்வாறாக தோல்வியுற்ற சமூக பரிசோதனை சீர்திருத்தப்படுமா ? புதிய பாசிசத்தின் அடையாளமாய் விளங்கும் டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் இயங்கும் குடியரசு கட்சியும் புதிய தாராளவாதத்தின் அடையாளமாய் விளங்கும் ஜோ பிடென் தலைமையில் இயங்கும் ஜனநாயக கட்சியும் எந்தவிதத்திலும் ஒன்றுக்கொன்று இணையானது அல்ல இருப்பினும் இவ்விருகட்சிகளும் வால் ஸ்ட்ரீட்கும்  பென்டகனுக்கும் கடமைப்பட்டு, கட்டுப்பட்டு இருக்கின்றனர். இது நம் காலத்தில் உள்ள தரம் நலிந்த தலைமை பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஜனநாயக முறையில் ஆற்றலை, செல்வத்தை, மரியாதையை தமக்குள் பகிர்ந்து வன்முறையற்ற புரட்சிகர இயக்கமாய் ஒரு குடையின் கீழ் இயங்க முடியாத தீவிர இடது சாரிகளும் பலவீனமான தொழிலாளர் இயக்கங்களும் தனது ஆகச் சிறந்த கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் மீளுருவாக்கம் செய்யமுடியாத சமூகத்தின் அறிகுறிகள் ஆகும்.

எந்த ஒரு  சமூகம் பாழடைந்த வீடுகளை அகற்ற அல்லது குறைக்க மனமில்லாமல் இருக்கின்றதோ, பள்ளி கல்வித்துறையை மேம்படுத்தாது வீழ்ச்சி பாதையில் இட்டுச் செல்கின்றதோ, பெரும்திரளான மக்களை சிறையில் அடைத்து வதைத்து துன்புறுத்துகின்றதோ, அதீத எண்ணிக்கையில் வேலையின்மை அல்லது பொருத்தமான வேலையை மக்களுக்கு இல்லாமல் செய்கின்றதோ, பெரும்பான்மையான ஏழை மக்களால் நெருங்கமுடியாத அளவிற்கு சுகாதாரத்துறையை சுரண்டிப்பிழைக்கும்  துறையாக வைத்திருக்கின்றதோ,   உரிமைகள் மீறப்பட்டு, சுதந்திரமும் பறிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு வாழ வழியில்லாமல் மக்களை பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளதோ அச்சமூகம் நீடித்து நிலைத்திருக்க வாய்ப்பேயில்லை.

இருப்பினும் ஜார்ஜ் பிளாய்டின் கொலையை கண்டிக்க கிளர்த்தெழுந்த பல்லின மக்களின் அறச்சீற்றமும், ஆன்மிக உணர்திறனும் மெல்ல மெல்ல சட்டபூர்வமாய் நிகழும் வால் ஸ்ட்ரீட் கொள்ளை, வளர்ச்சியின்  பெயரால் இப்பூவுலகின் வளங்கள் மீது நடக்கும் பெருநிறுவன கொள்ளை மற்றும் பெண்கள், திருநங்கையர்கள், விளிம்புநிலை மக்களை ஒடுக்குவதற்கு எதிராகவும் சேர்த்து வெகுண்டெழுந்தது நாம் இன்னமும் அனைத்து முரண்பாடுகளையும் கடந்து போராடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

ஒருவேளை தீவிர அமெரிக்க ஜனநாயகம் செத்து மடியுமாயின், நாம் அனைவருக்கும் உரக்கச் சொல்லுவோம், எங்கள் ஜனநாயகத்தை காக்க நாங்கள் அனைத்தையும் கொடுத்தோம். அமெரிக்க பாசிசத்தின் பூட்ஸ் கால்கள் எங்கள் கழுத்தை அழுத்தி, குரல்வளையை நெரித்த பொழுதினும் நாங்கள் இறுதி வரை நின்று அனைத்தையும் கொடுத்தோம்.

-கார்னெல் வெஸ்ட் அமெரிக்காவின் தத்துவ அறிஞர், எழுத்தாளர், விமர்சகர், சமூக உரிமை ஆர்வலர், அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டு இயக்கத்தின் முன்னனி உறுப்பினர்.

தமிழில்: ராபின்சன்

https://www.theguardian.com/commentisfree/2020/jun/01/george-floyd-protests-cornel-west-american-democracy

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW