ஊரடங்கின் நோக்கம் கொரோனா நோய் தொற்றை சுழியம் ( ஜீரோ) ஆக்குவதா?

28 Apr 2020

இரண்டாம் சுற்று ஊரடங்கு காலமும் முடிவடையப் போகிறது. ஊரடங்கை தேதி குறிப்பிடாமல் நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திரா, கோவா, இமாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் சொன்னதாக செய்திகள் வந்துள்ளன. ஓடிசா முதல்வரும் மே 30 வரை நீட்டிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். மேற்குவங்க முதல்வர் மே 21 வரை நீட்டிக்க வேண்டுமென்றும் பாதிப்பில்லாத மாவட்டங்களில் தளர்வு வேண்டும் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை பிரதமர் சந்திப்பின்போது முதல்வர் பேச நேரம் கிடைக்கவில்லை. முதல்வர் பிரதமருக்கு அனுப்பிய செய்தியில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. நிதி ஆதாரங்களைக் கேட்பதில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஏழு நாட்களாக சராசரியாக 50 நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, கிருஷ்ணகிரி பச்சை என்றும் ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சு என்றும் ஏனைய 29 மாவட்டங்கள் சிவப்புப் பகுதிகளாகவும் அடையாளங்காணப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்றும் அதன் பொருட்டு நோய்த் தொற்று எண்ணிக்கையை சுழியம் ஆக்குவது அதாவது ஜீரோ ஆக்குவது என்றும் ஓர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை நோக்கிய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது.

நமக்கு எழும் கேள்விகள் – நோய்த் தொற்று ஜீரோ ஆக்குவதுதான் ஊரங்டகின் நோக்கமா? உலகில் எந்த நாட்டிலாவது இப்படி ஓர் இலக்கு வைக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதா?. அல்லது தொற்றியல் அறிஞர்கள் யாராவது ஊரடங்கு காலத்தில் நோய்த் தொற்றை ஜீரோ ஆக்கிவிட வேண்டும் என்று சொல்கின்றார்களா? ஒரு வாதத்திற்கு ஊரடங்கு காலத்தில் ஒரு மாவட்டத்தில் உள்ள நோய்த் தொற்று எண்ணிக்கையை ஜீரோ ஆக்கிவிட்டு ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வந்தால் அதன்பிறகு நோய்த் தொற்று ஏற்படாதா? அதன் பிறகு அப்படியான நோய்த் தொற்று ஏற்பட்டால் உடனே மீண்டும் ஊரடங்கைத் தெரிவாக்கப் போகிறார்களா?

ஊரடங்கு என்ற தெரிவை எடுப்பதற்குமுன் தமிழகத்தில் மொத்த தொற்று எண்ணிக்கை என்று கண்டறியப்பட்டிருந்தது வெறும் 15 தான். அன்றைய நிலையில், ஊரடங்கு என்ற தெரிவை தேர்வு செய்தது நோய்த் தொற்றை ஜீரோ ஆக்குவதற்குத்தான் என்றால் உண்மையில் இந்த ஒரு மாத கால ஊரடங்கு காலத்தில்தான் எண்ணிக்கை 15 இல் இருந்து 1937 ஆகியிருக்கிறது. இதை வைத்து ஊரடங்கு காலத்தில் அடையப்பெற்றது என்ன? என்பதை மதிப்பிட முடியுமா?

ஏப்ரல் 14 இல் இருந்து ஏப்ரல் 21 வரை திருவண்ணாமலையில் எந்த புதிய நோய்த் தொற்றும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 22 அன்று அங்கு ஒரு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. உடனே, அதன் மாவட்ட ஆட்சியர் பதட்டமாகி இணையத்தின் வழியே மக்களுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.  ”வீட்டை  வீட்டு வெளியே வர வேண்டிய தேவை என்ன? துணிமணி எடுக்கப் போகிறீர்களா? சினிமாவுக்கு போகப் போகிறீர்களா? வீட்டுக்குள்ளேயே இருங்கள்” என்று பேசினார். நோய்த் தொற்று எண்ணிக்கையை ஒருமுறை ஜீரோ ஆக்கிவிட்டால் அதற்குப் பின்னர் நோய்த் தொற்று ஏற்படாது என்று அவர் புரிந்து வைத்துள்ளாரா? ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டபின் நோய்த் தொற்று அதிகரித்தால் என்ன செய்யவிருக்கிறார்? ஒரு மாத காலம் மக்களிடம் இருந்து ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கிடைத்த நிலையில், ஒரு புதிய நோய்த் தொற்றுக்கு இந்த அளவுக்கு பதறுகிறார் என்றால் எந்த நம்பிக்கையில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவது?

இரண்டாம் சுற்று ஊரடங்கே முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் எல்லாம் மிகுந்த படைப்பூக்கத்துடன் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பதற்கான வழிவகைகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர். செக்கு மாடு எப்படி சுற்றிவருமோ அது போல் மீண்டும்மீண்டும் ஊரடங்கை அமலாக்குவதிலும் மக்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்வதிலும் அக்கறை செலுத்திவருகின்றனர்.

தொற்று நோய்க்கு ஆளாவோரில் 85% எந்த அறிகுறியும் இல்லாமலே குணமாகிவிடுகின்றனர். எஞ்சியோருக்கு நோய்த் தொற்றுக்கான அறிகுறி ஏற்படுகிறது. அவர்களுக்கு கூடுதல் கவனத்துடனான சிகிச்சை தேவைப்படுகிறது. அதில் வெகுசிலருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. அதுதான் இந்த நோய்த் தொற்றின் தன்மையாக இருக்கிறது.

எட்டு கோடி மக்கள் தொகையில் சுமார் 2000 பேருக்குதான் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளோம். அதில் சாவு எண்ணிக்கை 1.2% என்றும் இதுவரை நோய்த் தீர்ந்துள்ளோர் 54% என்றும் முதல்வர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார். இந்தப் பின்புலத்தில் நாளொன்றுக்கு 50 பேருக்கு நோய்த் தொற்று கண்டறிப்படும் போதே மாவட்ட ஆட்சியர்கள் பதறினால் எப்படி? 29,000 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன, சுமார் 3500 உயிர்வளியூட்டிகள் உள்ளன என்று அறிக்கை வாசித்துவிட்டு 800 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் இருப்பதற்கே ஊரடங்கி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? எதை நம்பி ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவது?.

மாவட்ட வாரியாக நாளொன்றுக்கு எத்தனை பேருக்கு பரிசோதனை செய்ய முடியும்? நோய்த் தொற்று ஏற்படும் பொழுது தொடர்புகளைக் கண்டறிந்து, பரிசோதனை செய்யவும் தனிமைப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் தேவையான ஆளணிகளும் பொறியமைவுகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும்  தயாராக உள்ளனவா? பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று சொல்லப்படும் முதியவர்கள், சுவாசக் கோளாறு நோய்கள், புற்றுநோய், நீரிழிவு நோய் போன்ற நோயுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டனரா? அவர்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறை தயாராக இருக்கிறதா?  போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளனரா? இதையெல்லாம் வெளிப்படையாக அறிவித்து இந்த இந்த போதாமைகளை சரி செய்வதற்காக எங்களுக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என்றுச் சொல்லத்தான் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் உரிமை உண்டே ஒழிய மக்கள் வீட்டுக்குள் இருப்பதற்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டே இருப்பதற்கு அல்ல. வீட்டுக்குள் இருப்பது என்பது விண்வெளி அறிவியல் அல்ல!

தடுப்பு மருந்து கண்டறியப்பட்டாலோ அல்லது மக்கள் திரள் தடுப்பாற்றல்( herd immunity) உருவானாலோ ஒழிய எண்ணிக்கை ஜீரோ ஆக்குவது சாத்தியமில்லை. அதுவரை எண்ணிக்கை கட்டுக்குள் இல்லாமல் போய்விடாமல் காலத்தை நகர்த்திச் செல்ல வேண்டும். அதற்கு ஏற்ற போதிய வலிமை கொண்ட மருத்துவக் கட்டமைப்பு வேண்டும். அப்படி ஒரு மருத்துவக் கட்டமைப்பு நம்மிடம் இல்லை. எனவே, மருத்துவக் கட்டமைப்பை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. நாம் தயார்படுத்திக் கொண்டிருக்கும் போதே நோய்த் தொற்று கட்டுமீறிப் போய்விட்டால் என்ன செய்வது என்பதற்காக, ஊரடங்கை அறிவித்துவிட்டு மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் வேலையை செய்கிறார்கள். நமக்கிருக்கும் மருத்துவக் கட்டமைப்பு முறிந்துவிழாமல் காலத்தை நகர்த்திச் செல்வதற்கு நோய்த் தொற்று எண்ணிக்கை எந்தளவுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியமானது. அந்த மாய எண் என்பது உறுதியாக ஜீரோ அல்ல.

 

– செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW