கொரோனா ஊரடங்கு காலத்திலும் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அண்ணலின் உறவினரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே மற்றும் எழுத்தாளர் கவுதம் நவ்லகா கைது! – கண்டனம்

15 Apr 2020

ஏப்ரல் 14க்குள் சரணடைய வேண்டும் என ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் விளைவாக ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்  தேசிய புலனாய்வு முகாமையிடம் (NIA) சரணடைந்து சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள். 2018இல் மராட்டிய பேஷ்வாக்களைத் தோற்கடித்த மஹர் மாவீரர்களின் நினைவு நாளான சனவரி 1 பீமா கோரேகான் நினைவிடத்தில் கூடிய தலித்துகள் மீது காவிப்படை வெறியர்கள் நடத்திய தாக்குதல் கலவரத்தை உருவாக்கியது. இந்தக் கலவரத்தை தூண்டியவர்கள் எனக் காரணம்காட்டி நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் கைது செய்யப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 


பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் என இடதுசாரிகள், மதச்சார்பற்ற சுதந்திர சிந்தனையாளர்கள் படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வழக்கறிஞர்  சுதாபரத்வாஜ், கவிஞர் வரவர ராவ்  உள்ளிட்ட பல்வேறு அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் கோரேகான் கலவரத்திற்கு தொடர்புடையவர்கள் என்று காரணம் காட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்று அண்ணல் அம்பேத்கர் உறவினரான ஆனந்த் டெல்டும்டேயும், எழுத்தாளர் மற்றும் மனிதஉரிமை செயல்பாட்டாளருமான கவுதம் நவ்லகா  சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மீதான குற்றச்சாட்டு ஒன்றுதான். தடை செய்யப்பட்ட புரட்சிகர கம்யூனிச இயக்கமான மாவோயிஸ்ட் அமைப்போடு தொடர்பு என்பதுதான். என்ன சான்று?


முப்பது நூல்களுக்கு மேல் எழுதியுள்ள, கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே பணியாற்றக்கூடிய கோவா மேலாண்மை கல்வி நிலைய வளாகத்தில் 2018 ஆகஸ்ட் மாதம் காவல்துறையின் சோதனை, இயக்குனர் தொலைபேசி மூலமாக தெரிய வந்தது. தொலைபேசி உரையாடல் கண்காணிப்பு, வீட்டில் யாரும் இல்லாத பொழுது கதவு திறக்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது, சோதனை செய்யப்பட்டது எனத் தொந்தரவுகள் தொடர்ந்தன. காவல்துறையின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘மாவோயிஸ்ட் தொடர்பு, மாவோயிஸ்ட் தொடர்பு’ என்பது தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது. இந்த சித்தரிப்பு என்பது கைது செய்வதற்கான முகாந்திரத்தை உருவாக்கியது. கைப்பற்றப்பட்ட 13 கடிதங்களில் ஐந்து கடிதங்கள் சாட்சியாக ஆக்கப்பட்டது. ஐந்து கடிதங்களில் ஆனந்த் என்கிற இவருடைய பெயர் இருந்தது என்பது மட்டும்தான் குற்றச்சாட்டுக்கு ஆதாரம். காவி – கார்ப்பரேட் அரசியலுக்கு, அரசுக்கு எதிராக எழும் குரல்களை ஒடுக்குவதற்கு தேசம், தேசியம் என்பது கருவிகளாகப் பயன்படுகிறது.

சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் தொடங்கி அவரது வழித்தோன்றல் ஆனந்த் டெல்டும்டே வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கருத்தியலை, ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகளை அடையாளம் காட்டுபவர்கள் யாராக இருந்தாலும் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதாவின் காவி – கார்ப்பரேட் சர்வாதிகார ஆட்சியில் ஒன்று சிறையில் இருக்க வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.

இன்று இவர்களுக்கு நாளை நமக்கு எனக் கொரோனா ஊரடங்குக் காலத்திலும் பாசிச சர்வாதிகாரம் தலை விரித்தாடுகிறது. இஸ்லாமியச் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆட்சி!

அம்பேத்கர் அடையாளத்தை விழுங்கும் ஆர்.எஸ்.எஸ் – பாசக அடித்தட்டு பட்டியலின மக்களுக்கு எதிரான கருத்தியலைக் கொண்டவர்கள் என்பது இந்தக் கைதுகள் மூலமாக நிரூபனம் ஆகிறது. மராட்டியத்தின் சித்பவன் பார்ப்பனர்கள் பேஷ்வாக்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுவதை விரும்பவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே, எழுத்தாளர் கவுதம் நவ்லகா  மட்டுமல்ல பேராசிரியர் சாய்பாபா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ் இன்னும் சிறையில் இருக்கிற பல்வேறு அறிவுஜீவிகள் மற்றும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி குரல் கொடுப்போம்!

 

 –மீ.த. பாண்டியன்தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW