பாசக நாராயணன்களின் வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறதா தமிழக அரசு?

13 Apr 2020

தொற்று நோய்களின் வரலாற்றில் எப்படி கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குற்றவாளியாக்கும் போக்கு இருந்ததோ அதே போல் கொரோனா நோய்ப் பரவலில் இஸ்லாமியர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நடந்துவருகிறது. Clusters என்று சொல்லப்படும் கொத்துக் கொத்தாய் நோய் தொற்று ஏற்படுவது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாய் நடந்துள்ளது. சீனாவில் ஊனான் கடல் உணவுச் சந்தை, இத்தாலியில் ஒரு மருத்துவமனை, தென்கொரியாவில் சீயோலில் இருக்கும் ஒரு தேவாலயம், பிரான்சில் ஒரு கிறித்தவ வழிபாட்டுப் பெருநிகழ்வு, சிங்கப்பூரில் பன்னாட்டு வணிக மாநாடு நடந்தவொரு நட்சத்திர விடுதி, ஜப்பானில் ஒரு முதியோர் இல்லம், ஆஸ்திரியாவில் ஒரு உல்லாச விடுதி  என கொத்துகொத்தாக நோய்த் தொற்று ஏற்பட்ட cluster கள் கண்டறியப்பட்டுள்ளன. அதுபோல இந்தியாவிலும் பல ‘கொத்துக்கள்’ கண்டறியப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் தில்லி மாநாடு சென்று திரும்பியோர், பஞ்சாபில் சீக்கிய சமய நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றோர், கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு cluster, மத்திய பிரதேசத்தில் நலவாழ்வுத் துறை அதிகாரிகளிடையே என சிலவற்றைக் குறிப்பிடலாம்.

தில்லி தப்லீக் ஜமாத் மாநாடு ஒரு cluster என்று தெரிந்தவுடன் ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் தமது பரப்புரை இயந்திரத்தை முடுக்கிவிட்டனர். ‘கொரோனா ஜிகாத்’ என்று டிவிட் செய்தனர். ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமி ஊளையிட்டான். இஸ்லாமியர் எச்சில் துப்பினர், பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை, தும்முவதற்கு பயிற்சி எடுத்தனர், மருத்துவர், செவிலியர்களிடம் ஒத்துழைக்க மறுத்தனர் என்று விதவிதமான பொய்களைப் பரப்பிவிட்டனர். கொரோனாவைவிடவும் வேகமாக ஆர்.எஸ்.எஸ். இன் பொய்கள் பரவியதைக் கண்டோம். பிறகு தமிழகத்தில் இதை ஒட்டி எழுந்த விமர்சனங்களுக்குப்பிறகு அதிமுக அமைச்சர் ஒருவர் ’கொரோனாவுக்கு மதம் இல்லை’ என்றொரு ’முத்தை’ உதிர்த்தார்.

’தப்லீக் ஜமாத் இஸ்லாமிய மாநாடு’ என்று முதலில் சொல்லத் தொடங்கி தில்லி பயண வரலாறு என்று மாற்றி பின்னர் ’ஒரே தொற்று’ என்று சொல்லத் தொடங்கினார் நலவாழ்வுச் செயலர் பீலா இராஜேஷ். தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை முன்மாதிரியாக எடுத்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஓர் ஆங்கில ஊடகம் எழுதியது. இணைய தளத்தில் கொரோனாவுக்குள் மதவாதத்தைப் புகுத்தும் பதிவுகளைப் போட்டவர்களில் சிலர் மீது புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் வழக்குப் போட்டுள்ளது தமிழக அரசு. அதே நேரத்தில், நச்சுப் பரப்புரையை ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் தொடங்கிய மாத்திரத்திலேயே எச்சரிக்கை விடவோ அல்லது தாமே முன்வந்து வழக்குப் போடவோ தமிழக அரசு துணியவில்லை. மாறாக, மத்திய, மாநில அரசின் போதாமையை விமர்சிக்கக் கூடியவர்கள் மீது வழக்கு பாய்கிறது, கைது செய்யப்படுகிறார்கள். சி.பி.ஐ.(எம்-எல்) ஐ சேர்ந்த தோழர் ஒருவரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் ஒருவரும் அரசை விமர்சித்து பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னொருபுறம், மாரிதாஸ் போன்ற ஆர்.எஸ்.எஸ். வெறியர்களோ தங்கள் மீது வழக்குப் போடப்பட்டப் பிறகுதான் இன்னும் அதிகமாக இஸ்லாமியர்களுக்கு எதிராக விசம் கக்கி வருகின்றனர். பாம்பும் சாகாமல் கம்பும் உடையாமல் அடிப்பது போல் அரசு ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகள் மீது எடுக்கும் நடவடிக்கைகள் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, நோய்த்தொற்றுக்கு ஆளோனோரின் பெயர், தொலைபேசி எண்கள், முகவரி ஆகியவை இணையத்தில் உலா வந்தன. அந்த தொலைபேசி எண்களுக்கு அழைத்து ஆர்.எஸ்.எஸ். பேர் வழிகள் நோயுற்றோரை வம்பு இழுத்தனர். நோயாளிகளின் பெயரே சொல்லப்படக் கூடாது என்றிருக்கும் போது எப்படி முழு விவரங்கள் வெளியே வந்தது. இது எப்படி நடக்க முடியும்? வெற்றிக்கு பல தகப்பன்கள் உண்டு. தோல்வி எப்போதும் அனாதைதான். பொறுப்பேற்க ’மாண்புமிகு முதல்வரோ’ , அவர் வழிகாட்டலில் செயல்படும் நலவாழ்வு அமைச்சரோ அல்லது நலவாழ்வு செயலரோ முன்வர மாட்டார்கள்!

அதே நேரத்தில், தப்லீக் ஜமாத்தினர் மீது வழக்குப் போட்டார் தில்லி முதல்வர். சுற்றுலா விசாவில் வந்தவர்கள் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குற்றம் எனக் கொரோனா பேரிடரின் போதும் உள்துறை அமைச்சகம் சட்டக் கடமையை ஆற்றத் தொடங்கியது. தமிழக அரசோ இதே குற்றச்சாட்டைச் சொல்லி கூடவே கொரோனாவை பரப்பியதாகவும் சொல்லி வழக்கு போட்டது. வெளிநாட்டு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு உதவினார்கள் என்ற பெயரில் உள்ளூர்காரர்களின் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இன்னொருபுறம், இஸ்லாமியர்களில் சிலர் மருத்துவப் பணியாளர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் எச்சில் துப்பினர் என்றும் கொலை முயற்சி வழக்குப் போடப்பட்டுள்ளது என்றும் தொலைக்காட்சி செய்தி ஒன்று இன்றைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. எத்தகையப் பேரிடரின் போதும் இஸ்லாமிய எதிர்ப்புவாதத்திற்கு எண்ணெய் ஊற்றும் பணியை உளவுத் துறையினர் கச்சிதமாக செய்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகிறது.

இப்போது குறிப்பான ஒரு விசயத்திற்கு வருகிறேன். அன்றாடம் செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களைச் சொல்லும் போது ’தில்லி சென்று வந்தோர்’ என்றுகூட குறிப்பிடாமல் ’ஒரே தொற்று’ என்று குறிப்பிடும் அளவுக்கு அதிகாரிகள் மாறியிருப்பினும் ஆர்.எஸ்.எஸ். கழிச்சடை ஒன்று ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், ’தப்லீக் மாநாடு சென்று வந்தோரில் எத்தனை பேருக்கு நோய்த் தொற்று’ என்ற பதிவை டிவிட்டரில் போடுகிறது, கூடவே இது பற்றிய ஊடக செய்தி ஒன்றையும் அனுப்புகிறது. அது வேறு யாரும் அல்ல, ஊடக விவாதங்களுக்கு வரும் பாசக நாராயணன்தான்.

 

 

இந்த விவரத்தை இவர் எங்கிருந்து பெறுகிறார் என்று பார்த்தால் தமிழக அரசு வெளியிடும் செய்தி அறிக்கைகளில் இருந்துதான்! ஒவ்வொரு நாளும் தமிழக அரசு வெளியிடும் கொரோனா தொடர்பான

‘அன்றாட செய்தி’ அறிக்கையில்,

 

Total number of persons attended the single source event at Delhi traced and isolated ( எத்தனை பேர் தில்லி தொற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு , தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்),

 

Total Number of samples sent for testing for those attended single source event at Delhi and their contacts ( மொத்தமாக தில்லி நிகழ்வில் பங்கேற்றோர் மற்றும் அவர் தம் தொடர்புகளில் இருந்து பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ள மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை),

 

Total Number of positive in those attended single source event at Delhi and their contacts till yesterday (  தில்லி நிகழ்வில் பங்கேற்றோர் மற்றும அவர்தம் தொடர்புகளில் நேற்று வரை தொற்று கண்டறியப்பட்டோர்)

 

Total Number of positive in those attended single source event at Delhi and their contacts on today (  தில்லி நிகழ்வில் பங்கேற்றோர் மற்றும் அவர்தம் தொடர்புகளில் இன்றைக்கு தொற்று கண்டறியப்பட்டோர்),

 

Total Number of positive in those attended single source event at Delhi and their contacts till today (தில்லி நிகழ்வில் பங்கேற்றோர் மற்றும் அவர்தம் தொடர்புகளில் இன்றைக்கு வரை தொற்று கண்டறியப்பட்டோர்)

 

ஆகிய விவரங்கள் கொடுக்கப்படுகின்றன.

 

இப்படிப்பட்ட பகுப்பாய்வு தேவையா? என்றால் தேவை தான். அதுவும் மாவட்ட அளவில் செய்து பார்க்க வேண்டிய தேவையுள்ளது. ஏனென்றால், எண்ணிக்கை எவ்வளவு என்று பார்ப்பதைவிட எத்தனை மூலத்தில் இருந்து ஏற்பட்ட தொற்று என்று பார்த்தால் அதன் அடிப்படையில் நோய்ப் பரவலின் தீவிரத்தை அந்தந்த மாவட்டங்களில் மதிப்பிடவும் முடியும். ஆனால், பகுப்பாய்வுக்கான இந்த விவரங்கள் நலவாழ்வுத் துறைக்குத் தேவையே ஒழிய வெகுமக்கள் பார்வைக்கு தேவையற்றவை! ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, எத்தனைப் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது, எத்தனை பேருக்கு தொற்று இல்லை, எத்தனை மாதிரிகளுடைய முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் என்பது போன்ற விவரங்கள்மட்டும் போதுமானவை.

 

தொடக்கக் காலத்தில் அதாவது ஏப்ரலுக்கு முன்பு எண்ணிக்கை மிக குறைவாக இருந்த பொழுது, தொற்று மூலம் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டன என்றாலும் இந்தக் கட்டத்தில் அவை தேவையற்றது. தில்லி பயணத்தோடு தொடர்பு இல்லாதோரின் தொற்று மூலம் இவ்வறிக்கைகளில் இப்போது கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு பொருந்தக் கூடிய அதே அணுகுமுறை தில்லிப் பயணத்தோடு தொடர்புடையவர்களுக்கும் பொருந்தும் தானே. எடுத்துக்காட்டாக, ஏப்ரல் 10 அன்று தொற்றுக் கண்டறியப்பட்ட 77 பேரில் 70 பேர் தில்லி பயணத்தோடு தொடர்புடையவர் என்று குறிப்பிடும் அறிக்கை, ஏனைய 7 பேரின் தொற்று மூலம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. 7 பேருக்கு எப்படி தொற்று மூலம் பற்றி குறிப்பிடுவது தேவையில்லையோ அதே ஏரணம் அந்த 70 பேருக்கும் பொருந்தும்.

 

அதுமட்டுமின்றி, கொரோனா நோய்த் தொற்றால் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மருத்துவமனைகளில் இருக்கும் போதும் அவர்களில் சிலர் செத்து மடிவது அன்றாட செய்தியாகிக் கொண்டிருக்கும் போதும் ’தப்லீக் ஜமாத் மாநாட்டு எண்ணிக்கை’ என்று குறிப்பிட்டு நோயாளிகளையும் அவர் சார்ந்த சமூகத்தையும் களங்கப்படுத்தி அரசியல் அணி திரட்டலுக்கு துடியாய்துடிக்கும் சிலர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தீனி போடும் வேலைதான் இது.

 

அதாவது, மிச்சம் உண்ணி விலங்குகளைப் போல, கிடத்தப்பட்டிருக்கும் பிணத்தில் நகை திருடுபவன் போல, கொரோனாவைப் பயன்படுத்தியாவது மதவெறி ஊட்டி கட்சி வளர்த்திடத் துடிப்பவர்கள் கனவான்களாகவும், கட்சிப் பிரதிநிதிகளாகவும் ஊடகப் பிரபலங்களாகவும் இருக்கும் சமூகம் இது. எனவே, அன்றாட அறிக்கையில் தில்லிப் பயணம் சென்று வந்தோரில் எத்தனைப் பேருக்கு தொற்று என்ற விவரத்தைப் பிரித்துச் சொல்வது தேவையில்லை என்பதைவிட அது தீங்கு விளைவிக்கக் கூடியது என்ற வகையில் கண்டிப்பாக நிறுத்தபட வேண்டும். ஏற்கெனவே, பதிக்கப்பட்ட அறிக்கைகளிலும் அந்த விவரங்களை நீக்க வேண்டும்.

 

இல்லையென்றால், தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். இன் வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறது என்றுதான் பொருள்.

 

-செந்தில்

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW