பீமா கோரேகான் முதல் திருவொற்றியூர் வரை ஊபா(UAPA) கைதுகளும் கலையாத மெளனமும் – செந்தில்

05 Jul 2023

கடந்த ஆண்டு இதே ஜூன் , ஜூலை மாதங்களில் ’பீமா கோரேகான் – எல்கர் பரிசத் வழக்கு வழக்கு” என்று அறியப்படும் வழக்கில் சிறைப்பட்டோர் விடுதலைக்காக இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஜூன் 11 அன்று ”பீமா கோரேகான் – எல்கர் வழக்கு: சிறைபடும் நீதி” என்ற தலைப்பிலான சிறு வெளியீடு சர் பிடி. தியாகராயர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. அந்நூலாக்கத்தில் நானும் பங்குபெற்றிருந்தேன். பின்னர், ஜூலை 30 அன்று வள்ளுவர்கோட்டத்தில் அதே கோரிக்கைக்காக ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவற்றை ஒருங்கிணைத்தது ’பீமா கோரேகான் அரசியல் சிறைப்பட்டோர் விடுதலைக் குழு’ என்ற கூட்டமைப்பு.

மராட்டிய மாநிலத்தில் புனே நகரில் பீமா ஆற்றங் கரையில் உள்ள கோரேகான் என்ற சிற்றூரில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பேசுவாக்களின் படையை மகர் படை வீழ்த்தியதை நினைவு கூர்ந்து 2018 சனவரி 1 அன்று மக்கள் ஒன்றுகூடினர். ’எல்கர் பரிசத் (உரத்த அறைகூவல்) என்ற எழுச்சிகரமான நிகழ்ச்சியை சுமார் 250 அமைப்புகள் சேர்ந்து அங்கே முன்னெடுத்தன. இதன் மூலம் மராத்தா – மகர் ஒற்றுமையை உயர்த்திப் பிடித்த இந்நிகழ்வுக்கு குந்தகம் விளைவிக்க முயன்றது ஆர்.எஸ்.எஸ். அவ்விடத்தில் கலவரத்தை தூண்டியது. இந்தக் கலவரத்தைக் காரணம் காட்டி, சங் பரிவார சக்திகள் கொடுத்த முதல் தகவல் அறிக்கையில் வழக்கறிஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், கலைப் பண்பாட்டு இயக்கத்தவர்கள், அருட்தந்தை எனப் பலரும் சதித்தனமாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை தொடுத்தது மராட்டியத்தை அப்போது ஆண்டு கொண்டிருந்த பாசக அரசு.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மராட்டிய மாநிலத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தது. அந்த வழக்கை விசாரிப்பதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கலாம் என மாநில அரசு ஆலோசித்துக் கொண்டிருந்த போதே அதை என்.ஐ.ஏ கையில் எடுத்துக் கொண்டது. இதை பீமா கோரேகான் – எல்கர் பரிசத் வழக்கு என்கிறோம்.

2018 ஜூன் 6 ஆம் நாள் தொடங்கிய  கைதுப் படலம் மொத்தமாக 16 பேரை சிறையில் அடைக்கும் வரை தொடர்ந்தது. கலவரத்தைத் தூண்டியவர்கள் என்று தொடங்கிப் பின்னர் தலைமை அமைச்சர் மோடியைக் கொல்ல திட்டமிட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

சிறைபடுத்தப்பட்ட ரோனா வில்சனின் கணிணியில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களைச் சான்று காட்டியது என்.ஐ.ஏ. ஆனால், அவை வெளியில் இருந்து திருட்டுத்தனமாகப் புகுத்தப்பட்டவை என கோவா நிர்வாகவியல் கழகமும் மும்பை ஐ.ஐ.டி.யும் வட அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தில் ’அர்செனல் கன்செல்டிங்’ என்ற இலக்க தடயவியல் நிறுவனமும்  மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் உறுதிசெய்தன. 

கைநடுக்க நோயால் பாதிப்புற்றிருந்த, 85 அகவை நிரம்பிய  அருட்தந்தை ஸ்டேன் சாமி 2021 ஜூலை 5 ஆம் நாள் ஊபா கைதியாகவே உயிர்விட்டார். பல மாதங்கள் கழித்து சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஆனந்த டெல்டும்டே, கவுதம் நவ்லாகா போன்றோருக்குப் பிணை அல்லது வீட்டுக்காவல் கிடைத்தது. ஏனையோர் இந்த நாள் வரை சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களுக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த இவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருந்த பின்னணியில் மேற்சொன்ன சிறுவெளியீடு வந்தது; ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்விரண்டிற்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. ”சிறைப்பட்டோரை மக்களுக்கு தெரியாது, மராட்டியத்தில் நடந்துகொண்டிருக்கிறது, தமிழ்நாட்டுக்கு மிகவும் தொலைவானது, மாவோவியர்களுடைய பிரச்சனை என்று பலவாறு காரணம் சொல்லப்பட்டது.

2019 ஆம் ஆண்டு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சாகின் பாக் திடலில் நடைபெற்ற போராட்டம் நாடு முழுவதும் பரவியது; உணர்வெழுச்சியை ஊட்டியது. அப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கலவரத்தை தூண்டியது பாசக. தில்லிக் கலவரத்தை ஒட்டிப் போடப்பட்ட வழக்கில் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தில் ஊக்கமுடன் பங்கேற்ற இதிலும் பலர் ஆயிரம் நாட்களைக் கடந்து சிறையில் வாடிவருகின்றனர்.

மராட்டியமே தூரம் என்றால் தில்லியைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. எனவே சிஏஏ எதிர்ப்புப் போராட்ட வழக்கில் சிறைப்பட்டோருக்காகவும் தமிழ்நாட்டில் ஆதரவு இயக்கம் எழவில்லை. இதுபோல் நாடெங்கும் ஆயிரக்கணக்கானோர் ஊபா பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 19 அன்று தமிழ்நாட்டில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர்  9 பேர் ஊபா பிர்வுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  செப்டம்பர் 22 அன்று மற்றுமொரு வழக்கில்   பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச் சேர்ந்த, பல்வேறு மாநிலங்களில் உள்ள  21 பேர் ஊபா பிரிவுகளின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

செப்டம்பர் 28 ஆம் நாள் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பும் அதன் உறுப்பு அமைப்புகள் என்ற பெயரில் வேறுபல அமைப்புகளும் தடைசெய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவ்வமைப்பை கலைத்துவிடுகிறோம் என்று அவர்கள் வெளிப்படையான அறிவிப்புக் கொடுத்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கவும் அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கவும் செயல்பட்டு வந்த அமைப்பு..

பாப்புலர் ஃப்ரண்ட் அவ்வமைப்பினர் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டனராம்; சட்டவிரோத செயல்கள், பயங்கரவாத செயல்கள் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டினராம்; இதுபோன்ற பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ வுக்கு கிடைத்ததாம். அதன் அடிப்படையில் அவ்வமைப்பை தடை செய்தார்களாம்! மேற்சொன்ன  குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடுத்திருக்கிறது என்.ஐ.ஏ.

ஒரே குற்றச்சாட்டுக்காக இருவேறு வழக்குகள் என்பதே சட்டவிரோதமானது! பயங்கரவாத குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்ரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு ஐந்து மாதங்கள் கழித்து அவ்வழக்குக்காக கைது செய்திருப்பதில் இருந்தே தெரிகிறது குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை! இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டிற்கு எவ்வித சம்பவமோ ஆதாரமோ காட்டப்படவில்லை  இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டிற்கு எவ்வித சம்பவமோ ஆதாரமோ காட்டப்படவில்லை.

இது போல் இவ்வழக்குகள் பொய் வழக்கு என்று காட்ட பற்பல வாதங்கள் உள்ளன. ஆனாலும் செப்டம்பரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை பிணைகூட கிடைக்கவில்லை.

கைது செய்யப்பட்டவர்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநிலத் துணைத் தலைவராக இருந்த தோழர் காலித் முகமது, ஊபா மற்றும் அடக்குமுறை சட்டங்களுக்கு எதிரான இயக்கத்தின்( Movement Against UAPA and other Repressive Laws) தமிழ் மாநில அமைப்பாளராக இருந்து பாடுபட்டவர். ஆனால், இப்போது அவரே ஊபாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்றார்.

இவர்கள் கைது செய்யப்பட்ட போது எழுந்த கண்டனங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்பட்ட போதும் அதன் பிறகும் எழவில்லை. ஒன்றிய பாசக அரசின் உளதுறை அமைச்சகத்தின் ஆணையைத் தலைமேல் தாங்கியடி எல்லா மதச்சார்பற்றக் காட்சிகளும் வாயை மூடிக் கொண்டு வரிசையில் நின்றன.

இன்னொருபுறம் கோவை எரிவாயு உருளை வழக்கை தாமே முன் வந்து என்.ஐ.ஏ.வுக்கு மாற்றிக் கொடுத்தது திமுக அரசு. அதிலும் 11 பேர் ஊபாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்படியாக அன்றாடம் சோதனை, கைதுகள் என திறந்த வீட்டில் நாய் நுழைந்தது என்.ஐ.ஏ செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறுகின்றன. அரசியல் தளத்தில் வெறும் செய்தியாக மாறிப் போய்க் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய அமைப்புகள்கூட இவற்றை எதிர்த்தால் எங்கே  தனிமைப்பட்டுவிடுவோமோ என அஞ்சுகின்றன.

இந்த நிலையில்தான் கடந்த மே 9 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். எந்த வழக்கில் என்.ஐ.ஏ.வுக்கு எதிராக வாதாடிக் கொண்டிருந்தார்களோ அதே வழக்கில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கலைச் சேர்ந்த தோழர் கெய்சரும் தேனியில் ஒருவரும் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தோழர் அப்துல் ரசாக்கும் கைது செய்யப்பட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்பட்டும் அவ்வமைப்பு கலைக்கப்பட்டும் 7 மாதங்கள் கழித்து இந்த கைது நடந்திருக்கிறது.  வழக்கறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும், இடைக்கால பிணைக் கொடுக்க வேண்டும், இது சட்டவிரோதக் கைது என மூன்று வேண்டுகோள்களாக உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடந்து வருகிறது. இவை எல்லாவற்றையும் மறுத்து என்.ஐ.ஏ. தரப்பில் சோலிசிட்டர் ஜென்ரல் துசார் மேத்தா வாதாடிக் கொண்டிருக்கிறார். இவ்வழக்கு ஜூலை 7 க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் கைதும் சரி பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் கைது செய்யும் அரசியல் தளத்தில் எவ்வித சலனமும் ஏற்படுத்தவில்லை

குறிப்பாக தோழர் அப்துல் ரசாக் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் முன்னணிகளுக்கே தெரியவில்லை. சென்னையில் உள்ள அனைத்து முற்போக்கு அமைப்புகளுடனும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தொடர்பில் இருந்தவர் அவர் தான். அவ்வமைப்பின் வெளியுறவு தொடர்பாளர் போல் செயல்பட்டவர். எல்லாப் போராட்டங்களிலும் அவ்வமைப்பின் முகமாக கலந்துகொள்பவர். அவரையும் மீறி அவரது வெகுளித்தனமும் நல்மனமும் அவரது கண்களின் வழியாக தாவிக் குதித்து வரக் காணலாம்.  அன்புக்குரிய தோழர் ரசாக் கைது செய்யப்பட்டு இத்தனை நாளாகியும் அதற்கு எதிராக முனுமுனுப்புகள் கூட எழவில்லை.

பீமா கோரேகான் மிகவும் தொலை என்றார்கள். அதில் கைது செய்யப்பட்டோரை தெரியாது என்றார்கள். திருவொற்றியூருக்கு நம்மவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? மிகவும் தொலைவு என்று சொல்லப் போகிறார்களா? அல்லது அப்துல் ரசாக்கை எங்களுக்கு தெரியாது என்று சொல்லப் போகிறார்களா?

பாசிசத்தின் கருவியாய் ஊபாவும் பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் என்.ஐ.ஏ வும் இருந்து வருகின்றது. இவற்றுக்கு எதிராகப் பேசாமல் பாசிச எதிர்ப்பு என்ற ஒன்று இருக்க முடியுமா? இவற்றால் பாதிக்கப்பட்டு சிறையில் இருப்போருக்காக குரல் கொடுக்காமல் பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ள முடியுமா?

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீதான தடை என்பது இஸ்லாமியர்கள் தம்மை அமைப்பாக்கிக் கொள்வதற்கும் தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட தடையாகும். அதாவது அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் இருக்கும் அடிப்படை உரிமையை மறுப்பதாகும். இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நம் அன்புக்குரியவர்கள் செய்த குற்றம் என்ன? அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக மக்களை திரட்டுவதற்கும் விடாப்பிடியாகப் போராடுவதற்கும் முயன்றதுதான் அவர்கள் செய்த குற்ற்மா? 

இதை எதிர்த்துப் பேசுவதால் வரக்கூடிய அடக்குமுறைகளை சந்திக்க துணியாத அரசியல் பாசிச எதிர்ப்பு அரசியலாக இருக்க முடியுமா?

தமிழ்த்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட் பல்வேறு இடதுசாரி, தமிழ்த்தேசிய, இஸ்லாமிய, சாதி ஒழிப்பு அமைப்புகள் உறுப்பு அமைப்புகளாய் இருக்கும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்பட்ட போது தடுமாறவில்லை; பின்வாங்கவில்லை. எதிர்த்துப் போராடத் துணிந்தது. இப்போது இஸ்லாமிய இளைஞர்களை என்.ஐ.ஏ. வேட்டையாடிக் கொண்டிருக்கும் போதும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி வேடிக்கை பார்க்க அணியமாக இல்லை.

நாம் எதிர்த்துப் பேசுவதால் ஆகிவிடப் போவதென்ன? என்று சிலர் கேட்கக் கூடும். உண்மைதான் சிறைக் கதவுகள் உடைந்துவிடப் போவதில்லை. ஆனால், ”நமக்காக எவரும் பேசத் துணியவில்லை” என்று சிறையில் இருக்கும் தோழர்களிடமும் குடும்பத்தாரிடமும் இஸ்லாமிய சமூகத்திடமும் வளர்ந்து வரும் நம்பிக்கையின்மை தகர்த்தெறியப்படும். அதற்காகத்தான் நாம் மெளனம் கலைக்க முனைகிறோம். 

நாளை(6-7-2023) வியாழன் மாலை 5 மணிக்கு சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் ”பாசிசச் சட்டங்கள் – ஊபா, என்.ஐ.ஏ” என்ற தலைப்பில் கண்டனக் கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது.

ஊபா, என்.ஐ.ஏ வை அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்டுவோம்! நாடெங்கும் உள்ள ஊபா வழக்குகளுக்கு எதிராக திரள்வோம்!

ஊபாவைத் திரும்பப் பெறச் சொல்வோம்! என்.ஐ.ஏ. வைக் கலைக்கக் கோருவோம்!

காலித் முகமதுகளும் அப்துல் ரசாக்குகளும் நம்மவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்!

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW