கொரானா காலத்தில் எதிர்க்கட்சிகள் தன்னார்வ  தொண்டு  நிறுவனங்களாக மாறி விட்டனவா?

11 Apr 2020

 

கொரானா கொள்ளைநோய் என்ற பேரிடர் ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் தீர்மானித்துக் கொண்டிருக்கிற சூழலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதுபோல எதிர்க்கட்சிகள் மக்களுக்கு உணவு கொடுக்கிறோம், மருத்துவத்திற்கு மண்டபம் கொடுக்கிறோம் என அபத்தமாக பேசுகின்ற நிலைமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த கடினமான சூழலில் மக்களுக்கு சேவை ஆற்றுவதைக் குறைத்து மதிப்பிடுவதற்காகவோ அல்லது தேவையற்றது என்ற பொருளிலோ இதை குறிப்பிடவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசு கொடுத்த விவரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தங்குமிட ஏற்பாட்டில் மத்திய மாநில அரசுகளுக்கு இணையாக 40 லட்சம் பேருக்கு  என்ஜிஓ கள் தங்குமிட வசதியை உணவு ஏற்பாட்டை மேற்கொண்டு இருக்கின்றன.

 

வரலாறு காணாத இந்த பேரிடர் காலத்தில் இது மக்களுக்கு போதுமானதா? மக்களில் ஒவ்வொரு பிரிவினரும் எதிர் கொண்டிருக்கின்ற சிக்கல்கள் ஒவ்வொன்றும் புதிதுபுதிதாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் முகம் கொடுக்க வேண்டாமா? சட்டமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு நிகராக சரி பாதி சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கஜா புயலின் பொழுதும் இப்பொழுது கொரானா பெருந்தொற்று நோய் காலத்திலும் ஆளும் அண்ணா திமுக அரசின் நடவடிக்கைகளை அவசரப்பட்டு உடனே எடுத்த எடுப்பில் பாராட்டிவிட்டு, பிறகு சில நாள்விட்டு விமர்சனம் செய்து, சில கோரிக்கைகளை மட்டும் வைத்துவிட்டு ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளுக்கு வாளாவிருப்பதன் அர்த்தம் என்ன? திமுக கூட்டணியில் இருக்கின்ற எதிர்க்கட்சிகளும் மக்களின் கோரிக்கைகளுக்கு நின்று அரசுக்கு நிர்பந்தத்தை உருவாக்குகின்ற செயல் துடிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு சப்பாணியாக கோரிக்கைகளை பேசிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன, நடைமுறையில் எதிர்க்கட்சிகளே இல்லாத அரசியல் சூழலுக்கான காரணம் என்ன?  பேரிடர் காலங்களில் மக்களுக்கு சேவை செய்தால் போதும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து அரசை நிர்ப்பந்திக்கின்ற அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையில்லை என முடிவெடுத்து விட்டார்களா?

 

பாசிச  மோடி-  ஷா ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சுற்றி அதிகாரத்தைக் குவித்து கொண்டிருக்கிற மைய அரசின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளினால் இலட்சக்கணக்கான மக்கள் நடுத்தெருவில் அலைந்தார்கள். உணவின்றி மக்கள் சாலைகளில் இறந்துபோனார்கள். இஸ்லாமியர்கள் சாத்தானைப் போல தூற்றப் பட்டார்கள். புலம்பெயர் தொழிலாளிகள் மாட்டு மந்தைகளைப் போல நிறுத்தப்பட்டு பூச்சி மருந்து அடிக்கபட்டார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி நிபந்தனையோடு மைய அரசுக்கு ஒத்துழைப்பு தருவதாக மோடிக்கு கடிதம் எழுதி முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது

 

ஆளும் அதிமுக அரசின்,  மத்திய மோடி அரசின் மக்கள் விரோதப் பேரிடர் கொள்ளைநோய் கால கொள்கைகள் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் கையாலாகாத நிலையும் ஒரு மனிதப் பேரவலம் நிகழும் பொழுது மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு வேடிக்கைதான் பார்க்கப் போகின்றன

 

கொரானா கொள்ளை நோய் காலமான கடந்த 25 நாட்களில் மத்திய மாநில அரசுகளால்  மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அமலாக்கபட்டு வருகின்றன.

1. நோய்த்தடுப்பு ஊரடங்கு, நாடு தழுவிய முடக்கம் .

2. கொரானா நோய்த்தடுப்பு மருத்துவக் கொள்கைகள்

3. பொருளாதார நிவாரண நடவடிக்கைகள். 

 

முதலாவது ஊரடங்கு மற்றும் உற்பத்தி முடக்கத்தை  மாநில அரசுகளை பாராளுமன்றத்தை கலந்தாலோசிக்காமல்  அறிவித்த முறையே கும்பல் ஆட்சியின் அமலாக்க முறையைக் காட்டுகிறது. அதிகாரத்தை குவித்த கும்பல் சமுதாய நிலைமைகளை அறியாமல் மேலிருந்து உத்தரவிட்ட மக்கள் விரோத  தன்மையைப் புலம்பெயர் தொழிலாளர் நெருக்கடி அம்பலப்படுத்தியது. செல்லாப் பணம் அறிவிப்பு நடவடிக்கை போலவே தொழில் முடக்கம் முறைசார்ந்த பெருந்தொழில் நிறுவனங்களை கண்ணுக்குத் தெரியாத வகையில் பாதிக்கப் போவதில்லை.  ஆனால் முறைசாரா சிறு குறு நடுத்தர தொழில் உற்பத்தி, வர்த்தகம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது. விவசாய விளை பொருளின் விற்பனை சங்கிலியும் வருகின்ற அறுவடை காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. நாடு தழுவிய முடக்கத்திற்குப் பிறகு பல்வேறு கட்டங்களின் ஊடாக படிப்படியாக விலக்கி சமுதாய நடவடிக்கைகளை தொடங்குதல் என்பது பற்றி தென் கொரியா வியட்நாம்  சீனா போல தெளிவான கொள்கைகள் இல்லாமல் அறிவித்ததால் முடக்கத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.  வருகின்ற அழிவு குறித்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க இப்பொழுது முன்னாள் பிரதமர்கள், பாராளுமன்ற எதிர்க்கட்சி குழுக்களின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் என அனைவருடனும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு நாடுதழுவிய முடக்கம் வேண்டுமா? வேண்டாமா? என்ற கலந்தாலோசனை நாடகத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

 

இந்நிலையில் மோடியைவிட வானளாவிய அதிகாரம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமியோ மருந்து கொடுக்கிற விவகாரத்திற்கு அனைத்துக்கட்சி கூட்டம் எல்லாம் தேவையில்லை என அறிவித்துவிட்டு 19 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனையை ஏற்று முடக்கத்தை தொடர வேண்டும் என மத்திய அரசுக்கு அறிவுரை வழங்க இருக்கிறார். இந்நிலைமையில் தான் அமெரிக்காவில் இந்தக் கொள்ளை நோய்ப் பேரிடரை எதிர்கொள்ள அனைத்துக் அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய தேசிய ஒற்றுமை அரசாங்கம் ஒன்றை உருவாக்கலாமா? என்பதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு நமது எதிர்க்கட்சிகளும் எதிர்க்கட்சித்தலைவர்  ஸ்டாலினும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான கோரிக்கையை வைத்துவிட்டு மண்டபத்தையாவது எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் .

 

இரண்டாவது  மருத்துவ கொள்கை.  கொரானா அனைத்து முரண்பாடுகளும் வெடித்து சிதறுகின்ற குவிமையமாக மாறிவிட்டது. ஸ்டார் வார் நடத்துவோம் என கொக்கரித்த உலக வல்லாதிக்க சக்திகளிடம் சாதாரண முக கவசமும் படுக்கைகளும் வெண்டிலேட்டர்களும்கூட இல்லை என முதலாளித்துவத்தின் கோர முகத்தை தோலுரித்து விட்டது.  இந்த நிலைமையில் 2024ல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம், வல்லரசுக் கனவு இந்தியாவின் நிலையோ இதைவிட மோசமானது.  மருத்துவ சாதனங்களும் கிடையாது, மருத்துவ கொள்கையிலும் சொந்த சரக்கு கிடையாது.  யாரையாவது பின்பற்றியாக வேண்டும் – சீனாவை பின்பற்றலாமா? அமெரிக்காவை பின்பற்றலாமா? என யோசித்து அமெரிக்காவைப் பின்பற்றி அசட்டையாக இருந்துவிட்டு பிறகு பிரச்சினையின் தீவிரத்தை உணர தொடங்கியவுடன் சீனாவின் ஊகான் முன்மாதிரி, விலகி இருத்தல் மற்றும் நாடுதழுவிய முடக்கம் என்ற கொள்கையை உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஏற்று அமல் படுத்தியது. பிறகு அதிலிருந்து நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிமுறைகள் பற்றிய கொள்கை தெளிவு இல்லாததால் செல்லா பணம் நடவடிக்கை போல பொறுப்புக்கூறல் இல்லாமல் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டிருக்கிறது.

 

அடுத்து கடந்த 25 ஆம் தேதி முதல் தொடங்கிய ஊரடங்கு நாட்களில்,  நோய்த்தொற்று பகுதிகளைக் கண்டறிந்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பரிசோதனைகளை மேற்கொண்டு நிலைமைகளில் தெளிவையும் உண்டாக்கவில்லை அதற்குக் காரணம் போதுமான மருத்துவ சாதனங்களையும் பாதுகாப்பு உபகரணங்களையும் பரிசோதனை கருவிகளையும் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசிடம் எந்த திட்டமிடலும் இல்லை. ஆனால் இப்பொழுது தமிழக அரசு பரிசோதனை கருவிகளை இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் செய்த இடத்தில் தலையிட்டு அந்தக் கருவிகளை தமிழகத்திற்கு தர விடாமல் தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறது. தமிழகத்துக்கு வர வேண்டிய பரிசோதனைக் கருவிகள் தாமதமாகின்றன இந்தக் கொள்ளை நோயிலும் மாநில அதிகாரத்தைப் பறிக்கிற மோடியின்  கேடுகெட்ட செயல் நேற்றைய செய்தி. அதேபோல கேரள அரசின் பல்வேறு முன்னோடி பரிசோதனை நடவடிக்கைகளுக்கு அனுமதிதராமல் கால தாமதப்படுத்துகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவ கொள்கையில் மத்திய அரசும் மோடியும் என்ன செய்து கிழித்தார்கள்.  நாடு தழுவிய முடக்கத்தை அறிவித்துவிட்டு கைதட்ட சொன்னார்கள்,  விளக்கேற்ற சொன்னார்கள், தினசரி மாநில அரசுகளின் அறிக்கைகளை வாங்கிக்கொண்டு மாநில அளவிலான நோயாளர்களின் எண்ணிக்கையின் கூட்டுதொகையை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். வேறொன்றும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு எதற்கு மத்திய அரசு? மாநில அரசு?

 

வியட்நாம் போன்ற நம்மை விட பின்தங்கிய சிறிய நாடுகள்கூட வெற்றிகரமான மருத்துவக் கொள்கையை அமல்படுத்தி, கொள்ளை நோயில் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றி இருக்கின்றன. பல கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற இந்தியாவில் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் தூக்கத்திலிருந்து விழித்து, உலகத்தைப் பார்த்தாவது அரசை, ஆளும் கட்சியை விமர்சித்து மக்களைக் காப்பாற்ற வேண்டாமா?

 

மூன்றாவது பொருளாதார நிவாரண கொள்கை. கொள்ளை நோயினால் ஏற்படும் பொருளாதார பேரழிவை தடுக்க அமெரிக்கா தனது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10 சதவீத தொகையை 2.2 ட்ரில்லியன் டாலர் பணத்தை நிவாரணத்திற்காக ஒதுக்கியுள்ளது வளர்ச்சியடைந்த நாடுகளான ஜப்பான், ஜெர்மனி தொடங்கி, சிறிய நாடுகள் சிங்கப்பூர், வியட்நாம் வரை இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை பொருளாதாரத் தூண்டலுக்காக மக்களின் நிவாரணத்திற்காக வழங்கியுள்ளன .  ஆனால் இந்திய அரசு மட்டும் கல்லுளிமங்கனாக, உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வெறும் ஒரு சதவீத தொகையை அதாவது 1. 7 லட்சம் கோடியை மக்களுக்குப் பிச்சை போட்டுள்ளது. அதுவும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற திட்டங்களுக்கு ஊடக பணத்தைக் கொடுப்போம் என்ற மோசடியை செய்து  தான் செய்த அறிவிப்பையும் பெயரளவிலானதாக மாற்றியுள்ளது,  மாநில அரசுகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மேலும் மக்களின் வாழ்க்கை சாதனங்களுக்கான தேவை மற்றும் உற்பத்தி –  வழங்கல் சங்கிலி என இரு புறமும் பெரிய நெருக்கடி ஏற்பட்டு பொருளாதார உற்பத்தி நடவடிக்கையில் மிகப்பெரும் சீர்குலைவைச் சந்திக்கவிருக்கிறோம். பொருளாதார வல்லுனர்கள் நாடு தழுவிய முடக்கத்தை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவந்து உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். மருத்துவ வல்லுனர்கள், மாநில முதல்வர்கள் முடக்கத்தை நீடிக்க வேண்டுமென கூறுகிறார்கள் அவசரத்தில் அறிவித்த மோடிக்கு இப்பொழுது யார் பேச்சைக் கேட்பது என்ற குழப்பம்.

 

நள்ளிரவில் வழிப்பறி செய்யும் மன்னனுக்கு வாக்களித்த மக்கள் பாடோ திண்டாட்டம்.  எதிர்க்கட்சிகளோ மருத்துவ அவசர காலத்திலும் அரசை விமர்சிக்க வேண்டுமா, அரசியல் நடத்த வேண்டுமா? சேவை வேண்டுமானால் செய்யலாம் என ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். கொரோனா கொள்ளைநோய் மருத்துவ சுகாதார நெருக்கடியை மட்டும் கொண்டு வரவில்லை.  பேரிடர்களை,  பெரும் கொள்ளை நோய்களை எதிர்கொள்வதற்கு இந்த அரசமைப்பும் அராஜக உற்பத்தியும் பிழைப்புவாத தலைவர்களும் தகுதியற்றவர்கள் என்பதையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. மக்கள்தான் விழிக்க வேண்டும்!அனைவருக்குமான பொது மருத்துவ சுகாதார கட்டமைப்பு முதலீட்டிற்கான முழக்கத்தை எழுப்பவேண்டும். ‘சுனாமி எச்சரிக்கை மைய்யங்களை போல  உலகுதழுவிய கொள்ளைநோய் (pandemic) எச்சரிக்கை மைய்யங்கள் உருவாவதற்கு குரல் எழும்பவேண்டும்.

– பாலன்

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW