நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு அவசியமா ?

09 Apr 2020

(ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விலக்கல் பற்றிய பார்வை)

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காட்டிலும் கொரோனா வைரஸ் குறித்த பீதியும் வதந்தியுமே நாடெங்கிலும் வேகமாக பரவிவருகிறது. கொரோனா பீதியூட்டுவதில் ஊடகமும் அரசும் போட்டி போடுகின்றன என்றே கூறலாம். தற்போது அமலிலுள்ள  21 நாள்  ஊரடங்கு முடிவதற்கு இன்னும் ஒரு வாரமுள்ள நிலையில், மத்திய அரசு ஊரடங்கை மேலும் நீடிக்கப்போவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் மேற்கொண்ட சுமார் 3 ½ மணி நேர காணொளிக் காட்சி உரையாடலில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வரத் தொடங்கின. வருகிற 11 தேதியன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் பேசியபின் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு  கொரோனா பீதி தற்போது ஊரடங்கு நீடிப்பு பீதியாக மாற்றப்பட்டுள்ளது.

 

ஊரடங்கு காலகட்டத்தில் ஊடகமும் அரசின் மக்கள் தகவல் தொடர்பும்

 கொரோனா காலகட்டத்தில், ஊடகத்தைப் பொருத்தவரையிலும் கிரிகெட் ஸ்கோரைப் போல கொரோனோ தொற்று எண்ணிக்கையை மாநில வாரியாகவும் மாவட்ட ரீதியாக பட்டியலிடுவதை வழக்கமானதாக கொண்டுள்ளது. ஊரடங்கால் வீதி வெறிச்சோடினாலும் செய்தி; வீதியில் மக்கள் நின்றாலும் செய்தி; தொற்று வந்தாலும் செய்தி; தொற்றால் உயிரழந்தாலும் செய்தி.

ஊடகத்தைப் பொறுத்தவரையில் “செய்தி” ஒரு சந்தைச் சரக்கு. செய்தியை நல்ல லாபத்திற்கு விற்கவேண்டும்; மற்றபடி கொள்ளை நோய் காலத்தில் ஊடக அறத்துடன் செயல்படவேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இது ஒருபக்கம் என்றால் மற்றொரு பக்கம் அரசின் மக்கள் தகவல் தொடர்பு.

மத்திய அரசும் சரி மாநில அரசுகளும் சரி மக்களின் ஐயங்களையும் பீதியும் களைகிற வகையிலே கொரோனா தொற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கையை வெளிப்படைத் தன்மையுடன் மக்களிடம் சேர்க்க வேண்டும். மாறாக உத்தரவிடுவது மட்டுமே அரசின் வேலை இல்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் எங்குள்ளார் என்றே தெரியவில்லை, மாறாக சுகாதாரத்துறை செயலாளர் அகர்வாலோ, வேண்டா வெறுப்பாக செய்தியாளர்களை சந்திக்கிறார். முன்னதாக நாட்டின் கொரோனா  தொற்று எண்ணிக்கை, பரிசோதனை எண்ணிக்கை போன்ற தகவல்களை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தனது வலைதளத்தில் தினந்தோறும் இரவு எட்டு மணிக்கு பதிவேற்றம் செய்யும். அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது.

அது போல இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்கள். இதுவும் தற்போது குறைந்து வருகிறது. பிரதமர் மோடியோ கைதட்டச் சொல்வதும் விளக்ககேற்ற சொல்வதோடு தனது வேலையை முடித்துக் கொள்கிறார். விளையாட்டு வீர்கள் மற்றும் முதல்வருடனான பிரதமரின் காணொளி காட்சி உரையாடலை ஊடகங்கள் மிகைப்படுத்துவதோடு அதன் கடமையை முடித்துக் கொள்கின்றன.

மாநில அரசைப் பொறுத்தவரைக்கும் ஓடிஸா விதி விலக்காக உள்ளது. அங்கு அரசின் தலைமை செய்தி தொடர்பாளாராக நியமிக்கட்டுள்ளவர் அன்றாட செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துகிறார். ஆனால் தமிழகத்திலோ தொடக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வந்தார், தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.

தில்லி கூட்டத்திற்கு  சென்று திரும்பிய செய்தியை தினம்தோறும் சொல்லி வந்த சுகாதாரத்துறை செயலாளர், விமர்சனங்களுக்கு பிறகு அதைத் தற்போது தவிர்த்துள்ளார், மேலும் தினந்தோறும் அவர் கூறுகிற தொற்று எண்ணிக்கையும் முன்னுக்குப் பின் முரணாகவே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை ஏன் அதிகரிக்க வில்லை? மத்திய அரசின் குறைவான நிதி ஒதுக்கீடு எந்தளவிற்கு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படும் என்பது குறித்தெல்லாம எந்த தெளிவும் இல்லை. ஊரக வருவாய்த்துறை அமைச்சரும் நிதி அமைச்சரும் செய்திகளில் வருவதில்லை. மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.

மத்தியில் காங்கிரஸ் கட்சி தூங்குவது போல மாநிலத்திலும் திமுக தூங்குகிறது. பேரிடர் காலத்தில் அரசு செய்கிற குளறுபடிகளை ஆக்கப் பூர்வமாக விமர்சிக்கிற அரசியலானது, தேச நலன் என்ற மாயத் திரைக்கு பின்னால் வெற்றிகரமாக அமுக்கப்படுகிறது. அதேநேரம், கொரோனாவிற்கு எதிரான ஒற்றைப் போர்வாளாக பிரதமரும் முதல்வரும் காட்டப்படுகிறார்கள்!

மக்கள் தகவல் தொடர்பில் மத்திய மாநில அரசுகளின் பின்னடைவும், சொதப்பாலும் கொரோனாவை விட மக்களிடம் பெரும்  உளவியல் சிக்கலை ஏற்படுத்திவருவது இந்த விவகாரத்திலும் தொடர்கதையாகிவிட்டது. முன்னதாக நீண்டகாலம் ஊரடங்கை அரசு அமல்படுத்த போகிறது என்ற வதந்தியில் புலம் பெயர் தொழிலாளர்களின் இடப் பெயர்வு அவலத்தை உலகமே கண்டது. இந்நிலையில் ஊரடங்கை நீடிப்பது குறித்த விவாதம் தற்போது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்திவருகிறது.

 

ஊரடங்கின் நோக்கமும் விளைவும்

கொரோனா நோய்த் தொற்றை இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகள் மந்தை தடுப்பாற்றால் (Herd immunity) எனும் நோயாற்றுதல் உக்தியின் மூலமாக முதலில் எதிரகொண்டது. ஆனால் இது கொள்ளை நோய்ப் பரவலை தடுப்பதற்கு  பலனிக்கவில்லை. மாறாக பொது சுகாதார கட்டமைப்பு நிலைகுலைந்தது. கொத்து கொத்தாக மக்கள் மடிந்தார்கள். நல் வாய்ப்பாக இந்திய அரசு நோயாற்றுதல் உக்தியை தேர்வு செய்யாமல் கொள்ளை நோயை, அடக்குதல் உக்தியின் வழியே கட்டுப்படுத்துகிற வழியை தேர்வு செய்தது. கடுமையான ஊரடங்கு அமலாக்கத்தின் மூலமாக சமூக விலகல்களை கடைபிடித்து விரைவாக கொள்ளை நோயை கட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது. ஊரடங்கின் பலனாக முறையே

 • மரணங்களை ஆயிரங்களில் உயரவிடாமல் சில நூறுகளில் கட்டுப்படுத்தலாம்.
 • நோய்த் தொற்று பரவல் கோட்டை தட்டையாக்கலாம்.
 • உதாரணமாக சீனாவில் சுமார் ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணத்தில் தற்போது ஒரு புதிய கொரொனோ வைரஸ் தொற்று கூட இல்லை (அங்கே தற்போது ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளது)
 • தொற்று எண்ணிக்கை குறைந்ததால், இறப்பு வீதமும் குறைந்தது.
 • பொது சுகாதார அமைப்பு நிலை குலைவு ஏற்படாமல் தடுக்கலாம்.
 • நோய்த் தொற்றில் இருந்து மருத்துவ சுகாதாராப் பணியாளர்கள் பாதிப்பில்லாமல் காப்பற்றலாம்.

ஊரடங்கு காலத்தில் பரிசோதனையின் முக்கியத்துவம்

 • கொரோனா பரிசோதனைகளை விரிவுபடுத்துவதன் மூலமாக ஒட்டுமொத்த சிக்கலின் முழுப் பரிமாணத்தை புரிந்துகொள்ள இயலும்.
 • எந்த இடத்தில இன்னும் வேகமாக செயலாற்றலாம் என்பதை கண்டுணரமுடியும்.
 • மேலும் ஊரடங்குகளை தளர்த்துவதற்கும் முடிவெடுக்க முடியும்

 

ஊரடங்கை விலக்குகிற உக்தியின் மீதான விவாதங்கள்  

ஊரடங்கை வெற்றிகரமாக அமல்படுத்துகிற நாடுகள், ஊரடங்கை எப்போது தளர்த்துவது அல்லது விலக்குவது என்பது குறித்து ஒரு படித்தான முடிவுக்கு வர இயலவில்லை. இந்தியா தற்போது அந்தப் பிரச்சனையைத் தான் எதிர்கொண்டு வருகிறது. ஆஸ்திரியா இதை படிப்படியான ஊரடங்கு விலக்கல் நடவடிக்கை மூலமாக சாதித்தது.

ஊரடங்கு விலக்கலின்போது இரு கேள்விகள் அரசு முன் எழுகிறது.

 1. ஊரடங்கை விலக்கினால் மீண்டும் தொற்று பரவினால் என்ன செய்வது?
 2. ஊரடங்கை நீடித்தால், அதனால் ஏற்படுகிற சமூகப் பொருளாதரா இழப்புகளை எப்படி ஈடு செய்வது?

முதல் வாதம்;

பொருளாதாரவாதிகளும், ஆளும் அரசியல் கட்சிகளின் சில பிரிவும் ஊரடங்கை விலக்கக் கோருகின்றன. ஏனெனில் பொருளாதார இழப்பானது கொரோனா இழப்பைக் காட்டிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் பொருளாதாரத்தில்  அமைப்புசார தொழில்களும் சிறு குறு வர்த்தகமுமே அடிப்படையாக உள்ளன.  ஊரடங்கால் அமைப்பு சாரா தொழிலாளார்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகின்றனர்  .ஊரடங்கால் இந்தியாவில் சுமார் நாலு கோடி தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.

தற்போதைய ஊரடங்கு காலகட்ட நிவாரணத்தொகையாக இதுவரை 2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரணமே போதாது என்ற நிலையில் தற்போது ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் 10 விழுக்காடாவது ஒதுக்கவேண்டும். அதாவது சுமார் இருபது லட்சம் கோடி ருபாய் ஒதுக்க வேண்டும். ஊரடங்கை அமல்படுத்தாத ஜப்பான் அரசே பொருளாதார நிவாரணத் தொகைய தனது மொத்த உள்நாட்டு உற்பதியில்சுமார் 10 விழுக்காடு ஒதுக்கியுள்ளது.

ஊரடங்கால் முடக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு மத்திய அரசு வழங்குகிற பொருளாதர நிவாரணத் தொகை யானைப் பசிக்க சோலைப் பொறியாக உள்ளது. மேலும் தற்போது விவசாய அறுவடைக் காலம் நெருங்கி வருகிற நிலையில், ஊரடங்கு என்பது நாட்டின் மக்கள் தொகைகயில் பாதியாக உள்ள விவசாயப் பொருளாதாரம் சார்த்த மக்களை பேரிடரில் தள்ளிவிடும்.

இதுபோல அமைப்புசார தினக் கூலிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஆலைத் தொழிலாளர்கள் என சமுதாயத்தின் பெரும்பாலான வர்க்கப் பிரிவினர் பெரும் வாழ்வாதார நெருக்கடியில் சிக்கிடுவர்.

இரண்டாம் வாதம்:

மருத்துவ அறிஞர்களின் ஒரு பிரிவும் சில ஆளும் கட்சிகளும் ஊரடங்கை நீடிக்க கோருகின்றன.

 • இரண்டாம் கட்ட அலை வந்தால் நமது பொது சுகாதார கட்டமைப்பு மீண்டும் நிலைகுலையும். ஆகவே நீடிக்க வேண்டும் என்கிறார்கள்.
 • ஊரடங்கை விலக்கினால் மீண்டும் தொற்று எண்ணிக்கை செங்குத்தாக உயரலாம்.
 • கொள்ளை நோய்க்கு பெரும் விலை கொடுக்காமல் முதலில் தப்பித்துக் கொண்டு பொருளாதாரத்தை பிறகு பார்க்கலாம்.

ஊரடங்கை விலக்குகிற உத்தி

மேலே உள்ள கேள்விகளில் இரண்டில் ஒன்றை தேர்வு செய்யவேண்டும் என்ற நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கலாம?

முதலாவதாக, கடுமையான ஊரடங்கை அமல்படுத்தி கொள்ளை நோயை கட்டுக்குள் கொண்டு வந்தபின்னர் அடுத்த கட்டத்திற்கு அதாவது ஊரடங்கை விலக்கும்போது கடுமையான நடவடிக்கைகளை தொடர வேண்டும் என அவசியமில்லை. கீழ்வரும் விஷயங்களை அரசு தீவிரமாக அமல்படுத்தினாலே போதுமானது. இதில் விஷயம் என்னவென்றால் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டறிகிற வகையிலே இதை கடைபிடிக்க வேண்டும் என்பதே. இதை எவ்வாறு செய்வது?

பரிசோதனைகளை அதிகரிப்பது:

பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்காதவரை கொள்ளை நோயய்ப் பரவலில் நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதில் யாருக்குமே தெளிவில்லாமல் போய்விடும்.

இந்தியாவில் தொற்று பரிசோதனையின் பின்னடைவை மேற்கூறிய படம் தெளிவாக காட்டுகிறது. குறைவான பரிசோதனைகள் குறைவான எண்ணிக்கையையும் முடிவு எடுப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவை சேர்த்த நிறுவனங்களிடமிருந்தும் தென்கொரிய நிறுவனங்களிடம் இருந்து பரிசோதனை கிட்கள் வரவுள்ளது போன்ற தகவல்கள் கடந்த ஒரு வாரமாக கூறப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு ஏப்ரல் எட்டாம் தேதியன்று சீனாவில் இருந்து சுமார் 1.5 லட்சம் கிட்கள் வரும் என தமிழக முதல்வர் கூறினார். இதன் நிலைமைகள் தெளிவாக தெரியவில்லை .மக்களுக்கு தெரிவிக்கப்படவும் இல்லை. பரிசோதனை எண்ணிக்கையில், தமிழகம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

பெருமளவில் பரிசோதனைகளை(Mass Testing) மேற்கொள்ளும்போது மட்டுமே அறிகுறி தென்படுவதற்கு முன்பாகவே தொற்று கண்டறியப்பட்டு பரவல் கட்டுப்படுத்தப்படுகின்றது. R இன் வீதம் குறைகிறது.

வைரசின் (R) மருத்தொற்று பரவல் வீதத்தை கட்டுக்குள் வைப்பது

R என்பது (Reproductive Factor) வைரசின் மறுத் தொற்று பரவல் வீதம். ஊரடங்கு காலகட்டத்தில் கடுமையான சமூக விலகல் நடவடிக்கையால்  R இன் வீதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு  நெருக்கமாக கொண்டு வரவேண்டும் என அரசு இலக்கு நிர்ணயக்கிறது.

R கட்டுக்குள் இருந்தால்தான், பெரும் சமூக விலகல் நடவடிக்கைகளையும் கொள்ளை நோய் மீண்டும் பரவுவதையும் தவிர்க்கலாம்.

சீனாவின் வூஹானில் தொடக்கதில் R இன் வீதம் 3.9 ஆக இருந்தது. பின்னர் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் சுய தனிமைப்படுதல் நடவடிக்கையின் மூலமாக R இன் வீதம் 0.39 ஆக குறைக்கப்பட்டது.

R இன் வீதத்தை ஒன்றுக்கு கீழே வைக்கமுடியவில்லை என்றால் பரவல் வீதத்தை  கட்டுப்படுத்தும் விதமாக நபர்களை நபர்கள் நெருக்கமாக சந்திப்பதை தடுக்கின்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

விழிப்புணர்வை  அதிகப்படுத்தலாம்.

R குறித்த எண் விளையாட்டை விரைவாக நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.

R ஐ குறைக்க மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகளால் ஏற்படுகிற சமூகப் பொருளாதார விளைவுகளையும் விரைவாக அறிந்துகொள்ள வேண்டும்.

பொது சுகாதார கட்டமைப்பின் தயாரிப்பு நிலையை உறுதி படுத்திக் கொள்வது

இந்தியாவில் குறைவான அளவில் அவசர சிகிச்சை படுக்கை வசதிகள், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளன. ஊரடங்கு காலத்திலும் அதற்கு பின்பும்  இதையெல்லாம் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

அடுத்த கட்ட தொற்று அலை வருவதற்குள்ளாக உயிர் காக்கும்  மருத்துவ உபகரணங்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும்

போர்கால அடிப்படையில் சுவாசக் கவசம், அவசர சிகிச்சை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் கொள்முதல் செய்யவேண்டும் அல்லது உற்பத்தி செய்ய வேண்டும். இறப்பு வீதத்தை கட்டுக்குள் வைப்பதற்கு இது அவசியம்.

ஆகவே ஊரடங்கை விலக்குகிற உத்தியில் படிப்படியான கடுமையான நடவடிக்கைகளை தளர்த்திக்கொண்டு முதன்மையான செயல்பாடுகளாக  பரிசோதனைகளை அதிகரிப்பது, வைரசின் (R) மருத்தொற்று பரவல் வீதத்தை கட்டுக்குள் வைப்பது மற்றும் பொது சுகாதார கட்டமைப்பின் தயாரிப்பு நிலையை உறுதிபடுத்திக் கொள்வது போன்ற நடவடிக்கையின் மூலமாக கோடிக் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளை கவனத்தில்கொண்டு, மத்திய மாநில அரசு ஆக்கபூர்வமாக முடிவு எடுக்க வேண்டும்.

 

-அருண் நெடுஞ்சழியன்

 

RELATED POST
1 comments
 1. ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பது தான் தங்கள் கருத்தா?
  மேலும் 21 நாள் கழித்து வைரஸ் போய்விடுமா?
  திருடும் கொள்ளையும் பெருகுமே என்ன செய்வது? வைரசை கொல்ல வே முடியாது என்று அறிவியல் கூறுவது உண்மையா.

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW