நாங்குநேரி சாதிவெறித் தாக்குதல் – தேனி, நெல்லை சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

20 Aug 2023

ஊடக செய்தி

நாள் : 19.08.2023 சனிக்கிழமை மாலை  4 மணி, பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதிய வன்முறைகளும் ஆணவக் கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, கடந்த 23.07.2023 அன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அருந்ததியர் சாதியைச் சார்ந்த முத்தையா என்கிற இளைஞர் மாற்றுச் சாதி பெண்ணை காதலித்ததால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

05.08.2023 அன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மகாலட்சுமி – மாரிமுத்து காதலர்கள் காட்டுக்குள் கால்கள் தரை தட்டியவாறு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர்.

பறையர் சாதியைச் சார்ந்த மாரிமுத்து கள்ளர் சாதியைச் சார்ந்த மகாலட்சுமி இருவரின் காதலுக்கு பெண் வீட்டில் ஏற்கனவே எதிர்ப்பு இருந்ததும் அது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனாலும் தேனி மாவட்டக் காவல்துறை SC/ST வன்கொடுமை  வழக்காக பதிவு செய்ய மறுத்து வருகின்றனர்.

14 நாட்களாக மாரிமுத்துவின் உடலை வாங்க மறுத்து ஊர் மக்கள் போராடி வருகின்றனர். மகாலட்சுமியின் உடலை காவல்துறையே அவசர அவசரமாக எரித்துள்ளனர்.

09.08.2023 அன்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பறையர் சாதியைச் சார்ந்த சின்னதுரை என்கின்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் வீட்டிற்குள் புகுந்து அவரோடு படிக்கும் மறவர் சாதி மாணவர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தடுக்க முயன்ற அவரது தங்கை மற்றும் தாத்தாவையும் தாக்கியுள்ளனர்.

எனவே இதுபோன்ற சாதிய வன்முறைகளை தடுக்க காத்திரமான நடவடிக்கைகள் அரசு எடுக்க வேண்டும். கல்விக் கூடங்களில் சாதிக் கயிறு உள்ளிட்ட சாதிய அடையாளங்களை அணிந்து வருவது மற்றும் சாதி சார்ந்த குழுச் சேர்க்கைக்கு இடமளிக்காதவாறு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். சாதி ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி 19.08.2023 சனிக்கிழமை சைதாப்பேட்டையில் அனைத்து சனநாயக அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசே!

  1. தேனி காதலர்கள் மாரிமுத்து – மகாலட்சுமி ஆணவப் படுகொலை வழக்கை SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்து, குற்றவாளிகளைக் கைதுசெய்!
  2. கல்வி நிலையங்களில் மாணவர்கள் சாதி அடையாளங்கள் அணிவதைத் தடுத்திடும் விதிமுறைகளைக் கடுமையாக்கு!  சமத்துவம் போதிக்கும் நெறிமுறைகளைப் பாடத்திட்டத்தில் இணைத்திடு!
  3. கல்வி நிலையங்களில் நடைபெற்று வரும் ஆர். எஸ். எஸ். அமைப்பின் மாணவர்களுக்கான அனைத்து விதமான பயிற்சிப் பட்டறைகளுக்கும் தடை விதித்திடு!
  4. திருநெல்வேலி அருந்ததியர் இளைஞர் முத்தையா கொலையை ஆணவக் கொலை என வழக்கு பதிவு செய்திடு! பொய்யாகக் கைது செய்யப்பட்டுள்ள தலித் இளைஞர்களை விடுதலை செய்து, உண்மைக் குற்றவாளிகளை உடனே கைது செய்!
  5. கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் மீது அரங்கேறும் வன்கொடுமைகளை மாதந்தோறும் விசாரித்து,  அரசிடம் அறிக்கையளிக்கும் வகையில் உளவியலாளர்கள், சாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட செயற்பாட்டாளர்கள் கொண்ட ஒரு குழு அமைத்திடு!
  6. தொடரும் சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றிடு!

ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற அமைப்புகள்

சாதி ஒழிப்பு முன்னணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், கிறித்துவ மக்கள் களம், மக்கள் அதிகாரம், அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், CPI-ML ரெட் ஸ்டார், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தலித் விடுதலை இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய  தேசிய மாதர் சம்மேளனம், தலித் அறிவுசார் குழு, தமிழ்வழிக் கல்வி இயக்கம், தமிழ் புலிகள் கட்சி, தமிழ்தேச இறையாண்மை, தாயக மக்கள் கட்சி, இந்திய கிறித்தவ பெண்கள் களம், பெண்ணுரிமை இயக்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, சுய ஆட்சி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன.

இப்படிக்கு

வ.ரமணி

பொதுச்செயலாளர் 

சாதி ஒழிப்பு முன்னணி

9566087526, 9025870613, 8072559622

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW