கொரோனா அபாயம்: அமெரிக்காவின் பெருந்தோல்விக்கு என்ன காரணம் ? – பகுதி 2 – நோம் சாம்ஸ்கி.

06 Apr 2020

ஒரு பொதுச் சுகாதார அவசர நிலையில், அமெரிக்க மக்களுக்கு அனைவருக்குமான சுகாதார சேவை (Universal Health Care) யதார்த்தமானது அல்ல என்று தொடர்ந்து கூறப்படுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு குறித்த இந்த தனித்துவமான அமெரிக்க கண்ணோட்டத்திற்கு என்ன காரணமா?

 

இது ஒரு சிக்கலான கதை. நீண்ட காலமாக, கருத்துக் கணிப்புகள் அனைவருக்குமான சுகாதார சேவைக்கு (Universal Health Care) சாதகமான அணுகுமுறைகளைக் காட்டியுள்ளன, சில நேரங்களில் மிகவும் வலுவான ஆதரவைக் கொண்டுள்ளன. ரீகன் ஆட்சியின்  பிற்பகுதியில், சுமார் 70 சதவிகித மக்கள் அரசியலமைப்பில் சுகாதார பாதுகாப்புக்கான உத்தரவாதம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள், 40 சதவிகிதத்தினர் இது ஏற்கனவே இருப்பதாக நினைத்தார்கள், அரசியலமைப்பு சரியானது மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியது என்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அனைவருக்குமான சுகாதார சேவை’’க்கு அதிக ஆதரவைக் காட்டும் வாக்கெடுப்புகளும் நடந்துள்ளது. வணிக பிரச்சாரம் மூலம் அனைவருக்குமான சுகாதார சேவை கடுமையான தனிநபர் வரிச்சுமையை ஏற்படுத்தும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டப் பின்னரே அதற்கான ஆதரவு சரிய ஆரம்பித்தது.

 

வழக்கம் போல், அவர்களின் வணிக பிரச்சாரத்திற்கு உண்மையின் ஒரு கூறு உள்ளது. தனிநபர் செலுத்தும் வரி உயரும், ஆனால் ஒப்பிடக்கூடிய நாடுகளின் பதிவு காட்டுவது போல் மொத்த செலவுகள் கடுமையாகக் குறைய வேண்டும். எவ்வளவு?  சில பரிந்துரைக்கப்பட்ட மதிப்பீடுகள் உள்ளன. உலகின் முன்னணி மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான தி லான்செட் (UK) (https://www.thelancet.com/pdfs/journals/lancet/PIIS0140-6736(19)33019-3.pdf) சமீபத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டது…

தேசிய சுகாதார பராமரிப்பு செலவில் 13% சேமிப்புக்கு வழிவகுக்கும், இது ஆண்டுதோறும் 450 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும் (2017 இல் அமெரிக்க டாலர் மதிப்பின் அடிப்படையில்). தற்போதுள்ள அரசாங்கத்துடன்  இணைந்து சுகாதாரப் பாதுகாப்பு தவணைகளுக்குப் பணம் செலுத்தும் முதலாளிகள் மற்றும் தனிநபர் தொகையை விட, ‘அனைவருக்குமான சுகாதார சேவை’’ அமைப்பிற்கு குறைந்த செலவீனத்துடன் நிதியளிக்க முடியும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை வழங்கும். மேலும், அனைத்து அமெரிக்கர்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு ஆண்டும் 68,000 க்கும் அதிகமான உயிர்களை  சேமிக்கும் என்று மதிப்பிடுகிறது”

 

ஆனால் வரி உயரும், பல அமெரிக்கர்கள் வரி செலுத்துவதைவிட மறைமுகமாக அதிகப் பணம் செலவழிப்பதையே விரும்புவதாகத் தெரிகிறது. தற்செயலாக இது ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்களை மறைமுகமாகக் கொல்கிறது. இன்றைய அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை என்னவென்றால், மக்கள் அதை அனுபவிப்பது போலவும், பலன் பெறுவதுபோலவும், வணிக சக்திகளாலும் மற்றும் அதன் அறிவுசார் ஊழியர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய தாராளவாத தாக்குதல் இக்கூறுகளை தேசிய பண்பாடாக வளர்த்தெடுத்துள்ளது. அனைவருக்குமான சுகாதார சேவை’’ தொடர்பான விவாதங்கள் தொடர வேண்டியவை.

 

COVID-19 இன் பரவலை நிர்வகிப்பதில் சில ஐரோப்பிய நாடுகள் மற்றவர்களை விடச் சிறப்பாகச் செயல்படுகையில், இந்த பணியில் அதிக வெற்றியைப் பெற்ற நாடுகள் முதன்மையாக மேற்கத்திய (புதிய) தாராளவாத பிரபஞ்சத்திற்கு வெளியே உள்ளன. அவை சிங்கப்பூர், தென் கொரியா, ரஷ்யா மற்றும் சீனா. இந்த உண்மை மேற்கத்திய முதலாளித்துவ ஆட்சிகளைப் பற்றி ஏதாவது சொல்கிறதா?

 

வைரஸ் பரவுவதற்கு பல்வேறு எதிர்வினைகள் உள்ளன. குறைந்தபட்சம் இப்போதைக்குச் சீனாவே அதைக் கட்டுப்படுத்தியதாகத் தெரிகிறது. ஐரோப்பா நாடுகள் பெரும்பாலும் கவனக்குறைவாகவே இருந்துள்ளன, ஆனால் சில ஐரோப்பிய நாடுகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. அதிகமான சுகாதார வசதிகள் மற்றும் விரைவாக செயல்படும் திறனால்  குறைந்த இறப்பு விகிதத்தில் ஜெர்மனி உலகளாவிய சாதனையை வைத்திருப்பதாகத் தெரிகிறது. நோர்வேவிலும் இதே நிலைதான் தெரிகிறது. யு.கே.யில் போரிஸ் ஜான்சனின் எதிர்வினை வெட்கக்கேடானது.

 

எவ்வாறாயினும், ஜெர்மனி கொரோனாவை குணப்படுத்தும் திறனை அதன் எல்லைகளுக்கு அப்பால் செய்யத்தயாராகயில்லை. ஐரோப்பிய ஒன்றியம் என்று எதுவும் இல்லை என்பதை நிரூபித்தது. இருப்பினும், நோய்வாய்ப்பட்ட ஐரோப்பியச் சமூகங்கள் அட்லாண்டிக் முழுவதும் உதவிகேட்டு வரக்கூடும். கியூப மீண்டும் மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பி உதவத் தயாராக இருந்தது. ஆனால் அமெரிக்கா  யேமனுக்கு கொடுத்துவந்த சுகாதார உதவியைக் குறைத்துக்கொண்டது (https://www.nytimes.com/2020/03/27/world/middleeast/yemen-health-care-aid-coronavirus.html), அங்கு அமெரிக்கா உலகின் மிக மோசமான மானுட பேரவலத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் இந்த தொற்றுநோய் நெருக்கடியைப் பயன்படுத்தி எதிரி நாடுகளுக்கு அதிகபட்ச துன்பத்தை உறுதி செய்கிறது. அமெரிக்காவின் இதுபோன்ற நெருக்கடியினால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட நாடான கியூபா, கென்னடி காலத்தில் பயங்கரவாதப் போர்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் கடந்து தகவமைத்துக் கொண்டுள்ளது.

 

ஜெர்மனியின் எஞ்சலா மேர்க்கலின் (Chancellor of Germany)  நிதானமான, அளவிடப்பட்ட, உண்மை அறிக்கையுடன் இந்த நெருக்கடியைக் எவ்வாறு கையாள்வது என்று ஜெர்மனியர்களுக்கு தெரிவித்தார். நெருக்கடியைக் கையாள்வதில் உள்ள தனித்துவமான அம்சம் ஜனநாயகமா?  அல்லது  எதேச்சதிகாரமா ? என்பதல்ல, மாறாகச் செயல்படும்  சமூகமா?  அல்லாது செயல்படாத சமூகமா? என்பதே. அமெரிக்காவை பொறுத்தவை டிரம்ப் ஒரு  செயலற்ற ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்.

 

2 டிரில்லியன் டாலர் (சுமார் 148 லட்சம் கோடி ரூபாய்) கொரோனா வைரஸ் பொருளாதார மீட்பு திட்டம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சாத்தியமான மற்றொரு பெரிய மந்தநிலையைத் தடுக்கவும், அமெரிக்கச் சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உதவவும் போதுமானதா?

 

எதுவும் இல்லாமல் இருப்பதற்கு எதோ ஒரு மீட்புத் திட்டம் சிறந்தது. இது மிகவும் தேவைப்படுபவர்களில் சிலருக்கு குறைந்த அளவேனும் நிவாரணத்தை வழங்குகிறது, மேலும் உண்மையிலேயே பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவ ஏராளமான நிதியைக் கொண்டுள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அரசுக்குப்பின்னால் ஒளிந்துகொள்கின்றன, மக்களின் பணத்தில் கொள்ளை லாபம் ஈட்டி வாழ்ந்துவந்த இந்த நிறுவனங்கள் இன்று காப்பாற்றிக்கொள்ள மக்களிடம் கையேந்துகின்றன. ஆனால் கவலைப்படத் தேவையில்லை. கருப்புப்பணத்தை  ட்ரம்ப் மற்றும் அவரது கருவூல செயலாளர் கண்காணிப்பார்கள், அவர் நியாயமானவர் என்று நம்பலாம். புதிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் காங்கிரஸின் கோரிக்கைகளை அவர்கள் புறக்கணிக்க முடிவு செய்தால், அதைப் பற்றி யார் என்ன செய்யப் போகிறார்கள்? நீதித்துறை?

 

உதவி தேவைப்படுவோரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு நேரடியாக உதவி செய்வதற்கான வழிகள் உருவாக்கப்படவேண்டும். பெருகிவரும் தற்காலிக மற்றும் ஒழுங்கற்ற வேலைவாய்ப்பற்றவர்களுக்கும், வீடற்றவர்கள், கைதிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். தனிமைப்படுத்திக்கொள்வதற்கும், உணவைச் சேமித்து வைப்பதற்கும் போதிய வீட்டுவசதி இல்லாத ஏராளமானோரை அடையாளம் காணுவது  கடினமானதல்ல.

 

https://truthout.org/articles/chomsky-ventilator-shortage-exposes-the-cruelty-of-neoliberal-capitalism/

 

தமிழில்; ராதா

பகுதி 1

கொரோனா அபாயம்: அமெரிக்காவின் பெருந்தோல்விக்கு என்ன காரணம் ? – பகுதி 1 – நோம் சாம்ஸ்கி.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW